Sunday, June 13, 2021

NARAYANEEYAM



 நாராயணீயம் -   நங்கநல்லூர்   J K  SIVAN  --

2ம்  தசகம்.   


சுந்தர ரூபம்  

நாரயணீயம்  எழுத ஆரம்பித்ததிலிருந்து  எனக்குள் ஒரு புத்துணர்ச்சி.  எத்தனை  நல்லிதயங்களை இது மகிழ்விக்கிறது. அத்தனை புண்யமும் எனக்கே  என்ற பெருமை என்னை  ஊக்குவித்து, இன்னும்  பத்து வருஷம் இளையவனாக்கி விட்டது.  இன்னும் அதிக நேரம்  கம்பியூட்டர் முன்னால் உட்கார ஒரு அமானுஷ்ய சக்தியை உன்னி கிருஷ்ணன் கொடுக்கிறான்.

सूर्यस्पर्धिकिरीटमूर्ध्वतिलकप्रोद्भासिफालान्तरं
कारुण्याकुलनेत्रमार्द्रहसितोल्लासं सुनासापुटम्।
गण्डोद्यन्मकराभकुण्डलयुगं कण्ठोज्वलत्कौस्तुभं
त्वद्रूपं वनमाल्यहारपटलश्रीवत्सदीप्रं भजे॥१॥

சூர்யஸ்பர்தி4 கிரீடம் ஊர்த்4வதிலக ப்ரோத்3பா4ஸி ப2லாந்தரம்
காருண்யாகுல நேத்ரமாத்ர ஹஸித்தோல்லாஸம் ஸுநாஸாபுடம்|
க3ண்டோ3த்3யன் மகராப4 குண்ட3லயுக3ம் கண்டோ2ஜ்வலத் கௌஸ்துப4ம்
த்வத்3ரூபம் வனமால்ய ஹாரபடல ஸ்ரீவத்ஸ தீ3ப்தம் ப4ஜே || (2 – 1 )

நாம்  இதுவரை எத்தனை கிருஷ்ணன் படங்கள் விக்ரஹங்கள்  பார்த்தவர்கள்.? எங்கே  கிருஷ்ணனை  வர்ணி பார்க்கலாம் என்றால்  நம்மால் முடியுமா? சூர்தாஸ் பிறவிக் குருடர். அவர் மனதில் கிருஷ்ணன் எப்படி இருப்பான், இருந்தான், என்று கேட்டால் புட்டு புட்டு வைக்கிறார் அவரது  சூர் சாகரம் ஸ்லோகங் களில்.  அதேமாதிரி தான்  சமீபத்தில் ரஸ்கான்  என்கிற பாரசீக முஸ்லீம்  பாடல்களில் இன்னொரு சூர்தாஸைக் கண்டேன்.  என்ன ஒரு இணையற்ற கிருஷ்ண பக்தி!    மதுரா சென்றால் கட்டாயம் அவரது சமாதியில் சாஷ்டாங்கமாக விழவேண்டும்.  அவர்கள் மனக்கண்ணால், திவ்ய ஸ்வரூபத்தை பார்த்தவர்கள்..அதேபோல்  நாராயண பட்டத்ரியால் தான் கண்ணால் பார்த்த  கிருஷ்ணனை  வர்ணிக்க முடிகிறது. அதை நாமும் அவரது மனோபாவத்தில் கண்டு ரசிப்போம்.

