Monday, July 19, 2021

ORU ARPUDHA GNANI

 

ஒரு அற்புத ஞானி   -    நங்கநல்லூர்  J K  SIVAN  -

 
கரைந்த கற்பூர ஜோதி..   -  
                                                                                                                                                                                                                        ''போதும்  வாழ்ந்தது இந்த பூமியில்..  இனியும் இங்கே திரும்ப திரும்ப  சுற்றித்  திரிய  அவசியமில்லை. வந்த  வேலை முடிந்து விட்டது''  என்று தோன்றி விட்டது சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கு. எல்லோருக்கும்  தன்னாலான உதவிகளை செய்தாயிற்று.  தேவையில்லாமல்  இந்த உடம்பை இனியும் சுமக்க  வேண்டுமா? என்று தோன்றி விட்டது.

1928ம் வருஷம்,  முடிவாக  இந்த உடலுக்கு  விடுதலை கொடுத்தாகி விட்டது.  அப்போது கார்த்திகை மாதம்.    

சேஷாத்ரி ஸ்வாமிகள் அடிக்கடி  எதிர்பாராத நேரங்களில் எல்லாம் கதவைத் தட்டும்  ஒரு வீடு  சுப்பலக்ஷ்மி மாமி இல்லம்.  அங்கே  எந்த நேரத்தில்  எப்போது வருவார் என்று சொல்லமுடியாது.  

''என்ன வச்சிருக்கே எனக்கு கொடுக்க  '' 

ஒரு நிமிஷம் தாமதித்தாலும் ஓடிவிடுவார். அல்லது பொறுமையாக அவள் கொண்டு வரும் வரை வீட்டில் உட்கார்ந்திருப்பார்.   அவள் கொண்டு வந்து தந்த ஆகாரத்தை வீடு முழுதும் இறைத்து விட்டு போய்விடுவார். ஏதேனும் பேசுவார்.  

சுபபலக்ஷ்மி  அப்பா என்று தான் அவரை அழைப்பாள்.  அவர் எப்போது எந்த நேரத்திலும் வருவார் என்று அவருக்காகவே  ஏதாவது உணவுப் பண்டம் வைத்திருப்பாள்.  அன்று  அவர் வந்தவுடன்  அவரைப்  பார்த்தவுடன் வழக்கம்போல்  ''வா அப்பா '' என்று  ஆர்வத்தோடு அழைத்து  ஏதோ கொடுத்தாள் . சாப்பிட்டார். 

''சுப்பு, நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு?  நான் ஒரு புது வீடு கட்டிண்டு போய்  விடட்டுமா?''
ஸ்வாமிகள்  இப்போதெல்லாம்  அடிக்கடி கேட்கும்  கேள்வி இது.  

இப்படி கேட்டால் அந்த பக்தை  என்ன பதில் சொல்வாள் . விழித்தாள் .   ஏதோ அர்த்தமில்லாத வழக்கமான பேச்சு என்று எடுத்துக் கொண்டாள் .  அடிக்கடி இந்த கேள்வியை கேட்கிறாரே . எங்கே என்ன புது வீடு வாங்கப்போகிறார். வீடு தேவையா  அவருக்கு? 

ஆகவே  சில நாள்  ''ஆமாம்,  நீ    இங்கே ஏற்கனவே வீடு வாங்கியாச்சு. இனிமே புதுசா ஒண்ணு வேறே  வாங்கப்போறியாப்பா  ''  என்று ஒருமையில் கேட்பாள்.  சிரித்துக் கொண்டே போய்விடுவார். அதே கேள்வி இன்றும் கேட்டார்.

ஸ்வாமிகள் கேட்டதன் அர்த்தம்  ''என் வேலைகள் இங்கே  பூர்த்தி யாகி விட்டன. நான் கிளம்பட்டுமா?''  புது வீடு  என்பது எடுக்கப்போகும்  வேறு  உருவம்.  அது பூலோக பிறவியில் மனிதனாக இல்லை.  தீப ஒளியாக  பகவானோடு ஐக்கியமாகும் சுடர் உருவம் .

சுபபலக்ஷ்மிக்கு புரியவில்லை. இம்மாதிரி  யெல்லாம் புரியாமல் சம்பந்தம் இல்லாமல் ஏதோ பேசுவது அவரது  குணம்  என்று தான் நினைத்தாள் .   இப்படித்தான்   அந்த ப்ரம்ம ஞானியைப் பற்றி எல்லோருமே நினைத்தார்கள். 
 
இன்று  மறுபடியும் அந்த கேள்வியை அவளிடம் கேட்டபோது  சுபபலக்ஷ்மிக்கு என்ன தோன்றியதோ, பதில் அளித்தாள் .

''சரிப்ப  ,   நீ  ஆசைப்படறே /   போய்  புதுசா ஒரு வீடு கட்டிண்டு அங்கே யோகம் தியானம் எல்லாம் பண்ணு'' .  என்று சொல்லிவிட்டாள் . 

சேஷாத்திரி ஸ்வாமிகள் காமாக்ஷி அவதாரம்.  அம்பாள் உபாசகர். அம்பாள் உத்தரவு இன்றி எதையும் செய்யமாட்டார்.  அம்பாள் அவருக்கு நேராகவே பேசி பதிலளிப்பவள் .  

