Friday, June 25, 2021

SRIMADH BAGAVATHAM


ஸ்ரீமத் பாகவதம்  நங்கநல்லூர்   J K  SIVAN 
11வது காண்டம்  12வது அத்யாயம் 
24 ஸ்லோகங்கள் 


12.    ஹ்ருதய  ப்ரம்ம  ஞான ஒளி 


கிருஷ்ணன்  இந்த பூவுலகை விட்டு நீங்கும்  நாள் வெகு தூரத்தில் இல்லை.  சில தினங்களே உள்ளன. அதற்கு முன்  கிருஷ்ணனை சந்தித்த  உத்தவன்  பாக்கியசாலி.  கிருஷ்ணனினிடம்  அவனும் ஞானோபதேசம் பெற கொடுத்து வைத்தவன்.  இந்த  உபதேசம் தான்  உத்தவ  கீதை எனப்படுகிறது.  அந்த உபதேசத்தை தான் நாமும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.  கண்ணன் சொல்வதை மேலும் கேட்போம் 

''என் அருமை உத்தவா,  எனது பக்தர்களோடு பழகினாலே போதும்.  புலன்களின் ஈர்ப்பில்  இருந்து விடுபடுவது எளிது.  இப்படி பட்ட  சத்சங்கம் என்னையே  பக்தர்களின்  கட்டுப் பாட்டில் கொண்டு வந்து விடும். 
இதைத் தவிர  யோக மார்க்கங்களில்  ஈடுபடுவது, வேதாந்த தத்துவங்களில் மனம் செலுத்துவது,  அஹிம்சை,  அமைதியான  எளிய வாழ்க்கை  வேத பாராயணம்,  சாத்வீகமான துறவு   வாழ்க் கை, பரோபகார செயல் களில்  சக்தியை செலுத்துவது, உதாரணமாக  பலருக்கு உதவும் குடிநீர் கிணறு தோண்டுவது, நிழல் தரும்  மரங்களை நடுவது,  பொதுநல  காரியங்களில் நேரத்தை  சக்தியை செலுத்துவது,   தான தர்மம் பண்ணுவது,   விரதம் இருப்பது,  தேவதைகளை வழிபடுவது,   ரஹஸ்ய மந்த்ரங்களை உச்சா டனம் செய்வது திவ்ய க்ஷேத்ரங்களுக்கு  தரிசனம் செய்ய செல்வது,  புனித நீர்களில் நீராடுவது,போன்றவை என்னை ஒருவனின் கட்டுப்பாட்டில் கொண்டுவராது.  அவனது  கர்ம பலன் நல்லதாக உதவ வழி காட்டும்.   அது ரெண்டாம் பக்ஷம். 

ஒவ்வொரு யுகத்திலும்  எண்ணற்ற  ஜீவன்கள், புலன்  உணர்வுகளின் அடிமையாகவும்  உணர்ச் சியில் அடைபட்டு, அஞ்ஞானிகளாகவும் இருந்த போதிலும்  எனது உண்மையான பக்தர்களின் சகவாசத்தால்  உயர்வடைந்திருக்கிறார்கள்.   ராக்ஷஸர்கள், தைத்ரியர்கள், பறவைகள், விலங்குகள்,  கந்தர்வர்கள் , அப்சரஸ்கள், நாகர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள், பெண்கள் ஆண்கள் என்று பலதரப் பட்டவர்கள், என் இருப்பிடமாகிய  வைகுந்தத்தை  அடைந்
திருக்கிறார்கள்.   வத்ராசுரன், பிரஹலாதன், வானபர்வன் ,மஹாபலி,  பாணாசுரன், மயன் , விபீஷணன், சுக்ரீவன், ஹனுமான், ஜாம்பவான், கஜேந்திரன், ஜடாயு,  தர்ம வ்யாதன்,குப்ஜன், தியாகம் செய்த பிருந்தாவன  பிராமண மனைவி கள்--  இவர்கள் என்ன யாகம் செய்தவர்கள்,  எந்த  வேதம் கற்றுணர்ந்தவர்கள்,  எந்த  மஹானை  குருவாக பெற்றவர்கள், என்ன தவம் இயற்றிய வர்கள்,  என்னோடும் என் பக்தர்களோடும்
இணைந்தவர்கள் என்ற ஒரே  இணக்கம் பக்தி பிணைப்பு  ஒன்றே  போதுமே. 

