Thursday, June 24, 2021

PESUM DEIVAM



 

பேசும் தெய்வம் -   நங்கநல்லூர்  J K  SIVAN

42    நகரத்தார்  அளித்த கோலாகல வரவேற்பு     



தமிழக காங்கிரஸ் என்று நினைக்கும்  போது எனது நினைவில் நிற்பவர்   ஸ்ரீ  S  சத்யமூர்த்தி.(1887- 1943) இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகள் ஆழமாக வேரூன்ற பாடுபட்டவர்.  அற்புதமான  ஆங்கில தமிழ்  பேச்சாளர்.தமிழக காங்கிரசின் வளர்ச்சிக்கும் வெள்ளைக்கார  இந்தியாவில்  நடைபெற்ற  தேர்தல்களில் காங்கிரஸ்  வெற்றி  பெற உழைத்தவர்.  இன்றும் சென்னை  காங்கிரஸ்  கட்சியின் தமிழகத் தலைமையகம்  அவர் ஞாபகமாக சத்தியமூர்த்தி பவன் என பெயர் கொண்டுள்ளது. சத்தியமூர்த்தியின் சீடர்  காமராஜர்

சத்யமூர்த்தி  பிரபல  U.  ராமராவுடன்  இளையாத்தங்குடி சென்று மஹா பெரியவாளை சந்தித்தார்.
நிகழப்போகும் காங்கிரஸ் பங்கேற்கும்  தேர்தலில் வெற்றிபெற  பெரியவா ஆசிர்வாதம் வேண்டினார்கள்.
''எனது பக்தர்கள் நல்வாழ்வு எனக்கு பரம சந்தோஷத்தை எப்போதும் அளிக்கும், எனது பரிபூர்ண ஆசிகள். எந்த  அரசியல் கட்சியாகவோ, தலைவர்களாகவோ,  இருந்தாலும் மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க  வேண்டும். அப்போது தான் வெற்றி பெற முடியும். மக்களுக்கும் மகேசனுக்கும் தொண்டு புரியவேண்டும்''. என்றார். பெரியவா.

க்ரோதன  வருஷம் தை மாதம்  பொங்கல் திருநாள் அன்று ( 14-1- 1926),  மஹா பெரியவா ராஜாமடம் கடற்கரைக்கு  சமுத்திர ஸ்நானம் செய்ய சென்றார்.   ராஜா மடம்  பட்டுக்கோட்டையில் ஒரு சின்ன கிராமம். 
அதிராமபட்டணம்  அங்கிருந்து  6 கி.மீ.    இரண்டாம் சரபோஜி ராஜா தனது  ஆட்சி  காலத்தில் நிறைய மடங்கள் கட்டினார் . 
ராஜாமடம், சேதுபாவா சத்திரம்,  அம்மணி சத்திரம் , இது போல பல.   சேதுபாவா  அவர் மனைவி.   

ராஜாமடத்தில் ஒரு அக்ரஹாரம்.  நாலே நாலு  சின்ன தெருக்கள்,  கீழத்தெரு, மேலத்தெரு, வடக்குத் தெரு,  தெற்கு தெரு..  பெருமாளுக்கு ஒரு கோவில், சிவனுக்கு ஒன்று.  ஸ்ரீ ராஜகோபால சுவாமி ஆலயம், ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி ஆலயம்.  எல்லா அக்ராஹாரங்களிலும் இப்படி தான்  வழக்கம். 

சூர்ய  கிரஹணம் என்பதால் பெரியவா  சமுத்ர ஸ்னானம் செய்ய புறப்பட்டார்.   ராஜாமடம் அடையும் முன்பு  12.1.26 அன்று  நேமத்தான் பட்டியில்  புதிதாக  M M  செட்டியார் குடும்பம் கட்டிய  சத்திரம் கிரஹப்ரவேசத்துக்கு  சென்றார்.  அப்புறம்  15 நாட்கள்  கானாடுகாத்தானில்  முகாம்.  எம்.சி.டி . முத்தையா செட்டியார் வரவேற்று சகல வசதிகளும் செய்து  கொடுத்தார். 

அதேபோல்  கடியாப்பட்டியில்  உள்ளூர்  நகரத்தார் பக்தர்கள்  பெரியவா விஜயத்தை வெற்றிகரமாக கொண்டாடி சகல வசதிகளும் செய்திருந்தனர்.   முக்யமாக அந்த ஊர்  D S குடும்பத்தார் பெரியவா பக்தர்கள். தர்ம காரியங்களில்  முதலில் நின்று கைங்கர்யம் செய்பவர்கள். அவர்களே  திருப்பாதிரிப்புலியூர்  சிவன் கோவில் புனருத்தாரணம்  நடைபெற காரணமானவர்கள்.   திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்  ஆலய வெள்ளிரதம் வழங்கியவர்கள்.   PKN   குடும்பத்தார்  சளைத்தவர்கள் அல்ல.  அவர்கள்  தான்  மஹா பெரியவா நடத்தும்  சந்திரமௌலீஸ்வர  பூஜையில் அபிஷேகம் செய்ய   தங்க கவசம்  பூண்ட  வலம்புரி சங்கு  அளித்தவர்கள்.   மஹா பெரியவா   DS   குடும்பத்தில்  திவான் பகதூர் DN  முத்தையா செட்டியாருக்கு  ''தர்ம பூஷணம்'' விருது வழங்கி கௌரவித்தார்.   ஒரு விழா சிறப்பாக நடத்தினார்கள்.  அதில் தமிழ் தாத்தா   உ.வே.சா மற்றும்  பண்டிதமணி  மு. கதிரேசன் செட்டியார் ஆகியோர் கலந்து கொண்டு   சிறப்புரை ஆற்றினார்கள்.

