Thursday, June 10, 2021

pesum deivam






பேசும் தெய்வம் --    நங்கநல்லூர் --    J  K  SIVAN  

34 . ''இதெல்லாம்  நாய்கள் இல்லை ''

சில விஷயங்களை  எடுத்து சொல்லலா மென்றால்  அதில் ரெண்டு வித  கஷ்டங்கள்.  ஒன்று தேடினால்  மேலே மேலே  வந்து கொண்டே இருக்கிற  நிறைய   எண்ணற்ற  அளகடந்த  அற்புத  விஷயங்கள்  எல்லாவற்றையும் ஒன்று விடாமல்  எடுத்துச் சொல்ல முடியாது.    அல்லது  வெளியே  தெரியவே வேண்டாம்  என்று விளம்பரம்  இல்லாமல் நிகழ்ந்த  எத்தனையோ அற்புத விஷயங்கள் வெளியே  தெரியாமலேயே  மறைந்து,  மறந்து,  போன விஷயங்களாக  இருந்தாலும்  தேட முடியாமல்  அவற்றை வெளியே கொண்டுவருவது கஷ்டம்.

 இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல  இந்த விஷயங்கள் நடந்த காலம்  நூறு வருஷங்களுக்கு  முன்பு  என்பதால்  தேடுவது   கண்டுபிடிப்பது  என்பதும்   இயலாத காரியம்.

 மஹா பெரியவா ஒரு குன்றின் மேல் விளக்கு. எத்தனையோ பேர் அந்த ஒளியில் சுகம் பெற்றவர்கள்.  அனுக்ரஹம்  பெற்ற  அன்பர்கள்,  பக்தர்கள்   எங்காவது எழுதி, சொல்லி யாரவது எழுதி அது  கண்ணில் பட்டால் அதை சேமித்து குருவி போல் என்னால் கொஞ்சம்  சேகரித்து தர முடிந்தால் அதற்கே நான் ரொம்ப பெருமைப் படுவேன்.

உட்கார்ந்த இடத்திலிருந்தே கம்ப்யூட்டரில்  தேடி கிடைப்பதை மட்டும் தான் படித்து அளிக்கிறேன் என்பதால்  ஆங்காங்கே  சில  பிழைகள் இருக்கலாம்.  எண்ணம் தூய்மையானது சுயநலமற்றது என்று  தெரிந்தவர்  மஹா பெரியவா. அவர்   என்னை மன்னிக்கட்டும்.  பெரியவா பக்தர்கள்  நீங்களும் அவ்வாறே க்ஷமிக்கவும்.

கிட்டத்தட்ட  நூறு வருஷங்களுக்கு முன்  ஒரு   இளம்  வாலிப சந்நியாசி  கும்பகோணம் வீதிகளில் அடிக்கடி காணப்பட்டார்.  முப்பது வயதிருக்கலாம்.  வெள்ளை வெளேர் வேஷ்டி. இன்னொரு வஸ்திரம் கழுத்தைச்  சுற்றி.  நெற்றியில் வெளேர் என்று விபூதி பூச்சு. ஒரு பித்தளை  பிக்ஷா பாத்திரம், சொம்பு ,  கயிறு கட்டி தோளில்  தொங்கும். கையில் ஒரு  தடி.  அவரை எல்லோரும்  பாடகச்சேரி ஸ்வாமிகள் என்பார்கள்.   நல்ல  சிவப்பான நிறம். கண்டாரைக் கவரும் கண்கள்.   ரொம்ப பேசவே மாட்டார். வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த துறவி. கால பைரவ உபாசகர்.

யாரையும் காசு பணம், பொருள்கள் எதுவும் கேட்காவிட்டாலும், தனவந்தர்கள், வியாபாரிகள், குடும்ப தலைவிகள்  வீதியில்  வழிப்போக்கர்கள், அவர் சொம்பில் காசு போட தவறுவதில்லை.
மாட்டு வண்டி, குதிரை வண்டிகளில் போவோரும் வண்டியை நிறுத்தச்சொல்லி அவரை வணங்கி சொம்பில் காசு போடுவார்கள்.   தினமும்  சொம்பு விரைவில் ரொம்பிவிடும்.

ஆமாம் எதற்கு இந்த காசு? ஏன் அவருக்கு காசு? எதற்கு தேவை?  ஒருவராவது இந்த கேள்விகளைக் கேட்பதில்லை.   ஒரு நல்ல மனிதருக்கு உதவுகிறோம் என்ற ஒரே நம்பிக்கை.  அவரிடம் செல்லும் காசு  ஏதாவது நல்ல வழிக்கு தான் உபயோகமாகும் என்ற எண்ணம்.

