Tuesday, April 27, 2021

OLDEN DAYS WEDDING


 

பழைய  நினைவுகள்.     நங்கநல்லூர் J K  SIVAN

சமையல்காரருக்கு  நிமிஷத்துக்கு  ஒரு  இன்ஸ்ட்ரக்ஷன் INSTRUCTION   பறக்கும்.  
'' மாப்பிள்ளைக்கு  காரம்  ஒத்துக்காது.  தனியா சாம்பார், ரசம், கறி  எல்லாம்  எடுத்து வச்சுட்டு அப்புறம் காரம் உப்பு எல்லாம் சேத்துக்குங்கோ.  பால்  பாயசத்தில் சக்கரைக்கு பதிலா  வெல்லம் போட்டா  தான் சம்பந்தி சாப்பிடுவார்.'' அதற்குள் இன்னொரு மாமி  ஓடி வருவாள்:  அவள் நிச்சயம்  மாப்பிள்ளைக்கு  அத்தையோ, சித்தியோ பெரியம்மாவோ , மாமியோ தான்... சம்மந்தி மாமி அதான், பெண்ணோட அம்மாக்கிட்ட:  

 ''எங்க பக்கத்து வயசான பெரியவாள்ளாம் காசிக்கு போயிட்டு வந்துருக்கா.  அவாளுக்கு சேஷமில்லாம மடி சமையலுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ.  கொத்தவரங்கா,   பாகற்கா,  வெண்டைக்கா  சேக்கவேண்டாம் ''

முகூர்த்த சாப்பாடு  ஆனபிறகும் கமெண்ட் வந்துகொண்டு தான் இருக்கும்.

''காலம்பற  காப்பி  திக்காகவே இல்லை , சுத்தமா  கழனி ஜலம் னு  பிள்ளயாத்துக்காரா  பேசிக்கிறா. இப்படி பண்ணுவாளா? யார்  பாயசம் மாதிரி இத்தனை சக்கரை போடறது?.  காபி போட தெரியாத வாளா பாத்து  ஏற்பாடு பண்ணிருக்கு போல இருக்கு''.

''உங்க கிட்டே  சொல்லாம  இருக்க முடியலே... சொல்லிடறேன்...
முகூர்த்த சாப்பாட்டுல இலைக்கு போட்ட குஞ்சாலாடு கண்ணுக்கே தெரியலே.  குணுக்கா  ன்னு  பையன் கேட்டான்..   ஸ்ரீ ஜெயந்திக்கு  பண்ற   உப்பு சீடை சைஸ்ல இருந்த லட்டுவுக்கு  பெத்த பேரா   குஞ்சாலாடு?  ன்னு சொல்லி சிரிக்கிறா . அதுக்குள்ளே  ஒரு மாமா  ''சின்ன குழந்தைகளை விட்டு  அதுகள் கையால  குஞ்சாலாடைப்  பிடிக்க சொல்லி இருப்பா...ஹெஹெஹெ''  என்று சிரிப்பு.,

 வெத்தலை வாழை இலை சைசுக்கு இருக்குன்னு ஒரு கம்மெண்ட்.  

  பஞ்சகச்சம் கட்டிக்கிற  வேஷ்டிக்கு கரை இவ்வளவு சின்னதா இருக்கே. எந்த ஊர்லே  வாங்கினது?''

இதெல்லாம் அந்தக்கால  வழக்கமான  பிள்ளை வீட்டாரின்  முள் குத்தல்கள்.  பெண் வீடு   மூச்சு திணறும்.  அன்றைய பொழுது முடிந்து மறுநாள் காலை மேள தாளங்களோடு  மாப்பிள்ளை  காசியாத்ரைக்கு   மங்கள ஸ்நானம் பண்ணிட்டு  ரெடியா நின்னுண்டு இருப்பான். அவனுடைய பெரியம்மாவோ, சித்தியோ அத்தையோ ஒருத்தி   கண்ணுக்கு மையிடறேன்னு  நெத்தி கன்னம் எல்லாம் மையை அப்பி விடுவாள்.  கரிப்பானையிலே  மூஞ்சிய விட்ட  பூனை மாதிரி  மாப்பிள்ளை மயில்கண் வேஷ்டி பஞ்சகச்சத்தோடு கையில் விசிறி, வேத புஸ்தகம் கையில் சிறிய  மூட்டையோடு காசியாத்திரை புறப்பாடு.

ஒரு மாமி  எலிக்குஞ்சு மாதிரி  ''தசரத  ராஜ குமாரா   .. என்று  திருப்பி  திருப்பி  பாடிக் கொண்டிருப்பாள்  யாரும் கேட்க வில்லை என்பதை அவள் லக்ஷியம் பண்ணவே மாட்டாள். 
பெண் வீட்டு சாஸ்திரிகள்  பெண்ணின் அப்பாவிடம்  சொல்லிக்  கொடுப்பதை அவர்  உணர்ச்சி இன்றி  சொல்வார் : 

 ''மாப்பிள்ளே ,   நீங்க  காசி யாத்திரை போகாதீங்
கோ,   போகவேண்டாம்.  உங்களுக்கு  எங்கள் குமாரத்தியை கன்னிகாதானம் பண்ணித்தரப் போரோம்...  நீங்கள்  அவளை  கையைப் பிடிச்சு  ணிக்ரஹணம் பண்ணிக்கனும்.  வாங்கோ''

