Wednesday, June 30, 2021

PESUM DEIVAM

 


பேசும் தெய்வம் -   நங்கநல்லூர்   J K SIVAN 


45    தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி 


முந்தைய  கட்டுரையில்  18ம்  நூற்றாண்டின் இறுதியில்  இந்து மத விரோதிகளால்  கோவில்கள்  விக்ரஹங்கள் சேதப்பட்டன.  தங்கம் வெள்ளி  நவரத்ன கற்கள்  கொண்ட  விக்ரஹ  ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.  ஆகவே தான்  அப்போதிருந்த காஞ்சி மடாதிபதி   62வது   பீடாதிபதி காஞ்சியிலிருந்து  மூன்று ஆலயங்களின் உற்சவ விக்ரஹங்களை ஜாக்கிரதையாக  உடையார்பாளையம், தஞ்சாவூர்  எடுத்துச் சென்றார்.  பங்காரு காமாக்ஷி எனும் சொர்ண காமாக்ஷி அப்படிதான்  காஞ்சியிலிருந்து தஞ்சாவூர் சென்றாள் . 

1737ம்  ஆண்டு  தஞ்சாவூர் ஏகோஜி எனும் மராத்திய ராஜாவால்  ஆளப்பட்டு, வாரிசு இன்றி அவன் மரணமடைய  பிரதாபசிம்மன்  ராஜாவானான். அவன் காஞ்சி காமகோடி மட  பீடாதிபதி ஸ்ரீ சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின்  (1746-1883)   பக்தன்.  அவருக்கு  அழைப்பு விடுத்தான்.  
பீடாதிபதிகள்  அழைப்பை ஏற்று உடையார் பாளையம் சென்றார். 

பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட   ஸ்வர்ண  காமாக்ஷியை , சொக்கத்தங்க காமாக்ஷியை  அர்ச்சகர்கள் ஜாக்கிரதையாக   உடையார் பாளையம் கொண்டுவந்தார்கள் .    பீடாதிபதிகள்  விருப்பப்படியே தஞ்சாவூரில்  பங்காரு காமாக்ஷி ஆலயம்  1746   ஆரம்பிக்கப்பட்டது.   1887ம்  வரை பல மன்னர்களால்  கட்டி முடிக்கப்பட்டது.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான  சியாமா சாஸ்திரிகள் காமாக்ஷி  பக்தர்.  அவரே  அம்பாளுக்கு   அர்ச்சகர்.
 
கிளியை தாங்கி நிற்கும் கைகளும், சற்றே இடுப்பை ஒடித்து நளினமாக காட்சி தரும் த்ரிபங்க தாரியின் ஒயிலுமாக அவள் அமர்ந்துள்ள அழகு  நம்மை பிரமிக்கச் செய்கிறது.   

காமாக்ஷி பூஜைக்கான உரிமை காஞ்சி முதல் தஞ்சை வரை பங்காரு காமாட்சியுடன்  பயணித்து  தஞ்சாவூரில் பிரதிஷ்டை செய்து உதவிய மூன்று கோத்திரக்காரர்கள் ஸ்தானிக  பரம்பரை யினர் களுக்கு மட்டும்  தான் உண்டு.  அவர்களில் ஒருவர்    சியாமா சாஸ்த்ரிகள் பரம்பரையினர்.  சிவசக்தி ஐக்கியமாக இவள் இருப்பதால் தஞ்சாவூரில்  சொர்ண காமாக்ஷிக்கு  பூணூல் உண்டு.

காமாக்ஷி யம்மனுக்கு ஆண்டுதோறும் பதினொன்று அபிஷேகங்கள் மட்டும்தான்.  பங்காரு காமாக்ஷி யம்மன் மூல ஸ்தானத்தை விட்டு வெளியில் வருவதில்லை. காமகோடி அம்மன் எனும் உற்சவ மூர்த்திக்கும் கனுப் பொங்கல் அன்று முழுத் தேங்காயை, உடைக்காமல் நிவேதனம் செய்யும் சம்பிரதாயம் இங்கு மட்டும்தான் உண்டு. பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் தஞ்சை அரச குடும்பத்தினர் அம்மனுக்கு திருமாங்கல்யம் அளிப்பர்.

அப்போதைய  62வது பீடாதிபதிகள் விருப்பதிற்கிணங்கி பங்காரு காமாக்ஷி அம்மன் ஆலயம்  தஞ்சாவூர் வடக்குத் தெருவில் அமைந்தது.  காஞ்சி காமகோடி பீடாதிபதிகள்  இந்த ஆலய  ட்ரஸ்டிகளில், ( தர்ம கர்த்தா) ஒருவர். 

