Friday, July 23, 2021

PESUM DHEIVAM

 பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J  K SIVAN


61.    உலக பிரசித்தமான  ஒரு  சந்திப்பு.

நண்பர்களே,  ஒரு எச்சரிக்கை  இது ரொம்ப நீண்ட பதிவு. பாதியை ஓடித்தது, பிரிக்க முடியாத அற்புதமான பகுதி. நிதானமாக  நேரம் செலவழித்து மஹா பெரியவா சம்பாஷணையை கூர்ந்து கேளுங்கள். 
1930ல்   வெள்ளைக்கார அமெரிக்கர்  பால் ப்ரண்டன், ஆத்ம ஞானம் தேடி கப்பலேறி இந்தியா வருகிறார் .  இந்தியாவில் பல  இடங்களில் சுற்றி  யோகிகளைஎல்லாம்  தேடி  சந்தித்து அவர்கள்  உண்மையான சித்த புருஷர்களா என்று  ஆராய்கிறார்.  அவர்  முயற்சியில் தோல்வியே  மிஞ்சு கிறது.  தான் சந்தித்தவர்கள் விவரங்களை தனது புத்தகத்தில் தொகுத்து அளித்திருக்கிறார் .  ''ரஹஸ்ய இந்தியாவைத்  தேடி  ''(IN  SEARCH  OF  SECRET  INDIA ). அருமையான புத்தகம்.  அதில்  போலி  சித்தர்கள் தான் அதிகம்  தென்படுகிறார்கள். உண்மையான சித்த புருஷர்களை காணமுடியவில்லை என்கிறார்.
வட இந்தியாவில் தோல்வி கண்டு,  தெற்கு நோக்கி வருகிறார் பால் ப்ரண்டன். தேடல் ஆரம்பிக்கிறது.  சென்னை அடையாறில் ஒரு  சித்த புருஷர் கண்ணில் படுகிறார். மற்றொருவர் அவரது குரு திருவண்ணாமலையில் இருப்பதாக சொல்கிறார். இன்னொருவர்  காஞ்சி காமகோடி மட அதிபதி ஒருவர்  சென்னைக்கருகே  செங்கல்பட்டில் வாசம் செயகிறார். அவர் ஒரு சிறந்த யோகி.  அவரைப் போய் பாருங்கள் என்கிறார். பால்  ப்ரண்டன்  சென்னையில் இருந்து உடனே  செங்கல்பட்டு சென்று  மஹா பெரியவா  வாசம் செய்த இடத்தை  அடைகிறார். 
 இதுவரை மஹா பெரியவா எந்த வெளிநாட்டினரையும் சந்திக்காததால்  ப்ரண்டனை மார்க்க மாட்டார் என்ற  வதந்தி.  ஆனால் ப்ரண்டனை அழைத்து வந்த மஹா பெரியவா பக்தர்  மடத்துக்குள் சென்று  அனுமதி பெற்று ப்ரண்டனை உள்ளே அழைத்து செல்கிறார்.  பிறகு நடந்த பெரியவா ப்ரண்டன் சந்திப்பில்  நடந்த சம்பாஷணையை ப்ரண்டன் தனது புத்தகத்தில் இப்படி  கூறுகிறார் .

 ''தென்னிந்திய மதத் தலைவருடன் சந்திப்பு'

