Saturday, June 19, 2021

DATHTHATHREYA

 


 தத்தாத்ரேயருக்கு யார்  குரு? --  நங்கநல்லூர் J  K  SIVAN

இந்த பதிவு பலமுறை  வெளியிட்டிருந்தாலும்  இப்போது  பாகவதம் எழுதும்போது ஸ்ரீ கிருஷ்ணன்  உத்தவனுக்கு தத்தாத்ரேயர் பற்றி  குறிப்பிடுகிறார்  என்பதால் அதன் முழு விபவரமும்  அந்த இடத்தில் எழுத வாய்ப்பில்லாததால் தனியாக  மீண்டும் பதிவிடுவதாக சொன்னேன் அல்லவா?. அது தான் இது.

''சில  கோவில்களில்  தத்தாத்ரேயர் சந்நிதி உண்டு.  பிரம்மா, விஷ்ணு, சிவன்  எனும்  மூவரும் ஒன்றானவர் தான்  தத்தாத்ரேயர் உருவம்.    த்ரிமூர்த்தி . பரமேசுவரன் அத்ரி முனிவர் அனசூயா ரிஷி தம்பதிகள்   மகனாக  சுசீந்திரத்தில்  அவதாரம் செய்தது தான் தத்தாத்ரேயர்.    ஸ்தாணுமாலயன் அம்சம்.  ஸ்தாணு : ஒளி  ஸ்தம்பமான சிவன்,  மால்: விஷ்ணு, ,  அயன்: ப்ரம்மா.

' 'தத்தாத்ரேயா' ' '' தத்தா ''  'தத்தகுரு' ' தத்தாத்ரேயா என  பெயர்கள் கொண்டவர்.  ஒரு  ரிஷியாக, யோகியாக வர்ணிக்கப்படுபவர்.  மகாராஷ்டிரா,  ஆந்திர பிரதேசங்களில்  மூன்று தலைகள்  ஆறு கைகளுடன் உள்ளார்.  விஷ்ணுவின் சங்கு , சுதர்சன சக்ரம், பிரம்மாவின் ஜபமாலா,  சிவனின் திரிசூலம் , டமருகம் போன்றவை  ஆறு கைகளில் காணலாம்.. வனத்தில் சந்நியாசி உடையில்  தியான யோகியாக ,நான்கு நாய்கள் மற்றும் ஒரு பசுவோடு  நிற்கும்  படங்கள் நிறைய  பார்த்திருக்கிறேன்.நாய்கள் நான்கு வேதங்கள் என் பதுண்டு.  பிராணிகளிடம் அன்பு  செலுத்தவேண்டும் என்று உபதேசிக்க. எனக்கு மிகவும் பிடித்த  ராஜா ரவி வர்மா ஓவியத்தில் நீங்களும் தத்தாத்ரேயரை தரிசிக்க  இணைத்திருக்கிறேன். 

ஆதி குரு, ஆதிநாத், யோகாச்சார்யன் என்று கோடானுகோடி ஹிந்துக்கள் வழிபடும் குரு தத்தாத்ரேயர். சிறுவயதிலேயே துறவியாக வெளியே கிளம்பி மஹாராஷ்ட்ரா, குஜராத், வட கன்னட பகுதிகளில் தேசாந்திரியாக காணப்பட்டார். கந்தமாதன சிகரத்தில் தவம் செய்தார் என்கிறார்கள். கிர்னார் மலைமேல் அவர் காலடி சுவடு இருக்கிறதாம். அவதூதர்.

தெற்கு மகாராஷ்டிரா, காசியில்,  ஹிமாச்சல கோவில்கள் சிலவற்றில்  ஒரு   தலை, இரண்டு கைகள், நான்கு நாய்கள் மற்றும் ஒரு பசுவோடு  இருக்கும் சிலைகள் படங்கள் உண்டு.

தத்தாத்ரேயர் மூலம்  நல்ல  பண்புகள் ,  எளிய வாழ்க்கை,  கருணை,   அனைத்து உயிர்களிடம்  அன்பு.  பக்தி இவற்றை உபதேசம் பெறுகிறோம்.   'தத்தாத்ரேயர் சாந்தி மந்திரம்'  மனஅமைதி உண்டாக, திருஷ்டி, தீவினைகள் விலக ஜபிக்கிறோம். .

