Saturday, June 19, 2021

srimad bagavatham


 ஸ்ரீமத் பாகவதம் -  நங்கநல்லூர் J K  SIVAN  -11வது காண்டம் -  7வது அத்யாயம் 74 ஸ்லோகங்கள்

 
7.   தத்தாத்ரேயரின் குருமார்கள்.  

   ''வா   என் பிரியமான உத்தவா, '' ஆமாம் நீ சரியாக புரிந்து கொண்டாய். நான் யதுகுலத் தை விட்டு, பூலோகத்தை விட்டு,   என் இருப்பி டம்  வைகுண்டத்துக்குச் செல்கிறேன். நான் அங்கு திரும்பவேண்டும்  என்பதற்காக தான் சிவன் ப்ரம்மா இந்திராதி தேவர்கள் வந்து கேட்டுக் கொண்டார்கள்.   ப்ரம்மா  வேண்டியதால்  தானே நான் என் அம்சமான  பலராமனோடு இங்கே  வந்து என் அவதார காரியத்தை நிறைவேற்றிவிட்டேன். யது வம்சம் அழிவதைத் தவிர வேறு வழியில்லை.  இனி யது வம்சம் இல்லை.  இன்றிலிருந்து சரியாக  ஏழு நாளில்  துவாரகை சமுத்திரத்தில் மூழ்கிவிடும். விரைவில் நான் வைகுண்டம் திரும்பிவிடுவேன்.  இனி கலியுகத்தின்  பலனை பூமி  ஏற்க வேண்டும்.  நான்  சென்ற  பிறகு நீயும்  இங்கே இருக்க கூடாது. நீ பரிசுத்தமானவன். பாப காரியங்கள் இங்கு இனி அதிகரிக்கும்.  நீ இங்கே இருக்க வேண்டாம்.   சகலத்தையும் துறந்து   என்னை தியானம் செய். என்மேல் உன் மனதை திருப்பி  உலகில் எதிலும்  பற்றின்றி திரி.
அன்பான உத்தவா,   உன் மனத்தால், வாக்கால், கண்ணால், மற்ற புலன்களால் நீ காணும் இந்த உலகம் மாயை. உண்மையைப் போல் தெரியும்  ஆனால்  அது வெறும்  பொய்த்தோற்றம்.  சகலமும் அழியும் தன்மை கொண்டவை. ஒவ்வொன்றும் வேறு வேறாக தெரியும். அதைத் தேடி அலைவதிலேயே  வாழ்க்கை முடியும்.உலக வாழ்வின் ஈடுபாடுகளிலேயே  சுகம்  தேடுவதிலும்  இழப்பதிலும்  அவன் காலம்  கடந்துவிடும்.   எதெல்லாம்  அவசியம் கண்டிப்பாக  செய்யவேண்டுமோ அதை செய்வதிலும், செய்யக் கூடாத வைகளை செய்வதிலும்,  செய்ய வேண்டியதைச் செய்யாமலும்  கலங்குகிறான்.  
உத்தவா,  நீ  இதிலிருந்து ஒதுங்கி, உன் ஐம்புலன்களின் வழி செல்லாமல்  அவற்றை அடக்கி ஒடுக்கி, உன் உள்ளே  தெரிகின்ற உலகமாக   எல்லாவற்றையும்  கண்டு, உன்னில்  என்னை அனுபவித்து நட.  நீ வேதங்களை அறிந்தவன், தெளிவான சிந்தனையாளன், எது உண்மை  எது அழிவற்றது என  தேர்வு செய்யக்கூடியவன் , அன்போடு எல்லோரிடமும் பழகுபவன், வாழ்க்கையில் உனக்கு எந்த துன்பமும் மற்றவர்களை போல்  அனுபவிக்க மாட்டாய்.    நீ  வேதமார்கத்தில்   வழிநடப்பவன். ஆத்ம ஞானி. உன்  போன்றவர்கள் தான் என்னை உணரமுடியும்.   ஜனன  மரண துயரம் அற்றவர்கள்''. 
''பரீக்ஷித்  நான் சொல்வதைக் கேட்கிறாயா,   இப்படி கண்ணன் உத்தவனிடம் கூறியதும்  மிகுந்த  கவனத்தோடு கிருஷ்ணன் சொல்வ தை கேட்ட உத்தவன் பதிலளிக்கிறான்:
''கிருஷ்ணா, நீ யோகீஸ்வரன்,  உன் கருணையால்  உன் பக்தர்களுக்கு  யோகஞானம் அளிப்பவன்.  பரமாத்மன். மாயையின் பிறப்பிடம்.    நான்  உலக வாழவைத் துறந்து தியாகம் செயது, சன்யாசம்  பெற வழி காட்டியவன்.   எனக்கு உதவுபவன்.   பரமாத்மா,  புலன்கள்  இழுக்கும் வழியில்  நடந்து,அதன் பிடியில் சிக்கியவர்கள், உன் மீது பக்தியில்லாதவர்கள்  ஆகியோருக்கு  நீ சொல்வது புரியாது.  புரிகிறமாதிரி இருந்தாலும் நீ சொன்னபடி வாழ முடியாது.