அந்த  மடத்தில் ஒரு சின்ன கதவு வழியாக உள்ளே சென்றால் ஒரு சின்ன அறை . வெளிச்சம் அதிகம் இல்லை. அதன் உள்ளே தீப ஒளி  நிழலில் சற்று உயரம் கம்மியான ஒரு உருவம். ஆடம்பரமில்லாத ஒரு பெரிய மதத்தின், ஹிந்து மத ஆச்சார்யர். தென்னிந்தியா முழுதுமே போற்றி புகழ்ந்து  அவரது உபதேசத்தை பின்பற்றியது. அமைதியாக  அவரைப் பார்த்தேன்.  காவி உடுத்த சாதாரணர்.  கையில் ஒரு தண்டம்  என்ற கோல்.  கிட்டத்தட்ட  நாற்பது வயதிருக்கும். அதற்குள் நரைத்த தலை. முகம்  தாடி மீசையின்   வெண்மை யாலும்  தங்க நிற உடலும்  முகமும்  சோபை அளித்தது.. பெரிய விழிகள். சாந்தமான முகம்.  மூக்கு  அதிக கூர்மை இல்லை. மத்திய காலத்தில் இருந்த கிருத்தவ  மஹான்கள் முகம் இப்படித் தான் பார்த்திருக்கிறேன்.  இவர்  ஒரு சிறந்த புத்திமான் மிகவும் கற்றவர்  என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  அவர் விழிகள் பல  சேதிகள் சொல்லவல்லவை.
''வாருங்கள்''  . என்னை அழைத்து உபசரித்தார். என் கூட வந்தவரிடம் தமிழில் அவர் சொல்வது எனக்கு புரிகிறது.
''உங்கள் ஆங்கிலம் அவருக்கு  புரிகிறது, ஆனால் அவர் பேசுவது உங்களுக்கு புரியாமல் இருக்கலாம் என்பதற்காக  என்னை மொழிபெயர்க்க  சொன்னார் '' என்கிறார்  கூட வெந்த வேங்கடரமணி .''இந்த தேசத்தில்  நீங்கள் பல இடங்களில் பல மக்களை சென்று கண்டீர்களே, உங்கள் சொந்த அபிப்ராயம், அனுபவம் என்ன?''
நான் பட்டவர்த்தனமாக என் மனதில் தோன்றியதை சொன்னேன். அப்புறம் வேறு ஏதேதோ பற்றி பேசினோம். ஆங்கில பத்திரிகைகள் பற்றி,  நாட்டு நடப்பு  வெளியுலகில் நடப்பவை. எங்கள் இங்கிலாந்தில் நடக்கும் விஷயங்கள் பற்றி கூட நன்றாக அறிந்திருக்கிறார்.    ஐரோப்பாவில்   ஆங்காங்கே   உருவாகும்  மக்களாட்சி  புரட்சி  பற்றிய  சம்பவங்கள் பற்றியும் என்னிடத்தில்  சொன்னபோது ஆச்சர்யப்பட்டேன்.

என் நண்பர் வெங்கட்ரமணி  ''காஞ்சி பெரியவா தீர்க்க தரிசி'' என்று சொல்லி அழைத்து வந்தது நினைவுக்கு வந்தது. ஆகவே  அவரிடத்தில் உலக எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்க தோன்றிற்று.

"ஐயா,   இந்த   உலகத்தில்  எப்போது  அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக இப்போதுள்ள நிலை மாறி   முன்னேற்றம் எபபோது  உருவாகும் என்று கருதுகிறீர்கள்?''

