Thursday, June 17, 2021

srimadh bagavadham

 

ஸ்ரீமத் பாகவதம் -- நங்கநல்லூர் J K SIVAN ---11வது காண்டம் 5வது அத்யாயம் 52 ஸ்லோகங்கள்

5. நாரதர் உபதேசம் முடிந்தது .

எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு யாக மண்டபத்தில் இக்ஷ்வாகு வம்ச ராஜா நிமி, வேதபிராமணர் கள் புடைசூழ மந்திரி பிரதானிகளோடு நிற்கிறான் அவன் எதிரே ஒன்பது ரிஷிகள், நவ யோகேந்தி ரர்கள் எனப்படும் ரிஷபதேவன் குமாரர்கள் அமர்ந்திருக்கிறார்கள். ராஜா நிமி கேட்கும் சந்தேகங்களுக்கு விடை அளிக்கிறார்கள் என்பதை நாரதர் ஸ்ரீ கிருஷ்ண னின் தந்தை வசுதேவருக்கு துவாரகை அரண்மனையில் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் அப்படிச் சொன்னதை சுகப்பிரம்ம ரிஷி அர்ஜுனன் பேரன் பரிக்ஷித்துக்கு சொல்லிக் கொண்டிருக் கிறார். பரீக்ஷித் 7 நாளில் மரணம் அடைய நாட்களை எண்ணிக் கொண்டிரு க்கிறான். புத்தகம் இல்லாத காலத்தில் எல்லாம் செவிவழியாக அறியப்பட்டது.
''யோகேஸ்வரர்களே, ஆத்மாவை அறியாத வன், ஹரி நாராயணனை நினைக்காதவன், புலன்கள் இழுத்துக்கொண்டு போகும் வழியில் சென்று உலகத்தை துய்ப்பவன் எங்கே போய்ச் சேருவான்?'' என கேட்கிறான் ராஜா நிமி.
சமஸர் என்கிற ரிஷி பதிலளிக்கிறார்:
''உலகில் உயிர்கள் தோன்றியபோது புருஷன் எனும் ஆதிகாரணனின் உடலின் பல பாகங்க ளிலிருந்து மனித இனம் தோன்றியது. அந்த இனம் தொழில் முறையாக நான்கு விதமாக அடையாளம் காணப்பட்டது. அவர்களில் யாராக இருந்தாலும் தத்தம் கர்மாவைச் செய்யாமல், பகவானை நினைக்காமல் இருந்தால் நரகத்தைச் சென்றடைவார்கள். பரமாத்மாவைப் பற்றி பேசக்கூட, பேச்சைக் கேட்பதற்கு கூட , வழியில்லாதவர்களுக்கு அவனைத் தொழவோ, அவன் நாமாவைச் சொல்லவோ வழியில்லை. உன்னைப் போன்ற ராஜாக்கள் தான் மக்களிடம், பெண்களிடம் எல்லாம் கருணை காட்டவேண்டும். ஹரியைத் தொழ வழி இருந்தும் பிராமணர் வைசியர் களில் சிலர் தமது கடமையில் தவறி உலக இன்பம் தேடுகிறார்கள். கர்மாவை மறந்து வேதங்களை சரியாக உணராமல் ஹரியை மறந்து, உபதேவதைகளை நாடுகிறார்கள். புலன்களின் பிடியில் சிக்கி, வேதத்தின் உட்பொருளை மறந்து, ஆசை, பேராசை, கோபம் போன்ற அழிவுப்பாதையில் செல்கிறார்கள். வேதத்தை சரிவர அறியாமல், யாகங்களை நடத்தி, தமக்கு தேவையானதை ப் பெற உபதேவதைகளுக்கு யாகத்தீயில் உயிர்ப்பலி கொடுக்கிறார்கள். செல்வம் சேர்க்க, உ லக இன்பம் துய்க்க இப்படி யாகங்கள் செய்கிறவர்கள். ஹரி நாராய ணனை அவமதிப்பவர்கள் தமக்குள்ளேயே இருப்பவனை அறியாதவர்கள். பஞ்ச மஹாபாதகங்களைப் புரிபவர்கள்.