''கிருஷ்ணா,  நானும்  கூட இன்னும் உலக  வாதனைகளுக்கு அடிமைப் பட்டவன் தான். உன் மாயையில் சிக்கியவன் தான். நான் தான் இந்த தேகம், இவர்கள் என் உறவினர்கள் என்ற  மாயையில் தவிப்பவன். இந்த ஏழைக்கு அருள் செய். உன் உபதேசத்தை நான் எவ்வாறு பின்பற்ற இயலும் என்று எனக்கு உணர்த்து.   நீ சத்ய ஸ்வரூபன். தேவாதி தேவன். உன் பக்தர்களுக்கு உன்னைக்  காட்டுபவன்.  உன்னைத் தவிர வேறு எவரும் எனக்கு ஞானம் புகட்ட முடியாது.  உன்னை மாதிரி சிறந்த ஆசிரியன் எவனும் எனக்குத் தெரிந்து கிடையாது. ஆகவே தான் பிரம்மன் முதலாக சகல தேவர்களும் உன்னை நாடுகிறார்கள்.  உன் மாயா சக்தியின் பிரமிப்பில் அதிர்ந்து போகிறார்கள்.  எனக்கு உலக வாழ்க்கை அலுத்து விட்டதடா கிருஷ்ணா, நானுன்னை சரணடைகிறேன். நீ தான் என் வழிகாட்டி. நீ  எல்லையற்ற கருணை வள்ளல். வைகுண்ட வாசன். எல்லோருக்கும் உற்ற நண்பன்.  அன்பன்.  நாராயணன்.''
''உத்தவா,  உலக வாழ்வின் அநித்தியம் உணர்ந்தவர்கள், தங்களை  உயர்த்திக் கொள்கிறார்கள்.  புத்திசாலி களாக,  நிலையான சுகத்தை நாடுகிறார்கள். ஒவ்வொருவனும் தனக்குத் தானே தான்  ஆத்ம ஞானம் உணர  ஆசிரியன்.    சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு ஆன்ம அபிவிருத்தியை  அளிக்கும்.  அது தான்  என்னை  உணர முடியச் செய்யும்.   என்னைக்  காணச்  செய்யும். 
எத்தனை விதமான ஜீவராசிகள் உன்னைச் சுற்றி உள்ளன  என்று பார். ஒரு கால், இரு கால்கள், பல கால்கள்  கொண்டவை, காலே இல்லாதவை  என்று காண்கிறாயே, அவைகள்  எல்லாவற்றையும்  விட   மனிதனே எனக்கு விருப்பமானவன்.  மற்றவர்களால் உணரமுடியாத என்னை மனிதன் எளிதில் உணரமுடியும், நெருங்கமுடியும்.  புத்தி அவ்வாறு அவனுக்கு அளித்திருக்கிறேன்.  
உனக்கு  ஒரு  சிறு கதை சொல்ல எனக்கு நேரமிருக்கிறது.  அது என்ன கதை தெரியுமா?.  யது என்கிற ராஜா ஒரு அவதூதரை சந்தித்து  அவரிடம் சம்பாஷித்ததை சொல்கிறேன். கேள்.  (தத்தாத்ரேயரின்  24 குருமார்கள் என்ற தலைப்பில் முன்பே எழுதிய ஒரு கட்டுரையை தனியாக பதிவிடுகிறேன் இதில் சேர்த்தால் நீளம் அதிகரித்துவிடும்)  
மஹாராஜா யது, கானகத்தில் ஒருநாள் ஒரு இளம் சந்நியாசியை சந்திக்கிறான். அவர்   உலகைத் துறந்த அவதூதர். (ஆடையின்றி திரிபவர்)   உடலை மறந்த சிறந்த ஞானி.  கொடிய மிருங்கள் உலவும் இடங்களில் கூட கவலையின்றி ஆனந்தமாக திரிகிறார். அவரது  ஞான ஒளியில் கவரப்பட்டு  யது அவரை நெருங்கி வணங்கு கிறான். 
