Tuesday, June 22, 2021

KRISHNA THE RARE GOD


   கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லி...  --  நங்கநல்லூர்  J  K  SIVAN 


அவதாரம்  என்றால்  உடனே  நமக்கு மனதில் தோன்றுவது விஷ்ணுவை மட்டுமே. . எத்தனையோ அவதாரங்கள் எடுத்த தெய்வம். பத்து அவதாரங்கள் மட்டும் பிரபலமாக  பேசப்படுகிறது. தசாவதாரம் என்று.  மீதி எல்லாம்?  ஏன் பாண்டுரங்கன் கிருஷ்ணன் தான். இன்னும் எத்தனையோ.  ஒரு உதாரணத்துக்கு சொன்னேன்...''வ்யாஸாய விஷ்ணு ரூபாய''... மொத்தத்தில் ஒன்றே பலவாகி  காட்சி தரும் தெய்வம் நமது ஹிந்து சநாதன தர்ம  நம்பிக்கையில் பல  உண்டு.  ஆனால்  ஒரே  ஒரு அவதாரம் மட்டும் தான் பூரணமான அவதாரம். அது கிருஷ்ணன் ஒன்றே.

மனிதனாக பிறந்து, மனிதன் மாதிரி வாழ்ந்து, தனது தெய்வீக சக்தியை எப்போது வெளிப்படுத்த வேண்டுமோ அப்போது மட்டும் காட்டி, மற்றபடி சிறுவர் முதல் சக்கரவர்த்தி வரை அவரவருக்குத் தக்கவாறு  உலகில் வாழ்ந்து காட்டியது  கிருஷ்ணன் ஒன்றே. ஆயுதமில்லாமல் போரை நடத்தி வென்ற ஒரே  ராஜா கிருஷ்ணன்.

''தர்மத்தை காக்க  அதர்மத்தை அழிக்க''  என்ற ஒரே குறிக்கோள் கொண்ட கிருஷ்ணன்.   சகுனியோடு துரியோதனனோடு பழகும்போது அவர்கள் மனதை அறிந்தவன்.  மாயா ஜாலன் என்று அவர்களால் அஞ்சப்பட்டவன். 

விதுரர்  தர்மர்  பீஷ்மர் ஆகியோருடன் பழகும்போது அவர்கள்  போற்றும்  மகா  ஞானி. 
அர்ஜுனனோடு பழகும் போது  உடன்பிறவா  நண்பன்.
குசேலரோடு பழகும்போதுஅதே  அன்போடு கூடிய  பழைய பள்ளி மாணவன்.
ராதையோடு  நட்பு ப்ரேமையின் உச்ச கட்டம்.
சிசுபாலனிடம் காட்டியது  பொறுமை, கொடுத்த வாக்குக்கு மதிப்பு. 
குந்தியிடம் காட்டியது தேவகி, யசோதையிடம் காட்டியது போல அன்புடன்  தாய்ப்பாசம்.
கர்ணனிடம் காட்டியது  மதிப்பு,  அவன்  வீரத்துக்கும்   கொடைத்  தன்மைக்கும்,  அவமதிப்பு   அவன் பாண்டவர்களிடம் காட்டிய  வெறுப்புக்கு.  

இன்னும் சொல்லிக்கொண்டே போகும்படியாக அல்லவா இருக்கிறது கிருஷ்ணனின் மகத்வம். மீதி அவதாரங்களில் இவ்வளவு சுவாரஸ்யம் காணோம்.  பக்தி மட்டுமே  மிதமிஞ்சி காணப்படுகிறது . அந்த பக்தி 
நம்மை  பகவானிடமிருந்து   பிரித்து விடுகிறது. அவன் எங்கோ நாம் எங்கோ என்று   பெரிய இடைவெளி காட்டி பேச வைக்கிறது. 
 
பிறந்தது முதல்   ஜரனின் அம்பு காலில் தைத்து  அவனை வாழ்த்தி  அனுப்பியது வரை கிருஷ்ணன் செயல்கள் அனைத்துமே  தனித்வமானது. ஒவ்வொருவராக  கண்ணன் வாழ்க்கையில் நாம் சந்திப்பவர்களை வரிசையாக பாருங்கள். பிறந்த போதே சிறையில் காவலாளிகள் தூக்கம், கதவு தானாகவே திறந்து ஆறு வழிவிட்டு  நந்தகோபன் வீடு தானாகவே திறந்து, கண்ணன் தொட்டிலில்   இடம் மாறி. வளர்ந்து   வெண்ணெய் திருடி, விளையாடி,  ராக்ஷஸர்களை வரிசையாக கொன்று, கோவர்தனகிரியை தூக்கிப்பிடித்து, பசுக்களை மேய்த்து, புல்லாங்குழல் இசையால்  உலகை மயக்கி, காளிங்கனை வெளியேற்றி, பிருந் தாவனத்திலிருந்து மதுரா சென்று, கம்சனைக்கொன்று,  உக்கிரசேனனை விடுவித்து, சாந்தீபமுனிவரிடம் பயின்று, 8 பட்டமகிஷிகளை மணந்து, ராஜாவாகி, பாண்டவர்களுக்கு உதவி,  திரௌபதிக்கு தக்கசமயங்களில்  உதவி,  போரில் பங்கேற்று, கீதையை உரைத்து, உலகின் சுமையை குறைத்து, அவதார முடிவில் உத்தவனுக்கு கீதோபதேசம் செய்தது வரை ஒரு நாள், ஒரு நிமிஷம் , அவன் சும்ம்மா இருந்ததாக,  நேரத்தை வீணடித்ததாக  சரித்திரமில்லை.  உண்மையில் காக்கும் தெய்வம்.  

கிருஷ்ணன் பிறக்கும்போதே  எங்கே எப்போது யார் வீட்டில் எவர் மகனாக பிறக்கவேண்டும் என்று முன்பே நிச்சயித்து எவர் அவனை மகனாக வேண்டும் என்று வேண்டினாரோ அவர் விருப்பத்தை பூர்த்தி செய்த தியாகி.

கட்டுண்ட மாயனாக தாயைத் திருப்தி செய்த மாயாவி.   ''மண்ணா  தின்றாய் , எங்கே  வாயைத் திற'' என்ற தாய் யசோதைக்கு   ''அறியாதவன் வாயில் மண்ணுக்கு  அர்த்தம் கற்பித்தவன்''  கண்ணன்.  அந்த சிறுவன்,   ''அரி  என்ற யாதவன் வாயில் மண்''  ணுலகம்''   காட்டியவன் .  கட்டுண்டபோதே  அதை ஒரு வியாஜ்யமாக 
வைத்து  குபேரன் மகன்களை  சாபத்தில் இருந்து விடுவித்தவன்.  அவன் எவ்வளவு தயா மூர்த்தியாக விளங்கினான் என்பது அவனால் மறைந்த ராக்ஷஸர்களுக்கும் அவன் அளித்த வைகுண்ட பதவி  மோக்ஷ ..  சாம்ராஜ்ய பதவி  ஒன்றே நிரூபணம் .  இப்படி ஒரே ஒரு கடவுள் நமக்கு போதுமே .  




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...