ப்ருந்தாவன வாசிகள் , கோபியர்கள், பசுக்கள், மருத மரங்கள்,  மிருகங்கள் பறவைகள், செடிகள், புதர்கள், காளிங்கன் போன்ற பாம்புகள்,  எல்லாமே  எந்த வேதம் படித்தவை,? என்  மீது கொண்ட தூய  அன்பு, பக்தி ஒன்றே அவற்றை  அவர்களை  என்னோடு இணைத்தது. எந்நாளும் அவர்களிடமிருந்து விடுபட இயலாது.  

உத்தவா,  வித விதமான யோகங்களில் ஈடு பட்டாலும்,   தர்க்கங்களில் வாதங்களில்  சம்பாஷித்தாலும்,  தான தர்ம, விரதம்  தவம், யாகங்களில்  முனைந்தாலும்,   வேத மந்த்ரங் களை  பாராயணம் செய்தாலும்   வேதங்களை படித்து  மற்றவர்க்கு கற்பித்தாலும்,  என்னை அடைவது என்பது முடியாது.  பிருந்தாவன வாசிகள்,  கோபியர்கள், என்னோடு  இணைந்த வர்கள். ஏன் என்றால் அங்கே  தூய  அன்பு பாசம் என்மேல் இருந்தது.  அவர்களுக்கு உலகம்  மூச்சுக்காற்று என்று ஒன்று உண்டானால் அது நானே என்பதால்  நான் அவர்களை விட்டு பிரிய முடியவில்லை.

உனக்கு தெரியுமா உத்தவா,  என்னையும்  பலராமனையும்  மதுராவுக்கு  அழைத்துப்போக  மாமா  அக்ரூரர் வந்தபோது  பிருந்தாவன மக்கள் அனைவரும்  துளிக்கூட  என்னைப்  பிரிய  மன மில்லாமல் ஏதோ ஒரு பேரிழப்பை அனுபவிப் பவர்கள் போல  வாடினார்கள்.   இதயம் நொறுங்கி, மனம் ஒடிந்து போனார்கள். எந்த உற்சாகமும் சந்தோஷமும் அவர்களிடம் என் பிரிவினால்  இல்லை.  பக்தி வைக்க வேண்டும் என்ற பிரஞை இல்லாத தூய பக்தி அது.

என் அருமை உத்தவா,  இத்தனை காலம்  பல   இரவுகள், பல பகல் வேளைகள்  என்னோடு கழித்த  இன்ப மெல்லாம்  ஒரே கணத்தில் அவர்களை விட்டு மறைந்துவிட்டது.  என்னோடு சேர்ந்திருப்பது, என்னுடன் அன்போடு கழித்த நேரங்களை மனதில் நினைத்துப் பார்த்தார்கள், நமது  பல  வருஷங்கள் பிரம்மாவுக்கு ஒரு நாள் போல்  அதையே   அவர்களது  ''பிரம்மனின் ஒரு நாளாக''  நினைத்து ஆறுதல் பெற்றார்கள்.

என் அருமை உத்தவா,  ரிஷிகள் முனிவர்கள்  யோகத்தில்  மூழ்கி  ஆத்மஞானம் பெறுவதைப்   போல   ஆறுகள்  நீளமாக ஓடி  கடலில்   விழுந்து சங்கமமாகி, கரைந்து    உருவம், நிறம்,  பெயர் அடையாளம் எல்லாம் இழப்பது போல,  இந்த  ப்ருந்தாவனத்து கோபியர்கள் என்னோடு  இணைந்து,   தான், தனது என்ற தங்கள் உடல் மனம் இதயம்  அடையாளம் எல்லாம்  என்னுடையதாக்கி  என்னோடு  கலந்தவர்கள். பரிபூரண சரணாகதி அது.  

