Friday, April 9, 2021

SALAGRAMAM

 

சாளக்ராமம் (முக்திநாத்)   --   நங்கநல்லூர்   J K  SIVAN 


நான்  சிறுவயதில் வசித்த ஒரு இடத்தின் பெயர் வடபழனிக்கருகே  சாளிக்ராமம் .  அதற்கு ஏன் அந்த பெயர், அதன் அர்த்தம் எல்லாம் தெரியாது.  ஆனால் அது  ஒரு  மறக்கமுடியாத இன்ப மயமான காலம் என்று மட்டும் தெரியும். 

நான்  ஒரு கப்பல்  நிறுவனத்தில்  பணியாற்றியபோது  நண்பர்களோடு  நேபாளம் சென்றேன் .   அங்கே   கண்டகி நதியை   முதன் முதலில்  கண்ணாரக் கண்டேன். அங்கே தான் சாளக்ராமம் என்பதன் முழு விபரமும்  என் அறிவிற்கு எட்டியது.   பிறகு   அறிந்த  அற்புத விஷயங்களைச்  சொல்ல  எனது  26-27 வயதுக்கு பின் நோக்கி  திரும்பி,  இதோ நேபாளத்தில் நான்:  

கண்ணுக்கெட்டியவரை  எங்கும்  ஆலமரங்களாக இருக்கிறது. அதற்கு அங்கே  ''சால மரம்''  என்று பெயர். அந்த நேபாள கிராமம் அமைதியாக இருந்தது.  சாலமரம் நிறைந்த  அது  தான்  சால  க்ராமமா ?   என் எதிரே ஒரு நதி அகலமாக நீண்டு ஓடியது.   அதில் இறங்கினேன். என்னை இழுத்துக் கொண்டு போகிறது.... எங்கே போகிறேன்? சந்தோஷமாக இருக்கிறது.

''ஹே, நதியே புனிதமான  பளிங்கு  நீராக இருக்கிறாயே, உன் அழகு கொள்ளை கொள்கிறதே. உன் பெயர் என்ன சொல்லம்மா?  நான் கற்றுக்கொண்ட பாடம்  நதிகள் புனித பெண்மணிகள். எனவே தான்  ''அம்மா'' சேர்த்தேன். 
நதி சல சலவென்ற  சப்தத்தோடு  பளிங்கு நீராக   களுக் என்று சிரித்துவிட்டு பதில் சொல்லியது.
 
 ''என் பேரா....கண்டகி..''..
''  ஓ   கண்டகி  என்று கேட்டிருக்கிறேன்.  நீ தானா  அது ?''
''ஆமாம் எப்போதுமே  அது தான் என் பெயர்.   நீ சொன்னபடி நான் ஒரு  அழகிய பெண்ணாக இருந்தபோதும் இதே பெயர் தான்.''..
''அட நீ சொல்வது வினோதமாக இருக்கிறதே. நீ எப்போது பெண்ணாக இருந்தாய், இப்போது அழகிய நதியாக அல்லவோ தெரிகிறாய்?''
''நானும் யாரிடமாவது சொல்ல வேண்டாமா? சொல்கிறேன் கேள்.
''நான் விஷ்ணு பிரியை. ஒரு ரிஷியின் பெண். அளவு கடந்த மோகம் விஷ்ணுவின் மேல். என்ன செய்வேன்?
''நீ தவம் இரு உனக்கு விஷ்ணு கிடைப்பார்''  என்று யாரோ சொல்ல  தவமிருக்க  இங்கே வந்தேன். ''
''இந்த நதிக் கரைக்கா?
''அப்போது  இங்கு நதியே இல்லை,  குறுக்கே  குறுக்கே  பேசாதே.   பேசாமல் நான் சொல்வதை மட்டும் கேள். எங்கும் சால மரங்கள்... (SAL ,PINE , FIR, spruce DEVADARU என்று பூகோள புத்தகத்தில் படித்த ஹிமாலய மலை மரங்கள் பேர் ஞாபகம் வருகிறது).   அதன் நடுவே  
என் தவம் துவங்கியது, தொடர்ந்ந் ந் ந் ந் ந் தது.......காலம் வருஷமாகி .வருஷங்களாகியது.  சிறுபெண் அல்ல இப்போது, கிழவி,,,,எனக்கு அந்திம காலம் வந்தது.   என் தவத்தை  ஏற்று  இன்னும்  விஷ்ணு வரவில்லை.    இனியும் விஷ்ணு வரவில்லை என்றால் நான் மடிகிறேன் என்று நினைத்தபோது  ஒருநாள் என் எதிரே,   இந்த வயதான கிழவி முன்,    விஷ்ணு தோன்றினார். அதற்குள் நான் கரைந்து நீராகி விட்டேன்.  

''நாராயணா , இனியாவது நான் உன்னை அடைவேனா? என் மகனாகவாவது  நீ வந்து   வளர்வாயா?

''அம்மா,   உனக்கு என்னை அடையும் நேரம் இப்போது தான் வந்தது... இப்போது மட்டும் அல்ல இனி எப்போதுமே நான் உன்னோடு  தான் இருப்பேன், உன்னிடம் வளர்வேன்,  உன் நதியில் கல்லாக இருப்பேன். நீயும்  இனி இங்கே பெரிய  நதியாக என்றும் ஓடுவாய் .  உனக்கு நான் சூட்டும் பெயர்   கண்டகி'' என்கிறார் நாராயணன்..
''உன்னை எப்படி வளர்ப்பேன் நாராயணா?