''முன்னேற்றம் என்பது  படிப்படியாக  நிகழ்வது.   ஒவ்வொரு தேசமும் போட்டி போட்டுக்கொண்டு   மேலும் மேலும்  மக்களைக் கொள்ளும்  நாசா காரிய   ஆயுதங்களை சேமிப்பதில் ஈடுபடும்போது முன்னேற்றம்  உடனே எப்படி எதிர்பார்க்க முடியும் ?
''போர்  வேண்டாம் என்று பேச்சு வார்த்தைகள் எங்கும் காதில் விழுகிறதே  ஐயா ?''
''உங்கள்  யுத்த கப்பல்களை நீங்கள் முடக்கி வைப்பதாலோ,  பீரங்கிகளை துருப்பிடிக்க செய்வதாலோ  உலகத்தில் யுத்தம்  நிற்குமா? மக்கள் ஒருவரோடொரு வர்  மோதிக் கொள் வார்கள்.  தடியெடுத்தாவது  சண்டை போடும் குணம் இருக்கும்.
''இதை  எப்படி  மாற்றி உதவ முடியும்?''
''தெய்வ  நம்பிக்கை,   ஒவ்வொரு தேசத்தினிடையிலும் பரஸ்பரமாக  மக்கள்  மனத்திலும்   இருக்க வேண்டும். ஏழை பணக்கார  வித்யாசம்  விலக வேண்டும்.   நல்லெண்ணம் மக்களிடையே அப்போது தோன்றும். அமைதி நிலவும். செழுமை, வளமை எங்கும்  பெருகும்.''
" நீங்கள் சொல்வது  நடக்க வெகு நாளாகும் போல் இருக்கிறது. வெகு தூரத்தில் உள்ளது போல் இருக்கிறது.   அதுவரை  சந்தோஷப்பட  எதுவுமில்லை அல்லவா? ''
மஹா பெரியவா கையில் இருந்த தண்டத்தை அழுத்தி பிடித்துக்கொண்டிருந்தார்
"பகவான் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். நல்லது நடக்கும்''
" நீங்கள் சொல்லும் பகவான் எங்கோ  வெகு வெகு தூரத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்''
" பகவானுக்கு  மனித இனம் மேல் அளவற்ற அன்புண்டு '' ..அமைதியான மெல்லிய குரலில் பதில்.'' மக்களிடையே நிலவும்  மகிழ்ச்சியற்ற நிலை, கஷ்டங்களை பார்த்தால்  பகவானுக்கு கருணை இல்லை என்று தோன்றுகிறதே''
என் வார்த்தை  அவரை ஆச்சர்யபட வைத்தது. என்னை கூர்ந்து பார்த்தார்.  நாம் ஏன் அவசரப் பட்டு இப்படி பேசினோமென்று எனக்குள் ஒரு வித எண்ணம் உறுத்தியது.  பொறுமை யாக பார்த்த  அவரது   கண்கள் ஆழமாக யோசித்தன.  
''பகவான்  மனித சக்தியையே  பயன்படுத்தி  சமநிலை படுத்துவார். தக்க நேரம் அமையும்போது அது நிகழும்.  எல்லாம் சரியாகும். தேசங்களிடையே உள்ள  கலவரம், மனிதர்களிடையே காணும்  தீய எண்ணங்கள்,  செயல்கள், மக்களின் துன்பம், கோடானுகோடி மக்கள் துயரம் எல்லாம் சாதகமாக உருவெடுக்கும்.  மாற்றம் தேடும்.  அதன் விளைவாக  பொறுப்புள்ள, சரியான  தெய்வீக  அன்புள்ள  மனிதன் ஒருவன் தோன்றுவான்.  நிலைமை சரியாகும். ஒவ்வொரு நூற்றாண்டிலும் இப்படி ஒருவர் தோன்றுவது வழக்கம்.  துன்பங்கள் அராஜகம், அக்கிரமம்  தெய்வ அவ  நம்பிக்கை, அறியாமை, உலக ஈர்ப்பு,  இதெல்லாம்  அதிகரிக்கும் போது  நிச்சயம்  ஒரு சக்திமான்   உதார குண புருஷன் அதைச்  சரிப்படுத்த  உலக க்ஷேமத்துக்கென்று உதயமாவான்.''
"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நமது காலத்திலேயே அப்படி ஒருவர் தோன்றுவாரோ?''
"இந்த நூற்றாண்டிலேயே, அப்படி ஒருவர் நிச்சயம்  காணப்படுவார்.  உலகத்துக்கு அது தேவை. அஞ்ஞான  இருள்  அதிகரித்துவிட்டது.  ஒரு தேவ புருஷன் நம்மிடையே சீக்கிரமே அறியப் படலாம்''
"மக்கள் தரம் தாழ்ந்து விட்டது என்பது உங்கள் அபிப்ராயமா ?''
" இல்லை. நான் அப்படி என்றும்   நினைக்கவில்லை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்   இறைவன் ஆத்மாவாக இருக்கிறான்.  ஆகவே  முடிவில் எல்லோரையும் இறை நம்பிக்கையில் ஈடுபடுத்த வாய்ப்பிருக்கிறது''
"எங்கள் மேலை நாடுகளில், பெரிய பெரிய  நகரங்களில் ராக்ஷஸர்களை உள்ளே கொண்ட மக்களைத்  தான் காண்கிறோம்.   கும்பலாக  பலம் கொண்ட சக்திகள் உள்ளனவே''
"மக்கள் மேல் குறை சொல்லவேண்டாம். அவர்கள் வாழும், வளரும் சூழ்நிலை அவ்வாறு உள்ளது.
அவற்றால் அவர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.  உங்கள் நாட்டில் மட்டும் அல்ல, கிழக்கிலும்   மேற்கேயும்  எங்கும்  அதே நிலை தான். சமூகம் மேம்படவேண்டும். அது அவசியம். அப்போது மக்கள்  மனநிலையும் நம்பிக்கையும் மாறும்.   உலக  ஈர்ப்பு வஸ்துக்கள், பொருள்மீது உள்ள  ஆர்வம், தேவை  மாறிவிடும். மனம்  ஒரு உயர்ந்த லக்ஷியத்தில்  ஈடுபடும். சமரஸம்  தழைக்கும். உலக துன்பங்களை மாற்ற இது ஒன்றே வழி.    ஏதோ ஒரு அசுரவேகத்தில் தேசங்கள் தவறான பாதையில் உழலும்போது   அதன் விளைவாக நிகழும் ஏமாற்றம், துயரம், கஷ்டம், துன்பம்  இத்தகைய  நல்ல மாற்றத்துக்கு  அடி கோலும் . கொடிய  செயல்களை, எண்ணங்களை கட்டுப் படுத்தும்.  தோல்வி தான் வெற்றிக்கு வழிகாட்டி.
''மக்கள் ஆன்மீக கொள்கைகளை, நம்பிக்கைகளை, அவர்களது  அன்றாட உலக விவகாரங்களில் ஈடுபடச்  செய்ய  வேண்டும் என  விரும்புகிறீர்களா?''

