Sunday, June 27, 2021

GEETHA GOVINDAM

 கீதகோவிந்தம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


 ராதா.   என் ராதா..!

நாம் கண்ணை மூடிக்கொண்டு இருந்த இடத்திலிருந்தே பிருந்தாவனம் சென்றுவிட்டோம். எப்போது? எங்கே? இப்போதே திடீரென்று கண்ணன் இருந்த காலத்திற்கே சென்றுவிட்டோம். .போதுமா? இனி கண்ணைத் திறப்போம். காட்சிகள் காண்போம். அட ,  நமக்கு முன்பே ஒருவர் அங்கே சென்று உட்கார்ந்திருக்கிறாரே. கையில் என்ன?  ஓஹோ  கண்ணால் பார்த்ததை எழுதி நமக்குத் தர  பனை  ஓலையும்  எழுத்தாணியும் . யார்  இவர்  எங்கோ  பார்த்தவராக    இருக்கிறாரே.   ஓஹோ,  நமது ஜெயதேவர் தான். மனிதர் ஒரிஸ்ஸாவிலிருந்து நடந்தோ பறந்தோ இங்கு வந்திருக்கிறார்! சிறந்த ராதா கிருஷ்ண பக்தர் ஆயிற்றே. பிருந்தாவனம் பக்கம் தலை காட்டாமல் இருப்பாரா?

கிருஷ்ணன் அருள் வேண்டுமானால் ராதாவின் கால்களை முதலில் பிடிக்கவேண்டும். பிருந்தாவனத்தில் கிருஷ்ணனை தரிசிக்க போவோர்கள் ராதா கோவிந்தா என்று ஸ்மரித்துக்கொண்டே தான் செல்வார்கள்.
இரவில் வெள்ளி நிலவாக ஜ்வலிக்கும் சந்திரன் பகலில் இல்லை. பகலில் விகசிக்கும் தாமரை இரவில் சூம்பி விடுகிறது. என் சகி ராதா, நீ இரவிலும் பகலிலுமே அழகு அறிவு இரண்டும் கலந்த உன் காந்த சக்தியை என் மீது அள்ளி வீசுகிறாய் '' என்று கிருஷ்ணனே வர்ணிப்பதாக ஒரு பாடல் விதக்த மாதவா என்ற கோர்வையில் வருகிறது.

நீ சிரித்தால்  தீபாவளி.. மகிழ்ச்சி அலைகள் ஒன்றின் மேல் ஒன்றாய் பொங்கி எழுந்து கன்னத்திலிருந்து பீறி வெளிக் கிளம்பி என்னை தாக்குகிறது.  நிச்சயம் நீ சிரித்தால் தீபாவளி தான். ராதையின் அழகிய வளைந்த புருவங்கள் மன்மதன் வில். அவள் கடை விழிப்பார்வையின் வீச்சு தேன் வண்டுகளின் ரீங்காரத்வனியை வாரி வீசும். அந்த தேன் வண்டு ''அடடா மாம்பழத்தை துளைப்பது போல், என் இதயத்தையும் துளைத்துவிட்டதே!'' இது ஒரு சிறு மாதிரி வர்ணனை. முழுதும் ரசிக்க ''விதக்த மாதவா'' வைப்   படிக்கவேண்டும்.

அன்று வைகாசி விசாக பௌர்ணமி நாள். இரவைப் பகலாக்கிக்  கொண்டிருந்தான் சந்திரன். அவனது குளிர்ந்த  வெள்ளி அலைகள் உலகை குளிப்பாட்டிக்  கொண்டிருந்தது.   மெல்லிய தென்றல் வீசி எங்கிருந் தெல்லாமோ இனிய நறுமண மலர்களின் சுகந்தத்தை தன்னோடு சேர்த்து பரிமாறிக் கொண்டு இருந்ததோடு மட்டுமல்லாமல் வேறு ஒரு அருமையான வேலையையும் செய்தது.

பிருந்தாவனத்தில் ஒரு அழகிய மரங்கள் அடர்ந்த இடத்திற்கு பாண்டீர வனம் என்று பெயர். அதில் யாரேனும் உலவினால் எளிதில் மற்றவர்கள் கண்களில் படமுடியாது.

