Friday, June 18, 2021

PESUM DEIVAM

 


பேசும் தெய்வம் -   நங்கநல்லூர்  J K  SIVAN

39.   ஞானப்பிழம்பின்  ஞாபக சக்தி

மஹா பெரியவா மற்றவர்களை விட வேறுபட்டவர் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். நாம்  எதெல்லாம்  கேட்கிறோமோ, அறிகிறோமோ, அதெல்லாம் ஒரு காது வழியாக உள்ளே சென்று, எங்கும் தங்காமல்,  அடுத்த காது வழியாக வெளியே வந்து காற்றில் கலந்து மறைகிறது.  அதனால் தான் நாம் திரும்ப திரும்ப ஒவ்வொன்றையும் கற்று மறக்கிறோம்.  மஹா பெரியவா அப்படியல்ல.  எந்த சின்ன விஷயமா னாலும் அவர் காதுக்கெட்டினால், கண்ணில் பட்டால், அதை உள்வாங்கி, அலசி,ஆராய்ந்து அதில் உள்ளடங்கிய விஷயத்தை கிரஹித்துக் கொள்வார். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதில் மெய்ப்பொகுள் கண்டு உள்ளே  பதிய வைத்துக் கொள்பவர்.  அதற்கு நுண்ணறிவு, பொறுமை, ஈடுபாடு, ஆர்வம், ஞானப்பசி அனைத்தும் தேவை, அதெல்லாம் அவரிடம் எப்போதும் நிரம்பி இருக்குமே.

எங்கெல்லாம் பிரயாணம் சென்றாலும் அந்த ஸ்தலங்கள், அங்கு சந்தித்த மக்கள் அனைவரையும்  நினைவில் நிறுத்திக் கொள்ளும் சக்தி வாய்ந்தவர், ஒருதரம் மனதில் பதிந்தது மறக்கவே மறக்காது.நூறு வருஷங்கள் இப்படி அந்த தவ சீலர் வாழ்ந்தார். தவ வலிமை, மௌனம், தனிமை , பக்தி, புலனடக்கம், தியானம், காருண்யம், ஞானப்பசி  இதெல்லாம் அவரை ஜகத் குரு என்ற பட்டத்துக்கு தகுதியானவராக காட்டியது.  அந்த பீடத்திற்கு அவரால் பெருமை ஓங்கியது.

நமது ஹிந்து சனாதன தர்ம வழி பன்னெடுங்காலமாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே  கடல்கடந்து பல தேசங்களில் பரிமளித்து வந்தது.   ஜாவா பாலி தீவுகளில் நமது கலாச்சாரம், பண்பாடு, பக்தி  எல்லாம் வேரூன்றி இருந்தது. இப்போது அந்த தீவுகள் ஒன்று சேர்ந்து இந்தோனேசியா எனப்படுகிறது.   அங்கே வேரூன்றி இருந்த ஹிந்து கலாச்சாரம் பற்றி ஒரு புத்தகத்தை  ஸ்வாமிகள் படித்திருந்தார்.  2000 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தின் பெயர்  Raffle’s History of Java.’ அதில்  இந்தோனேசியாவில் பல நூற்றாண்டுகள் முன்பே  விநாயகர், பரமேஸ்வரன், அம்பிகை,  விஷ்ணு கோவில்கள் நமது தமிழகத்தில்  இருப்பது போலவே   இருந்து  மக்கள் வழிபட்டு வந்தனர்  என்பதை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.  இந்த  ஆசிரியர்  1800  களில்    ஜாவா தீவுகளுக்கு ஆங்கிலேய கவர்னராக இருந்தவர்.  அவர் தான் சிங்கப்பூருக்கும் வெள்ளையர்களின் அதிகாரி.  சிங்கப்பூரில்  எங்கு பார்த்தாலும்  RAFFLES   என்கிற பெயர்  காணப்படுவதே இவர் ஞாபகமாகத்தான்.  STAMFORD  RAFFLES  தான்  மேலே சொன்ன புத்தகம் எழுதியவர்.  அதிர்ஷ்ட வசமாக  20 வருஷங்களுக்கு  முன்பு நான் சிங்கப்பூரில் இருந்தபோது இந்த புத்தகம் எனக்கும் கிடைத்தது.  படித்திருக்கிறேன் அந்த புத்தகம் பற்றி இன்னொரு பதிவில் சொல்கிறேன்.   RAFFLES  படம்  இணைத்திருக்கிறேன்.

இந்தோனேசியாவில்  காலப்போக்கில் ஹிந்து சைவ வைணவம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இஸ்லாம்  பரவி தேசிய மதமாகிவிட்டது.

காஞ்சி மடத்தில் தன்னைப் பார்க்க வரும்  தென்கிழக்கு ஆசிய  வெளிநாட்டவரிடம் மஹா பெரியவா அங்கெல்லாம் நமது கலாச்சாரம் பண்பாடு எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றி விசாரிப்பார்.  

முப்பது வருஷங்களுக்கு முன்பு  ஒரு முறை  ஒரு கலாசாரக்குழு இந்தோனேசியாவில் இருந்து சென்னை வந்தது.  அவர்கள் ராமாயண  மஹாபாரத  நாட் டிய நாடகம் நிகழ்த்தினார்கள்.  அவர்களுடைய முயற்சியை மெச்சி மஹா பெரியவா அதில்  பங்கேற்ற ஒவ்வொருவரையும்  கௌரவித்து,  பரிசுகள் கொடுத்து  ஆசிர்வதித்தார்.   அந்த  குழு  நடத்துனர்  மஹா பெரியவா படம் கேட்டு வாங்கிக்  கொண்டார்.    மடத்தின் சார்பாக  ஸ்ரீ  K.G.  நடேச சாஸ்திரிகள் பரிசுகளோடு அவர்களை சந்திக்க அனுப்பப்பட்டார்.  சாஸ்திரிகள் மைலாப்பூர்  வெங்கடரமணா வைத்தியசாலை ஆசிரியர். சிறந்த சமஸ்க்ரித வித்வான்.  அவர் படமும் இணைத்திருக்கிறேன்.

