Tuesday, June 15, 2021

KRISHNA STORY


 திருடன் பிடிபட்டான் -   நங்கநல்லூர்  J K SIVAN


வெல்லம் இனிப்பு இவை இருப்பது,  நாம் கண்ணுக்கு தெரியாமல் உள்ளே வைத்திருந் தாலும்  எறும்புக்கு எப்படி தெரிகிறது?. பேப்பரில் படித்தோ, டிவி யில் பார்த்தோ, வாட்சப்பில் படித்தோ வா அறிகிறது?. அதுபோல் தான் கிருஷ்ணன் வெண்ணை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிப்பதில்  மன்னன்.

இதோ நந்தகோபன் வீட்டு வாசல் வெளியே  நிற்கிறான்.  வந்திருக்கும் ஒரு நண்பனுடன் அவன் பேசிக் கொண்டிருந்ததை  மற்ற நண்பர்களும்  பார்த்து விட்டு  அன்றைய பிளான் பற்றி  திட்ட மிட  எல்லோரும் யமுனை நதிக்கரைக்கு ஓடினார்கள். அங்கே வழக்கமாக ஒரு பெரிய மகிழ மரத்தடியில் தான் சந்திப்பது வழக்கம். யார் யார் என்னென்ன தின்பண்டங்களை கொண்டுவந்தாலும் அங்கு தான் பங்கு போட்டுக் கொள்வது. அடுத்த கட்ட நிகழ்வுகளை திட்டம் போட்டு நிறைவேற்றுவது.

''கிருஷ்ணா எனக்கு பயமாக போய்விட்டதடா?'' என்றான் ஒருவன்.
''எதற்கு ?''
''உன் வீட்டில் உன் அம்மா யசோதையிடம்  எல்லோருடைய அம்மாக்களும்  ஒன்றாக சேர்ந்து வந்து ஏதோ சொல்லிவிட்டார்களாமே. நம்மைப் பற்றியா?''

''தெரியாதே.  அப்படி ஒன்றும்  இல்லையே. உங்களைப்பற்றி  எதுவும்  சொல்லவில்லையே. என்னைப் பற்றி தான் முறையிட்டார்கள்.  நான் அதை பொய் என்று ஒரேயடியாக நம்பும்படி  சொல்லிவிட்டேன்''

'' எனக்கு பயமாக இருக்குடா கிருஷ்ணா.  நாம் இனிமேல் எந்த வீட்டுக்கும் போய் வெண்ணெய் தேட திருட வேண்டாம்டா கிருஷ்ணா.''

''சரி நான் இனிமேல் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.''

''ஐயோ கிருஷ்ணா உன்னோடு விளையாடாமல் இருக்க முடியாது கிருஷ்ணா. கட்டாயம் நீ எங்களோடு சேர்ந்து தினமும் ஏதாவது சொல்லி நாம் அதை செய்ய வேண்டும். அதில் இருக்கும் சுகமே தனி'' என்றான் ஒரு பையன்.

''சரி எல்லோரும் யமுனையில் குதியுங்கள் நீரில் சற்று விளையாடுவோம்.''

தொப் தொப் என்று அந்த சிறுவர்கள் நீரில் குதித்தார்கள். மூழ்கி தண்ணீரின் அடியில் ஒருவரை ஒருவர் பிடித்து விளையாடினார்கள். நீச்சல் போட்டி வைத்து அடுத்த கரை வரை நீந்தினார்கள். மரங்கள் மீது ஏறி அங்கிருந்து குட்டிக்கரணம் போட்டு நீரில் குதித்தார்கள். பொழுது போயிற்று.

கண்ணன் கரை ஏறினான். அவர்களும் பின் தொடர்ந்தார்கள்.

இத்தனை நேரம் கண்ணன் கவனித்துக் கொண்டிருந்த அந்த தனி வீட்டில் இருந்து ஒரு கோபி வெளியே வந்தாள் . தனது குடிசையின் வாசலை மறைத்துக் கொண்டிருந்த தட்டிக் கதவை  மெதுவாக  மூடினாள். இடுப்பில் குடத்துடன் யமுனையை  நோக்கி நடந்தாள் .    எப்படியும்  அவள் குளித்து, துணி துவைத்து, குடத்தில் நீர் மொண்டு கொண்டு திரும்புவதற் குள்  தேவையான நேரம் கிடைக்கும்.  அவளைத் தவிர வீட்டில் யாரும் இல்லை. கதவைப் பூட்டும் வழக்கம்  அந்த ஊரிலேயே இல்லை.

