Sunday, June 27, 2021

RAMAKRISHNA PARAMAHAMSAR


அருட்புனல்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


பார் போற்றும் பரம ஹம்சர் 



யார் யாரெல்லாமோ  உபதேசம் செய்கிறார்கள் என்றாலும் ஒரு மனித தெய்வத்தின் உபதேசம் எல்லாவற்றிலிருந்தும் தனிப்பட்டு உயர்ந்ததாக கொண்டாடப் படுகிறது. அது  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் அரிய அன்பு மிகுந்த சொற்கள்.

சிலர் படித்து புகழ் பெறுகிறார்கள்.  புகழ் பெறுவதற்காகவே  சிலர் படிக்கிறார்கள். சிலர் தன்னில் தானாகவே உயர்ந்த ஞானம் பெற்று தன்னலமற்ற கடவுளின் நேர் வாரிசாக தோன்றி  உலகை வழி  நடத்துகிறார்கள். எங்கோ அமைதியாக வாழ்ந்தாலும் உலகம் அவர்களை நாடுகிறது    .இப்படிப் பட்டவர்களை விரல் விட்டு எண்ணலாம்.  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அதில் முதல் வரிசையில் முதன்மையாக ஜொலிக்கிறார்.

அவர் காலத்தில்  புகைப் படங்கள்,  விடியோக்கள்,  டிவி , அதிக புத்தகங்களோ,  இல்லை. அவரே பள்ளி செல்லாதவர்.  அவரது வாயிலிருந்து உதிர்ந்த முத்துக்களை ஒரு ஞானி தன்னால் முடிந்தவரை எடுத்து நமக்கு அளித்ததால் நாம் பாக்கியவான்கள்.

தன்னை ஒரு ஒத்தை  எழுத்தில்  ''M''   என்று  மட்டுமே அறிமுகம் செய்து கொண்ட மஹேந்த்ரநாத் குப்தா  ஒரு ஒலி நாடாபோல் காதில் விழுந்த  அத்தனை சம்பாஷணைகளையும் நேரம் காலத்தோடு, சம்பந்தப் பட்டவர்களை அடையாளம் காட்டி அற்புதமாக இதை அளித்திருக்கிறார். எல்லாம் போட்டோ  படம் இல்லாமலேயே.  அதைப் படித்தேன். சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விருப்பம் வந்தது.  ஏற்கனவே ரெண்டு கட்டுரைகள் பரம ஹம்சரை பற்றி எழுதியபின் உங்களுக்கு இதை அளிக்கிறேன்.வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு நிம்மதியை  அடைவதற்கு    ஸ்ரீ  '' M'' க்கு வரப் பிரசாதமாக கிடைத்தவர் பரமஹம்சர்

 (1882) ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று   'கற்பனைக்கும் கனவுக்கும் அப்பாற்பட்ட  இன்பமான பகவான் கருணை இருக்கும்போது  எதற்கு கவலை?'' என்ற குருவின் வார்த்தை ''M ''க்கு  காதில் தேனாக பாய்ந்தது. அந்தக் கணம் முதல்  அட்டைபோல்  குருவை  ஒட்டிக்கொண்டார்.

''நீயும்  நானும் ஒன்றே.  அப்பாவும்  பிள்ளையும் போல்  இணைந்தவர்கள்'' என்று ராமகிருஷ்ணர்  சொன்ன  போது அதில் ஆயிரம் அர்த்தங்கள்  ''M''  க்கு  த்வனித்தது.

''நீ எப்படியப்பா  சந்நியாசியாக முடியும்.  தாய் தான் உன்னை அவள்  பணியில் அமர்த்தி விட்டாளே. பாகவதம் எல்லோருக்கும் எடுத்துச் சொல்.''

ரெண்டு மூன்று தடவை வேலையை விட்டபோதெல்லாம்  குடும்பத்தை எப்படி நடத்துவது என்ற கவலை வாட்டியது. பகவான் அருளால் வேறு வேலைகள் உடனே கிடைத்து 'M '' குடும்ப  வறுமை ஒருவாறு நீங்கியது. த்யான பயிற்சி தொடங்கியது.

ஒழிந்த நேரத்தில்  சில க்ஷேத்திரங்களை அடைந்து   தரிசித்து மன நிம்மதி பெற்றார்  'M '.     பரமஹம்சர் பிறந்த கமார்புக்கூர் கிராமத்தில் அங்கு தெருவெல்லாம் உருண்டு புரண்டு காண்போரையெல்லாம் வணங்கி  ''என் குரு பிறந்த புண்ய க்ஷேத்ரத்தில் மண், செடி, கொடி,  மரம் எல்லாமுமே வணங்கதக்கவை'' என்று எண்ணிய மஹா பக்தர்  ''M ''.

''இதோ பார்  எப்போது  ராமா, கிருஷ்ணா, என்ற நாமங்களை எங்காவது  ஒரு முறை கேட்டாலும் மனம் புளகாங்கிதம் அடைந்து, உடல் ரோமாஞ்சலி பெற்று, கண்களில் பக்தி பிரவாகமாக பெருகுகிறதோ, அதன் பிறகு  சந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மாக்கள் கூட அவசியமில்லை  யப்பா'' என்ற குருவின் வாக்கு அவரை மெய் சிலிர்க்கவைத்தது.

''ஆஹா  எவ்வளவு பிரமாதமான, எளிய நடை, ஒன்று விடாத கோர்வையாக விவரங்கள், இதுவரை ஏன் நாங்கள் யாருமே  குருவை பற்றி அவர் வாழ்க்கையை பற்றி எழுதவில்லை என்று நன்றாக புரிந்து விட்டது. அது உங்களுக்காகவே பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட பகவானின் அனுக்கிரஹம் ''என்று சுவாமி விவேகானந்தர் ''M''எழுதிய  பரமஹம்சரின் உபதேச சார புத்தகம் பற்றி சொல்கிறார்.

 மஹேந்த்ரநாத் குப்தா உயரமான பொன்னிற தேகம் கொண்ட   திடகாத்திர மனிதர்.   முழங்கால் வரை நீண்ட  கரங்கள். பரந்த நெற்றி.  வேத கால ரிஷி போல வெண்தாடி , ஆழ்ந்த கண்கள் கொண்ட   பார்த்தாலே வணங்கச்  செய்யும் உருவம். நிறைய படித்த ம்ருது பாஷி.

ராமகிருஷ்ணர் பிறந்த கமார்புக்கூர் இயற்கை வளம் செறிந்த பூஞ்சோலை. ஏரிகள் நெளிந்து ஓடின. கண்ணுக்கெட்டிய வரை நெற்கதிர்கள் பச்சை பசேலென மணக்கும் வயல்கள், நீண்ட பனை தென்னை மரங்கள், பருமனான  ஆலமரங்கள், பூத்துக் குலுங்கும் மாமரங்களில்  வாண்டுகள் மரத்தில் ஏறி காய்களை, பழங்களை பறித்து தின்று கொண்டிருப்பார்கள். யாரும் ஒன்றும் சொல்வதில்லை.  கிராமத்தை ஒட்டி ஒரு  நேர் பாதை ஒரிஸ்ஸா பூரி ஜகந்நாதர் ஆலயம் வரை சென்றதில் நிறைய குதிரை,  காளை மாட்டு வண்டிகளும், பாதசாரிகளும் காணப்படுவார்கள்.அவர்கள் இனிய குரலில் பக்தி பாடல்களை பாடிக்கொண்டே செல்வார்கள்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...