Thursday, April 15, 2021

VSS RAMAYANA LECTURE

 


சாஸ்திரிகளின் முப்பது நாள் ராமாயணம்-   7
நங்கநல்லூர்  J K SIVAN

 
ராமனின்  மனதை  உறுத்திக்கொண்டே  இருந்த எண்ணம். 
 '' சீதை  நாணயமானவளா?  எனக்கு சிறிது சந்தேகம் இருந்தபோது  அக்னிபரீக்ஷையில்  தேறிவிட்டாள் .   ஆனால்  ஊரில் அபவாத  பேச்சு,  அவளை பற்றி கேள்வியுறும்போது  ராமனின்  மனதில் முன்பு  சிறிதாக  இருந்த சந்தேகம் விருக்ஷமாகி வளர்ந்து  நிர்தாக்ஷண் யமாக அவளை  கர்ப்பிணியாக இருந்தும்  நாடு கடத்தச் செய்துவிட்டது.  

 இந்த செயல்  சற்று ராமனின் மேல்  அதிருப்திப்  பட வைக்கிறது. ஏற்றுக் கொள்ளமுடியவில்லை  என்கிறார் சாஸ்திரிகள்.  வால்மீகி  ஸ்லோகம்  அப்படி சொல்கிறது.  நானோ சாஸ்திரியோ சொந்தமாக அபிப்ராயம் தெரிவிக்கவில்லை.    

ராமன்  சகோதரர்களை அழைக்கிறான்,  நமது  குலத்திற்கு இப்படி ஒரு  கெட்டபெயர் வருமானால் முதலில் உங்களையெல்லாம் கொன்றுவிட்டு நானும்  என்னை மாய்த்துக்கொள்வது ஒன்றே வழி.   உலகத்தில் தனது பெயர் கெட்டுப்போனவனை கடவுளும் வெறுப்பார்.  என்கிறான்.

 சீதையைப்  பற்றி  துளியும் கவலைப்படவில்லை ராமர்.  ஒன்று புரிந்து கொள்ளவேண்டும். ராமர் காலத்தில்  பெண்கள்  ஆண்களின் சொத்து. போகப் பொருள். ஆண்களின்  எண்ணமே, தீர்ப்பு.   எப்போதும் முடிவானது.  ஆண்களின்  கௌரவத்துக்கு,  சமூக அந்தஸ்துக்கு முன்  பெண்கள் சுய கெளரவம் அற்றவர்கள். அவர்கள் பேச்சு எடுபடவில்லை.    ஆகவே  தான்  ராமர்  சீதையை  நாடுகடத்தினார். அவள்  வாதத்தை கேட்கவில்லை.  ராமரின் சகோதரர்கள்  குனிந்த தலை நிமிரவில்லை.  ராமன் முடிவே முடிவு என ஏற்பவர்கள்.

ராமரின்  பெருமைக்கு  களங்கம் விளைவித்த,  கறை படர்ந்த நிகழ்ச்சி இது.  மனைவியின்   நடத்தையில் சந்தேகம் கொண்ட  ஒரு  கணவனின்  பொறாமைச் செயல்.

ராமாயணத்தில் மூன்று சகோதர்கள்  ராஜ்யதிகாரத்துக்கு  போட்டியாக இருந்தவர்கள்.  மூவருமே   தம்பிகள்.   சுக்ரீவன்,  விபீஷணன்  இருவரும்  அண்ணனால் உயிரிழக்காமல் தப்பியவர்கள்.  அண்ணன் மறைவுக்குப்   பின்னர்  ராஜாவானவர்கள் , சுக்ரீவனும்  விபீஷணனும்  அப்படி என்றாலும் பரதன் அண்ணனால் தனக்கு கிடைத்த  ராஜ்யத்தை வேண்டாம் என்றவன்.  அண்ணன்  வரவுக்காக  அதை தியாகம் செய்தவன்.  அண்ணன் மீது அளவற்ற பக்தி கொண்டவன். மற்ற இருவரை விட இவன் வித்யாசமானவன்.

லக்ஷ்மணனையும்  பரதனையும் ஒப்பிடுகையில்,  லக்ஷ்மணன் மீது   அவன் ஒரு பச்சைமிளகாய். சட்டென கோபம் கொள்பவன், அடுத்த நிமிஷமே  சாந்தமாகி  விடுபவன். படபடப்புக் காரன்.   அண்ணனைத் தெய்வமாக வழிபட்டவன்,   என்கிற  அன்பு நமக்கு  மேலிடுகிறது.  