கிருஷ்ணனின் கிரீடம் சூரியன் மாதிரி ஒளி வீசுகிறது. அவனது நெற்றியில் உள்ள திலகம் அவன் அழகை இன்னும் எடுப்பாக காட்டுகிறது.  அவன் கண்களை எப்படி வர்ணிப்பது?  கருணைக்கு   என்று ஒரு உருவம் இருந்தால் அது தான்  அவன் கண்கள்.   கண்ணிலேயே புன்னகை புறப்படுகிறது.  அளவெடுத்து  பொருத்தின  அழகான  மூக்கு. குருவாயூரப்பனுக்கு.  காதுகளில் அவன் அணிந்திருக்கும் மகரகுண்டலங்கள் கன்னத்தில் பளபளவென்று  பிரகாசிக்கிறது.  மார்பில் தான் எத்தனை விதமான மாலைகள் அணிந்திருக்கிறான்.  வனமாலை, முத்து மாலை,  கௌஸ்துபம், துளசி, இயற்கையாகவே உள்ள ஸ்ரீ வத்சம் . அடடா.  உண்ணி கிருஷ்ணா, உன்னை  நாளெல்லாம் பார்த்துக்கொண்டு கண் கொட்டாமல் இங்கேயே நிற்கலாமென்றால் ஜருகண்டி.... வாஸ்தவம்... நியாயம்  தான்.,  என்னைப்போல்   மற்றவர்களும்  பார்க்கவேண்டும் அல்லவா?

केयूराङ्गदकङ्कणोत्तममहारत्नाङ्गुलीयाङ्कित-
श्रीमद्बाहुचतुष्कसङ्गतगदाशङ्खारिपङ्केरुहाम् ।
काञ्चित् काञ्चनकाञ्चिलाञ्च्छितलसत्पीताम्बरालम्बिनी-
मालम्बे विमलाम्बुजद्युतिपदां मूर्तिं तवार्तिच्छिदम् ॥२॥

கேயூராங்க3த3 கங்கனோத்தம  மஹாரத்னாங்கு3லி யாங்கித
ஸ்ரீமத்3பா3ஹு சதுஷ்க ஸங்க3த க3தாச2ங்கா2ரி பங்கேருஹாம் |
காஞ்சித் காஞ்சன காஞ்சி லாஞ்சித லஸத் பீதாம்ப3ராலம்பி3னீம்
ஆலம்பே3 விமலாம்பு3ஜ த்3யுதிபதா3ம் மூர்த்திம் த்வார்த்திச்சி2த3ம் || ( 2 – 2)
 
''என்னப்பா, ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை எழுத்தில் வடிக்க  முடியவில்லையடா.. உனது தோள்களில் வளையங் களாக அணிந்த ஆபரணம்,  கை  மணிக்கட்டுகளில், முன் கைகளில்,  விரல்களில், மோதிரங்கள்,  அவற்றில் தான் எத்தனை வண்ண  வண்ண ரத்தினங்கள், முத்துக்கள், கற்கள்,  உன் கைகளின் அழகால் அவற்றிற்கு தான் அழகு. கண் குளிர காண  உனது ஒரு கை  போதாது என்பதால் தான்  நான்கு கரங்களோ? ஒவ்வொன்றிலும் எவ்வளவு அழகு, கண்ணைக்   கவரும் ஆபரணங்கள். போதாததற்கு   கௌமோதகி எனும்  கதாயுதம்,  பாஞ்சஜன்யம் என்ற வெள்ளையாக கண்கூசும்  சங்கு, பளபளவென்று மின்னும்  சுதர்ஸனசக்ரம்,  மென்மையான அன்றலர்ந்த   தாமரைப் பூ.   அப்படியே  உன்னை மெதுவாக  மேலிருந்து கீழ் வரை பார்க்கும்போது உன் இடையில் காணும்  தங்க அரை ஞாண் , அரணாக்கயிறு, சென்னை பாஷையில்  அண்ணாகவுறு  அதையே  belt  மாதிரி உபயோகித்து நீ  உடுத்துக் கொண்டிருக்கிற  மஞ்சள் பட்டு பீதாம்பர வஸ்திரம். என் பார்வை உன் திவ்ய  திருப் பாதங்களில் பட்டுவிட்டது. அடடா, பாதமா, தாமரைப்பூவா?  இதுவா எண்ணற்ற கோடானுகோடி ரிஷிகள், முனிவர்கள், பக்தர்கள், தேவாதி தேவர்கள் வணங்கும் அற்புதமான திருவடிகள்.  இது வல்லவோ  எல்லா  துன்பம், துக்கம், துயரம் எல்லாவற்றையும் போக்குகிறது.  இப்படிப்பட்ட உன் திருமேனியை முழுதும் மனதால் காண  நான் பாக்கியசாலி, அப்படியே  உன் திருவடியில் விழுந்து வணங்குகிறேன். (2 -2)

