Sunday, April 25, 2021

VSS SASTRI LECTURE


 சாஸ்திரிகளின் முப்பது நாள் ராமாயணம்- 9

நங்கநல்லூர் J K SIVAN


இந்த  ரெண்டு பேரை பாருங்கள்.  சுக்ரீவன்,  விபீஷணன்..  ரெண்டு பேருமே  ராம   லக்ஷ்மணர்களால்  பட்டாபிஷேகம் செய்யப்பட்டவர்கள்.  சுக்ரீவன்  பட்டாபிஷேகம்  ஆன  பின்  ராமனுக்கு உதவியவன்.  விபீஷணன்.  பட்டாபிஷேகம் ஆகும் முன்பே  சரணடைந்தவன்.  இருவரில்  சுக்ரீவன்  நண்பனா  கூட்டா  என்று பார்த்தால்  ராம லக்ஷ்மணர்களைப் போலவே  அவனும் அவர்களில் ஒருவனாக  உழைத்து  நன்  மதிப்பை பெற்றவன்.  விபீஷணன்   ராம லக்ஷ்மணர்களின் அன்பையும்  நம்பிக்கையையும்   பெற்று  சிரஞ்சீவியானவன். 

விபீஷணன் சரணடைய  வந்த போது  அவனைப்  பற்றிய  எந்த விஷயமும் ராமலக்ஷ்மணர்கள் அறிய வாய்ப்பு இல்லை.   சூர்ப்பனகை ஒரு முறை   விபீஷணனைப்   பற்றி சொல்லும்போது  அவன்  அசுரர் குலத்தில்  பிறந்தாலும்  தர்மாத்மா என்கிறாள். 
ஹனுமான் கூட  சொல்லி இருக்கலாம்.   அசோக  வனத்தில்  சீதையிடம்  நட்போடு  பழகியவள்  விபீஷணன் வீட்டுப்  பெண் தான்.   ஹனுமானின் உயிரையே  காப்பாற்றியவன்  விபீஷணன்.  தூதனாக வந்த ஒரு  விலங்கைக்  கொல்லக்கூடாது  என்று ராவணனிடம் வாதாடியவன்  விபீஷணன்.   ஹனுமான்  ஏனோ இதெல்லாம்  ராமனிடம் சொல்ல மறந்து போயிருக்கிறான். ஆகவே தான் போர்வீரர்கள்   ஒன்று கூடி  ராமலக்ஷ்மணர்களோடு  விபீஷணனை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா  என்று ஆலோசிக்கும்போது   ஹனுமான் இதைச் சொல்லவில்லை.  
ராவணனின் சபையில் இந்திரஜித்  வீரம், அவனது சாகசம் பேசப்படுகிறது. அவன்  விபீஷணனை இகழ்ந்து பேசுகிறான். அவனை தர்மஹத்தை ஏளனம் செயகிறான். எவரும் தடுக்கவில்லை.
இந்திரஜித்தின்  மாயாஜாலங்களை, நாகபாச பந்த  எதிர்ப்பைப் பற்றி  அறிந்தவன் விபீஷணன். அவன்  சுக்ரீவனுக்கு  அதை விளக்குகிறான்.   லக்ஷ்மணனுக்காக  ராமன்   வருந்தும்போது,  விபீஷணனுக்கு பட்டாபிஷேகம் செய்யாததற்கு  மனம் வாடுகிறான்.  
கும்பகர்ணனும் ராவணனின்  சகோதரன் என்றாலும்  அவன் எத்தனையோ முறை ராவணனுக்கு  அறிவுரை  சொல்லி அதை ராவணன் ஏற்காதபோதும் அவனுக்காக தனது உயிரையும் தியாகம் செய்ய தயாரானவன்.  அவ்வளவு சகோதர பாசம். மஹாபாரதத்தில் பீஷ்மர் எவ்வாறு   துரியோதனனிடம் நடந்து கொண்டாரோ அப்படி  ராவணனிடம் நடந்துகொண்டவன் கும்பகர்ணன்.
விபீஷணனின் முக்கிய உதவி  இந்திரஜித்  நிகும்பலை யாகம் நியக்ரோதா  மரத்தடியில் எவரும் அறியாமல் செய்வதை தக்க சமயத்தில்  ராமலக்ஷ்மணர்களுக்கு   உணர்த்தியது. அந்த யாகத்தை  இந்திரஜித் நிறைவேற்றியிருந்தால்  அவனை  வெல்வதோ கொல்வதோ  இயலாத காரியம்.  லக்ஷ்மணன்  உடனே சென்று  அவனோடு போர் தொடுத்து அவனைக்  கொல்கிறான் .
போரில்  விபீஷணனும்  இந்திரஜித்தும் ஒருவர் மேல் ஒருவர்  குறை சொல்லி விவாதிக்கிறார்கள்.  இந்திரஜித்  விபீஷணன் செய்தது  தேசத்துரோகம் என்கிறான். பலமாக  எதிர்க்கிறான்.  விபீஷணன் அவனுக்கு தனது நிலையை  உண்மையை  விளக்குவது அவ்வளவாக  எடுபடவில்லை.  இது  வாலிவதத்தில்  வாலி  ராமனை எதிர்த்து பேசுவதும்  ராமன் சமாதானம் கூறுவதும் போலதான் இருக்கிறது என்கிறார்  சாஸ்திரிகள் தன்னுடைய ஆங்கில பிரசங்கத்தில்.
