Monday, April 26, 2021

OLDEN DAYS WEDDINGS


 


பழைய  நினைவுகள்.     நங்கநல்லூர் J K  SIVAN 


''அப்போ  இப்படியெல்லாம்  நடந்தது..''..

ஐம்பது அறுபது வருஷங்கள் முன்பு கல்யாணங்கள் எப்படி நடந்தன?.  இப்படி த்தான்  என்று  ஒரு வரை முறை சொல்ல முடியாது. 
பெண் வீட்டில் ஒரு நல்ல நாளில் தை  பிறந்ததும்,  பெண்ணுக்கு குருபலன்  வந்துவிட்டது,  வரன் தேடவேண்டும் என்று  பெண் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு  ஜோசியர் வீட்டுக்கு போவார்கள். அப்போது பெண்ணுக்கு  18 வயது நெருங்கி கொண்டிருக்கும்.  கல்யாண ஏற்பாடுகள் முடிவதற்குள் பெண் மேஜர் ஆகிவிடுவாளே. எதற்கு டைம் வேஸ்ட் பண்ண வேண்டும்?

 சொந்தத்தில்,  கல்யாணங்களில்,  பண்டிகை  சந்திப்புகளில்  பெண்ண்ணுக்கு  வரன்   தேடும் விஷயம் பரவும்.  குடும்ப  ஜோசியர்கள்  ஒரு டாட்டா பேங்க்,   data bank .  நிறைய  பிள்ளைகள்   பெண்கள்  ஜாதகங்கள்  வைத்திருப்பார்கள் . . பொருத்தம் பார்த்து சொல்வார்.  பெண் பிள்ளை  ஜாதகம்  எட்டு பொருத்தம்  பார்த்துவிட்டு  மேலே  நடக்கட்டும் என்பார் ஜோசியர்.

அப்பறம்  பெண் வீட்டுக்காரர்கள்,  முக்கியமாக  அப்பா, அம்மா, மாமா  மாமி  பிள்ளை வீட்டுக்கு போவார்கள்.  ஜாதகம் பொருந்தியிருக்கு என்று சொல்வார்கள்.  பிள்ளை வீட்டுக்காரர்கள்  ஆஹா சந்தோஷம். எங்க ஜோஸ்யரையும்  ஒருவார்த்தை  கன்சல்ட் பண்ணிட்டு  சொல்றோம் என்பார்கள்.  மூணு நாலு  இடத்திலே  பெண்  பிள்ளை  தேர்ந்தெடுத்து வைத்திருப்பார்கள். ஏதாவது ஒன்றை  நிச்சயம் பண்ணவேண்டும். 

க்ராமங்களிலோ, பட்டணங்களிலோ,   பையன் உத்யோகம், குடும்ப சரித்திர விஷயங்களை  எல்லாம்  மெதுவாக சேகரித்து வைத்திருப் பார்கள். இதுவும்  முடிவில் நிச்சயம் பண்ண உதவும்.

அப்புறம் பெண் பார்க்கும் படலம்.  பிள்ளை வீட்டுக்காரர்கள் பையனோடு  ஒரு குறிப்பிட்ட  நாளில்  முன்பே அறிவித்தபடி  பெண்  வீட்டுக்கு செல்வார்கள்.  கூடவே  நிறைய  நெருங்கிய உறவுகள் ஜோடியாக செல்வார்கள்.  பெண் வீட்டில் தடபுடலாக ஏற்பாடுகள்.  வாசலிலேயே காத்திருந்து  வரவேற்பார்கள். பெரிய  மாக் கோலம், தோரணம் எல்லாம் கூட கட்டி இருக்கும். பெண் கண்ணில் படமாட்டாள். பிடில்,  ஹார் மோனியம்,  வீணை  ஏதோ ஒன்றுடன் தான் வருவாள். பாடவேண்டும்.  பட்டுப்பு டவை, ஏராளமாக நகைகளோடு, பட்டுப்பாயில் அழைத்து  உட்கார வைப்பார்கள்.  அதற்குள்  வீட்டு  ஹாலில்  கூட்டம்  நிறைந்து விடும். பாயில் உட்கார இடம்  இருக்காது.  ஒன்றிரண்டு  நாற்காலிகள்  வயதான  பிள்ளை வீட்டுக்காரர் கள்,  சில  சமயம் மாப்பிள்ளை கூட  ஒரு நாற்காலியில்   உட்கார்ந்திருப்பார்.  அவர்  அதிகம் பேசமாட்டார்.  கூட வந்த மாமா  மாமிகள்  கூடி ப்  பேசுவார்கள். கல்யாணம் எங்கே, எப்போ, என்னென்ன  சீர்  செய்வார்கள்,  மாப்பிள்ளைக்கு...........   எல்லாம்  பேசி முடிப்பார்கள். பெண் ஒரே பெண்ணா,  மூன்று நாலுக்குள் ஒன்றா, பெண்ணின் அப்பாவின்  உத்யோகம்,   பூஸ்திதி,  வசதிகள் எல்லாம் ஆராயப்படும்.   அதற்கேற்ப சீர்  செனத்திகள்  மாறுபடும்.  இப்போது  போல் கண்டிஷன்கள்  .போடாதவர்கள். 

