Wednesday, April 28, 2021

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்   --  நங்கநல்லூர்  J K  SIVAN 


''நான் எதுக்கு இப்படி பண்ணேன் தெரியுமா?''

மஹா பெரியவா  என்றும்  மனிதர்களுக்குள்  வித்யாசம்  பாராட்டியதில்லை.  எல்லா ஜீவன்களும்  பரமேஸ்வரன் அவதாரம் என்ற திட நம்பிக்கை கொண்டவர்.  அவருக்கு  சாஸ்த்ர  சம்பிரதாயங்களை  மதித்து  அர்த்தம் புரிந்து அனுஷ்டிக்கிறவர்களை ரொம்ப  பிடிக்கும்.   அதெல்லாம் விட  எவன் ஒருவன் மனசை பரிசுத்தமாக  அன்போடு வைத்துக்கொண்டிருக்கிறானோ அவனே  பகவானின் அம்சம் என்ற அபிப்ராயம் உண்டு. எந்த  ஊரிலும்  முதலில் வணங்க வேண்டியது அந்தந்த ஊரிலுள்ள  கிராம தேவதைகள் என்பார். 
இப்போது நான் சொல்லும் சம்பவம்  எப்போதோ தினமலரில் ஒரு முறை படித்த ஞாபகம் இருக்கிறது.  
பல வருஷங்களுக்கு முன்  இது நடந்த சமயம்  மஹா பெரியவா காஞ்சிபுரம் அருகிலுள்ள கலவையில் முகாமிட்டிருந்தார்.  பக்கத் திலிருந்த  கிராமத்துக்கு சென்றவர்  அங்குள்ள கிராமதேவதை கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டு வருவார்.  
 ஒருநாள்  அதுபோல்  தான்  அந்த கிராமத் துக்கு சென்று விட்டு  தான்  தங்கி இருந்த    கலவையில்  அக்ரஹாரத்துக்குத்  திரும்பிக்   கொண்டிருந்தார்.   ''ஜெய ஜெய  சங்கர  ஹர ஹர சங்கர '' என்று  கூட இருந்த பக்தர்கள் தொண்டர்கள் வழக்கம் போல்  ஒலித்துக் கொண்டிருந்தார்கள்.  
அந்த கிராமத்திலிருந்து  கலவைக்குச் செல்லும் வழியில்  ஒரு  சிறு  ஓடை  குறுக்கிட்டது.  அதன்  இருபக்கமும் ஒரு கால்வாய் மதகு இருந்தது. அந்த கால்வாய்  மேல்  மதகில்  இருபுறமும் இரண்டு அடி உயரத்திற்கு சுவர்.பாதுகாப்புக்காக கட்டப் பட்டிருந்தது.  
அன்றும்  மஹா பெரியவா அதை நெருங்கி நடந்து  கொண்டிருந்தார்.   அவர்  கிராமத் துக்கு செல்லும்போதும் அந்த பக்கமாக தான் வந்தார் அப்போது   அந்த மதகின் சுவர்களின் மீது  ஒன்றுமில்லை.    இப்போது   திரும்பி  கலவைக்கு செல்லும் போது மட்டும் அந்த  மதகு சுவர் மேல்  பரங்கிக்காய், பூசணிக்காய், தேங்காய், அவரை, இளநீர், வேர்க்கடலை  மூட்டை எல்லாம் இருந்தது. 

மஹா பெரியவா எவ்வளவு  கூர்மையாக எல்லாம்  கவனிப்பவர் என்று தெரியுமல்லவா?  இதை கவனித்துவிட்டு  ஒன்றும் பேசவில்லை. 
மற்றவர்களுக்கு  ஒரு ஆச்சர்யம்.  ''நாம் போகும்போது, இங்கே ஏதுமில்லை. இப்போது, இதெல்லாம்  எப்படி இங்கு வந்தன என்று..!
மஹா பெரியவா அவர்களது முகத்தில் தோன்றிய  ஆச்சர்யக்  குறியை கவனிக் காமலா இருப்பார்?   மெதுவாக   நடந்து கொண்டிருந்தவர் அப்படியே  மதகின் அருகில்  நின்று விட்டார். அங்குமிங்குமாக   சுற்றி  சுற்றி நடந்தார். நாலு பக்கமும் மாறி மாறி திரும்பினார். தன்னுடன் வந்த தொண்டர்களிடம், சம்பந்தமில்லாத சில விஷயங்களைப் பேசினார்.   அவர்களுக்கு  ஒன்றும்  புரியவில்லை.  ஏன், எதற்காக  மஹா பெரியவா இப்படி  செய்கிறார்?  ஏதோ  விஷயம் இருக்கிறது.
அப்போது தான் தெரிந்தது.   மதகுக்குப்    பின்னால்  15 அடி தூரத்தில் அடக்க ஒடுக்க மாய், பக்திப் பரவசத்துடன்  யாரோ  ஒரு கிராம வாசி   கைகளைக் கட்டிக் கொண்டு   மஹா பெரியவாளைப்  பார்த்துக்கொண்டு  ஒரு மரத்தடியில் நிற்பது தெரிந்தது.  அவர் ஒரு   விவசாய  சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் தான்,   மதகின்  மீது  மஹா பெரியவா கண்ட  பொருட்களை அங்கு வைத்திருக்கிறார் என்பதை  மஹா பெரியவா  எளிதில்  புரிந்து கொண்டார்.

