Thursday, April 22, 2021

pattinathar


 

பட்டினத்தார்    -- நங்கநல்லூர்   J .K. SIVAN


பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா
திறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே

பிறக்கும்போது  எவன் எதை கொண்டுவருகி றான்?  வெறும் கையை  பிஞ்சு விரல்களால் மூடிக்கொண்டு தான் அழுதுகொண்டு ஆடைகூட இன்றி  வெறுமனே வருகிறான்.  போகும்போதும்,  அவன் பேரில் என்ன தான் குபேர சொத்து இருந்தாலும் ஒரு செல்லாத  காசு கூட  அவன் எடுத்துக் கொண்டு போக முடிவதில்லை.   இதற்கிடையில்  எத்தனை வருஷங்கள் வாழ்ந்தாலும் அந்த இடைவேளைகளில்  அவன்  பெறுவது, சேமிப்பது, எல்லாமே யார்  தந்தது.  என்னப்பன்  சிவன் தந்ததல்லவோ அத்தனையும்.  இதை  அவன் திருப்திப்படும்படியாக  மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால் என்ன?  இல்லாதவர்களுக்கு கொஞ்சம் கொடுத்தால்  என்ன?  ஏன்  இப்படி ஒரு எண்ணம் தோன்றுவதில்லை எவருக்கும் செல்லப்பா  காஞ்சிபுரம்  ஏகாம்பரேஸ்வரா?  என்று யோசிக்கிறார்  பட்டினத்தார்.


“உலகப் பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்”

போனவாரம்  என்னுடன் நன்றாக பேசியவன் இன்றில்லை. கொரோனா விழுங்கிவிட்டது.  இந்த உலகத்தில் எவர் எப்போது இருப்பார் இல்லாமல் மறைவார் என்று நம்பவே முடியவில்லை.  இந்த உடல் நிரந்தரமானது, நம்பகமானது அல்ல. இதை  போற்றி வணங்கவேண்டாம். அதைப் பாதுகாக்க நம்மால் முடியாது.    ஒன்று நிச்சயம்  அப்பா.  இதெல்லாம்  உலகில் தோன்றியதோ, அதெல்லாம்  நிச்சயம் ஒருநாள் மறைந்தே தீரும்.   மறைந்து போனதெல்லாம்  மீண்டும்  வேறு ஒரு உருவில் தோன்றும். எந்த உருவும் நிரந்தரம் அல்ல.  நானே 5 வயதில், 15 வயதில், 35 வயதில், 50வயதில்  75ல் இப்போது 82ல்  எப்படியெல்லாம்  மாறிவிட்டேன். இது என் போட்டோவா?  நான் இப்படியா இருந்தேன்... என்கிறோமே.


நாய்க்குண்டு தெண்டு, நமக்குண்டு பிச்சை, நமனை வெல்ல
வாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சரம், மதியாமல் வரும்
பேய்க்குண்டு நீறு, திகைப்புண்டு நின்ற பிறவிப்பிணி
நோய்க்குண்டு தேசிகன் தன் அருள், நோக்கங்கள் நோக்குதற்கே (43,பொது)


பொது இடங்களிலோ, வீட்டிலோ   நாம் ஏதாவது சாப்பிடும்போது எதிரில் ஒரு நாய் இருந்தால், அதன் பார்வை நாம் சாப்பிடுவதன் மேலேயும்  நமது கண்கள் மேலேயும் இருக்கும்.  நாக்கை தொங்கவிட்டுக்கொண்டு  ''எனக்கும்  கொஞ்சம் கொடேன்'' என்று கேட்கத்தெரியாமல்  அதன் பசி கலந்த  தீனமான பார்வை உங்களுக்கு தெரியும்.   அது அப்படிதான் கெஞ்சி பிழைக்கும். நாம்  வாய் திறந்து ''அம்மா தாயே, பசிக்குது. சோறு போடு '' என்று கேட்கிறோம்.  பசியை இப்படி வெல்கி றோம்.  இதோ எதிரே  யமன் நிற்கிறான் நம்மைக் கொண்டு போக, அவனை விரட்ட  இருக்கவே இருக்கிறது ஓம்  நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.  நம்மை துளியும்  லக்ஷியம் பண்ணாமல் நம்மை விரட்டும்  பேய் அகலவேண்டுமா ?  சூ மந்திரக்காளி  என்று  மந்திரித்த விபூதி. அதை விரட்டும்.  இப்படி காலம் காலமாக  பல ஜென்மங்கள்  பிறவித்துயரில் வாடும் நமக்கு  ஆசார்யன் அருள், இருந்தால் போதும்  கிருஷ்ணன் ஞானாச்சார்யன்,   சிவன்  மஹா குரு.  அவனை நோக்குவோம்.  பிணிகள்  அகலும்.


கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால்
எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே (2, திருவேகம்பமாலை)


கோபால் போய்ட்டான். மேலே விழுந்து அலறும் மனைவி மக்கள், உறவு அனைவருடைய  உணர்ச்சிகளும் சில மணி நேரங்கள் மட்டும் தான்.  பெரிய  மரத்தை வெட்டி வீழ்த்துகிறான் மரம் வெட்டும் தச்சன்.  காலன் எனும்  தச்சன் இந்த உடல் என்னும் விருக்ஷத்தை ஒருநாள் வெட்டி வீழ்த்துவதால் விழுந்து கிடக்கிறோம் .  மயானம் வரை தான் இந்த தாரை தம்பட்டம், அழுகை  மணி எல்லாமே.  அப்பறம்  கொஞ்சம் கொஞ்சமாக  மறந்து போகிறது.   இது தான் உன் வியாதியா  காஞ்சிபுரம்  ஏகாம்பரேஸ்வரா.  

பட்டினத்தார் இன்னும் படிப்போம் 
   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...