Monday, April 26, 2021

OLDEN DAYS WEDDING 2

 


பழைய  நினைவுகள்.     நங்கநல்லூர் J K  SIVAN 

ஊர்லே கல்யாணம்  மார்லே  சந்தனம்  என்று  வாழ்ந்த  கிராமங்கள்.  கல்யாணத்துக்கு  மண்டபங்கள் சத்திரங்கள்  கிடையாது. தேவைபடவில்லை.  அவரவர் வீட்டிலேயே  தெருவை அடைத்து பெரிய கொட்டகை  பந்தல் போடுவார்கள்.  எதிரும் புதிருமாக வீடுகள்  சம்பந்திகளுக்கு  உறவினர்களுக்கு   ஒதுக்கப்படும்.    யார் வீட்டில் யார் வேண்டுமானாலும் தங்குவார்கள்.
மூன்று நாளைக்கு மேல்  கல்யாணங்கள்  ஆறு நாள் வரை கூட  நடக்கும்.

 வாசலில்   ஜலத்தை தெளித்து  எல்லா வீட்டு வாசலிலும்  பெரிய  மாக்கோலம்போட்டு,  காவி பார்ட ரோடு BORDER  கண்ணைப் பறிக்கும்.    ஊர்  உறவு எல்லாம் ஒன்று கூடி  மூன்று வேளையும் சாப்பாடு. 

ஒரு மாதம் முன்பே  அப்பளம்  வடாம், ஊறுகாய்கள்  பக்ஷணங்கள்  பண்ண  மாமிகள்  தயாராகிவிடுவார்கள்.  மூட்டை மூட்டையாக அரிசி பருப்பு,  செக்கிலிருந்து நல்லெண்ணெய், கடலெண்ணெய் தேங்காயெண்ணை எல்லாம் வந்து விடும்.  கல்லுரல்கள்  அம்மிக்கல், கல் இயந்திரம்  விடாமல் எதையாவது அரைத்துக் கொண்டே இருக்கும்.  ஊர் சமையல்கார கோஷ்டி கீத்து தட்டி கட்டி  ஒரு பக்கமாக  கோட்டையடுப்பு மூட்டிவிடும்.   மரங்கள் வெட்டி காய்ந்த விறகுகள் அம்பாரமாக அடுக்கி வைத்திருக்கும்.    மாடுகள் அநேகம் என்பதால் பாலுக்கு தயிருக்கு, வெண்ணைக்கு  நெய்க்கு பஞ்சமே இல்லை.  பட்டணத்திலிருந்து  பத்து ஆறு  வேஷ்டிகள், சேலம் குண்டஞ்சி,  உத்தரீயங்கள் , நிறைய  சேர்ந்துவிடும்.  பதினெட்டு முழ புடவைகள் வாங்கி வைத்திருப்பார்கள்.  ஆறு  முழம் கட்டுபவர்களுக்கு  ஒரு சில கட்டுகள்  ரெடியாக இருக்கும்.

பிள்ளை வீட்டு  அத்தைகள், சித்திகள், மாமிகள்  மாப்பிள்ளைகள்,  எல்லாரும்  VIP க்கள்.  அதிகாரம் தூள் பறக்கும். பளபளவென்று தேய்த்த  பித்தளை டவராக்களில்  வீட்டிலேயே  காப்பிக்கொட்டை வறுத்து அரைத்த  பில்டர் காப்பி  கூஜாக்கள் நிறைய  ஜமக்காளங்களில்  மும்முரமாக சீட்டாடும் கோஷ்டிகளுக்கு  அனுப்பப்படும்.   தட்டு தட்டாக கொழுந்து வெற்றிலைகள்  கொட்டைப்பாக்குகள், பாக்குவெட்டிகள், சுண்ணாம்பு  டப்பிகள்  கண்ணில் எங்கும் படும்.  பன்னீர்  புகையிலை  சந்தன  நறுமணம் மூக்கைத்  துளைக்கும்.

வில் வண்டி,  ரெட்டை மாட்டுவண்டி, குதிரை வண்டிகள்  ரயிலடி சென்று திரும்பும்   வேலையில்  பிசியாக இருக்கும். 
யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பதே கணக்கு கிடையாது.  இப்போது மாதிரி வருபவர்கள் கணக்கு போடுவதில்லை . எல்லோர் கையிலும்  பனை ஓலை விசிறி இருக்கும். பன்னீர் சொம்புகள்  எல்லோர் மீதும்  பன்னீர்  தெளிக்கும்.   இது  வாண்டுகளின்  வேலை.  அண்டை அசல் வீட்டுக்கார்களின் உழைப்பு  அதிகமாக இருக்கும்.  அவரவர் வீட்டு கல்யாணம் போல்  எடுத்து  நடத்துவார்கள். அவ்வளவு ஒற்றுமை. இப்போது அடுத்த சுவருக்கு பின்னால்  இருப்பவர்களை  நமக்கு  தெரிவதில்லையே.