"ரொம்ப சரி.   அது முடியாததல்ல. நடக்காதது அல்ல. அது ஒன்றே வழி. எல்லோரிடமும் பரஸ்பர நம்பிக்கை, பயமின்மை, அன்பு,  அப்போது தான் மலரும்.அமைதி நிலவும்.    அது தோன்றி விட்டால்  அப்புறம் மறையாமல் தொடரும்  நிறைய ஆன்மீக புருஷர்கள் இவ்வாறு  தோன்றினால் மாற்றம் வேகமாக மலரும்.  பரவும்.  எங்கள் பாரத தேசம்  இந்தியா, அதை வரவேற்கும்,   வளர உதவும்., மரியாதையோடு மதிக்கும்.  ஆன்மீகத்தை மக்கள் செவி மடுத்து கேட்டு புரிந்து பின்பற்றினால்,  அதன் வழி வாழ்க்கை முறை அமைந்தால்,  எங்கும் அமைதி சுபிக்ஷம் நிச்சயம் தோன்றும்''

எங்கள் சம்பாஷணை தொடர்ந்தது. மஹா பெரியவா மேலை நாட்டை இகழ்ந்து கீழ்நாடுகளை உயர்த்தி பேசவில்லை.  பிறர் இப்படி செய்வதை பார்த்திருக்கிறேன்.  உலக கோளத்தின்  இரு பகுதிகளும் வெவ்வேறு  கோட்பாடுகள், நல்லவை,  தீயவை,  கொண்டவை.  அந்த வகையில்  அவற்றுள் அதிக   வித்யாசம் இல்லை.  புத்திசாலித்தனம் கொண்ட அடுத்த  தலைமுறை  ஆசிய, ஐரோப்பிய தேசங்களில் நல்லவற்றை இணைத்து பொருத்தி மக்கள் நாகரிகத்தில் முன்னேற்றம் கொண்டுவரும். சமநிலை உண்டாக்கும்.''
''ஐயா நான் உங்களைபற்றி சில கேள்விகள் கேட்கலாமா?
''ஆஹா  தாராளமாக கேளுங்கள் ''
''எவ்வளவு காலமாக நீங்கள் இந்த ஜகத்குரு  பட்டம் பதவி ஏற்கிறீர்கள்?'
" 1907லிருந்து.  அப்போது எனக்கு 12 வயது. பட்டமேற்றவுடன் நான்கு வருஷங்கள் காவேரிநதியின் கரையில் ஒரு கிராமத்தில் தீவிர  தியானம், கல்வியில் மூன்று வருஷங்கள் ஈடுபட்டேன். அப்புறம் தான் பொதுவாழ்வில் எனது காரியங்கள் ஆரம்பித்தது.''
"நீங்கள் உங்கள் தலைமை செயலகமான கும்பகோணத்தில் அதிகம் தங்குவதில்லையோ?
"கும்பகோணத்தில் அதிகம் இல்லாததற்கு காரணம், என்னை  நேபாள  அரசர் 1918ல் அழைத்த தால்.  அப்போது  வடக்கு நோக்கிய பிரயாண காலத்தில்  சில நூறு மைல்கள் தான் மெதுவாக  நகர இயன்றது.  ஏனென்றால்  அது என் பொறுப்பில் உள்ள சம்ப்ரதாயம், பண்பாடு வழக்கம்.  நான் வழியில்  உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் சென்று தங்கி அவர்கள் அழைப்பை ஏற்று  அங்கெல்லாம் ஆன்மீக  உரையாற்றி, ஆங்காங்கே  கோவில்களில்  பிரசங்கங்கள் உபன்யா சங்கள் செய்து ஆன்மீகத்தை, தெய்வீகத்தை வளர்க்க வேண்டும். மக்களுக்கு நல்வழி போதிக்க வேண்டும். இது தான் எனக்கிட்ட வேலை .'