இந்தோனேசிய கலாச்சார  குழுவினர்  மஹா பெரியவாளை  இந்தோனேசியாவிற்கு வருகை தர வேண்டினர்.  மஹா பெரியவா   பாரத தேசம் தாண்டி  கடல் கடந்து பிரயாணம்  செய்வதில்லை.    தென்கிழக்கு ஆசிய  நாடுகளில் எங்கெல்லாம் சைவ வைணவ பௌத்த மதம்  எவ்வளவு காலமாக, எவரால்  வேரூன்றி இருக்கிறது என்கிற சரித்திரம்  முழுதும்   பெரியவா  ஆராய்ச்சி செயதிருப்பதை அறிந்த இந்தோனேசியா குழுவினர் ஆச்சர்யம் அடைந்தனர்.

பெரியவாளின் தென் கிழக்கு ஆசிய  வெவ்வேறு ஸ்தலங்களில் உள்ள  ஹிந்து மத ஸ்தாபன விவரங்கள் பற்றி மகா பெரியவாளுக்கு இருந்த ஆர்வத்தை அறிந்து  பிரபல  சுற்றுலா  பயண ஏற்பாடுகள் செய்யும் நிறுவனம்  தாமஸ் குக்  நிர்வாகிகள்  அவர்களிடமிருந்த பல வித  குறிப்புகளை, படங்களை,  விவரங்கள் அடங்கிய புத்தகங்களை  மஹா பெரியவாளுக்கு சமர்ப்பித்து அவர்  வெளி நாட்டு பயணம் மேற்கொண்டால் சகல ஏற்பாடுகளும் தாங்களே  செய்து தருவதாக கூறினார்கள்.

1924ல்  மஹா பெரியவா  புதுக்கோட்டை விஜயம் செய்யும்போது அந்த பகுதியில் இருந்த சித்தன்னவாசல், நார்த்தாமலை, குடுமியான் மலை, திருக்கோகர்ணம், திருமயம் ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று  பார்வையிட்டார்.

சித்தன்ன வாசல் அறியாதவர்களுக்காக ஒரு சில வார்த்தைகள்.

சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்  புதுக்கோட்டை மாவட்டத்தில், உள்ள 7-8ம் நூற்றாண்டு  சமணர் ஓவியங்கள்.  
அஜந்தாவில் போலவே இங்கும்  மூலிகைகளால் வண்ணம் தீட்டப்பட்ட  1000 வருஷத்துக்கும் முற்பட்ட ஓவியங்கள்.  புத்துக்கோட்டை -அன்னவாசல் செல்லும் வழியில் சுமார் 16 கி.மீ.தூரத்திலுள்ளவை.  சுமார் 70 மீட்டர் உயரமே உள்ள இக்குன்றுகளின் மேல் சமணர்களின் படுக்கையும், தவம் செய்யும் இடமும், பல இடங்களில் குடைவறைகளும் காணப்படுகின்றன.அருகில் உள்ள ஏலடிப்பட்டம் என்ற இடத்தில் சமணர்களின் படுக்கைகளும், தமிழ் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. அறிவர் கோயில் எனப்படுகின்ற சமண கோயில் ஒன்றும் இங்குள்ளது.


தமிழகத்தில் கற் கோயில்களையும் - குடவரைக் கோயில்களையும்  முதலில்  கட்டியவர் பல்லவ ராஜா,
 மகேந்திரவர்மன்தான்.  சமண மதத்திலிருந்து சைவ மதத்துக்கு மாறியவர். சித்தன்னவாசல் சமண மத மையமாக இருந்ததை, இங்கு உள்ள கல்வெட்டுகளும்   எங்கும்  காணும்  பழைமையான சமணச் சின்னங்களும் வெளிப்படுத்துகின்றன.

மலையின் மேல் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மலை மேல்  ஏழு  சமணர் படுக்கைகள் காணலாம்.  தலையணைபோல் மேடாக  உள்ளது. தாழ்வாரம்  மாதிரி உள்ளது குகை. பாறையில் ஆறு அங்குல ஆழத்துக்கு வழவழப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்தப் படுக்கைகளில்தான் சமண முனிவர்கள் படுத்து உறங்கினார்களாம். பாறை படுக்கைகளில் பிராமி எழுத்தில் எழுதப்பட்ட தமிழ் மொழி கல்வெட்டு உள்ளது. கி.பி. 8-9ம் நூற்றாண்டுகளுக்குரிய தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட சமணத் துறவிகளின் பெயர்களும் அதில் உள்ளன. இந்தப் பகுதி `ஏழடிப்பட்டம்' என்று அழைக்கப்படுகிறது.

 மகேந்திரவர்மன், ஓவியத்திலும் சிற்பக்கலையிலும்  பயிற்சி பெற்றவன். `சித்திரகாரப்புலி' என்று  புகழப்பட்டவன்.   `தட்சிண சித்திரம்' என்னும் ஓவிய நூலுக்கு இவர் உரை எழுதியவன். 

மஹா பெரியவா  சித்தன்ன வாசல் எல்லா ஓவியங்களையும்  போட்டோ எடுக்கச் சொல்லி  அ வற்றை ஆராய்ந்தவர்.''சித்தானாம்  வாஸஹ''  சித்தர்கள் வசிக்கும் இடம் தான் பிற்காலத்தில் உருமாறி சித்தன்ன வாசல்  ஆகியது.

தொடரும்   




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...