Wednesday, June 9, 2021

PESUM DEIVAM




 பேசும் தெய்வம் -- நங்கநல்லூர் -- J K SIVAN


33. மதமாற்றமா மனமாற்றமா?

நண்பர்களே, நான் எழுதும்போது என்னை அறியாமலே எழுத்துப் பிழைகள், எண்களில் தவறுகள் (1923 என்பது 2023ம் வருஷம் என்று ) நேர்ந்து விடுகிறது. என் எண்ணமெல்லாம் நான் எழுதும் விஷயத்தில் இருப்பதால், கை விரல்கள் வேகமாக எண்ணத்தை எழுத்தாக்குவதில் குறியாக இருக்கும்போது கண்களில் பட்ட பிழைகளை மட்டும் திருத்திவிடுகிறேன்.

இன்னொரு விஷயம், நான் எழுதுவது எப்போதும் பின்னிரவில், நள்ளிரவில், விடிகாலையில், ஏன் என்றால் அப்போது எனக்கு எந்த இடையூறும் இல்லை, என் எண்ணங்களை, சிந்தனை ஓட்டத்தை, எந்த ஒரு குறுக்கீடும் இன்றி, தங்கு தடையுமின்றி எழுத்தாக வேகமாக வடிக்க முடிகிறது. ஆகவே தயவு செய்து என் எழுத்துப்பிழைகளை லக்ஷியம் செய்யாமல் நீங்களே திருத்திப் படித்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை 83 வருஷ முதிய கண்ணில் பட்டதை நானே திருத்தி விட்ட பிறகு தான் அனுப்புகிறேன்.

திருவானைக்காவில் அம்பாள் அகிலாண்டேஸ்
வரிக்கு தாடங்கப் பிரதிஷ்டை ஆனபிறகு சில நாட்களில் மஹா பெரியவா அங்கிருந்து திருச்சி ஸ்ரீரங்கம் எல்லாம் சென்று தரிசனங்கள் செய்தபிறகு காவிரி தென்கரைக்கு விஜய யாத்திரை தொடர்ந்தது. கரூர், குளித்தலை, கிருஷ்ணராஜபுரம் மஹாதானபுரம் கிராமங்கள் அவர் காலடி படும் பாக்யம் பெற்றன.எண்ணற்ற பக்தர்கள் தங்கள் ஊரிலேயே மஹா பெரியவா தரிசனம் பெற்றதற்கு மகிழ்ந்து வரவேற்று பாதபூஜை, பிக்ஷா வந்தனம் விடாமல் செய்தா ர்கள். பூஜைகளில் கலந்து கொண்டார்கள்.
பிரசாதங்கள் பெரியவா கையால் பெற்றுக் கொண்டார்கள்.

அருகே இருந்த நெரூரில் தான் ப்ரம்மஞானி சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி இருக்கிறது. அங்கே அதிஷ்டானத்தில் தரிசனம் பெற சென்றார். சதாசிவ ப்ரம்மேந்திராவை அறியா தவர்கள் கூட அவரது க்ரிதிகளான மானஸ சஞ்சரரே, பிபரே ராமராசம், சிந்தா நாஸ்திகில , ஸ்மரவரம், துங்க தரங்கே கங்கே, ஸ்திரதா, ஆகிய பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். நேற்று இரவு கூட கேட்டுக்கொண்டு கூடவே பாடினேன்.
மஹா பெரியவா ஒரு வார காலம் நெரூரில் சதாசிவ ப்ரம்மேந்திரா அதிஷ்டானத்தில் தியானத்தில் தினமும் மனதார வெகுநேரம் கழித்தார். அதிஷ்டானத்தில் ஆராதனைகள் விடாமல் நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அருகே ஒரு சிவன் கோவில் ஸ்தாபிக்கவேண்டும் என்ற அபிலா ஷையை தெரிவித்தார். அவரது விருப்பங்கள் பக்தர்களால் உடனே நிறைவேற்றப் பட்டன. அது தான் மஹா பெரியவா.

நெரூரில் மஹா பெரியவா தங்கி இருந்தபோது ஒரு சம்பவம். 1923ம் வருஷம் ஜூன் மாதம் நடந்தது. யாரோ ஒரு பிராமண இளைஞன், கேரளவைச் தேர்ந்த ஒரு வசதியான குடும்பத் தில் பிறந்தவன் திருச்சி வந்ததன் காரணம் கிருத்துவ மதத்தில் சேருவதற்கு. அந்த இளைஞன் நன்றாக படித்த ஒரு பட்டதாரி. யோசிப்பவனும் கூட. இருந்தும் எவரது புத்திமதியோ தாக்கமோ, அவனை கிருத்துவ மதத்தில் ஆர்வம் கொள்ளச் செய்தது. அடிக்கடி கிருத்துவ பிரச்சார கூட்டங் களுக்கு சென்றான். ரசித்தான். அவனது நண்பர் கள் அவனை திருச்சி முனிசிபாலிடி தலைவர் ஸ்ரீ F G நடேசய்யரை சந்திக்க வைத்தார்கள்.

