Saturday, June 12, 2021

SRIMAD BAGAVATHAM




ஸ்ரீமத் பாகவதம்   -  நங்கநல்லூர்   J K  SIVAN 


முழு  பாகவதத்தையும்   ஸ்லோகங்களோடு  அர்த்தம் சொல்லி எழுத  ஒரு எண்ணம் தோன்றி அதை  நிறுத்திக் கொண்டதற்கு  காரணம்,  அதற்கான நேரம்  போதாது என்பதால்.  ஒவ்வொரு அத்யாயத்தையும் எழுதுவோம். ஸ்லோகம் வேண்டாமே, யாரும் படித்து பாராயணம் செய்யப் போவதில்லை,  அதில் என்ன இருக்கிறது என்றாவது  தெரிந்து கொள்ளட்டுமே.  இது தான் முதல் அத்யாய சாரம்:  


பூமா தேவிக்கு  பரம  சந்தோஷம்.  ''அப்பாடா,  என் மேல் இருந்த   தேவையில்லாத சுமையை என்  கிருஷ்ணன்  நீக்கிவிட்டான்.  அவனே பலராமனுமாகவும்   தோற்றமளித்து   யதுக்களோடு  சேர்ந்து  தீயவர்களையெல்லாம் அடையாளம் கண்டு போரிட்டு, கொன்று, பூமியிலிருந்து அகற்றியவர்கள்   அல்லவா?  இப்போதல்லவோ நான் ன்கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன். ''.  

இதைத்தொடர்ந்து இன்னும் சில  சிக்கல்கள்.  பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும்  தகராறு. பாண்டவர்களை பொறுத்தவரை  இன்னும்  பழைய புண் ஆறவில்லையே.  எத்தனை பாதகங்கள், கொடுமைகள் இழைத்தவர்கள் இந்த கௌரவர்கள்.  ஏமாற்றி  சூதில் வல்லவன் சகுனியை வைத்து  சகலமும் பறித்து யுதிஷ்டிரனை வென்று, 13 வருஷங்கள்  கானக வாழ்க்கை, சபை நடுவே  திரௌபதிக்கு இழைத்த  மானபங்கம்  எல்லாம் மறக்கக் கூடியவையா.  கூண்டோடு அழித்தாயிற்று அவர்களை.
மஹாபாரதப்போரினால் பாதி சுமையை  பூமிக்கு   குறைத்தவன் அர்ஜுன்  பீமன் இருவரும்.   இதற்கெல்லாம் காரணம் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் ஒரு கணம் யோசித்தான்.  பூமாதேவியின் வேண்டுகோளை நிறைவேற்றியாகிற்று.  அனால் இன்னும் யதுகுலத்தில்  சில  தீய பிறவிகளை களையெடுக்க வேண்டும்.   இனி தங்களை எதிர்க்க எவருமில்லை என்கிற தைர்யம் அவர்களை தவறான வழியில் செல்ல வைக்கும்.  அது நல்லதல்ல,   அவர்களுக்குள் ஒரு  கலகத்தை மூட்டவேண்டும்.  அவர்களே  ஒருவரை ஒருவர்  கொன்று தீர்த்து அனைவரும்  மறையவேண்டும்.    என்னை  சரணடைந்தவர்களைக்  காக்க வேண்டியது தான் எனது கடமை.  தீயவர்கள் அழிய வேண்டிய  அவசியம்  உள்ளதே.  அதையும் நிறைவேற்றி விட்டால் நான் அவதாரம் எடுத்த காரியம் முற்றிலும் முடிந்து நான் என் இருப்பிடம் செல்வேன் என்று நினைத்தான் நாராயணனாகிய கிருஷ்ணன்.

இதற்கு  உதவியாக  ரிஷி பிராமணர்கள் இட்ட சாபம் பலிக்கட்டும்,  தேவையானது எந்த ரூபத்தில் வந்தால் என்ன?  மக்களுக்கு தேவையான  உபதேசம் செய்தாயிற்று. உலகில் எப்படி வாழவேண்டும் என்று  கற்றுக் கொடுத்தாகி விட்டது. இனி அவரவர்    செய்கிற  செயலின் பயனை துய்த்து என்னை  கடைசியில் அடையட்டும்.   நான் இங்கே இனி தேவையில்லை. 

பரிக்ஷித்  சுகப்பிரம்ம ரிஷியை ஒரு கேள்வி கேட்டான்.. 
''மகரிஷி,  வ்ருஷ்ணிகள் அழிய  பிராமணர்கள் எதற்காக சாபமிடவேண்டும்?'' நான் ஏன் இதை கேட்கிறேன் என்றால், விருஷ்ணிகள் கிருஷ்ணனை சேர்ந்தவர்கள்,  தான தர்மங்கள் நிறைய செய்பவர்கள்,  பிராமணர்களை, பெரியோர்களை, கற்றவர்களை,  எப்போதும்  மரியாதையோடு  ஆதரித்து உதவியவர்கள் ஆயிற்றே. எதற்காக  சாபம் பெற்றார்கள்? என்ன சாபம் அது?   எதற்கு இப்படி  விருஷ்ணிகளுக்குள் கழகமும் மூண்டது.  எல்லோருமே  கிருஷ்ணனோடு ஒன்றாக இருந்தவர்கள் தானே.

