Thursday, June 24, 2021

RAMANAR

பகவான் ரமணர்   --  நங்கநல்லூர்  J K  SIVAN 


''பாட்டுக்கு பாட்டு''

ரமணர்  ஒரு  அபூர்வ  சன்யாசி.   அவருக்கு முன்பும்  அவருக்கு பின்பும்  எவரும் அவரைப் போல் நான் பார்க்க வில்லை, நானல்ல எவருமே அவர் போல் ஒரு ஞானியை உணரவில்லை.   ஸ்வயம்பு அவர்.

சித்திரை பௌர்ணமி  விசேஷமானது.  அருணாசலத்தில் அமைதியான சூழ்நிலையில், ஆஸ்ரமத்தில் ஒரு இரவு..   வழக்கம்போல் தயாரான சுவையான உணவருந்திய பிறகு   பக்தர்கள் எல்லோரும் எந்த வித்யாசமுமில்லாமல்  பகவானைச் சுற்றி சூழ்ந்து  உட்கார்ந்து கொண்டனர். மேலே பால் நிலவு காய்கிறது. அது தான் வெளிச்சம்.  முகம் தெரிகிறதே அது போதும்.  சிலர்  அன்று   தாமதமாக இரவு உணவை உண்டதால் எல்லோரும் அநேகமாக   களைப்பாறிக்கொண்டிருந்தார்கள் எனலாம்.  பெரிய  ஹால்  மாதிரி. சில்லென்று  காற்றோட்டமான இடம். ஜன்னல் கதவு எதுவும் கிடையாது. மேலே கூரை.    தரையில் மெழுகிய தரை.  நிறைய பேர் சௌகர்யமாக சாய்ந்துகொண்டும் , படுத்துக்கொண்டும்  உட்கார்ந்து கொண்டும்  இருந்தபோது   சோமமசுந்தர சுவாமி  என்ற  ஒரு பக்தர் உரக்க ஒரு பாடல் பாடினார்.  அது  ஒளவைக் கிழவி எழுதிய அருமையான எல்லோருக்கும் தெரிந்த பாடல்.  நல்வழியிலிருந்து\\


பாவம் ஒளவைக்கு நல்ல பசி. உணவு கிடைக்கவில்லை  வயிறு எங்கே  எனக்கு  உணவு என்று அவளை தொந்தரவு  பண்ணுகிறது.  அப்போது  பாடுகிறாள்: 

''ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இரு நாளைக்கு ஏலென்றால் ஏலாய்
ஒரு நாளும் என் நோவு  அறியாய்
இடும்பை கூர்என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது''

''ஏ, என்னுடைய  அடம் பிடிக்கும்  வயிறே!  நான் சொன்னதை நீ கேட்பதே இல்லை.  இன்று ஒருநாள் எனக்கு உணவு கிடைக்கவில்லை  நான் என்ன செய்வேன்?  எங்கு  தேடியும் கிடைக்கவில்லையே. அதை உணர்ந்து கொஞ்சம் பொறுத்துக் கொள்  இன்று சாப்பாடு வேண்டாம் என்றால்  நீ கேட்பதில்லை.   அடே வயிறே இதோ பார் ஒரு  மகராஜன் நல்ல  சாப்பாடாக நிறைய கொடுத்திருக்கிறான்.  ஒரு ரெண்டு மூன்று நாளைக்குச் சேர்த்துச் சாப்பிட்டு விடு, '' காற்றுள்ளபோதே  தூற்றிக்கொள்''  என்றாலும் அவ்வாறு  நீ  செய்வதில்லை.   சீ  எனக்கு    நீ மிகவும் துன்பம் தருகிறாய். உன்னோடு வாழ்வது என்பது முடியாத காரியமாக இருக்கிறது ''

இந்தப் பாடலை  சோமசுந்தர சுவாமி  தனக்கு தெரிந்த ராகமாக  இழுத்து இழுத்து  பாடினார்.  இதைக்  கேட்டுக் கொண்டிருந்த   பகவான்  ரமண மகரிஷி, மற்றவர்கள் போல் தானும் அதை ரசித்ததோடு நிற்க வில்லை.  வயிறு  ஒளவைக்கு பதில் சொல்வது போல் ஒரு பாட்டு உடனே பாடினார். 


''ஒரு நாழிகை வயிறு எற்கு  ஓய்வு ஈயாய் நாளும்
ஒரு நாழிகை என்பது ஓயாய்
ஒரு நாளும் என்னோ அறியாய்
இடும்பை கூர்என் உயிரே உன்னோடு வாழ்தல் அரிது''

பாடலின் பொருள் இதுதான்:

''ஓ,   என்  உயிருக்கு உறைவிடமான மனிதனே!   நான் உன் வயிறு பேசுகிறேன்.  ஏனடா எனக்கு  நீ  ஒரு மணி நேரம் கூட   ரெஸ்ட் கொடுப்பதில்லை? எதையாவது   வாயில் அரைத்து, என்னை நிரப்புகிறாயே?    உன்னைப்போல் எனக்கும் ஒய்வு வேண்டாமா?   அடப்பாவி,  ஒரு  அரைமணி நேரம் கூட  நீ   எதையாவது  சாப்பிடுவதை  ஏன்   நிறுத்த மாட்டேன் என்கிறாய்?   ஒரு நாள்  ரெண்டு நாளா, ஐம்பது வருஷம், அறுபது எழுபது வருஷம் என்று  அல்லவா உன் தொந்தரவு.    என்  கஷ்டம் கொஞ்சமாவது  புரிகிறதா உனக்கு?  என் துன்பம்  புரிவ தில்லை. எனக்குத் தொல்லை தரும் உன்னோடு வாழ்தல் அரிது  என்று நானல்லவோ  பாடவேண்டும்?''

எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.  பகவான்  இந்தப் பாடல் எழுந்த சூழ்நிலை பற்றிக் கூறும்போது, ''விளையாட்டுக்காக எழுதிப் பாடினேன்'' என்றார் மகரிஷி. சிந்தித்துப் பார்த்தால் இது விளையாட்டாகப் பாடிய பாடலாகவா தோன்றுகிறது?  உபவாசம் இருப்பது, உணவின் மேல் பற்றில்லாமல்  ஏதோ பசிக்கு தேவையான உணவு மட்டும் கொஞ்சம்  அருந்துவது,  ருசி பாராமல் இருப்பது.   நாக்குக்கு  அடிமையாகாமல் இருப்பது  உயர் தத்வங்கள் அல்லவோ  இதில் பொதிந்து இருக்கிறது.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...