''தம்பி இதோ பாரப்பா, நான் இருபது வருஷங் களுக்கு மேலாக கிருத்தவ பாதிரியார்கள், பிரசாரகர்களுடன் பழகியவன். எனக்கு அந்த மதத்தைப் பற்றி உன்னைவிட நன்றாக தெரியும். நமக்கென்று ஒரு கோட்பாடு, நம்பிக் கை உள்ளது. நமது தாய் போன்ற ஹிந்து சனாதன தர்ம மதத்தை உதாசீனப்படுத்துவது தவறு. இந்த பாபத்தை செய்யாதே. நானே அந்த தவறை செய்ய இருந்தேன். நல்லவேளை தக்க சமயத்தில் என் தவறான பாதையை உணர்ந்து திருந்தினேன். நீயும் அந்த தவறை செய்யாதே'' என்றார் நடேசய்யர்.

இளைஞன் பிடிவாதக்காரன். மத மாற்றத்தில் தீவிரமாக இருந்தான்.

''சரி அப்பா, உன் எண்ணத்தில் நான் குறுக்கிட வில்லை. ஆனால் ஒரு வேண்டுகோள். இங்கே அருகே நெரூரில் நமது காஞ்சி காமகோடி பீடாதி பதிகள் வந்து தங்கியிருக்கிறார். நீ மதம் மாறு வதற்கு முன், கிருத்தவ மதகுருக்களை சந்திக் கும் முன்பு நமது பீடாதிபதியை ஒருமுறை அவசியம் சந்திக்கவேண்டும் என்பது எனது கோரிக்கை. என்னுடன் வாயேன் அழைத்துச் செல்கிறேன்.''

''ஆஹா உங்களுடன் வருகிறேன். அவரை சந்திக்க எனக்கு ஆக்ஷேபணை இல்லை ''

நெரூர் அருகே குழுமணி என்ற கிராமம் சென்றார்கள் . பெரியவா அங்கே தங்கி இருந்தார்.

( இந்த குழுமணி கிராமத்தை சேர்ந்தவர் தான் சேஷாத்ரி ஸ்வாமிகள் பக்தர் நாராயணஸ்வாமி சாஸ்திரிகள், அவர் எழுதிய ஸ்வாமிகள் சரித் திரம் புத்தகத்தை படித்த பின் தான் எனக்கு சேஷாத்ரி ஸ்வாமிகளைப் பற்றி ''ஒரு அற்புத ஞானி '' என்கிற புத்தகத்தை எழுத தோன்றியது. அந்த புத்தகம் வேண்டுவோர் என்னை அணுகலாம் 9840279080)

''ஆற்றங்கரையில் என்னை அந்த பையனோடு சந்தியுங்கள்'' என்று நடேசய்யருக்கு செய்தி அனுப்பினார் பெரியவா. ஆற்றங்கரையில் மஹா பெரியவா வருகைக்கு காத்திருந்தார்கள் இருவரும். சற்று நேரத்தில் மஹா பெரியவா வந்து சேர்ந்துகொண்டார்.

''உனக்கு ஏன் கிருத்துவ மத மாற்ற எண்ணம் தோன்றியது, காரணம் ஏதாவது உண்டா, அது விஷயமாக எனக்கு எல்லா விவரங்களையும் சொல்லு '' என்று கேட்டார் பெரியவா.
ஆற்றில் ஜலம் இல்லை. மணலில் வெகுதூரம் மூவரும் நடந்துகொண்டே பேசினார்கள். பையன் மனதில் இருந்ததையெல்லாம் கொட்டிவிட்டான் .

''ரொம்ப சரி, நமது ஹிந்து சனாதன தர்மம் புராதனமானது. மற்ற மதங்களின் வழி முறை களுக்கு எல்லாம் ஆதாரமானது. அடிப்படை யானது. தாய் மாதிரி. எதற்காக மற்ற மதத்தில் சேர விரும்புகிறாயோ, நீ எதை த்தேடி செல்கி றாயோ அது இங்கேயே விவரமாக நடை முறையில் வேறு ரூபத்தில் நமது ஹிந்து தார்மீக மதத்திலேயே இருக்கிறதே என்று விளக்கினார் மஹா பெரியவா.

அந்த இளைஞனின் சந்தேகங்களை போக்கினா ர். அன்று இரவு வெகுநேரம் பேசினார்கள்.

''நடேசய்யர், இன்னும் ரெண்டுநாட்களுக்கு இந்த இளைஞனை மடத்திற்கு அழைத்து வாருங்கள் என்று சொன்னார் மஹா பெரியவா.

அந்த ரெண்டு நாட்களில் அந்த இளைஞன் அடியோடு மாறிவிட்டான். அவன் மனதில் இருந்த வித்யாசங்கள் நீங்கி விட்டன. நமது தார்மீக கோட்பாடுகளை முற்றிலும் உணர்ந்து அறிந்து மகிழ்ந்தான். பெரியவா அவனுக்கு சில உபதே
சங்கள் செய்தார். மூன்றாம் நாள் காலை அந்த இளைஞன் மதமாற்ற எண்ணம் முற்றிலும் நீங்கி, கேரளாவில் தனது ஊரைப் பார்க்க போய் சேர்ந்தான்.


தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...