1926ல்  நமது  மஹா பெரியவா  உடையார்பாளையம் சென்றபோது  அப்போதைய ஜமீன்தார் சிறப்பாக  வரவேற்பளித்தார்.  பெரியவா  ஜமீன்தார் மாளிகையிலும்  காமாக்ஷி அம்மன் ஆலயத்திலும் தங்க  ஏற்பாடுகள் செய்தார்.   நகர் ஊர்வலம், பிக்ஷாவந்தனம் கோலாகலமாக  நடை பெற்றது.

உடையார் பாளைய  ஜமீன்தார்,  காஞ்சி மடத்துக்கு  ஆறுமாத யானைக்குட்டி ஒன்று, ரெண்டு குதிரைகள், ஒரு ஒட்டகம், சில பசுக்கள் அவரது காணிக்கையாக அளித்தார்.    உடையார் பாளைய  மக்கள் சந்தோஷத்துக்கு ஒரு முக்கிய காரணம் என்ன தெரியுமா?

உடையார் பாளைய  பகுதிகளில்  பல  வருஷங்களாக  மழை இல்லை, வரண்டிருந்த  பூமிக்கு  மஹா பெரியவா அங்கே வந்தவுடன் நல்ல மழை நீர்   கிடைத்தது.   எங்கும் மீண்டும் பச்சையாக வளமை காணப்பட்டது.  மக்களுக்கு ஏராளமான சந்தோஷம்.  அந்த வருஷம் நல்ல அறுவடை. 

1926ம் வருஷம்  வியாச பூஜை, நவராத்ரி வைபவங்கள்  காட்டு மன்னார் கோயில் எனும் கிராமத்தில் நடை பெற்றது.  இந்த ஊருக்கு அருகே  தான்  சிறந்த சிவ க்ஷேத்ரம்  சிதம்பரம் உள்ளது.   அங்கே  அமைதியாக   சாதுர் மாஸ்ய  விரதம் நிகழ்த்திவிட்டு  மஹா பெரியவா அங்கிருந்து விஜய யாத்திரையை  மஞ்சக்குப்பம்,கடலூர், புது பாளையம்,  ஆகிய  ஊர்கள்  வழியாக  திருப்பாதிரிப்புலியூர் அடைந்தார்.  திருப்பாதிரிப்புலியூரில் பெரியவா முகாம் இட்டிருப்பதை அறிந்து எண்ணற்ற பக்தர்கள்  திரண்டனர்.   

கடியாப்பட்டி தர்ம பூஷணம்  D N  நாச்சியப்ப  செட்டியார்  சத்திரத்தில்  விமரிசையாக  நவராத்ரி வைபவம் நடந்தது.   ஒன்பது நாட்களும்  மஹா பெரியவா நிகழ்த்திய  பூஜைகளைக் காண பக்தர்கள்  கூடினர். மஹா பெரியவாளின் முதல் விஜயம் அது என்பதால்  அளவுக்கு மீறிய  ஆயிரக்கணக்கானோர்  அவர் தரிசனம் பெற  வந்து காத்திருந்தனர்.  நவராத்திரி முழுதும்  கடியாப்பட்டி  செட்டியார் கூடவே இருந்து களித்தார்.    நவராத்ரி விழா ஏற்பாடுகள் அற்புதமாக செய்தார். விஜயதசமி அன்று மஹா பெரியவா நகர்வல   ஊர்வலம்  அற்புதமாக  நடந்தது.

திருப்பாதிரிப்புலியூரில் மஹா பெரியவா  இவ்வாறு முகாம்  இட்டிருந்த நேரத்தில்  நன்றாக கற்ற பண்டிதர் ஒருவர்  பெரியவா தரிசனத்துக்கு வந்தார். அவர் ஒரு  சுதந்திர போராட்ட  தியாகி. காந்தி மஹான் சீடர்.  அந்த கற்றறிந்த அறிஞர் ஒரு பெண் பாவலர்.  அவர் பெயர்  பண்டித, அசலாம்பிகா அம்மையார். 

மஹா பெரியவாளை தரிசித்த அம்மையார், ''சுவாமி  நான் பெரியவா மீது   ஐந்து செய்யுள் கள் இயற்றியிருக்கிறேன்.  தங்கள் அனுமதியோடு இங்கே  தங்கள் முன்பு  அதை வாசிக்க உங்கள் உத்தரவுக்கு காத்திருக்கிறேன்'' என்றார் .

''ஆஹா  வாசியுங்கோ''

எல்லோர் முன்னிலையிலும் அந்த அம்மையார்  ராகமாக  தான் எழுதிய செய்யுள்களை வாசித்தார். மஹாத்மா காந்தியடிகள்  வாழ்க்கை வரலாற்றை  செய்யுளாக  இயற்றியவர் இந்த பெண்மணி. இன்னொரு விஷயம்  மஹா பெரியவாவின்  பூர்வாஸ்ரம  தந்தையார் சுப்ரமணிய ஐயர்  திண்டிவனத்தில்  ஆசிரியராக பணியாற்றிய  போது இந்த பெண்மணி அவரது மாணவி.

தொடரும் 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...