ஆனால்  அதே சமயம்  பரதன் மேல் அளவற்ற மதிப்பு, மரியாதையும் உண்டாகிறது.  ஸ்திர புத்திக்காரன்.  தன்னம்பிக்கை கொண்ட  நேர்மையாளன்.  அவர் செய்தது தவறு  என்று  வசிஷ்டரையே  எதிர்த்தவன்,  ஞானி என்ற உணர்வு ஏற்படுகிறது.  

கோபத்தில் கௌசல்யா பரதனை ஏசுகிறாள்.  அக்னிகுண்டத்தை  அவனிடமிருந்து  பிடுங்கி  ''நீ  உன் தந்தை  தசரதனுக்கு கொள்ளி போட லாயக்கு இல்லாதவன்''   என்கிறாள்.  பரதனோ  நான் ராமன் வனவாசம் செல்வதற்கு காரணமாக இருந்தால்  இந்த கணமே  அதே அக்னி என்னை ஆட்கொள்ளட்டும் என்று தனது தலைமேல் அடித்து சத்தியம் செய்கிறான்.  

 பரதனுக்கு எப்படி  ஒரு ஐடியா இப்படி வந்தது.  ராமன் வராவிட்டால் அவன் பாதுகையாவது ஆளவேண்டும் என்று.   இது  இன்னொரு விஷயத்திலும் புரிகிறது.  அயோதித்திக்கு அவசரமாக திரும்பி வந்த பரதன் அவன் அம்மா கைகேயி செய்த விஷயங்களை, ஏற்பாடுகளை அறிந்து கோபமும் வருத்தமும் அடைகிறான்.  ராமனுக்கு பதில் பதினாலு வருஷம் நான் காட்டுக்கு போகிறேன் என்று ஆரம்பிக்கிறான்.  ஒன்றுக்கு பதிலாக மற்றொன்று என்ற எண்ணம் அவன் மனதில் முன்பே  இருந்திருக்கிறது.

ராமனும் சீதையும்  படுத்திருந்த  புல் தரையை பார்த்து கண்ணீர் வடிக்கிறான்.  அங்கே  சீதையின் நகை  களிலிருந்து உதிர்ந்த சில  தங்க துகள்களை பார்க்கிறான் என்கிறார்  வால்மீகி.  அந்த காலத்து பொன்னாபரணம் செய்யும்  தட்டார்கள் அவ்வளவு  மட்டமாகவா   உதிரும்படி   நகைகளைச்   செய்வார்கள்?    

பாரத்வாஜ  மகரிஷி ஆஸ்ரமம் போகும்போது பட்டாடை அணிந்திருந்த  பரதன்   பிறகு ராமனை பார்க்கும்போது அவன் மரவுரியை கண்டு  துயரம் கொண்டு  தானும்  மரவுரி தரிக்க எண்ணுகிறான்.

''சத்ருக்னா , அண்ணா ராமனின் திருப்பாதங்களை தரிசிக்கும் வரை எனக்கு  நிம்மதி இல்லை''  என்கிறான்.
 பாரத்வாஜ மகரிஷியிடம்  தனது தாய்  கைகேயியின்  தீய எண்ணங்களைப்  பற்றி ஏசுகிறான். பிறகு  ராமனிடம், ''அண்ணா நீ  ஏற்றுக்கொள்ளமாட்டாய்  என்ற  பயத்தினால்  நான் அவளை கொல்லாமல் விட்டேன்''  என்கிறான்.

சித்ரகூடத்திற்கு  கௌசல்யா சுமித்ராவுடன்  கைகேயியும்  வருகிறாள். தனது செயலுக்கு வருந்துகிறாள். அப்போதும்  பரதன் மனம் இளகவில்லை.   ராமன்  கைகேயியை கண்டதும்  மற்ற இரு அன்னைகளை  வணங்குவது போல் அவளையும் மரியாதையுடன் வணங்குகிறான்.  அவளைப்பற்றி உயர்வாக பரதனிடம் பேசுகிறான்.  பரதனை அவளுக்கு    தாய் ஸ்தானத்துக்குண்டான உரிய மரியாதைகளை கொடுக்கவேண்டும் என்று வற்புறுத்துகிறான்.

சாஸ்திரிகள் ராமாயண பிரசங்கம் தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...