 சூரியன் மேலே நடு வானம் வந்துவிட்டான். சுள்ளென்று உஷ்ண காற்று வீசியது. கிருஷ்ணனும் மற்ற நண்பர்களும் மெதுவாக மரங்களின் பின் நகர்ந்து அந்த குடிசையை அடைந்தார்கள். ஏற்கனவே போட்டிருந்த திட்டம் தான்.

வெகுநேரம் நீரில் ஆடிய பையன்களுக்கு கபகப என்று பசித்தது. எப்போதுமே குளித்தவுடன் பசி தெரியும். கண் வயிறு இரண்டுமே ஆகாரம் தேடும்.
கண்ணன் தன்னையும் சேர்த்து தலைகளை  எண்ணினான். ஏழு பையன்கள் . ரெண்டு பேர் அந்த குடிசையின் வாசலில் இருந்த மரத்தின் மேல் ஏறி அங்கிருந்து ஆற்றை கண்காணித் தார்கள்.
ஒருவன் வாசலில் தட்டி கதவை திறந்து மற்றவர் களை உள்ளே அனுப்பிவிட்டு   கதவை முக்கால் வாசி மீண்டும் மூடி அதன் வழியாக மரத்தில் இருப்பவர்கள் சைகைக்கு காத்திருந்தான். நாலு பேர் கிருஷ்ணன் உட்பட உள்ளே நுழைந்தார்கள். அந்த பெரிய குடிசை வீட்டில் வாசலை அடுத்து ஒரு பெரிய அறை . அதை அடுத்து ஒரு சிறு அறை . அதை ஒட்டி எதிர்புறம் இன்னொரு சிறு இருட்டு அறை அதன் கூரையில் ஒரு மாமர உத்தரம் குறுக்கே ஒரு சுவரில் இருந்து இன்னொரு சுவரின் மேல் படிந்து இருந்தது. பத்தடி உயரம். அதில் நான்கு உறி கள் தொங்கின. ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று சட்டிகள் ஒவ்வொரு உறியிலும் கண்ணன் தேடி வந்த வெண்ணை ரொம்பி இருக்கிறது.   வெண்ணை இருக்கிற   விஷயம் நேற்றே தெரிந்து விட்டது. இன்று அதை  எடுத்துக் கொண்டு போவது  தான் திட்டம்.

கிருஷ்ணன் கண்கள் துழாவின.  யோசித்தான்.  எப்படி அந்த உயரத்தை எட்டுவது.? எங்கும் ஏணியோ பலகையோ எதுவும் காணப்பட வில்லை. படு பாதகி  அந்த கோபி. எப்படி உயரத்தில் நமக்கு தேவையான வஸ்துவை கைக் கெட்டாமல் வைத்திருக்கிறாளே . ஒருகணம் யோசித்தான். நேரம் நழுவிக் கொண்டிருக் கிறதே.

''கிருஷ்ணா,,,நம்மை என்ன வென்று நினைத்துக் கொண்டிருக்கிறாள் அவள் . நம்மால் முடியாதது என்ன '' என்றான் ஒருவன்.

''சரி இப்படி செய்வோம். இருப்பவர்களில் பெரிய பையனை குனிந்து நிற்க செய்தான். முதல் அறையில் ஒரு சுவர் மீது நீளமான ஒரு கொம்பு சாற்றி வைத்திருந்ததை கண்டுவிட்டான் . அதை பிடித்துக்கொண்டு முதல் பையன் குனிந் தான்.அந்த பையன் மேல் இன்னொருவன் ஏறி அவனும் கொம்பை பிடித்துக்கொண்டு முதலில் குனிந்து நினறவன் மேல் ஏறி குனிந்து கொண்டான். மூன்றாமவன் சற்று சிறியவன் அவன் குதிரைமேல் ஏறுவது போல் தாவி கீழே இருந்த இருவரின் முதுகிலும் ஆடாமல் ஆசையால் ஸ்திரமாக குனிந்து கொண்டான். இரு கைகளாலும் கொம்பை  அவனும்  கெட்டியாக பிடித்துக் கொண்டான். அடுத்தது கிருஷ்ணன். அவனும்  ஆதாரமான கொம்பை பிடித்துக் கொண்டு மூன்று பேரின் மேலும் மெதுவாக ஏறி அந்த உயர கொம்பை இடது கையால் பிடித்துக் கொண்டு வலது கையை உயர்த்தினான். சட்டிகளை தொட முடிந்தது. சற்று எம்பி அந்த உறியில் இருந்த சட்டிகளை எடுத்து கீழே அனுப்பினான். அவை தரையில் இறங்கின. மெதுவாக நகர்ந்த அந்த சிறுவர்கள் அடுத்து இரண்டு உறிகளையும் அணுகி சட்டிகளை தரை இறக்கினர். நான்காவது உறியை நெருங்கும் சமயம் மரத்தில் இருந்த இருவர் சைகை கொடுத்து விட்டனர். வாசலில் காவல் காத்துக்கொண்டிருந்தவன் 

''டேய் கிருஷ்ணா அந்த கோபி வீடு நோக்கி வந்து கொண்டிருக்கிறாள்.'' என்று எச்சரித்தான்.