"ஐயா , எனக்கு  யோக மார்கத்தில் உயர்ந்த    ஞானி ஒருவரை சந்திக்க வேண்டும். அதற்காக தான் நான் என் தேசத்திலிருந்து இங்கே வந்து தேட ஆரம்பித்தேன்.  சிறந்த யோகி யாராவது உங்களுக்கு தெரிந்தால் எனக்கு அறிமுகப்படுத்த முடியுமா. அவரது செயல்பாடுகளை  நான் கூர்ந்து ஆராய்ந்து ஏற்றுக் கொள்ள  விரும்புகிறேன்.  உதவுவீர்களா?''
மஹா பெரியவா அமைதியாக  நோக்கினார். மௌனம் சில வினாடிகள். அவரது விரல்கள் தாடியை தடவின.
"உங்களுக்கு  யோகமார்க்க   வழிகாட்டல்  வேண்டுமானால்  நீங்கள் சொல்வதை ஏற்கிறேன்.  உங்கள் ஆர்வம் நியாயமானதால் நிச்சயம் உங்கள் எண்ணம் ஈடேறும். உங்களிடம் திடமான மனம், மன உறுதி இருப்பதை அறிகிறேன். உங்களுக்குள்ளே ஒரு ஆன்மீக ஒளி உருவாகிவிட்டது. உங்களை அது சரியான  பாதையில் வழிநடத்தும்.''
''ஐயா  இதுவரை நான் எனக்கு புரிந்த தெரிந்த  வழியில் தான் நடக்கிறேன்.  உங்கள் ரிஷிகள் கூட  ''உன்னைத்தவிர வேறு தெய்வம் இல்லை ''என்கிறார்களே. ''
"பகவான் எங்கும் நிறைந்தவர். அவரை ஒரு இடத்தில் மட்டும் இருப்பதாக  கட்டுப்படுத் துவது தவறு. இந்த பிரபஞ்சத்தையே  காப்பவர் ''
எங்கோ  மீண்டும்  திசை தெரியா வேதாந்தத் திற்குள்  செல்வது போல் எனக்கு தோன்றியது. ஆகவே  அந்த ஆழத்தில் மூழ்காமல்  தலையை மேலே  தூக்கி  மீண்டேன்.
''ஐயா  உடனடியாக  நடைமுறையில் நான் செய்யவேண்டிய காரியம் என்ன ?''
"உங்கள் பிரயாணம் தொடரட்டும்.  பிரயாணம் ஒருநாள் முடிவுக்கு வரும். அப்போது  நீங்கள் சந்தித்த  ஆன்மீகவாதிகள், யோகிகள், பற்ற ற்ற துறவிகளை  சந்தித்ததை எல்லாம் நினைவு கூர்வீர்கள்.  அவர்களுள்  எவர் சிறந்தவராக உங்கள் மனதுக்கு படுகிறதோ அவரை  நாடுங்கள். அவர் உற்ற துணையாக உங்களை வழிநடத்துவார்.  உங்களுக்கு அருள் புரிவார்.''
நான் மஹா பெரியவாளின்  சாந்தமான முகத்தை, தோற்றத்தில்  மகிழ்ந்து மனதில் போற்றினேன்.
"ஐயா  அப்படி எவரும் எனக்கு உசிதமானவ ராக  படவில்லை என்றால் என்ன செய்வது?''
"அப்படிஎன்றால்  நீங்கள் நேராக கடவுளை நாட வேண்டியது தான்   அவரே தோன்றி உங்களை வழி நடத்துவார்.   இடைவிடாத தியானம்  அதற்கு அவசியம். அது தான் தவம்.  உங்கள் இதயத்தில் நல்ல விஷயங்களுக்கு பரந்த எல்லையற்ற  பாரபக்ஷமற்ற  அன்போடு  கலந்து  மட்டுமே இடம் தரவேண்டும். ஆத்மா பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்க வேண்டும்.  விடியற்காலை அதற்கு  உகந்த நேரம். அடுத்தது அந்தி வேளை. உலகம் அமைதியாக தோன்றும் நேரங்கள் அவை.  உங்கள் தியானம் எந்த வித  தடங்கல்,  இடையூறில்லாமல் தொடர உதவும்''