அப்போது  சினிமா சங்கீதம் முதற்கொண்டு எல்லாமே   கர்நாடக   சங்கீதம் தான்.  நாயனக்காரர் கோஷ்டி எந்த ஊரிலிருந்து வரவேண்டும் என்று முன்னேற்பாடு செய்து  அபூர்வ ராகங்கள்  ஆலாபனைகள்   இரவு பகலாக  காற்றில் மிதக்கும்.   விடியற்காலையில்  இரவில்  எல்லாம் தாளம் தப்பாத   தவில் ஓசை கேட்கவே ஆனந்தமாக இருக்கும்.

கல்யாணத்துக்கு முதல் நாள்  பிள்ளை வீட்டார்  யாத்ரா தானம் பண்ணி முடிக்க  குடும்ப வாத்தியார்கள் கோஷ்டி  உத்தரவுகள் பிறப்பிக்கும்.  அவர்கள் அவ்வப்போது கேட்கும் சாமான்களை எடுத்துத் தர ஒரு  குழு தயாராக இருக்கும்.

பிள்ளைவீட்டுக் காரர்கள் வந்து இறங்கியாசச்சு  என்ற வுடன் வாத்ய கோஷ்டியுடன் வரவேற்று  மாலை போட்டு
மாப்பிள்ளைக்கு ஆரத்தி சுத்தி விரதம்  ஆரம்பிக்கும்.   காலையில் பிள்ளை வீட்டு  விரதம்,  அப்புறம்  பெண் வீட்டில் விரதம்  நடக்கும்.   

சாயந்திரம்  நிச்சயதார்த்தத்திற்கு நல்ல கூட்டம்.    அக்ராஹாரத்தில்  ஒரு கோடியில் பெருமாள், இன்னொரு கோடியில் பிள்ளையார், சிவன்  கோவில், அம்மன்  உண்டு.    கோவில் பிரசாதங்கள் அர்ச்சகர்கள் , தர்மகர்த்தாக்கள்   கொண்டு வந்து கொடுப்பார்கள் . இன்னார் புத்ரன் பௌத்ரன்,   தெளஹித்ரன்  என்றெல்லாம்  பிள்ளை, பெண்கள்  ப்ரவரம் வாசித்து  கல்யாண பத்திரிகை உரக்க வாசிப்பார்கள். மேள தாளங்கள் முழங்கும்.  மைக், ஒலிபெருக்கி  கிடையாது. கோவிலிலிருந்து  சாரட் வண்டியில், அல்லது காஸ் லைட்  நடுவில்  திறந்த     மோட்டார்காரில்  புஷ்பங்கள்  அலங்காரத்தோடு , அல்லது    நடந்தோ  மாப்பிளை  ஜான்வாச ஊர்வலம். எல்லா உறவினர்களும் பின்னால் நடந்து வருவார்கள்.  குழந்தைகளுக்கு ஏக கொண்டாட்டம்.  நாதஸ்வர தவில் வித்துவான்கள் பின்னாலேயே சுற்றுவார்கள்.  கேஸ்  லைட்  ஒளிவீசும் .  அக்ரஹார வீதிகளில்  ஊர்வலம் மெதுவாக சென்று முடிந்த பின்  கல்யாண வீட்டு வாசலுக்கு வந்தபின்  வரவேற்பு.  சங்கீத  கச்சேரிகள்  நாட்யம்  நிகழ்ச்சிகள்  உண்டு.    அது முடிந்தபின் சாப்பாட்டு கடை. 
 
வரிசையாக  பந்திப்பாய்  விரித்து   வாழை இலைகள் போடப்படும்.  கமகமவென்று மணத்தோடு  தட்டு தட்டாக உணவு பரிமாறி எல்லோரும் வயிறு நிறைய சாப்பிடுவார்கள். யானையடி அப்பளம் என்று  இலைமுழுதும் பெரிதாக  ஒரு விசேஷ அப்பளம் எல்லா இலையிலும் விழும்.

விச்ராந்தியாக  சாப்பாடு முடிந்தபின்  சில திண்ணைகளில்   சீட்டு கச்சேரி,    பெண் வீட்டுக்காரர்கள்  அடுத்து நடக்க  வேண்டிய நிகழ்ச்சிகளுக்கான  ஏற்பாடுகளை செய்து  கொண்டிருப்பார்கள்.  முகூர்த்த தேங்காய் பைகளை துணிப்பைகளில் போடும் வேலை  ரொம்ப கடினம்.   ஏன்  சரியாக உபசரிக்கவில்லை என்று கோபத்தோடு  சில  பிள்ளைவீட்டுக்கார  மாமா மாமிகளை  பெண்  வீட்டுக்கார  மாமா மாமிகள்  காலில் விழக குறையாக சமாளிப்பது  வழக்கமான ஒரு நாடகம்.

இன்னும்  யோசிக்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...