மஹா  பெரியவா ஒரு சிஷ்யரை  அழைத்து   '' அதோ  நிற்கிறானே  அவன்  எதற்காக இந்தப் பொருட்களை  இங்கே  மதகின் மேல் வைத்தி ருக்கிறான் என்று கேள்,'' என்றார்.
அவரும் அதுபற்றி கேட்க  அந்த  விவசாயி  பதில் சொன்னான்: 
"சாமிக்கு தான் வச்சிருக்கேன். எல்லாம் எங்க   தோட்டத்திலே வெளஞ்சது...சாமி  இந்த  கிராம  கோயிலுக்கு போறப்ப பாத்தேன்!   திரும்பவும்   இந்த வழியாகத்தான் வருவாங்கன்னு தெரிஞ்சுது.  அதனாலே   என்   வீட்டுக்கு ஓடிப்போயி இதெல்லாம்  எடுத்தாந்து, அவங்க கண்ணிலே படுற மாதிரி வச்சேன்!   நாங்க பாலு, தயிரு  ஏதாவது  தந்தா  சாமி  சாப்பிடு வாங்களோ மாட்டாங்களோன்னு  சந்தேகமா இருந்திச்சு.  அதனாலே தான் இந்த தோட்டத்து   காய்கறிங் களைப்  பறிச்சு கொடுத்தா  ஏத்துக் குவாரோ ன்னு  மனசிலே  தோணுச்சு.  எடுத்தாந்து அவர் கண்ணிலே படரா  மாதிரி  வச்சிட்டு  நிக்கேன்''
மஹா பெரியவா விஷயமறிந்து   தலையாட் டினார்.   சிஷ்யர்களை நோக்கி சைகை செய்து, அவற்றை எடுத்துக் கொள்ளும்படி கூறினார். 
" குகன் கொடுத்ததை ராமன் ஏற்றுக்கொண்ட மாதிரி, நாளைக்கு இதெல்லாம் சந்திர மவுலீஸ்வரருக்கு  (மஹா  பெரியவா அனுதினமும்  பூஜிக்கும்  பரமேஸ்வரன்) அர்ப்பணம்,'' என்றார்.

அடுத்ததாக   ''நான்  எதுக்கு  அந்த மதகுக்கு  இந்த பக்கமும் அந்தப்பக்கமும்  சித்தே  நடந்தேன்,  ஏன்  மாறி மாறி திரும்பி நின்னேன் னு  யோசிச்சேளே .அதுக்கு  காரணம் சொல்றேன்'' .
""ஏண்டா! என் முன்னாடி நமஸ்காரம் பண்றவாளுக்கு என் முதுகு தெரியுமோ?'' .

"தெரியாது' என்றார்கள் எல்லாரும்.

""என் முதுகைப் பார்க்கணும்னா என்ன பண்ணனும்? என்னை பிரதட்சணம் பண்ணனும் (வலம் வந்து வணங்க வேண்டும்). அந்த  கிராமவாசி என்னை தரிசனம் பண்ண ரொம்ப நேரமா நிக்கிறான்.  அவன் எப்படி என்னை பிரதக்ஷணம் பண்ணுவான்?  அவன்  எதிர்லே நான் ஆத்ம பிரதட்சணம் பண்ணி னாத் தானே,  முன்னே, பின்னே, பக்கவாட்டி லே எல்லாம் அவன்  என்னைப்  பார்க்க முடியும். இல்லியோ!?'' என்றார்.

அப்போது தான், ஒரு சிவபக்தனுக்கு தன் முழு உருவத்தையும் காட்ட மஹா பெரியவர் அவ்வாறெல்லாம் செய்தார் என்பது சிஷ்ய கோடிகளுக்கும் தொண்டர்களுக்கும்  புரிந்தது. 
அடுத்து  மஹா பெரியவா சொன்னது அவர் மன நிலையை  உணர்த்தியது.  
 "அவன் யாருன்னு  நினைக்கிறேள் ?  அவன் யார்  தெரியுமா? நந்தனார் பரம்பரை'  பக்தி பூர்வமானவன்''
அங்கிருந்து  கருணாசாகரம்  கண்களுக்கு மறையும்  வரை கண்களில் ஆனந்த கண்ணீரோடு  அந்த கிராமவாசி மதகுக்குப்  பின்னே மரத்தடியிலிருந்து  கூப்பிய கரங்களோடு  வணங்கி கொண்டிருந்தது தெரிந்தது.  

--

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...