தேவகோட்டை அருகே  ஒரு ஊர். அதற்கு  அமராவதி புதூர்  என்று பெயர்.  அந்த ஊரில் ஒரு தர்மிஷ்டரும்ர சிறந்த சிவ பக்தருமான ஒரு செட்டியார்  வாழ்ந்து வந்தார். அவர் பெயர்  வைணகரம்   ராமநாத செட்டியார்.  சிவபூஜை செய்யாமல் சாப்பிட்டதே இல்லை.  ருத்திராக்ஷம்  அவருடைய தேகத்தில்  இல்லாமல் அவரைப் பார்க்க முடியாது.  அவரது  சிவ பூஜையில் தன்னை மறந்து  மணிக்கணக்காக  ஈடுபடுவார். தமிழ்ப்பண்டிதர். கவிஞர். பாடல்கள் இயற்றும் திறம் படைத்தவர்.  அதைத்தவிர  தேவாரம் திருவாசகம் திருமந்திரம் பற்றி நிறைய  ஆராய்ச்சிகள் செய்தவர்.   நாள்  கணக்காக அவற்றின் சிறப்பைப் பற்றி  பேசும் ஞானம் படைத்தவர்.  செட்டியார்  மதுரை மீனாட்சி அம்மன் ஆலய  ட்ரஸ்ட்டிகளில் ஒருவர். 

மஹா பெரியவா கடியாப்பட்டிக்கு  வருகை தந்திருக்கிறார் என்று அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஒரு வார காலம் கடியாப்பட்டியில் தங்கி இருந்து  மஹா பெரியவா  தரிசனம் செய்தவர்.  மஹா பெரியவாளின்  சிவபூஜையை  ஆனந்தமாக தினமும் கண்டு மகிழ்ந்தவர்.   பெரியவாளோடு  ஆன்மீக விஷயங்கள் மணிக்கணக்காக பேசி மகிழ்ந்தவர்இந்த செட்டியார்.  கடியாப்பட்டி  நகரத்தார்  மக்கள், பக்தர்கள்  ஒரு பெரிய கோலாகலமான நகர்வலம்  ஏற்பாடு செய்து மஹா பெரியவாளை பல்லக்கில்  ஏற்றி அனைவரும் தரிசனம் பெற ஏற்பாடு செய்தார்கள்.   அருகில் இருந்த  தூரத்தில் இருந்த பல ஊர்களிலிருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள்  ஆனந்தமாக இதில் கலந்து கொண்டார்கள். ஊர்  பிரமுகர்கள், முக்கியமானவர்கள் அனைவருமே  பல்லக்குடன் ஸ்வாமிகள் அருகே நடந்து வந்தார்கள்.

''எங்கே  ராமநாதன் செட்டியாரைக் காணோம்?'' 

என்று கேட்டார்  மஹா பெரியவா. மஹாபெரியவாளுக்கு செட்டியார் மேல் அத்தனை பிரியம்.  சிறந்த சிவபக்தர். தமிழ் ஞானம். தர்மவான்   அவரோடு நிறைய விஷயங்கள்  மணிக்கணக்காக சம்பாஷிப்பவர்.. இன்னும் என்ன வேண்டும் பெரியவாளின் அன்பைப் பெற?

ஊர்வலம்  இனிது நிறைவேறி முடிந்தபோது  நள்ளிரவைக் கடந்து  விடிகாலை  ஒருமணி.  ஊர்வலம்
 முடிந்து  மகா பெரியவா ஒரு  சிம்மாசனத்தில் அமர்ந்தார்.   

''எங்கே  ராமநாதன் செட்டியாரைக்  காணோம்.  அவரை அழைத்து வாருங்கள்?'' 

பவ்யமாக பயபக்தியோடு கை கட்டியவாறு  செட்டியார்  அருகில் வந்தார்.  சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்து நின்றார். 

''ராமநாதன் செட்டியார்  எங்கே உங்களை நான் பார்க்கவே இல்லையே ?''

''ஸ்வாமி  நானும்  ஊர்வலத்தில் உங்களோடு வந்து மகிழ்ந்தவன்''

''மற்றவர்களை பார்த்தேன்,உங்களைத் தேடினேன், கண்ணில் படவே இல்லையே''

''சுவாமி  என் தோள்கள் எந்த ஜென்மத்திலோ செய்த  புண்யம் உங்கள் பல்லக்கை நானும் தூக்கும் பாக்யம் கிடைத்தது''

''ஓ  பல்லக்கை  சுமந்தீர்களா. அடடா  ''

செட்டியார்  தான் பெரியவா மேல் இயற்றிய  ஐந்து பாரா கொண்ட ஒரு செய்யுள் ஒன்றை  அளித்தார்.  யாரிடமாவது ராமநாதன் செட்டியார்  இயற்றிய  அந்த ஐந்து பாரா  செய்யுள் இருந்தால் வெளியிடலாமே .

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...