Thursday, April 22, 2021

PATTINATHAR

 

பட்டினத்தார்    -- நங்கநல்லூர்   J .K. SIVAN

   
பட்டினத்தாரின்  பாடல்கள்  உயர்ந்த  வாழ்க்கைத்  தத்துவத்தை  எளிதில் இனிய  சுலப தமிழில் போதிக்கும் தன்மை கொண்டவை என்பதை அறிவீர்கள்.  இன்று இன்னும் சில பாடல்கள்.

மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ?
தினையாமளவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே (12,பொது)

பெண்டாட்டி, குழந்தை குட்டிகள்,  நாம் சம்பாதித்து சேமித்து வைத்த செல்வம், வீடு வாசல் எல்லாம்   வீட்டு  வாசல் தாண்டாத சொந்தங்கள் , உறவுகள். அதற்குப்பிறகு அவை யாரோ நாம் யாரோ.  பெற்ற  தாயானாலும்   உயிரிழந்த பிறகு  அவளுக்கு அவன்  பிணம், சவம் தானே.    ஆபரணங்கள்,  பொன்  நகை, எல்லாம்  வசூலித்த   பெண்களும்  போ என்று தான்   சொல்வார்கள்.  எல்லா நன்மையையும் பெற்ற மைந்தரும்  சடலமான பின் சுற்றிவந்து  மண் பானையில் ஜலத்துடன்  போட்டு உடைத்து விட்டு  திரும்பிப் பார்க்கப்போவதில்லை.    என் தெய்வமே,  உன்னை விட்டால்  எனக்கு வேறு  பற்றுதல் எதுவுமில்லையே. நீ தான் எனக்கு பரலோகம் அருள்பவன். 


முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.

எப்படிப்பட்ட   ராஜாவாக, சக்ரவர்த்தியாக இருந்தாலும்  கடைசியில்   வெறும்  ஒரு   கைப்பிடி சாம்பல் தானேடா.  இதைக் கண்ணார பார்த்தும் நன்றாக  அறிந்தும்,   ஏன்  இன்னும்    இந்த வாழ்வின்  அநித்தியம்  புரியவில்லை?  . கனகசபாபதி  தரிசனம் பெற்று  அவன் திருவடி சரணம் அடையவேண்டும் என்று மனதுக்கு  ஏன் தோன்றவில்லை?.   


கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

காஞ்சிபுரத்தில் கருணை புரியும்  ஏகம்பவாணா ,  நான்  கல்லாதவன் , அறியாத அஞ்ஞானி.  உன்னை ஒரு கணமும் நினைக்காதவன். உன்னை நினைத்து உருகி உருகி கண்ணீர்   உகுக்காதவன்,  ஒரு தரமாகிலும்  ஓம் நமசிவாய என்ற உன் ஐந்தெழுத்தை  சொல்லாத  மூடன்,  உன்னைக்   கோவிலிலோ,  வேறு எங்குமோ  சென்று காணாதவன்,  தொழாதவன், வணங்காதவன்,  இத்தனை  தப்புகள் பண்ணின என்னை மன்னித்து  அருள்வாய் அப்பனே.


வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தை
போதுற்ற எப்போதும் புகலும் நெஞ்சே? இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியம் என்?
காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே

உடலில்  திமிர்  இருந்தபோது  எதிர்த்து  வாதம் செய்தவன்  மாறிவிட்டேன்.  அருணாசலேஸ்வரா , உன்  பொற்பாதங்களுக்கு  புஷ்பங்களை அர்ச்சித்து  உன் திருவடியே கதி என புரிந்து கொள்வேன்.  இந்த  பூமியில்  தீய வழிக்கு  கொண்டு செல்லும்  செல்வத்தால் என்ன பிரயோஜனம்? , திருடர்கள் கள்வர்கள் கண்ணில் படக்கூடாது என்று ஜாக்கிரதையாக  எங்கோ புதைத்து வைத்து அதால்  என்ன பயன்?   சே.  ஒரு  துணி தைக்கும் காதில்லாத,  ஊசியில்  நூல் புகும் துளை உடைந்த ப்ரயோஜனமில்லாத  உடைந்த ஊசி கூட  கடைசியில் கூட வரப்போவதில்லையே...


உடை கோவணம் உண்டு, உறங்கப் புறத் திண்ணை உண்டு உணவு இங்கு
அடை காய் இலை உண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந் துணைக்கே
விடை ஏறும் ஈசர் திரு நாமம் உண்டு இந்த மேதினியில்
வட கோடு உயர்ந்தென்ன, தென் கோடு சாய்ந்தென்ன வான் பிறைக்கே?

இதோ என்  சிறந்த ஆடை, ஒரே ஆடை, என்  கோவணம் தான்.    உடம்பு அசதியாக இருந்தால்  சாய்ந்துகொள்ள எங்கோ  ஒரு திண்ணை. வயிற்றை அடைக்க  அவ்வப்போது தேவையான  இலையோ , காயோ கிடைக்கும்.   தாகம் தீர்க்க  எப்போதும்  குடிநீர்  எங்கும் உண்டு.  ஆஹா  எனக்கு பக்கத் துணையாக  ரிஷப வாஹனன் பரமசிவனின்  திருபெயர்  நமசிவாய என்று வாய் மணக்க சொல்வதற்க்கு  அவன் நாமம்  இருக்கிறதே.   எனக்கென்னய்யா கவலை?.  வடக்கே  இமயமலை இன்னும்  உயரமாக வளர்ந்தால் என்ன, தெற்கே  விந்தியமலை தான் தரையோடு   சாய்ந்தால் என்ன.  கால் மேல் கால்  போட்டுக்கொண்டு  திண்ணையில், மரத்தடியில் படுத்து  சிவசிவா என்று  பாடுகிறேன்.



பட்டினத்தாரை தொடர்வோம் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...