என் மீது  தாயன்பு கொண்ட  கருணைப்  பார்வை,   அவரது தாடி முக  தெய்வீக அமைதி  என்னை கவர்ந்தது.  (படம் இணைத்திருக் கிறேன். இதை வெகு  நேரம்  இன்று காலை பார்த்துக்கொண்டே இருந்தேன் . நீங்களும் அனுபவியுங்கள்.) . 
எனக்கு பொறாமையாக இருந்தது. அவர் இதயத்தில் உலகில் காலத்தால் ஏற்படும்  எந்த வித  சலனமும் இல்லை.  திடீரென்று சடக்கென்று ஒரு கேள்வி கேட்டேன்.
''ஐயா,நீங்கள் சொல்வது போல் செய்து கடைசியில் ஒருவேளை  உங்களையே என் குருவாக தேர்ந்தெடுத்து உங்கள்  உதவி கோரி அணுகலாமா?''
''இல்லை. முடியாது '' என்று தலையசைத்தார்.
"நான் ஹிந்து ஸநாதன  தர்ம மதத்தில்  பொதுவான ஒரு  மடத்தின் தலைவன்.  ஜகத் குரு . எனது நேரம் எனக்கு சொந்தமில்லை.  உலக நன்மைக்காக மட்டுமே. ஆகவே  எனது காரியங்களுக்கே  எனது நேரம் போதவில்லை.   பல வருஷங்களாக நான் தினமும் மூன்று மணிகள் தான்  தூங்க முடிகிறது. நான் எப்படி   தனிப்பட்ட முறையில்  சிஷ்யர்களை ஏற்றுக் கொண்டு  குருவாக உதவ முடியும்? உலக மக்களுக்கு  வழிகாட்டும்  குரு ஒருவரை நீங்கள் அணுகவேண்டும்.
"ஐயா, ஐரோப்பாவில் நீங்கள் சொல்வது போல் குருமார்களை காண்பது அரிது. ''
புரிந்து கொண்டு தலையசைத்தார்.
"சத்யம்  உண்மை என்றும் இருக்கிறது. உங்களால்  கண்டுபிடிக்க இயலும் ''
"நீங்களே  அப்படிப்பட்ட ஒரு உயர்ந்த யோகி யான  குருவை எனக்கு அறிவிக்க முடியுமா?
சற்று மௌனம்.
"எனக்கு  தெரிந்து  ரெண்டு மஹான்கள் உடனே  ஞாபகத்துக்கு வருகிறார்கள்.  நீங்கள் தேடுவதை உணர்த்த அவர்களால் முடியும்.   ஒருவர் வடக்கே காசி க்ஷேத்ரத்தில் உள்ளவர்.  பெரிய மாளிகை போன்ற  இடத்தில்  உள்ளார்  வெகு சிலரே  அவரை அணுகமுடியும். இதுவரை  ஐரோப்பியர்கள் எவரும் அவரது தனிமையை  நாடியதில்லை.   அவரிடம் உங்களை அனுப்புகிறேன்.  அனால் அவர்  ஐரோப்பியர்களை  ஏற்றுக்கொள்வார் என்பது சந்தேகம் தான். ''
''ரெண்டு பேர்  என்கிறீர்களே, இன்னொருவர்?''  என் ஆர்வம் கொதித்தது. அவசரம். அவசரம்.