ஆயிரக்கணக்கான  அந்த கோபியர்கள்  ரொம்ப எளிமையானவர்கள், நான்  யார்  என்பதை உணராத, சுயநலமற்ற, வேரெந்த  சிந்தனையே இல்லாமல், என்னை  அவர்களில் ஒருவனாக  அன்போடு  ஆசையோடு ஏற்று என் மேல் அளவு கடந்த பிரியம் வைத்து என்னையே மனதில் கொண்ட  அன்பு தெய்வங்கள். என்னைப் பார்ப்ப து, என்னோடு இருப்பது, விளையாடுவது இதுவே அவர்களுக்கு பேரானந்தத்தை  தந்தது.   ஆகவே தான் அவர்களால் என்னை அடைய முடிந்தது.
உத்தவா,  உனக்கு எதற்காக இதை சொல்கிறேன் என்றால்,   வேதமந்த்ர  பாராயணம் உனக்கு வேண்டாம், நூல்களை ஆராய்ந்து கற்க வேண்டாம்.  இதுவரை கேட்டது, இனி கேட்கப் போவது எதுவும் வேண்டாம்.  என்னிடம் தஞ்ச மடை. உலகத்தின் உயிர்கள் அனைத்தின் இதயத்திலும் குடிகொண்டிருப்பவன்  நான்.  என்னை முழுமனதுடன்  சரணடைவாய்.  எந்த சந்தர்ப்பத்திலும் உன்னை பயம் அணுகாது . உன்னை பாதுகாக்கும்  பொறுப்பு  எனதல்லவா?
''ப்ரபோ,  மாயாலீலாவிநோதா,  உன் வார்த்தை களை கேட்டேன்.  என் இதயத்தில் இருக்கும் சந்தேகங்கள் முழுதும் நீங்கவில்லையே. என் மனம் அதனால் பீதியடைகிறது.'' 

என் அருமை உத்தவா, உலகில் வாழும் ஒவ் வொரு  ஜீவனிலும் உயிர் சக்தியை  அளித்து  அதன் இதயத்தில் உறைபவன் நான்.   அதன்  பிராணன்,   ஜீவாதார ப்ரணவ ஒலியாகியவன். அசைவாகியவன். சூக்ஷ்மமாக  மனதில்  தோன்றுபவன். வேதத்தின் ஒலியாக  பரிமளிப் பவன்.   வேத ஒலியின்  அதிர்வு, அதன் சக்தி தான் நான்.   என் சக்தியை தான் ஐம்புலன்களில், கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம், புத்தி, அஹங்காரம் எதிலும் உணர்கிறார்கள்.   ஒன்றான நான் பலவாக பல ரூபங்களில் நாமங்களில் காண்கிறேன். அருவமானவன் 
உருவமாகிறேன். 

ஒரு ஆடையை எடுத்துக் கொண்டால் அதன் நீளம், அகலம்   எல்லாமே,  அதில் உள்ள நூலின் நீளம் அகலத்தைப் பொறுத்தது அல்லவா? அது போலவே, உலகின் பல தோற்றங்களிலும் நான் உள்ளடங்கி இருப்பவன்.

''உத்தவா,   புத்தியால் உணர்ந்து உனது ஆன்மீக  குருவை  பக்தியோடு நீ  வழிபட்டால், ஆழ்ந்த பரவெளி ஞானம் எனும் கூரிய  கோடரி, ஆன்மாவை சூழ்ந்திருக்கும்  மாயத்திரையை  வெட்டி வீழ்த்தும் . உள்ளே ஒளிவீசும்  ஆன்மா புலப்பட்டவுடன், உனக்கு எந்த  ஞானமும்  தேவையில்லாததால்  அந்த கோடாரியையும்  வீசி எறியலாம்.''

இந்த அத்யாயம் கொஞ்சம் நிதானமாக படித்துப் புரிந்து கொள்ள  மிருந்த பொறுமை  தேவைப்ப டலாம்.   சில உயர்ந்த தத்துவங்கள் எளிதில் விளங்காது என்பது நாம் அறிந்த உண்மை தானே.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...