''பரீக்ஷித், நீ கேள்விகள் கேட்பதில் மன்னவன், துருவித் துருவி   எல்லா கோணங்களிலிருந்தும் பார்த்து அழகாக கேட்டுவிட்டாய்.    எல்லாவற்றிற்கும்  ஒரே பதில்.   வேளை வந்துவிட்டது.  விருஷ்ணிகுலம் அழிவதற்கு, அதர்மம், அநியாயம்,  அடங்காமை  எல்லாம் அவர்களால் மற்றவர்களுக்கு  பரவு முன் அவர்களே அவர்களை அழித்துக் கொள்ள வகை செய்தவன் கிருஷ்ணனே தான்.   நன்றாக யோசித்துவிட்டு தான் அவன் எதையுமே செய்பவன். வேறு வழி இல்லை என்று நன்றாக  தெரிந்துவிட்டது கிருஷ்ணனுக்கு. தனக்குப் பின்   தனது குலத்தில்  அவர்கள் இருந்தால் அவர்களை அடக்க எவருமில்லாத நிலை வந்துவிடும் என்று தோன்றிவிட்டது.

கிருஷ்ணன்  அரண்மனையில் துவாரகையில்  வீட்டில் ஒரு பெரிய யாகம் ஏற்பாடு செய்தான்.  கலியுகம் வந்துவிட்டது. அதன் கொடுமை  குறைய  பக்தி மார்க்கம் பெருக அந்த யாகத்தில் கலந்து கொள்ள முக்கிய ரிஷிகள் அழைக்கப்பட்டார்கள்.   விஸ்வாமித்ரர், அசிதர், கண்வர், துர்வாசர்,  பிருகு, ஆங்கிரர், காஸ்யபர் , வாமதேவர், அத்ரி,  வசிஷ்டர் நாரதர்  இன்னும் பலர்  துவாரகையில் கூடி யாகம் செய்ய பிண்டாரகா எனும்  க்ஷேத்ரத்தில் கூடினார்கள்.  கிருஷ்ணன்  அங்கே அவர்களை சந்திக்க காத்திருந்தார்கள்.   அந்த இடத்தில்  அங்கே துவாரகை   அரண்மனை  யாதவ சிறுவர்கள்  விளையாடிக் கொண்டிருந்தார்கள்.   அவர்கள் கவனம் இந்த ரிஷிகள் மேல் போயிற்று.   

''டேய்  இங்கே பாருங்கடா, எத்தனை  ரிஷிகள்.  உட்கார்ந்திருக்கிறார்கள்.  இவர்களை வைத்து இந்து ஒரு வேடிக்கை காட்டுவோமா?  

ஆஹா  அப்படியே செய்வோம்,  இவர்கள்  எல்லாம் அறிந்த  ரிஷிகள்  என்று சொல்கிறார்களே,  நாம் சோதித்துப் பார்ப்போமா?

மற்ற நண்பர்கள் சரியென்று ஏகோபித்து ஒப்புக்கொள்ள அங்கே ஒரு நாடகம் தயாராகியது. அந்த இளைஞர்களில் சாம்பனும்  ஒருவன்.  கிருஷ்ணனுக்கும்  ஜாம்பவான் மகள் ஜாம்பவதிக்கும் பிறந்தவன். அவனைத    தேர்ந்தெடுத்து  அவனுக்கு  பெண் வேஷம் போட்டார்கள். சாம்பன் இப்போது ஒரு கர்ப்பஸ்திரீ மாதிரி நடித்தான். எல்லோரும்  ரிஷிகளிடம் வந்தார்கள் 

ரிஷிகளை  பொய்யாக பக்தியின்றி வணங்குவது போல் நடித்து,   '' மஹரிஷிகளே , இந்த பெண்  உங்களுக்குத் தெரிந்து ஒரு கர்ப்பஸ்திரீ.   உங்களை பார்த்துவிட்டு  இங்கே வந்திருக்கிறாள்.  உங்களை ஒன்று கேட்க  வேண்டுமாம்,  அதற்காக அழைத்துக் கொண்டு வந்திருக்கிறோம்?. நீங்கள் அவளுக்கு அறிவுரை சொல்லி வாழ்த்த வேண்டும் '' என்கிறார்கள்.  

'''கேட்கச்சொல்லேன் '' என்கிறார்   துர்வாசர். கோபத்துக்கு பேர்போன ரிஷி. 

''இல்லை  மஹரிஷிகளே. அவள்  ரொம்ப  சங்கோஜி.   வெட்கப்படுகிறாள், எங்களையே  கேட்கச் சொல்கிறாள்.  இவள் வயிற்றில் பிறக்கப்போகும்  குழந்தை பிள்ளையாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாள், பிள்ளை பிறக்கும் என்று    நீங்கள்  ஆசிர்வதித்து அருளவேண்டும்'' .