தார்மீக வாழ்க்கை வாழ்ந்து வேத வழி நடப்பவன் மோக்ஷம் அடைகிறான். அஞ்ஞானிகள் ஆன்ம வழி அறியாமல் துன்புறுகிறார்கள். அஞ்ஞானத்தில் உழன்று யாகங்கள் நடத்தி பிராணிகளை பலிகொடுக்கும் பாபிகள் அடுத்த பிறவிகளில் அந்த பிராணிகளாலே யே கொல்லப் படுவார்கள். பரமாத்மாவை மறந்து, தேஹத்தை யே பிரதானமாகக் கொண்டு வாழ்பவர் நரகம் செல்வது நிச்சயம். அஞ்ஞான இருளில் மிருக வாழ்வு வாழ்பவர்கள் தங்கள் ஆன்மாவை தாங்களே அழித்துக் கொள்பவர்கள் . ஆன்மீக முறையை பின்பற்றாது அழிபவர்கள். வாசுதேவனை மறந்து, அவனது மாயையில் சிக்கி பரிதாபமாக மறைபவர்கள்''

''பிரபு தேவர்களே, பகவான் நாராயணன், என்ன வண்ணம், என்ன பெயர் அடையாளங் களோடு அவ்வப்போது அவதரித்தார்.? அவரை பக்தர்கள் எவ்விதம் வழிபட்டார்கள் ?"'

ராஜா நிமியின் கேள்விக்கு கரபாஜனர் எனும் ரிஷி பதிலளிக்கிறார்: க்ருத , த்ரேதா, துவாபர, கலியுகங்களில் ஸ்ரீமன் நாராயணன் பல ரூபங்களில் அவதாரம் கொண்டவர். சத்ய யுக மக்கள், சாந்தத்தோடு, பொறாமை இன்றி, அன்போடு எளிமையாக, புலனடக்கி வாழ்ந் தவர்கள். ஸ்ரீ நாராயணனை ஹம்சன் , ஸூபர்ணன் , வைகுந்தன்,தர்மன், யோகேஸ் வரன், அமலன், ஈஸ்வரன், புருஷன், அவ்யக்தன், பரமாத்மா என்ற பெயர்களில் போற்றி பரிசுத்த த்யானத்தில் வழிபட் டார்கள்.

த்ரேதா யுகத்தில் சிவப்பு வண்ணன், தங்க நிறம், நான்கு கரங்கள், ரிக், யஜுர், சாம வேதங்க ளைக் குறிக்கும் மூன்று வஸ்திரங்கள் இடையில் உடுத்திஇருப்பான்.. கையில் யாக கரண்டி அடையாளம். விஷ்ணு, யஞன், ஸர்வதேவன், ஜெயந்தன், உருகாயன் , போன்ற பெயர்களில் நாராயணன் போற்றப் பட்டான்.

துவாபர யுகத்தில் கருநீல வண்ணன், மஞ்சள் வஸ்திரம், மார்பில் ஸ்ரீவத்ஸ அடையாளம்.ஒரு அரசனைப் போல் நாராயணன் அவதரித்து அவனை பக்தர்கள் வழிபட்டார்கள். நாராயணன், வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்றெல்லாம் தோற்றமளிப்பான். சர்வமும் ஆகிய நாராயண ரிஷிக்கு நமஸ்காரம்.

''மஹாராஜா நிமி, கலியுகத்தில் வேதத்தில் கண்டபடி மக்கள் வழிபடுவார்கள்.கூட்டாக சேர்ந்து கிருஷ்ணனை பஜிப்பார்கள். கருநீலமாக இருந்தாலும் கருப்பான கிருஷ்ணன் என்றே அவனை அழைப்பார்கள். கலியுக வரதன் ஸ்ரீ கிருஷ்ணன், அவன் திருவடியை ப்ரம்மா சிவன் போன்றோர் வணங்கி தொழுகிறார்கள். பவ சாகரத்தைக் கடக்க அவன் திருவடியைப் பற்றினால் போதும். கிருஷ்ணன் மஹா லக்ஷ்மியை கூட துறந்து பிராமணர்கள் இட்ட சாபத்தை மதித்து கானகம் சென்ற ப்ரபு. அவன் நினைத்தால் அந்த சாபங்கள் பலிக்காமல் செய்ய முடியுமே!