பேச்சு  மட்டும்  ''எங்களுக்கு பெண் தான் முக்கியம், மற்றதெல்லாம்  ''அப்புறம்''.  பிள்ளைக்கு  பெண்ணைப் பிடிக்கணும் அது தான் முதல்லே'' என்று தான்   ஆரம்பிக்கும்.

அமெரிக்க  ரஷ்யா  சண்டை,  ஐநா சபை வரை  பற்றிய  பேச்சுக்கள்  பேசுவார்கள். நடுநடுவே  கல்யாண சமாச்சாரங்கள் எல்லாம்  கலந்திருக் கும்.  பிடி   கொடுக்காமல்  அமர்த்தலாக  பிள்ளை வீட்டார் பேசுவார்கள்.   ''பெண்ணைக் கூப்பிடு ங்கோ''.    இது தான்  முக்ய காட்சி.   

பெண் உயரமா,  குள்ளமா குண்டா, ஒல்லியா, மாநிறமா சிகப்பா  என்றெல்லாம் கூறிய கண்கள் நோக்கும். பல் வரிசை, மெல்லிசாக பேசினால் காது கேட்கிறதா,  நடக்கும்போது கால் நொண்டு கிறதா, அடேயப்பா  கழுத்தில் கையில்  உள்ள நகைகள் கூட   பிள்ளை வீட்டு மாமிகளின்  எக்ஸ்ரே கண்களுக்கு தப்பாது.  அப்புறம்  தான்  பாட்டு.  குரல் எப்படி இருக்கிறது.  பெண்  பயந்து  கொண்டு  தயார்    செய்து வைத்திருக்கிற  பாட்டை பாடும்.  காப்பி டவராக்களை  ட்ரேயிலோ தாம்பாளத்தில்   வைத்தோ   எல்லோருக்கும்  நீட்டும்போது  கை நடுங்கும். மாப்பிள்ளைக்கு  தனியாக  ஒரு சில  நிமிஷங்கள்  டிலே பண்ணி கொடுக்கும்.   முகம் பார்க்க தயங்கும்.   மாப்பிள்ளை  பெண்ணின் முகத்தை யே பார்த்துக்கொண்டு டவராவை தவறவிடுவது  சில சமயங்களில் நடக்கும்.   லவ்  பண்ணி கல்யாணம் பண்ணாத காலம்.

பெண்ணுக்கு சமைக்க தெரியுமா?.   கூட்டுக் குடும்பம், பல  பெரிசுகள்  இருக்கும் வீடு . எல்லோரையும் கட்டி காக்க வேண்டும் என்று  எச்சரிக்கைகள்  ஒற்றுமையாக  பொறுமையாக வீட்டில் உள்ள  அரை டஜன் குழந்தைகளை  கவனிக்க வேண்டும்.   அக்காலத்திய பெண்கள்  உத்யோகக் செல்பவர்கள் இல்லை.  வீட்டு வேலைக்கு இன்னொரு ஆள்.  பூஜை எல்லாம் பண்ணுவாளா?  பண்டிகை பக்ஷணங்கள் பண்ணுவாளா? விடிகாலம்பற  குளிச்சுட்டு தான் எங்க கிரஹத்திலே அடுப்படி போவோம்.  மாடு கறப்பாளா ?  எங்க வீட்டுலே  ரெண்டு காராம்பசு கன்னுக்குட்டி இருக்கு''.

பெண்  தியாகராஜ ஸ்வாமிகள் பாட்டு  பாடிய தை  எவரும்  கேட்டதாக  சரித்திரம் இல்லை.  சங்கீதம் ரசிக்கும் வேளை  அல்ல அது.   வெற்றிலை பாக்கு பழங்கள் தட்டுகள்  இருபக்கமும் வைக்கப்படும்.   பஜ்ஜி சொஜ்ஜி என்று காரம்  இனிப்பு  அயிட்டங்கள் வீட்டிலேயே செய்து வைத்திருப்பார்கள்.  கடலை எண்ணெய் , நெய் , தான் .   விறகு அடுப்பில்  கமகம என மணத்தோடு  செய்யப்பட்டு  தட்டுகளில் வரும் 
  ஊர்லே பாட்டி  அத்திம்பேர் ஒண்ணு விட்ட   மாமா கிட்டே   சொல்லிட்டு லெட்டர் போடறோம்......என்று  பிள்ளை வீட்டு கும்பல் வெளியேறும்.   பெண்  வீட்டில் தேர்தல் முடிவு  போல .ஆர்வமாக காத்திருப்பார்கள்.   

பிள்ளை வீட்டிலிருந்து   ஒரு போஸ்ட் கார்டு வந்தால் முதலில்  நாலு முனைகளை பார்ப்பார் கள்  நிச்சயம் ஆய்விட்டது  என்றால்  கார்டு ஓரத்துல மஞ்சள்  குங்குமம்   தடவி இருக்கும்.  இரண்டு பக்கத்து சொந்தகாரர்கள்,  அண்டை அசல் எல்லா   குதூகல செய்தி  தந்தி போல் பறக்கும்.

இன்னும்  சொல்வேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...