கண்ணன் மேலே இருந்து குதித்தான். மற்ற மூவரும் எழுந்தார்கள். ஒன்பது சட்டியிலும் பால், தயிர், வெண்ணெய் இருந்தது. பாலை எல்லாம் மடக் மடக்கென்று கண் இமைக்கும் நேரத்தில் குடித்து விட்டு சட்டிகளை தரையில் வீசினார்கள். தயிரையும் வெண்ணையும் பெரிதாக இருந்த நான்கு சட்டிகளில் நிரப்பிக்கொண்டு ஆளுக்கு ஒன்றை தூக்கிக்கொண்டு சிட்டாக ஓடினார்கள். வீட்டை திறந்து போட்டு விட்டு கொம்பை ஒரு அறையில் வீசி விட்டு அவர்கள் யமுனைக் கரையில் வழக்கமான மரத்தடியில் சந்தித்தார் கள்.

கண்ணனின் மயில் இறகு அவன் கீழே குதித்த போது தலையிலிருந்து விழுந்ததை அவன் கவனிக்க வில்லை.

யமுனை நதியிலிருந்து அந்த கோபி நீர்க்குடத் தோடு வீடு திரும்பியவள் கதவு திறந்திருப்பதை பார்க்கிறாள்.

''ஏன் கதவை நான் சரியாக மூட வில்லையோ?  எனக்கு வயதாகி விட்டது.  கவனக்குறைவு ரொம்ப இருக்கிறது எனக்கு ''

என்று தன்னைத் தானே சாடிக் கொண்டு உள்ளே சென்றவள் கண்ணில் உடைந்த சில சட்டிகள் தென்பட்டன. எப்படி இந்த சட்டிகள் உடைந் தன.? உறி அறுந்து விட்டதோ என்று பார்த்தாள். உறி தொங்கிக் கொண்டிருக்கிறதே.   ஏன் சட்டிகளில் இருந்த பால் தயிர் வெண்ணெய் கீழே சிதறாமல்,கொட்டாமல் சட்டிகள் மட்டும் உடைந்திருக்கிறது. அதில் இருந்ததெல்லாம் என்ன ஆயிற்று..  ஒரு பூனையால் அவ்வளவும் குடிக்க முடியாதே.  இங்கே நிறைய பூனைகள் வருவதில்லையே .  ஒரு உறியில் மூன்று சட்டிகள் அப்படியே வைத்தபடியே இருக்கிறதே.

என்ன அதிசயம் இங்கே நடந்தது?. அவள் கண்கள் துழாவும் போது  ''இதோ நான் இருக்கிறேனே''  என்று காற்றில் மயில் இறகு அசைந்தது. மயில் இறகா?  இது இங்கே எப்படி வீட்டுக்குள்  வந்தது? ஒரு கணம் யோசித்தவளுக்கு கிருஷ்ணன் வீட்டிற்கு சென்று யசோதையிடம் முறையிட்டது கவனத்துக்கு வந்தது. அந்த கிருஷ்ணன் பயல் அல்லவோ இது போன்ற பெரிய மயில் இறகை தலையில் செருகிக் கொண்டு காட்சி அளிப்ப வன். அவன் தான் வந்திருக்கிறான். உடனே சென்று யசோதையை அழைத்து வந்து இங்கு நடந்ததை காட்டவேண்டும்..''

.கோபி கோபத்தோடு  விடுவிடுவென்று  யசோதை வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள். கையில் மயில் இறகை மறக்காமல்  எடுத்துக்  கொண்டு சென்றாள் .
யமுனை ஆற்றங்கரையில்  வீராதி வீரர்கள் எல்லோரும் வெற்றியைக் கொண்டாடினார்கள். கூத்தாடினார்கள். கை நிறைய, வாய் நிறைய தயிர், வெண்ணெய் . ஏழு ஆயர்பாடி சிறுவர்களுக்கும் விருந்து....

கண்ணன் மெதுவாக வீடு திரும்பினான். ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது... ''வாசலிலேயே பல குரல்கள் உள்ளே பேசுவது கேட்டது.  அம்மா யசோதை ஏதோ சொல்லி மழுப்புகிறாள்

.....அப்புறம் நடந்தது தெரிந்தது தானே...

ps. when I saw today the attached picture while browsing, I felt like visualising the above scene.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...