''ப்ராமணரே,  சகலமும் அறிந்த   ஞானியாக   இருக்கிறீர்களே, எப்படி உங்களால் இவ்வளவு  சிறுவயதிலேயே   ஞானம் பெற முடிந்தது.? ஒரு குழந்தை மாதிரி பயமின்றி கவலையின்றி உங்களால் எப்படி  உலவமுடிகிறது? ஆன்மீகத்திலோ, பொருள் ஈட்டுவதிலோ,  உலக வாழ்வின்பங்களை துய்ப்பதிலோ, ஆத்ம ஞானம் பெறுவதிலோ, மிகுந்த சிரமப் பட வேண்டியிருக்கிறதே .  எல்லோரும் நீண்ட காலம் வாழ முயல்கிறார்கள் பேரும்  புகழும் தேடுகிறார்கள்.    நீங்கள் இதெல்லாம் லக்ஷியம் இன்றி இருக்கிறீர்களே. ஆனந்தமாக எந்த  பாதிப்புமின்றி தனித்து இருக்கிறீர்களே. காட்டுத்தீ   நடுவிலேயும் கூட கங்கையின் குளிர்ந்த நீரில் நிற்பது போல் இருக்கிறீர்களே, எப்படி?   உலக பிடிப்பு, குடும்பம் ஒன்றிலும் படாமல் தாமரை இலைத் தண்ணீராக ஒளிர்கிறீர்களே, உங்கள் ஆனந்தத்துக்கு எது காரணம் என்று சொல்லுங்களேன்?'' என்றான்   யது மஹாராஜா.
உத்தவா,  இதற்கு அந்த  அவதூதர் என்ன பதில் சொன்னார் என்று சொல்கிறேன் கேள் ''  என்கிறார் கிருஷ்ணன்.
''மஹாராஜா, எனக்கு  ஆன்மீக குருமார்கள் பலர். அவர்களில்   24  குருமார்களிடம்  கற்ற பாடத்தால் நான்  ஞானம் பெற்றதை  மட்டும்  இப்போது  நீ கேட்டதால்  சொல்கிறேன். ''
''ஆஹா  அந்த குருமார்கள்  யார்  சுவாமி ?''
''வேறு யாருமில்லையப்பா,   பூமி,  மலை, ஆகாசம், காற்று, நெருப்பு,  சந்திரன், சூரியன், புறா  மலைப்பாம்பு, கடல், வண்டு , தேனீ, யானை, தேன்  திருடன், மான், மீன், பிங்களா  எனும் விலைமாது, ஒரு பறவை,ஒரு சிறு குழந்தை,இளம் பெண், அம்பு செய்பவ ன்,பாம்பு, சிலந்தி, குளவி.  இந்த குருமார்க ளின்  செயல்களால் நான் அறிந்தது அதிகம்.
இவர்களிடமிருந்து  நீங்கள் என்ன கற்க முடிந்தது?  என்று ஆச்சர்யமாக கேட்டான்  ராஜா யது .
''நம்மை துன்புறுத்துபவரும்  இறைவன் சித்தத்தால் தான் அவ்வாறு செய்கிறார் என்று ஏற்றுக்கொண்டு  பொறுமையாக இருக்க பூமியிடம் கற்றுக்கொண்டேன்...  ''அகழ்வாரை.....  வள்ளுவர் குறள்  மறந்துவிட்டதா?மலை  ஸ்திரமாக நின்று  மழை, தாவரங்கள், உணவுப் பொருள்கள்  எல்லோருக்கும் தருவது போல்  பரோபகாரத் தில் ஈடுபட மலையிடம் கற்றேன்.  மரங்களின்  சீடனாக,  நானும்  மற்றவர்க்கு  தன்னை அர்ப்பணிக்க  தெரிந்து கொண்டேன்.  கிடைத்ததில் திருப்தி கொண்டு  தேவைகளை குறைத்து.  காற்று தன்னை அடைந்த சுகந்தம் துர்கந்தம் இரண்டையும் சமமாக  தூக்கிச் செல்வதிலிருந்து அபேதமாக இருக்க கற்றேன்.  காற்று எங்கும் நிறைந்திருப்பது போல், நல்லவர் தீயவர் என்று பாகுபாடு இன்றி எதையும் எதிர்பாராது சமமாக வீசுவது போல் பகவான் எங்கும் நிறைந்து எல்லோருக்கும் ஒன்றாகவே அருள்கிறான் என்று புரிந்துகொண்டேன். எதிலும் சம்பந்தமின்றி குறுகிய மனப்பான்மை விலக  ஆகாயத்திடம்  அமைதியாக இருக்க கற்றேன்.   தண்ணீர்  எல்லாவற்றையும்  கரைக்கிறது. அழுக்கை நீக்கி சுத்தமாக்கு கிறது.  