''கிருஷ்ணா இன்று என்ன விசேஷம் என்னை இங்கு வரச்சொன்னாய்?

உனக்கே தெரியுமே நான் சொல்ல வேண்டுமா?

''என்ன பெரிய ரகசியம்? நீயே சொல்லேன்.  ஏதோ உனக்கும் எனக்கும் கல்யாணமா  ஆகப் போகிறது?''

''எப்படி சரியாகவே சொல்லிவிட்டாய் ராதா? நீ ரொம்ப கெட்டிக்காரி, புத்திசாலி என்பதால் தான் உன்னை எனக்கு பிடிக்கிறது. ''

''என்ன சொல்கிறாய் கிருஷ்ணா, விளையாடுகிறாயா? தீராத விளையாட்டுப்பிள்ளை என்று நிரூபிக் கிறாயே?''

'' ஆமாம்,, ஆமாம் இன்று இங்கே இப்போதே உனக்கும் எனக்கும் கல்யாணம்.   அதை  நடத்தி வைப்பவர் இதோ இருக்கும்  ஜெயதேவர்.  போதுமா?''

ஒரு இடத்தில் படித்தேன் ரசித்தேன் அது இது:

''அந்த பாண்டிர வனத்தின் ஆல மரத்தின் கீழ் ராதா கிருஷ்ண திருமணம் நடந்ததாம். ஸ்ரீ மத் பாகவதம் கூறாத ராதையை- ராதா- கிருஷ்ண திருமணத்தை கீத கோவிந்தம் என்னும் சிருங்கார ரச காவியம் கூறுகிறது. இதனை இயற்றியவர் ஜெயதேவர். அதனை மிகவும் ரசிப்பார் காஞ்சிப் பெரியவர். ஒரு சந்நியாசி சிருங்கார ரசம் கலந்த கீத கோவிந்தத்தை ரசிக்கிறாரென்றால் அது சாதாரண சிருங்கார ரசமா? அந்த ஜெகந்நாதரே ரசித்த கீதமல்லவா!

விசாக-அனுஷ நட்சத்திரங்களுக்கு வேதத்தில் "ராதா' என்று பெயராம். வட மொழியில் அனுஷத்திற்கு அனுராதா என்று பெயர்.  அனுஷத்துக்கு அடுத்தது விசாகம்.    ஆகவே ராதைக்கு அடுத்தது. எனவே விசாகன் ராதையுமா னான். சிவனே ராதையாகப் பிறந்து கண்ணனுடன் ராச லீலை புரிந்தான் என்று தேவி புராணம் கூறுகிறது. சிவனே கந்தனாக அவதரித்தான் என்று கந்தபுராணம் கூறுகிறது. ஆக, கந்தனே ராதையானான் என்றும் சொல்லலாம். ராதையின் மகிமையை கர்க சம்ஹிதை, பிரம்ம வைவர்த்தம், தேவி பாகவதம் போன்ற புராண நூல்கள் கூறுகின்றன. அதன்படி ராதா- மாதவன் திருமணம் நடந்த தினம் விசாக பௌர்ணமியே. எனவேதான் மஹா பெரியவாளுக்கு  ராதா- கிருஷ்ண வைபவத்தில் விருப்பம் உண்டாயிற்று எனலாம்.

கிருஷ்ண சைதன்ய மகாபிரபு ஒரு சந்நியாசி. அவரது சீடன் ஒருவன் பிச்சை யிட்ட பெண்மணியின் முகத்தைப் பார்த்தான் என்பதை அறிந்து அவனை விலக்கினார். அதனால் அந்த சீடன் தன் உயிரையே மாய்த்துக் கொண்டான். அத்தகைய சைதன்ய மகாபிரபு ராதா கிருஷ்ண இயக்க சந்நியாசி. அவர் 12 ஆண்டுகள் பூரி ஜெகந் நாதர் கோவிலிலேயே வாழ்ந்து, தனது 50-ஆவது வயதில் ஜெகந்நாதரின் திருவடியில் கலந்தார். எனவே சந்நியாசிகளின் ராதா- கிருஷ்ண பிரேமை என்பது மிகவும் உயர்ந்த நிலை.