விபீஷணன்   தன்னுடைய  வில்லையும் அம்பையும் எடுத்து இந்திரஜித் மேல் தாக்கும்போது அவன் கண்கள் கண்ணீரால் நிரம்பி, தனது மகன் போன்ற அவன் மேல் இருந்த பாசத்தை நினைவூட்டுகிறது.  அவன் கரங்கள் செயலிழக்கிறது. தர்ம சங்கடமான நிலை அவனுக்கு.  ஒருபுறம்  இந்திரஜித்தின் பயங்கர சக்திகள்,  மாயாஜாலங்களை ராமலக்ஷ்மணர் களுக்கு எடுத்து சொல்லியவன்  மறுபக்கம் அவன் மேல் பாசத்தையும் பொழிகிறான். 
விபீஷணனுக்கும் அதே  மாயாஜாலங்கள் தெரிந்திருந்ததால்  தான் இந்திரஜித்  மாயஸீதையை   ராம லக்ஷ்மணர்கள் முன் கொல்லும்  காட்சியில்  அதை மறுத்து,   உண்மை சீதை அது அல்ல  என்று நிரூபிக்க முடிகிறது.  அவள் ஜாக்கிரதையாக இருப்பதை அறிவிக்க முடிகிறது.
விபீஷணன்  ராவணனின் தேரை நொறுக்கி  குதிரைகளை விடுவிக்கிறான்.  ராவணனின் மறைவுக்கு  வருந்துகிறான்.  அண்ணனுக்கு  ஈமக்ரியைகள் செயகிறான்.  விபீஷணன்   துரோகி அல்ல.  அப்படி இருந்தால்  சிரஞ்சீவியாக அவன்  ஆகியிருக்க முடியாது.    அவனது பலம் அவனுக்குத் தேவையான  நேரத்தில்  நினைவுக்கு வந்தது.  
இதே போல் தான் ஹநுமானுக்கும்  தனது சக்தி தெரியாமல் இருந்தது. தக்க நேரத்தில் அவனது வலிமை அவனுக்கு நினைவூட்டப்பட்டதும்  ஹனுமான்  சக்தி மிக்கவனாக எ சாகசங்கள் புரிகிறான்.  இதை  சாபம் என்றும்   எடுத்துக் கொள்ளலாம். மதங்க ரிஷி  ஆஸ்ரமம் ஒரு அடைக்கல  ஸ்தலம்  என்பது  ஹநுமானுக்கு  மறந்து போயிற்று.  சுக்ரீவன் தனது கடமையைச் செய்தவன்  என்று சொல்ல மறந்து போயிற்று. அது தன்னுடைய தவறு என்பதும் அவன் மறந்து போனான்.
ராமன் சுக்ரீவனை  கிஷ்கிந்தா ராஜ்யத்துக்கு  அரசனாக்குவது பற்றி சொன்னது மறந்ததால் தான் வாலிமனைவி தாரையிடம்  அடுத்த  அரசன்  அங்கதன் என்று ஹனுமான்  சொல்கிறான்.  இதைத்தவிர  இன்னொரு  மறதி,    லக்ஷ்மணன் மூர்ச்சை விலக, அவன் உயிர்பெற  எந்த  மூலிகையை  ஜாம்பவான், மற்றும்  ,  வானர மருத்துவன் கொண்டுவரச்சொன்னான் என்று மறந்து போய்  அந்த  சஞ்சீவி மலையையே  தூக்கிக் கொண்டு வந்தது.
ஹனுமான்  பரதனை  நந்திக்ராமத்தில் சந்தித்தபின்  உடனே  ராமனிடம் வந்து பரதனின் மனநிலையை ஏன் சொல்ல வில்லை?  பரதனிடம்  சீதை பட்ட    கஷ்டங்களை சொல்லவில்லையே  ஏன்?   
அங்கதனின் முடி சூட்டலை  தாரை பார்க்கவில்லை.    கிஷ்கிந்தை திரும்பியபின்  ஸ்வயம்பிரபை  குகையின் பின்  ஹனுமான் அமர்ந்து விடுகிறான்.
'' என் மேல் அமர்ந்து  கொள்ளுங்கள் ராமனிடம்கொண்டு  சேர்க்கிறேன்''   என்று  சீதையிடம் சொல்லியபோது  சீதை  ஹனுமான் யோசனையை  ஏற்கவில்லை.   ''எனக்கு உத்தரவிடுங்கள், இந்த  ராக்ஷச பெண்களுக்கு ஒரு பாடம்  கற்பிக்கிறேன்'' என்று  ஹனுமான் சொல்லிய போதும்  சீதை அதை  லக்ஷியம் செய்யவில்லை.  ஆனால் இதெல்லாம்  ஹனுமானின்  பெருமையை மஹிமையை ஒரு போதும்  பாதிக்காது.

சாஸ்திரிகள்  பிரசங்கத்தை தொடர்வோம். சாஸ்திரிகள்  வால்மீகி ராமாயண  ஸ்லோகங்களை மேற்கோள் காட்டியே  தனது பிரசங்கத்தை  நிகழ்த்தியவர்.  ஆங்கிலம் தமிழ்  சமஸ்க்ரிதம் மூன்று மொழிகளிலும்  ஞானஸ்தர். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...