यत्त्त्रैलोक्यमहीयसोऽपि महितं सम्मोहनं मोहनात्
कान्तं कान्तिनिधानतोऽपि मधुरं माधुर्यधुर्यादपि ।
सौन्दर्योत्तरतोऽपि सुन्दरतरं त्वद्रूपमाश्चर्यतोऽ-
प्याश्चर्यं भुवने न कस्य कुतुकं पुष्णाति विष्णो विभो ॥३॥

யத் த்ரைலோக்ய மஹீயஸோSபி மஹிதம் ஸம்மோஹனம் மோஹனாத்
காந்தம் காந்தி நிதா4னதோSபி மது4ரம் மாது4ர்ய து4ர்யா த3பி|
சௌந்த3ர்யோத்தரதோSபி ஸுந்த3ர தரம் தத்3ரூப மாச்’சர்யதோSபி
ஆச்’சர்யம் பு4வனே ந கஸ்ய குதுகம் புஷ்ணாதி விஷ்ணோ விபோ4 || (2 – 3)
 
''நான் ஒரு கேள்வி கேட்கிறேன்?  இந்த மூவுலகங்களிலும் பூஜிக்கப்படும்  மிக உன்னதமானது எது?   எல்லாவற்றை யும் விட,
அழகான, காந்த சக்தி கொண்ட  இன்பம் வாரி வாரி தருவது, ஒளி மிக்கது, ஆச்சர்யமாக மனதை சுண்டி இழுப்பது, அபூர்வமானது,  மோக்ஷம் தருவது,  என்னப்பா, குருவாயூரா?,  அது உண்ணி கிருஷ்ணா  உன்னுடைய சாக்ஷாத் திவ்ய சுந்தர ரூபமான உருவம் தான். வேறு எதுவும் இல்லை?  நீ இல்லாத ஹிந்துக்கள்  வீடே அதனால் தான் இல்லை.

तत्तादृङ्मधुरात्मकं तव वपु: सम्प्राप्य सम्पन्मयी
सा देवी परमोत्सुका चिरतरं नास्ते स्वभक्तेष्वपि ।
तेनास्या बत कष्टमच्युत विभो त्वद्रूपमानोज्ञक -
प्रेमस्थैर्यमयादचापलबलाच्चापल्यवार्तोदभूत् ॥४॥

தத்தாத்3ருங் மது4ரத்மகம் தவ வபு: ஸம்ப்ராப்ய ஸம்பன்மயீ
ஸா தே3வி பரமோத்ஸுக சிரதரம் நாஸ்தே ஸ்வப4க்தேஷ்வபி |
தேனாஸ்யா ப3த கஷ்ட மச்யுத! விபோ4! தவ்த்3ரூப மனோக்ஞக
ப்ரேமஸ்தை2ர்யமயாத்3 ஆசாபலப3லாத் சாபல்ய வார்த்தோத3பூ4த் || ( 2 – 4)

''நான்  ஒரு சாதாரணனே இப்படி    உன் திவ்ய சுந்தர ரூபத்தின் மஹிமை தெரிந்து கொண்டேனே,  பிரபஞ்சத்தில் சர்வ சுபிக்ஷமும் அளிக்கும்  செல்வதிருமகள்  ஸ்ரீ மஹாலக்ஷ்மி உன் மஹிமையை அறியமாட்டாளா ? அவளிடத்திலிருக்கும் செல்வத்தை விட அதிக மதிப்புள்ள உன்னை, ஈடற்றவனை, மன மோஹனாங்கனை  விடுவாளா? உன்னைக்  கெட்டியாக பிடித்து தன்னில் வைத்துக் கொண்டால் கூட நீ  தப்பிக்கும் கெட்டிக்காரன் என்று புரிந்து உன்னிலேயே, உன் மார்பில் குடி   கொண்டுவிட்டாள் இதில் எங்களுக்கு  தான்  ரொம்பவே  சௌகர்யம். உன்னையும் அவளை யும் சேர்த்து  ஒரே நேரத்தில்  வணங்க லாம்.  நம்பினோர் கைவிடப்படார் என்பதை நிரூபிக்கும்  குருவாயூரப்பா,  இப்போது தான் புரிகிறது  ஏன் லக்ஷ்மி தேவி  நிலையற்றவள், செல்வம் நிலையற்றது?  ஓஹோ அவள் தான் தன்னையே  உன்னிடம் கொடுத்துவிட்டதால், நீயாகிவிட்டாளே. இனி பக்தர்களுக்கு நீ அல்லவோ இரண்டுமாகி விட்டாய்.