''மற்றவர் இங்கிருந்து  தெற்கே சென்றால்  உள்ளடங்கிய ஒரு மலையில் இருப்பவர்.  சிறந்த உயர்ந்த ஞான குரு. அவரிடம் நீங்கள் செல்லவேண்டும் என்பது என்  கோரிக்கை''
''யார் அவர்?''
"அவரை  ''மஹரிஷி''  என்பார்கள்.   அருணாசலம்  எனும்  மலையில் வாசம்  செய்பவர். அருணாச்சலம் என்பது வட ஆற்காட்டில் உள்ள  ஒரு  ஞானச்சுடர் வீசும்  ஆன்மீக தெய்வீக க்ஷேத்ரம்.   அவரிடம் போக விருப்பமென்றால் வழி சொல்கிறேன்.'''
''மிக்க நன்றி குருநாதா. அவரை குருவாக ஏற்ற ஒருவர் அந்த பக்கத்துக்காரர் ஒருவர் எனக்கு ஏற்கனவே  தெரியும். ''
"ஓஹோ. அப்படியென்றால் நீங்கள்  அருணா சலம் செல்வீர்களா?''
''நிச்சயமில்லை.   நான் நாளை நான் தென்னிந் தியாவை விட்டு  செல்ல ஏற்பாடுகள் ஆகி விட்டது.''
"அப்படியென்றால்  நான் உங்களிடம்   ஒன்று கேட்கலாமா?'   'என்கிறார் மஹா பெரியவா பால் ப்ரண்டனிடம்.
''தாராளமாக ''
"மஹரிஷியைப்  பார்க்காமல்  தென்னிந்தி யாவை விட்டு செல்வதில்லை என்று எனக்கு வாக்கு கொடுங்கள்''
மஹா பெரியவா கண்களில் எனக்கு  உள்ளூர உதவும்  அன்பும் நேர்மையும் கொண்ட பார்வை எனக்கு பிடித்ததால் நான் ''அப்படியே செயகிறேன்'' என்று வாக்கு கொடுத்தேன்.
''சஞ்சலம் மனதில் வேண்டாம். நீங்கள் தேடு வதை நீங்கள் கண்டுபிடித்து அடையப் போகிறீர்கள்''
வாசலில் பக்தர்கள், தெருவில் போவோர் களின் குரல்  உள்ளே கேட்கிறது.
ஸ்ரீ சங்கராச்சார்யர்  அருகே இருந்தவரிடம்  காதில் ஏதோ சொல்கிறார்  '' ப்ரண்டன்''  என்ற என் பெயர் மட்டும் எனக்கு  விளங்குகிறது.  தெளிவாக கேட்கிறது.  
"என்னை நீங்கள் மறவாதீர்கள், நானும் உங்க ளை நினைவில் கொள்வேன்''  என்கிறார்
 இந்த  சுருக்கமான உரையுடன் எங்கள் சம்பாஷணை முடிகிறது.  பால்ய  வயதில் இருந்தே தனது வாழ்க்கையை கடவுளிடம் அர்ப்பணித்த  அந்த  அற்புத  புனிதரிடமிருந்து விடை பெற மனதில்லாமல்  வெளியேறு கிறேன்.  உலகத்தில் எந்த அதிகாரத்தையும்  தேடாத, விரும்பாத  ஒரு மதகுரு. முற்றும் துறந்த உண்மையான ஒரு துறவி. உலக சம்பந்தப்பட்ட எந்த பொருளை யார் கொடுத்தாலும் அதை உடனே அங்கேயே  தேவைப்பட்ட ,மற்றவர்களுக்கு  அளித்து விடும்  ஞானி.
ஆம் .  சத்யமாக அவர் சொன்னது போல் அவர் என் மனதில் நீங்காத இடம் பெற்று விட்டார்.
செங்கல்பட்டில் கொஞ்சம் சுற்றினேன். 
தொடரும்.





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...