ஓடும் தெளிந்த நீர் போல் அன்போடு பேச கற்றேன்.  தெளிந்த நீர் போல்  தேவையற்றவையை  ஒதுக்கி வைக்க கற்றேன். உள்ளும் புறமும் சுத்தமாக இருக்க நீரிடம் கற்றேன்.  நெருப்பு  பாரபக்ஷம் இன்றி சுத்தம் அசுத்தம்,  விலை உயர்ந்தது , குப்பை எதுவானாலும் ஒன்றே என்று எரித்து சாம்பலாக்குவது போல்   பாரபக்ஷம் இன்றி எல்லோரிடமும் பழக நெருப்பிடம் கற்றேன்.  உடலின் நலம்  அசுகம்  எதுவும் என்னை பாதிக்காமல் இருக்க சந்திரனிடம் கற்ற பாடம் என்னவென்றால்  வளரும்போதும் தேயும்போதும் சந்திரன் மாறுவதில்லை. சமமாக ஏற்கிறான்.        சூரியன்  கடல்நீரில் எந்த அசுத்த, சுத்த நீர்  கலந்தாலும்  ஆவியாக்கி நல்ல குடிநீராக  தருவது போல்  எவரிடமிருந்து எதைப்  பெற்றாலும் அதில் இருந்த நல்லதையே அனுசரித்து மற்றவர்க்கு தர பழகினேன்.  எல்லை மீறிய பாசமோ, துக்கமோ கூடாது என்று ஒரு முட்டாள்  புறாவிடம்  கற்றேன். 
காட்டில் மரத்தில் ஒரு புறா கூடு கட்டி, மனைவியுடன் மிகுந்த காதலோடு பலகாலம் வாழ்ந்தது.  முட்டை யிட்டு   பொறித்து  குஞ்சுகள் வளர்ந்தன.  ஒருநாள்  புறாக்கள் குஞ்சுகளுக்கு உணவு தேட பறந்தன.  அந்த நேரம் ஒரு வேடன் கூட்டில் புறாக்குஞ்சு களை பார்த்துவிட்டான்.  அவைகளை வலையில் பிடித்துவிட்டான். குஞ்சுகளுக்கு இரையோடு வந்த புறாக்கள்  குஞ்சுகள் வலையில் சிக்கி அழுவதைக் கேட்டு அம்மா புறா ஓடிச்சென்று தானும் வலையில் சிக்கியது.   தந்தை ஆண்  புறா,  இதெல்லாம் கண்டு,  ஐயோ என் குடும்பமே  அழிந்து விட்டதே, இனி நான் மட்டும் இருந்து என்ன பயன்.  என் உயிரும் அவர்களோடு போகட்டும் என்று தானும்  வலையில் விழுந்து சிக்கியது.  வேடன் சந்தோஷமாக புறாக்  குடும்பத்தோடு வீட்டுக்கு சென்றான்.   பாசம், ஆசை, என்ற மாயை  எவ்வளவு ஆபத்தை தருகிறது என்று இந்த புறா குடும்பம் பாடம் சொல்லியது.   ஆசாபாசங்கள் விலகிய வனுக்கே  ஆன்மா புரியும்.   பவசாகரத்தில் சிக்கி மூழ்குபவனுக்கு முக்தி துர்லபம்.  ஆசையும் பாசமும் வெகு உயரத்தில் கொண்டு செல்லும். அங்கிருந்து விழுந்தால் பிழைப்பது கடினம்.'' 
இந்த  அத்தியாயத்தி லிருந்து ஸ்ரீமத் பாகவதத் துக்கு  உத்தவ கீதை என்று பெயர்.  உத்தவன்   ஸ்ரீ கிருஷ்ணனின்  சிறந்த நண்பன், தோழன், உறவினன், பக்தன்.   கிருஷ்ணன்   உத்தவ னுக்கு கூறும் அறிவுரைகள் தான்  உத்தவ கீதை.    அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் உரைத்த பகவத் கீதையைப் போன்றது.  
இந்த  11வது ஸ்காந்தம் 7வது  அத்யாயம் 74  ஸ்லோகங்களைக்  கொண்டது.  ஒவ்வொரு ஸ்லோகத்தையும், ஸமஸ்க்ரிதம் , ஆங்கிலம்,  தமிழ் என்று  எழுதி அர்த்தம் சொன்னால் இதுவே ஒரு குட்டி புஸ்தகமாகிவிடும் என்பதால்  சாராம்சத்தை மட்டும் அளித்து வருகிறேன்.  ஆயிரக்கணக்கான ஸ்லோகங் களை நாம் இன்னும் அறியவேண்டுமே .
தொடரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...