''நான் தான் சொன்னேனே, நான் என் பல அம்சங்களாக உன்னிடம் வளர்ந்து உன்னோடு கலந்திருப்பேன் போதுமா. நீ நதி நான் கல். சேர்ந்தே இருப்போம். கண்டகி  இனி உனக்கு திருப்தியா?

''பிரபோ,  என் பெயரை சொல்லி அழைத்தீர்களே, உங்கள் பெயர் என்ன இப்போது, வெறும் கல்லா? என் மகன் பெயர் என்ன என்று தெரியாத தாயா நான்?''

''இல்லை கண்டகி, நான் இந்த சாலமரங்கள் வளரும் கிராமத்தில்    ''சாளக்ராமம்''  என்ற பெயரில் கல்லாக உன்னிடம் வளர்வேன் என்னை என் பக்தர்கள் தேடி வந்து உன்னை வணங்கி எடுத்து செல்வார்கள்.. நான் அங்கும் இங்குமாக இருப்பேன். ....'' என்கிறார் நாராயணன்''.  

என்  எதிரே  கண்டகியைப்  பார்த்துக்கொண்டிருக்கும்  கற்பனை லோகத்திலிருந்து  மீண்டேன்.  என் வாய் என்னை அறியாமல்  ''சாளக்ராமம், சாளக்ராமம்'' என்று  முனகியது.    சாளக்ராமம் பற்றி  விவரங்கள் கொஞ்சம்  சேகரித்தேன்.

முக்திநாத் (Muktinath), இமயமலை நாடான  நேபாளத்தில், ஒரு பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த,
புனித ஸ்தலமாகும். வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் 105வது திவ்ய தேசமாகும்.முக்தி க்ஷேத்திரம் எனப்படும் தாமோதர குண்டத்தில் கிடைக்கிறது

 திருமங்கையாழ்வாரும் பெரியாழ்வாரும்  நடந்தே  வந்து முக்திநாதரைப்  போற்றிப் பாடி மங்களா சாசனம் செய்துள்ளனர்.   இப்போது தான்  முக்திநாத் சீஸன்.  மார்ச் மாதம் முதல் ஜூன்  முடிய முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற காலமாகும்.  இங்கு   கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராம கற்களை  சேகரித்து வைணவர்கள் நாரா யணனின் அம்சமாகக்  கருதி  பூஜையில்  வைத்து வழிபடுகிறார்கள்.

 முக்திநாத்  பற்றி இன்னொரு விசேஷம்,  இது  51 சக்தி பீடங்களில் ஒன்றாக  சக்தி உபாசகர்கள், சாக்தர்கள்,  வழிபடுகிறார்கள்.  முக்திநாத்தை நூறு புனித நீர் நிலைகள் எனப் போற்றி  தாந்திரீக திபெத்திய பௌத்தர்கள்,   டாகினி என்ற பெண் தெய்வத்தின் இருப்பிடமாக கருதுகின்றனர்.

சாளக்கிராமத்தை தொட்டாலே கோடி ஜென்ம பாபங்கள் விலகும். சாளக்ராமம் விஷ்ணுவின் அநேக அம்சங்களில் தோன்றுகிறது.  கண்டகி நதியில் கிடைக்கும்  ஒவ்வொரு சாளக்ராமத்துக்கும் விஷ்ணு சம்பந்தப் பட்ட ஒரு நாமம்.   பாஞ்சஜன்யம், கௌமோதகி, சார்ங்கம். ஸ்ரீவத்சம், கதாதரம்.    எல்லாமே  விஷ்ணு நாமங்கள், அவதாரங்கள் பெயர்கள், இன்னும் எத்தனை எத்தனையோ.

வாசுதேவன் எனும் சாளக்ராமம் வெள்ளை நிறம். ரெண்டு வட்ட கோடுகள் அதன் வாயில் தெரியும். சங்கர்ஷணன் என்பது சிவப்பாக இருக்கும். வாயில் ரெண்டு வட்ட கோடுகள். ப்ரத்யும்னன் என்பது மஞ்சள், சின்னதாக ஒத்தை வட்ட கோடு .அநிருத்தன் என்பது வட்டவடிவம். நீல நிறம். மூன்று கோடுகள் வாயருகே. நாராயணன் என்பது கருப்பு வண்ணம். கதாயுதம் மாதிரி.     
ஒரு உருவம் அதன் வாயில் தெரியும். கிருஷ்ணா என்பது கருப்பு வர்ணம்.பின்பக்கம் கொஞ்சம் சப்பையாக இருக்கும். சாளக்ராமங்களை விவரிக்கவே ஒரு தனி கட்டுரை எழுதலாம்.


நேபாளத்தின் வடமேற்கே. சாளக்ராமம் எங்கிருக்கிறதோ அங்கே மஹாலக்ஷ்மி சமேதராக விஷ்ணு இருக்கிறார். அதற்கு விலையே கிடையாது. உலகத்தில் உள்ள எல்லா தங்கங்களைக்  கொட்டி கொடுத்தாலும் ஒரு சாளக்ராமத்தின் மதிப்புக்கு ஈடாகாது என்பார்கள். சாளக்ராமத்திற்கு சங்கு தீர்த்த அபிஷேகம் செயது பூஜிப்பவன் பாக்கிய சாலி. மரணாந்த காலத்தில் சாளக்ராம தீர்த்தம் அருந்தியவன் மறுபிறப்பற்றவனாம்.
இன்னொரு  விஷயம்  அடுத்த பதிவில் சொல்கிறேன்..





No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...