लक्ष्मीस्तावकरामणीयकहृतैवेयं परेष्वस्थिरे-
त्यस्मिन्नन्यदपि प्रमाणमधुना वक्ष्यामि लक्ष्मीपते ।
ये त्वद्ध्यानगुणानुकीर्तनरसासक्ता हि भक्ता जना-
स्तेष्वेषा वसति स्थिरैव दयितप्रस्तावदत्तादरा ॥५॥

லக்ஷ்மிஸ் தாவக ராமணீயக ஹ்ருதைவேயம் பரேஷ்வஸ்தி2ரே
த்யஸ்மின்னன்யத3பி ப்ரமாண மது4னா வக்ஷ்யாமி லக்ஷ்மி பதே!|
எ த்வத்3 த்4யான கு3ணானுகீர்த்தன ரஸாஸக்தா ஹி ப4க்தா ஜனா:
தேஷ்வேஷா வஸதி ஸ்தி2ரைவ த3யித ப்ரஸ்தாவ த3த்தாத3ரா || ( 2 – 5)

ஹே குருவாயூரப்பா,  குட்டா,  உன்னை லக்ஷ்மி காந்தன் என்று சொல்வது எத்தனை பொருத்தம்  பார்த்தாயா?  இப்போது தான் புரிகிறது ஏன் லக்ஷ்மி  மற்றவர்களிடம் அதிகம் தங்குவதில்லை என்று. நீ பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறாயா, அவள் உன்னழகில் மயங்கி உன்னை விட்டு பிரிய மறுக்கிறாளா?. இது தெரிந்து தான், அவள் பக்தர்கள் மனம் கோணாமல், உன்னை வாழ்த்தி பாடும்போது அவளும் அவர்கள்  உள்ளத்தில் உன்னோடு சேர்ந்து புகுந்து விடுகிறார்கள். இந்த சௌகர்யத்தை ஏற்படுத்திக் கொடுத்த உனக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்.

एवंभूतमनोज्ञतानवसुधानिष्यन्दसन्दोहनं
त्वद्रूपं परचिद्रसायनमयं चेतोहरं शृण्वताम् ।
सद्य: प्रेरयते मतिं मदयते रोमाञ्चयत्यङ्गकं
व्यासिञ्चत्यपि शीतवाष्पविसरैरानन्दमूर्छोद्भवै: ॥६  

ஏவம் பூ4த மனோஞதான வஸுதா4 நிஷ்யந்த3 ஸந்தோ3ஹனம்
தவ்த்3ரூபம் பரசித்3ரஸாயனமயம் சேதோஹரம் ஸ்ருண்வதாம் |
ஸத்3யா:ப்ரேரயதே மதிம் மத3யதே ரோமாஞ்சயத் யங்க3கம்
வ்யாசிஞ்சத்யபி சீ’த பா3ஷ்ப விஸரை: ஆனந்த மூர்சோ2த்ப4வை:|| (2 – 6)