சிரிப்பை  அடக்கிக்கொண்டு  அந்த இளைஞர்கள் ரிஷிகளிடம் கேட்டதை  அந்த திரிகால ரிஷிகள்   அது,பொய்  சாம்பன் தான் பெண் வேஷதாரி அவர்களை அவமரியாதைக்குள்ளாக்கி, அவமதிக்க திட்டம் என்று உணரமாட்டார்களா?   அவர்கள்  கேட்ட பாஷையிலே  அவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டாமா?

''ஆஹா... எவ்வளவு  தப்பான காரியம் ... அப்புறம் என்னாச்சு  மகரிஷி ''என்று  ஆவலாக கேட்டான்  பரீக்ஷித்.  

சுகப்பிரம்ம ரிஷி  மேலே தொடர்ந்தார்.

'' ஆமாம் பரீக்ஷித் மன்னா,   கடும்கோபம் கொண்ட ரிஷிகள் ''முட்டாள்களே, இந்த பெண் வயிற்றில் ஒரு இரும்பு உலக்கை  இப்போதே   பிறந்து அதால் உங்கள் வம்சம் பூரா  அழியப்போகிறது. போய்வாருங்கள்'' என்று  துர்வாசர் முதலானோர்  சாபமிட்டார்கள்.

அடிவயிற்றில்  பயங்கர  பொறுக்க   முடியாத வலியில்  துடித்தான் சாம்பன்.  வேஷத்தை கலைத்து  ஓடினான் . அவன் வலிக்கு காரணம்  ஒரு பெரிய  இரும்பு உலக்கை அவன் வயிற்றைப் பிளந்து வெளியே தலை காட்டியது.    யதுகுல  வாலிபர்கள்  இதைக்  கண்டு  மிரண்டனர். 

''சே சே, என்ன காரியம் செய்துவிட்டோம்.  ஆபத்தான விளையாட்டை அல்லவா விளையாடிவிட்டோம்?  எப்படி இதை நம் வீடுகளில் போய் சொல்வது.  அவர்களுக்குத் தெரிந்தால் எவ்வளவு வருத்தமும் கோபமும் படுவார்கள்?  ரொம்ப துரதிர்ஷ்டமான காரியம் செய்துவிட்டோமே.  மெதுவாக  அந்த இரும்புலக்கையோடு  அரண்மனைக்குள்  சென்றார்கள். மிகுந்த கவலையோடு, பயத்தோடு, வருத்தத்தோடு  அந்த உலக்கையை  ராஜ  உக்கிரசேனனிடம்  கொண்டு போய் காட்டினார்கள்.  சபையில் அங்கே  யாதவ குல அதிகாரிகள்  உத்யோகஸ்தர்கள் இருந்த  சமயம்  நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னார்கள்.    துவாரகா வாசிகள்  ஆச்சர்யத்திலும் பயத்திலும்  இந்த செய்தியை  அறிந்து  செய்வதறியாது திகைத்தனர்.  ரிஷிகளின் சாபம் பலிக்கும் என்பது  சாம்பன் வயிற்றில்  உதித்த  இரும்பு உலக்கையே கோடி காட்டிவிட்டதே.

''இந்த உலக்கையை நன்றாக பொடிசெய்து  சமுத்திரத்தில் போட்டுவிடுங்கள்'' என்று    யதுகுல ராஜா உக்கிரசேனன் கட்டளையிட்டான்.   உலக்கை பொடியாகியது, எங்கோ ஒரு துண்டு மட்டும் பொடியாகாமல் இருக்க அனைத்தும்  கடலில் வீசி எறியப்பட்டது.  பொடியாகாத இரும்புத் துண்டை ஒரு மீன் விழுங்க  இரும்புத்தூள் அலையால்  அடிக்கப்பட்டு  நீரில் கரையாமல்  கரை ஒதுங்கியது.   அந்த இரும்புத் தூள்கள் வளர்ந்து  ஈட்டிகளாக   புதராக  வளர்ந்தன.  இரும்புத்துண்டை விழுங்கிய  மீனை ஒரு செம்படவன் பிடித்து அங்காடியில் விற்க,  ஜரன்  என்னும்  வேடன் அதை வாங்கி வீட்டில் மீன் வெட்டப்பட்டது.  மீன் வயிற்றில் ஒரு இரும்புத்துண்டை பார்த்தவனுக்கு,  அதை  ஒரு ஈட்டி முனையாகவோ, அம்பாகவோ  கூறாக சீவி வைத்துக்கொண்டால் வேட்டையாட உதவும் என்று தோன்றி அம்பாக  பண்ணிவிட்டான்.

கிருஷ்ணனுக்கு நடந்தவை யாவையும் நன்றாக தெரியும்,  தனது திட்டப்படியே எல்லாம் நடப்பது உணர்ந் தான். ஒரு துண்டு  அம்பாக ஜரனிடம்  உள்ளதும் எதற்கு என்று அறிவான்.  ரிஷிகள் சாபம் பொய்க்கக்கூடாது. நடந்ததை  ஏற்கவேண்டும் என்று அமைதியாக இருந்தான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...