அக்காலத்தில்  நாகேஸ்வர சுவாமி கோவில்   கோபுரங்கள்   சிதிலமாகி  புனருத்தாரணம் அவசியமாக தேவைப்பட்டது .  புராதன, சரித்திர பூர்வ,   பிரதான ராகு பரிஹாரஸ்தலம் இப்படி  பாழாகி நிற்பதை பாடகச்சேரி ஸ்வாமிகள் கண்டு  வருந்தினார்.  பல  இடங்களில் கோவில்   கோபுரங்கள்  சுவர்கள், விரிசல் விட்டிருந்தன.   அவற்றை  புதுப்பிக்க நிறைய பணம் வேண்டுமே?

 அப்பர் ஸ்வாமிகள்  பாடல் பெற்ற ஸ்தலம்.  அற்புதமான  ஆறு அடி  உயர  நடராஜா சபா மண்டபத்தில் காட்சி  அசைவது போல்  கண்முன் தோன்றும்.   அவர்  மஹா பெரியவாளை கும்பகோணத்தில் சந்தித்தார்.  அதற்கு முன் அந்த பாடகச்சேரி ஸ்வாமிகளை பற்றி கொஞ்சம் அறிவோம்.

பாடகச்சேரி  எனும் கிராமம்  கும்பகோணத்திற்கு தென் கிழக்கே  வெட்டாறு  கரையோடு  ஜிலு ஜிலுவென்று குளிர்ந்த காற்றில்  18 கி.மீ    தூரம். தஞ்சாவூரிலிருந்து 33 கி.மீ. ஆலங்குடியிலிருந்து  நடந்தே  3 கி.மீ. தூரம். 

பாடகம் என்பது  பெண்கள் காலில் போட்டுக் கொள்ளும்  தண்டை போன்ற ஆபரணம்.  மேலே  ராவணன் தூக்கிச்செல்லும்போது சீதை தனது காலிலிருந்து பாடகத்தைக்  கழற்றி  கீழே போட்ட இடம் என்கிறது  ஸ்தலபுராணம்.

அருட்பா  வள்ளலார்   ராமலிங்க ஸ்வாமிகள்  இந்த பாடகச்சேரி  ஸ்வாமிகளுக்கு 12 வயதாகும் போது  ஞான உபதேசம்  வழங்கி இருக்கிறார்.   பாடகச்சேரி ஸ்வாமிகளைச்சுற்றி எப்போதும்  நிறைய   நாய்கள்  உண்டு.  அவரை பைரவ சித்தர் என்பார்கள்.  

நாகேஸ்வரன் ஆலய திருப்பணிக்கு   வீடு வீடாக சென்று    யாராவது  ஒரு கால்  அணா   (மூன்று  தம்பிடி) கொடுத்தாலும்  பெற்றுக் கொண்டவர்.  பாடகச்சேரி அருகே பல கோவில்களை புனருத் தாரணம் செய்தவர். கோவில்களில் மூலவரை பிரதிஷ்டை பண்ணும்போது கூடவே இருப்பவர்.  இன்றும் அவர் பெயரில் மடம் ஒன்று  இருந்து அன்னதானம் நடைபெறுகிறது. சென்னையில் திருவொற்றியூரில் அவர் ஜீவ சமாதி ஒன்று இருக்கிறது.

பாடகச்சேரி ஸ்வாமிகள்  பெரிதாக உபதேசம் ஒன்றும் செய்யவில்லை, ஆஸ்ரமம் எதுவும் நிறுவ வில்லை. அமைதியாக  மக்களுக்கும்  மகேச னுக்கும்  சேவை செய்த ஒரு மஹான்.

 9.5.1876 அன்று கந்தசாமி- அர்த்தநாரி தம்பதி யருக்கு பொள்ளாச்சியை சேர்ந்த மஞ்சம்பாளய கிராமத்தில் பிறந்தவர்.  தெலுங்கு பேசும்  ஆந்தி ராவிலிருந்து குடி பெயர்ந்த   வீர சைவ ஜங்கம  குடும்பம்.   பெல்லாரியை சேர்ந்த  எரிதாதா ஸ்வாமிகள்  தான் அவருக்கு  குரு.

மஹா பெரியவா இந்த பாடகச்சேரி ஸ்வாமிக ளை பற்றி ரொம்ப உயர்வாக  சொல்லி இருக்கிறார்.

பாடகச்சேரியில் ஸ்வாமிகள் புனருத்தாரணம் செய்த ஒரு அருமையான பெருமாள்  கோவில் இருக்கிறது. பெருமாள் பெயர் கண்டு உள்ளம் மகிழ்ந்த பெருமாள். எதைக்கண்டு ? பக்தர் களையா? சீதையைத் தேடும்போது, லக்ஷ்மணன்  ''அண்ணா, இதோ பாருங்கள் சீதம்மாவின் கால்  பாடகம்'' என்று இந்த ஊரில்  பாடகத்தை காட்டியது  போதாதா ?   லக்ஷ்மணன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அவன் சீதையின் திருவடிகளை வணங்குபவன்.  ஆகவே அவனுக்கு  சீதாதேவியின்  காலில்  என்ன அணிந்திருக் கிறாள்  என்று நன்றாக அறிவான். . மூக்குத்தி  தோடு எல்லாம் காட்டினால்  தெரியாதே என்பான். மூன்றரை அடி  உயர நிற்கும் பெருமாள். இந்த ஒரு கோவிலில்  பெருமாள் கண்கள் பக்தர்கள் கண்களை நேரடியாக நோக்கும் அற்புதம்.பாடகச்சேரியில் இன்னொரு கோவில்  ஸ்ரீ சௌந்தர்யநாயகி சமேத  ஸ்ரீ பசுபதீஸ்வரர்.