பகவானே, ஸ்ரீ கிருஷ்ணா, உன்  திவ்ய  சுந்தரரூபம், பக்தர்களை  என்ன பண்ணுகிறது உனக்கு தெரியுமா?  இதுவரை அனுபவியாத  அம்ருத மழையில் நனைந்து, பரப்ரம்மமாகிய  உன் மனத்தை மயக்கும் ஸ்வரூபத்தை  பற்றி கேட்கும்போதே  தன்னை மறந்து, உன் வசமாகி, ஆனந்தபரவசத்தில் திளைத்து, ஆஹா  இப்படியா என்று மயிர்க்கூச்செரிந்து உணர்ச்சி வசப்பட்டு ஆனந்த மழையில் உள்ளும் புறமும் நனைந்து  ஆனந்த பாஷ்பம் கண்கள் வழியாக பிரவாகமாக   ஓட  காணப்படுகிறார்கள்.  (2 – 6)  

एवंभूततया हि भक्त्यभिहितो योगस्स योगद्वयात्
कर्मज्ञानमयात् भृशोत्तमतरो योगीश्वरैर्गीयते ।
सौन्दर्यैकरसात्मके त्वयि खलु प्रेमप्रकर्षात्मिका
भक्तिर्निश्रममेव विश्वपुरुषैर्लभ्या रमावल्लभ ॥७॥

ஏவம்பூ4ததயா ஹி ப4க்த்ய பி4ஹிதோ யோக3:ச யோக3த்3வயாத்
கர்மஞானமயாத்3 ப்4ருசோ’த்தமதரோ யோகீ3ஸ்வரைர் கீ3யதே |
சௌந்தர்யைக ரஸாத்மகே த்வயி கலு ப்ரேமப்ரகர்ஷாத்மிகா
ப4க்தி நிச்’ரமமேவ விஸ்வ புருஷைர் லப்யா4 ரமா வல்லபா4 ||( 2 – 7)

''இதோ பார்  உண்ணி கிருஷ்ணா , எனக்கு  கர்மயோகம், ஞானயோகம் எல்லாம் வேண்டாம், உன்னை மனதில் இருத்தி துதிக்கும் பக்தி யோகம் போதும், அதுவே  மோக்ஷ மடையும் வழி என்று யாரோ அல்ல,  வேதவியாசர் போன்ற யோகிகள்,  ஞானிகள் சொல்கிறார்கள்.  சுந்தர ரூபா, ஸ்ரீ கிருஷ்ணா,  உன்னிடம் பக்தி செலுத்துவது  என்பதே  அன்பின் உச்ச கட்டம், மிக எளிதானது என்று எல்லோரும் அறிவோம். (2 – 7)

निष्कामं नियतस्वधर्मचरणं यत् कर्मयोगाभिधं
तद्दूरेत्यफलं यदौपनिषदज्ञानोपलभ्यं पुन: ।
तत्त्वव्यक्ततया सुदुर्गमतरं चित्तस्य तस्माद्विभो
त्वत्प्रेमात्मकभक्तिरेव सततं स्वादीयसी श्रेयसी ॥८॥

நிஷ்காமம் நியத ஸ்வத4ர்ம சரணம் யத் கர்மயோகா3பி4த4ம்
தத் தூ3ரேத்ய ப2லம் யதௌ3பநிஷத3 ஞானோ பலப்4யம் புன:|
தத்தவ்யக்த தயா ஸூது3ர்க்க3மதரம் சித்தஸ்ய தஸ்மாத்3 விபோ4
த்வத் ப்ரேமத்மாக ப4க்திரேவ ஸததம் ஸ்வாதீ3யஸீ ச்’ரேயஸீ || (2 – 8)

''நீ உன் கர்மத்தை செய், பலனில் எதற்கு உனக்கு விருப்பம். அதை கொடுப்பது நான் அல்லவோ? என்று சொல்லிவிட்டாய்.  இப்படி செய்வதால் பலன் எப்போதோ வரும். கைமேல் உடனே தராது ,  வராது. அதேபோல் பக்தி யோகத்தில்,  வேதாந்த ஞானம் எல்லாம் எல்லோராலும் எளிதில் அடையக்கூடியது இல்லை.   ஆனால்  என்டே குருவாயூரப்பா, உன்னிடம் வைக்கும்  பரிசுத்த  பிரேமை, அன்பு , பக்தி போதும்,  ஏமி,   ருசிரா,  எந்த ருசிரா?  என்று  எல்லோரும் போற்றுகிறார்கள் . (2 – 8)