''மஹாராஜா நிமி, ஹரி நாராயணன் யார் எதைக் கேட்டாலும் கொடுப்பவன், ஒவ்வொரு அவதாரத்தில் அவன் கொண்ட நாமங்களை விடாமல் பஜித்து அவனை பக்தர்கள் அடைகிறார்கள் . கலியுகத்தில் நாம சங்கீர்த் தனம் ஒன்றே எளிமையான வழி. மன அமைதி, ஜனன மரண விடுதலை தருவது.
''மஹாராஜா, நிமி, எல்லா யுகத்திலும் விட கலியுகத்தில் நாராயணனின் பக்தர்கள் அதிகம், தென்னிந்தி யாவில் கேட்கவே வேண்டாம். வாசுதேவனின் பக்தர்கள் புனித தீர்த்தங்களான காவேரி, கோதாவரி, தாம்பர பரணி,பயஸ்வினி, க்ருதமாலா நதிகளில் நீராடி, பருகி அவனை அடைபவர்கள். ஸ்ரீமன் நாராயணனை, முகுந்தனை, வழிபடுவோர் மற்ற உபதேவதை களை, பித்ரு தேவதைகளை தனியாக நாடி வழிபட அவசியமே இல்லை. எல்லோருமே முகுந்தனில் அடக்கம். அவனது திருவடிகளில் சரணடைந்தோர் செய்த தவறுகள் பாபங்கள் எல்லாவற்றையும் அவர்கள் இருதயத்தில் உறைகின்ற பரமாத்மா நீக்குகிறான்.
இதெல்லாம் நாரத முனிவர்,கிருஷ்ணனின் தந்தை வசுதேவருக்கு உபதேசித்ததை நவ யோகேந்த்ரர்கள் மஹாராஜா நிமிக்கு சொல்லி யதை சுகப்பிரம்ம ரிஷி பரிக்ஷித்து க்கு உரைக்கிறார். நவயோகீஸ்வரர்கள் உபதேசம் பெற்ற ராஜா நிமி அவர்களை உபசரித்து வணங்க அவர்கள் மறைகிறார்கள். மஹாராஜா அவர்கள் உபதேசப்படி வாழ்கிறான்.

''வசுதேவா , உனக்கு பக்தி மார்கத்தை உபதேசித் தேன். அதன்படி நடந்து மோக்ஷம் பெறுவாயாக என்று வாழ்த்துகிறார் நாரதர். நீயும் உன் மனைவியும் புண்யம் செய்தவர்கள் ஸ்ரீ நாராயண னையே மகனாக ஸ்ரீ கிருஷ்ண னாக பெறுவதற்கு. அவனை அணைத்து , முகர்ந்து, அவனோடு உணவருந்தி, அவனோடு பேசி மகிழ்ந்த பாக்யசாலிகள் நீங்கள். பரிசுத்த ஆத்மாக்கள். ஏன், கிருஷ்ணனையே எதிரியாக சதா சர்வகாலமும் நினைத்துக் கொண்டிருந்த சால்வன், சிசுபாலன், பௌண்ட்ரகன் போன்றோ ருக்கும் நற்கதி வழங்கியவன் ஸ்ரீ கிருஷ்ணன். அவன் கருணையைப் பற்றி இன்னும் என்ன சொல்ல?

''வசுதேவா , உங்கள் எல்லோருடைய கண்ணுக் கும் ஸ்ரீ கிருஷ்ணன் சாதாரண மானுடனாக தோன்றினாலும், சர்வ வல்லமை பொருந்திய , மூவுலகும் வணங்கிடும் பரமாத்மா அவன். சகல சக்திகளையும் மறைத்துக் கொண்டு எல்லோரையும் போல காணப்படுபவன். அவன் பூமியின் பாரம் குறைக்க ராக்ஷஸர்களை அரக்கர்களை அழிக்க அவதரித்தவன். அந்த ராக்ஷசர்க ளுக்கும் நற்கதி அருளிய கருணா மூர்த்தி.

நாரதர் உபதேசித்ததை கேட்ட வசுதேவர், தேவகி ஆகியோர் திகைப்புற்று, அதே சமயம் ஆனந்தத் தோடு ஞானம் பெற்று, நாரத மகரிஷியை வணங்கினார்கள் .

இந்த ஸ்ரீமத் பாகவத விஷயங்களை ஆர்வத்தோடு அறிந்து நம்பிக்கையோடு ஸ்ரீ கிருஷ்ணனை வணங்குபவர்கள் அனைவருக் குமே நற்கதி என்று வேத வியாசர் இந்த அத்தியாயத்தை நிறைவு செயகிறார்.

மேலே கண்டது 52 ஸ்லோகங்களின் சாராம் சம்.

தொடரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...