ஸ்வாமிகள் பாடகச்சேரி வருவதற்கு முன்  பட்டம் எனும் கிராமத்தில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தவர். 

நவகண்ட யோகத்தில் அவரை ஊர்மக்கள் ஒருநாள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  தேகத்தை ஒன்பது துண்டங்களாக  பிரித்துக்கொண்டு  யோகநிஷ்டையில் ஆழ்வது. ஷீர்டி சாய்பாபா, திருவண்ணாமலை விடோபா பாபா, ஆகியோர்  இந்த வகை நிஷ்டையில் ஈடுபட்டவர்கள். அவரை  மரியாதையோடு வணங்கி  பாடகச் சேரியில் தங்க வைத்தனர்.  எத்தனையோ பேருக்கு  வியாதிகள் நீங்க, கஷ்டங்களைப்  போக்கிய சித்தர்.  மஹாமஹ  சமயத்தில் லக்ஷக்கணக் கானோருக்கு அன்ன தானம் ஏற்பாடு செய்தவர்.  நல்லி குப்புசாமி செட்டியார் ஸ்வாமிகளை பற்றி எழுதி இருக்கிறார். அவரது மடத்தை புதுப்பித்து உதவியிருக்கிறார்.

பாடகச்சேரி ஸ்வாமிகள்  நாள் தோறும் ஏராள மான நாய்களைக் கூப்பிட்டு  உணவளிப் பார். ''இதெல்லாம்   நாய்கள்  இல்லை.  தேவர்கள்'' என்பார். பாடகச்சேரியில்  பைரவ வழிபாட்டுக்கு முதல் நாள் சாயந்திரம்  பக்கத்து கிராமங்கள் ஆலங்குடி, செம்மங்குடி, புளியங்குடி, அம்ருத வல்லி - இங்கெல்லாம் போய்  அங்கே இருக்கும் எல்லா நாய்களுக்கும்  இன்விடேஷன்  கொடுப் பார்.   பைரவ வழிபாடு அன்று சுமார் முந்நூறு பேருக்கு சமையல் . வடை  பாயசம் என்று   பாத்திரங்கள் நிரம்பி இருக்கும்.  இந்த பொட்டல்  கிராமத்தில் அத்தனை பேர் எங்கிருந்து வந்து சாப்பிடுவார்கள்??  என்று சமையல் காரர்களுக்கு  ஆச்சர்யம்.   ஆனால்   சமையல் முடிந்து பூஜை ஆனதும்   அந்த இடத்தில்  வெட்டவெளியில்   வாழை இலையை விரித்து. மனிதர்களுக்குப் பரிமாறுவது போல் சமைக்கப்பட்ட அனைத்து பதார்த்தங்களும்  இலைகளில் பரிமாறினதும்   ஸ்வாமிகள் தன்னுடைய கையில் இருக்கும்  குச்சியால்  தரையை  டக்  என்று ஒரு தட்டு தட்டுவார்.  அவ்வளவு தான்.   எங்கிருந்துதான் வருமோ தெரியாது,  நூற்றுக்கணக்கான   நாய்கள்  பாய்ந்து வந்து வந்து இலையின் முன்பாக  அமைதியாக  சமர்த்தாக  உட்காரும்.  வேடிக்கை பார்க்கும் ஜனங்கள் கண்ணனுக்கு நாயாக தெரியுமே தவிர  ஸ்வாமிகளுக்கு அவை  மனித ரூபம். my friend Sri G. Rajendran, known to us as Temple Raju has taken photos of paintings at Padakacheri adhishtanam. Attached is dog feeding picture.

சுவாமிகள் கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்திலேயே சமாதி ஆக விரும்பினாராம். ஆனால், அவரின்  சென்னை பக்தர்கள்  வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 1949ம் வருடம் அம்பாளுக்கு உரிய ஆடிப் பூர தினத்தில் திருவொற்றியூரில் ஜீவ சமாதி ஆனார்.  அவர் கடைசியாக கூறியது: 

‘‘நான் மறைந்தாலும், என்னை நம்பி இருப்பவர்களுக்கு நான் என்றும்  துணையாக இருப்பேன். என்னை நம்பாதவர்களுக்கும் நம்பிக்கை வரும் பொருட்டு உதவிகள் செய்து வருவேன்!’’

தொடரும்   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...