ஜெயதேவரின் கீத கோவிந்தம் ராதா- கிருஷ்ண விரக பிதற்றல்களை விவரிப்பது. அஷ்டபதி என எட்டு அடிகளை கொண்ட பாடல்கள். வேண்டாம் என்று ஜெயதேவர் சில அடிகளை நீக்க முயற்சித்தபோது, அவற்றை ரசித்து பூரி ஜெகந்நாதரே அந்த அடிகளை, வரிகளை தானே எழுதி சேர்த்தார் என்று பூரியிலும் காசியிலும் பறைசாற்றப்பட்டது. (இதில் 19-ஆவது அஷ்டபதியை எழுதும்போது ஜெயதேவர் குழப்பமாகி எழுதாமல் எழுந்து சென்றுவிட, அவர் உருவில் ஜெகந்நாதரே அந்த அஷ்டபதியை எழுதினார் என்பர்.) ராதா என்பது ஜீவாத்மா; கிருஷ்ணன் என்பது பரமாத்மா. ஜீவாத்மா- பரமாத்மா ஐக்கியத்தை- முக்தி நிலையை விளக்குபவையே இந்தப் பாடல்கள்.''

ஜெயதேவர் ஒரு அசாத்திய ராதா கிருஷ்ண பக்தர். மழைத் தண்ணீரைக் கையில் பிடிக்கலாம். தென்றல் காற்றைப் பிடிக்கமுடியுமா? முடியும் போல் இருக்கிறது இந்த ஜெயதேவருக்கு. கிருஷ்ணன் ராதா சந்திப்புகள், அவர்களது பிரேமையை வார்த்தைகளால் வர்ணிக்க இவரைத்  தவிர வேறு ஒருவராலும் முடியாதே. கீத கோவிந்தத்தை யாரையாவது விட்டு படிக்கச் சொல்லி கண்ணை மூடிக்கொண்டு கவனித்துக் கேட்டாலோ மனமுருகி தானே படித்தாலோ நீங்கள் யமுனை நதியின் சலசலப்பு மிக்க கரையில், ஒரு மயில் கூட்டத்தின் இடையே, நறுமணம் வீசும் பூஞ் செடி கொடிகளுக்கு நடுவே கிருஷ்ணனும் ராதாவும் ஓடிப்பிடித்து விளை யாடுவதைக் காண்பீர்கள். கிருஷ்ணனின் புல்லாங்குழலின் இனிமை தென்றல் காற்றில் கலந்து பூக்கள் நறுமணத்தோடு உலவுவதை சுவாசித்து செவியில் ஏற்றிக்கொள்வீர்கள் . ஜெயதேவர் இதயத்தில் பதிந்த எண்ண பதிவுகளின் பிரதிபலிப்பு இந்த கீத கோவிந்தம். ராதா- கிருஷ்ணனின் யமுனா நதி தீர ராச லீலாக் களின் ரன்னிங் கமெண்டரி.

ஜெயதேவர் என்ற கலைஞனின் இதயமாகிய மாபெரும் மாளிகையில் அவர் தீட்டிய ஓவியங்கள் பேசுபவை. வாசமிக்கவை, உணர்ச்சிகளை கொப்புளிப்பவை. அந்த ஓவியங்கள் ராதாவும் கிருஷ்ணனுமே. பல பல வேடங்களில் நேரத்திற்கு தக்கவாறு வித வித எண்ணங்களை பிரதிபலிப்பவர்கள். இவ்வாறு ஜெயதேவர் வடித்த என்று மழியாத ஓவியங்கள் தான் கீதகோவிந்த பாடல்கள். பிரபல வித்வான்கள் அவற்றை இசை மெருகூட்டி நமக்களிக்கிறார்கள் . ராதா மாதவ தெய்வீக காதல் காட்சிகள் ஸ்ருங்கார ரசத்தில் இனிமையோடு ஈடிணையற்று தீட்டப்பட்டவை.

தொடரும் 
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...