ஹிந்து சனாதன வழிபாட்டில் நமக்கு  கடவுளை  வழிபடுவது மனதுக்கு  சந்தோஷத்தை  தருகிறது.  கவலைகளை தீர்க்கிறது.  கரோனா  விரைவில் நம்மை விட்டு நீங்க வேண்டும்.  நீங்கிவிடும் கவலை வேண்டாம்.  ஒரு தன்னம்பிக்கை  மெதுவாக உள்ளே வளர்கிறது.  எங்கிருந்தோ ஒரு தைர்யம் நெஞ்சுக்குள் உருவாகி நம்மால் இந்த  துன்பத்திலிருந்து விடுபட முடியும்.  கடவுள் துணை உண்டு என்று ஒரு  புத்துணர்ச்சி பிறக்கிறது.  இதெல்லாம் விட  அந்த கடவுளை தேடும் முயற்சி வலுப்  பெறுவதால்  பார்ப்பவர்களில்,  பார்ப்பவைகளில்  தெய்வத்தைக்  காண வழி செயகிறது.   பிற உயிர்களிடம் அன்பு மேலிடுகிறது. அப்புறம் என்ன?.   உள்ளத்தில் பக்தி நிரம்பியவுடன் அன்பே சிவம்.  ''தான், நான் ''  அகன்று ''அவன்'' நிரம்பி விடுகி றானே.  அப்படி அவனை அடைய இன்னொருவர் உதவியும் தேவை.

ஒரு சமயம்  மும்மூர்த்திகளும் கற்புக்கரசி அனசூயையின் பெருமையை நிலைநாட்ட ஒரு நாடக மாடினார்கள்.   அதிதிகளாக அனசூயை ஆஸ்ரமம் வந்து பசிக்கிறது என்றார்கள். அத்ரி வெளியே எங்கோ போயிருந்த சமயம்.  

'' இருங்கள்,  இதோ நொடியில்   உணவு தயார் பண்ணுகிறேன்'' என்று அனசூயை உணவு தயாரித்தாள் . உணவு ரெடியாகிவிட்டது. இலையின் முன்னே அமர்ந்த மும்மூர்த்திகள்

''அனசூயா, சொல்ல மறந்துவிட்டோம், நாங்கள் பரிசுத்தமாக உணவருந்துபவர்கள். எனவே நீ எந்த வித ஆடையுமின்றி எங்களுக்கு உணவு பரிமாறு ''

 அனசூயை திடுக்கிட்டாள். அவளுக்கு உடனே தெரிந்து விட்டது. வந்தவர்கள் வெறும் சாதாரண அதிதிகள் இல்லை.  தன்னைச்  சோதிக்க வந்தவர்கள். அதிதிகள் வார்த்தையை தட்டுவதோ, அவர்களை அவமதிப்பதோ, பாபம் ஆச்சே.

''ஆஹா அப்படியே செய்கிறேன் அதிதி ஸ்வாமிகளே''

ஆடையின்றி வருமுன் அனசூயா தனது கையிலிருந்த பூஜா பாத்திரத்தின் தீர்த்தத்தை அவர்கள் மேல் தெளித்து '' நீங்கள் சிறிய குழந்தைகளாக கடவது'' என்று வேண்டுகிறாள்.     குழந்தைகளாக மாறிவிட்ட அந்த மும்மூர்த்திகளும் அனுசூயா ஆடையின்றி பரிமாற சௌகர்யமாக அவள் எதிரில்  உட்கார்ந்து நன்றாக சாப்பிட்டன!

வெளியே இருந்து திரும்பிய அத்ரி தனது மனைவி அனுசூயா சாப்பிட்ட அந்த மூன்று சிறு குழந்தைகளோடு விளையாடுவதை கண்டு அதிசயித்தார். தனது ஞான திரிஷ்டியால் நடந்ததை அறிந்தார். த்ரிமூர்த்திகளை வணங்க அவர்களும் தம் சுய உருக்கொண்டு அவரை ஆசிர்வதித்து அனசூயையின் பக்தி, கற்பை சிலாகித்து போற்றி அருள் பாலித்தார்கள். அவர்கள் வேண்டுதலின் படியே மூவரும் ரிஷி தம்பதிகளின் குழந்தை களானார்கள். மூவரும் ஒரே உடலுடன் மூன்று சிரங்களுடன் தத்தாத்ரேயராக பிறந்தனர். வடக்கே ஸ்ரீ ஷீர்டி
ஸாயீ பாபா தத்தாத்ரேயரின் அம்சம் என்கிறார்கள்.

வாழ வழிகாட்ட  சீராக  முறையாக,  நெறியோடு  வாழ   நமக்குத்   தேவையானவர் ஒரு  குரு.  மிக  அவசியம். குரு  தான்  ஒரு பக்தனுக்கும்  இறைவனுக்கும்  இடையே  உள்ள  பாலம்.

ஸ்ரீ கிருஷ்ணன் உத்தவருக்கு உபதேசம் செய்கையில் மஹாராஜா யதுவுக்கு ஒரு சமயம் தத்தாத்ரேயர் தனது குருமார்களை பற்றி விவரித்ததை நினைவு கூறுகிறார்.

''அவதூதர் தத்தாத்ரேயர் பற்றி உன் வாயால் கேட்க வேண்டும் கிருஷ்ணா ''


கிருஷ்ணன் உத்தவருக்கு சொன்னது  தான் இது:  அடுத்த பதிவிலிருந்து  தத்தாத்ரேயரின்  24 குருமார்கள் யார் என்று அறிவோம்:

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...