 சுப் பலக்ஷ்மியின் வார்த்தையை அம்பாள் உத்தரவு  கடைசியாக கிடைத்தது என்று ஏற்றுக் கொண்டார். 

''சரிம்மா  தாயே. அப்படியே செய்றேன்''

சில நாள்கள் ஓடின.  யாரோ ஒரு பக்தர்   ''உங்களை  போட்டோ எடுக்கட்டா, எனக்கு வேணும்''  என்று கேட்டார்.  
''ம்...  எடுத்துக்கோயேன்.''
''உங்களுக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டி, புது டிரஸ் போட்டு, சந்தனம், வாசனை தைலம் எல்லாம் தடவி , மாலை அணிவித்து  போட்டோ எடுக்கப்  போறேன். ''

  ''சரி. என்ன வேணாலும் பண்ணிக்கோ '' என்று சொல்லி ஒத்துழைத்தார் ஸ்வாமிகள்.   போட்டோ எடுத்தாயிற்று.  ஸ்வாமிகளுக்கு  ஜுரம் வந்துவிட்டது.  குணமாகாமல் நாற்பது நாட்கள் வாட்டியது.  நாளுக்கு நாள்  உடல் நிலை மோசமாகி  வாட்டியது. நாற்பத்தி ஒன்றாம் நாள்  சக்தியை  திரட்டிக்கொண்டு  அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க  வேண்டும் என்று நினைத்தார். 

''கடைசியா  அவனை தரிசிக்கணும்''. 

மெதுவாக  கோவிலுக்கு நடந்து போனார். ஆடிக்கொண்டே  விழுவது போல் நடந்தார். தரிசனம் பண்ணியாயிற்று. வெளியே வந்தார் ஒரு குட்டையில் நீர். அதில் போய் உட்கார்ந்து கொண்டார்.  ஈர உடைகளை  மாற்றிக் கொள்ள அனுமதிக்க வில்லை. அதோடு வீடு திண்ணைக்கு வந்தார். 

நாலு நாள்  நகர்ந்தது.   
1929 ம் வருஷம், ஜனவரி 4ம் தேதி.  சேஷாத்ரி ஸ்வாமிகள்  பூதவுடலை நீத்தார்.   ஒருவர்  மறைந்த பிறகு தான்  அவரது   மஹத்வம் புரியும்  என்பதை  திருவண்ணாமலை மக்கள்  உணர்ந்தார்கள்.  பக்தர்களின்  துயரத்தைப் பற்றி  கேட்கவே வேண்டாம்.  ஸ்வாமிகள் மறைவு எல்லோருக்குமே   ஒரு பெரிய  தாக்கத்தை உண்டாக்கியது.  எங்கும் துயரம்  உருவமாக  நின்றார்கள் .   மகானின் பூத உடல்  அலங்கரிக்கப்பட்டு  ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது.   திருவண்ணாமலையில்  எங்குமே கற்பூரம் கிடைக்கவில்லை எனும் அளவுக்கு கற்பூரம் சேர்ந்தது.   திருவண்ணாமலை வரும் அத்தனை பஸ்களிலும் நிற்க கூட இடம் இல்லை.  அந்த அளவுக்கு  ஸ்வாமிகளின் மறைவு செயதி வேகமாக எங்கும் பரவியது.   திருவண்ணாமலை தெருக்களில் என்றுமில்லாத அளவுக்கு  ஜனங்களின் நெரிசல்.  எல்லோரும் பக்தியில் ஏற்றிய கற்பூர ஜோதி   இரவைப்  பகலாக்கியது. 
எங்கும்  பக்தி கீதங்கள், பஜனைகள்,  ஸ்தோத்திரங்கள்,  ஸ்லோகங்களின்  சப்தம். 

பகவான்  ரமண ரிஷி  இந்த ஊர்வலத்தில்  அக்னி தீர்த்தம் அருகே  காத்திருந்து  கலந்து கொண்டார்.  ஒரு பிருந்தாவனம்  அமைக்கப்பட்டு  ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள்  ஸமாதி 
வழிபாட்டுக்கு   உருவானது.   அதுவே  இன்றும்   நாம் காணும் ஸ்ரீ சேஷாத்ரி   ஸ்வாமிகள்  ஆஸ்ரமம், செங்கம் தெருவில் திருவண்ணாமலையில் உள்ளது.

சேஷாத்ரி ஸ்வாமிகள் புது வீடு வாங்கி சுப்பலக்ஷ்மி  உத்தரவிட்டது போல் அதில் தியானத்தில் யோகத்தில் இருக்கிறார்.  இன்றும்  நம் அனைவருக்கும் அவ்வப்போது  காட்சி தந்து  தெய்வமாக  அருள் பாலிக்கிறார்.    தானாகவே  திருவண்ணாமலைக்கு வந்து,   திருவாண்ணாமலையின் இரு  ஞானக்கண்களாக  ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகளும் ஸ்ரீ ரமண ரிஷியும்   இன்றும்  என்றும்  பக்தர்களுக்கு  வாழ்வின் லக்ஷியத்தை  புரிய வைத்து வழி நடத்துகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.




 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...