अत्यायासकराणि कर्मपटलान्याचर्य निर्यन्मला
बोधे भक्तिपथेऽथवाऽप्युचिततामायान्ति किं तावता ।
क्लिष्ट्वा तर्कपथे परं तव वपुर्ब्रह्माख्यमन्ये पुन-
श्चित्तार्द्रत्वमृते विचिन्त्य बहुभिस्सिद्ध्यन्ति जन्मान्तरै: ॥९॥

அத்யாயாஸகராணி கர்மபடலான் யாசர்யா நிர்யன்மலா :
போ3தே4 ப4க்திபதே2Sத2வாSப்யுசித தாமாயந்தி கிம் தாவதா |
க்ளிஷ்ட்வா தர்க்பதே2 தவ வபுர்ப்3ரஹ்மாக்யமன்யே புன
ச்’சித்தார்த்ர த்வம்ருதே விசிந்த்ய ப3ஹுபி4: ஸித்யந்தி ஜன்மாந்தரை:||2-9)

'கிருஷ்ணா, நான்   உன்னிடம் மனம் விட்டு பேசுகிறேன் இல்லையா?  ரொம்ப சிரமம் அப்பா இந்த கர்ம யோகம், ஞான யோகம் எல்லாம். எனக்கு தோது படாது.  சுலபமான வழி தான் இருக்கிறதே. நீயே காட்டி இருக்கிறாயே?  எதற்கு வறட்டு வறட்டு என்று வேத புஸ்தகங்களை மனம் உன்னிடம் இல்லாமல் படித்து  பிரயோஜனம்?  எத்தனையோ ஜென்மங்களுக்கு பிறகு மோக்ஷம் கிடைக்கவா? இதோ கைமேல் பலன் உன்னை மனதார  பக்தி பண்ணுவதன் மூலம்  உன் கிட்டே கிட்டுகிறதே , கிட்டப்பா!. (2 – 9)

त्वद्भक्तिस्तु कथारसामृतझरीनिर्मज्जनेन स्वयं
सिद्ध्यन्ती विमलप्रबोधपदवीमक्लेशतस्तन्वती ।
सद्यस्सिद्धिकरी जयत्ययि विभो सैवास्तु मे त्वत्पद-
प्रेमप्रौढिरसार्द्रता द्रुततरं वातालयाधीश्वर ॥१०॥  

த்வத்3 ப4க்திஸ்து கதா2 ரஸாம்ருத ஜ4ரி நிர்மஜ்ஜனேன ஸ்வயம்
ஸித்3யந்தி விமலப்ரபோ3த4 பத3வீ மக்லேச’ தஸ்தன்வதீ |
ஸத்ய:ஸித்3தி4கரீ ஜயத்யயீ! விபோ4! சைவாஸ்து மே த்வத்பத3
ப்ரேமப்ரௌடி4 ரஸார்த்3ரதா த்3ருததரம் வாதாலயாதீ4ச்வர! (2 – 10)

குருவாயூர் கிருஷ்ணன் குட்டி,  என்னுடைய பிரபோ! உன்னிடம் வைத்துள்ள  உண்மையான பக்தி  எல்லோரையும்  அம்ருத தடாகத்தில் அமிழ்ந்து உள்ளும் புறமும் ஆனந்தமாக திளைக்க  செயகிறது. அது போதும். கர்ம,  ஞானயோக பலனை கைமேல் தருகிறது. திடீர் சாம்பார், திடீர் ரசம் மாதிரி.
என்னப்பா  இப்படி  கருணையை வாரி வழங்கும் உன் தாமரைத் திருவடிகளில் சிரம் வைத்து மனமுருகி நான் அனுபவிக்கும் பக்தி ஒன்றே எனக்கு எப்போதும்  இருக்க அருள்புரிவாயா?. ( 2 – 10)

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...