அப்புறம்  மாலை மாத்தற  சம்பவம் நடைபெறும்.   நல்ல குண்டு மாப்பிள்ளை.  இருந்தாலும்  அவனுடைய  மாமாக்கள்  ஒல்லிப்பிச்சான்  கள் ரெண்டு பேர் உதவியோடு  முழு பிதுங்க அவனைத் தோளில்  தூக்கிக்கொண்டு  ஓடுவார்கள்.  ஆடுவார்கள்.   பெண்  வீட்டு மாமாக்கள் கொடுத்து வைத்தவர்கள்.  40 கிலோ தாண்டாத ஒல்லிக்குட்டி  அவள்.  சுலபமாக  தூக்கிக்கொண்டு  ஆடுவார்கள்.  உறவு  ஊர்க்காரர்களுக்கு  ஏக குஷி. கொண்டாட்டம்   மாமிகள் புஸ்தகம் வைத்துக்  கொண்டும் இல்லாமலும்    '' மாலை மாற்றினாள்   கோதை  மாலை  சாத்தினாள்  '' என்று கோரஸாக  பலவித குரல்களில் பாடுவார்கள். பெண்  மன்மதனுக்கு  மாலையிட்டாள்   என்று  பாடி கைதட்டுவார்கள்.   நாதஸ்வர கோஷ்டி  பின்னி எடுத்து விடும்.
ஊஞ்சல் பலகை  மாக்கோலங்களோடு புஷ்ப தோரணங்களோடு தயாராக இருக்கும். அதைச்சுற்றி அடுத்த  கோஷ்டி தயாராகும்.
கன்னூஞ்சலில்  பெண் மாப்பிள்ளை  உட்கார அருகில்  அரை  டஜனுக்கு மேலே  குழந்தைகள் அலறிக்  கொண்டு உட்கார  பால் பழம் கொடுப்பது,  பச்சைப்  புடி  சுற்றுவது என்று சம்ப்ரதாயங்கள்  தொடரும்.  ஒவ்வொரு மாமியும்  ஒவ்வொருவிதமாக  லெக் ஆப்  ஸ்பின்,   பேஸ்  மீடியம் பேஸ் ,  பௌன்சர்,  கூக்ளி  மாதிரி  கலர் கலராக  பச்சை புடி சுத்தி போடுவாள்.  நிச்சயம்  எங்கோ பராக் பாத்துக்கொண்டிருக்கும் சிலர்  தலையில் சட்டையில் எல்லாம்  கலராக  அது விழும்.

''பெண் தான்  காஞ்சனமாலை.   வழக்கம் போல்  கன்னூஞ்சல் ஆடினாள்  காஞ்சனமாலை.... என்று  மறுபடியும் மாமிகள் குழு பாடும்.  ஆரத்தி எடுத்த மஞ்சள் நீரை வீசி ஊற்றும் போது பக்கத்தில் இருப்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும். 

வாத்தியார்  ''சீக்கிரம்  சீக்கிரம் , நேரமாகறது முகூர்த்தத்துக்கு ''என்று  விரட்டுவார். பெண்ணும்   மாப்பிள்ளையும்  மேடையை நோக்கி அழைத்துச் செல்லப்ப
டுவார்கள். 

பெண்ணுக்கு அப்பா  அப்போதிலிருந்தே   மூணாம் பேஸ்த் அடித்தாமாதிரி முகத்தை அழாக்குறையாக வைத்துக்கொண்டு  ஒரு நாற்காலி மேல்  உட்கார  பெண்ணை  அவர் மடியில் உட்கார வைத்து  கூறைப்  புடைவை  ஓதிக் கொடுப்பார்  வாத்தியார்.முக்கியமாக இந்த  புடைவை மாத்தும் உத்யோகம்  பெண்ணுக்கு  நாத்தனார்  எனும்  மாப்பிள்ளை பையனின் சகோதரி ஒருவளது  ஏகபோக  அதிகாரம், உரிமை.  வேறு யாருக்கும்  அந்த  பவர்  இல்லை என்னை விட  என்ற பெருமிதமாக எல்லாரையும் அவள் பார்ப்பாள். பெண் கூறைப் புடவையின் கனம்  தாங்கமுடியாமல்  தள்ளாடி  சுற்றிக்கொண்டு  ஒரு பொம்மை மாதிரி வரும். பிடித்துக்கொண்டு வருவார்கள். 

மறுபடியும் அப்பா மடிமேல்.      கன்னிகா தானம் எனும்  சிறப்பான கல்யாண அம்சம் அப்போது நடைபெறும்.  குண்டுப்   பெண்ணாக இருந்தால்  அவருடைய  மடி நிச்சயம் கனம்  தாங்காது. 

ஆனால் ஒல்லியோ  குண்டோ எந்த பெண்ணாக இருந்தாலும்  அப்போது அப்பாவின் மனசு  ரொம்ப  கனமாக இருக்கும்.   இதுவரை அவர் வளர்த்த பெண் இப்போது முதல் இன்னொரு வீடு செல்லப்போகிறாளே.

வாத்யார் சொல்லும் ஒரு முக்கிய மந்திரம் அப்போது:  'தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம், மம த்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண..,,,,,''

''மாப்பிள்ளே   என் பெண்ணை  உங்களுக்கு  தானம் பன்றேன்  அதுக்கு என்ன விசேஷம்  தெரியுமா?   நான்  இப்போ  என் பெண்ணை  கன்யாதானம்   பண்ணுகிறேனே,  எனக்கு  முன்னால் பத்து தலைமுறையும்,  எனக்கு அப்புறம் வரப்போகிற  பத்து தலைமுறையும்,   என் தலைமுறையும்  சேர்த்து   10+10+1    :  21  தலைமுறையும்  இதனால்  கரை சேரும்.  தானத்தில் சிறந்த தானம் இந்த கன்யா  தானம்.  
''மாப்பிள்ளே,  உங்கள்   வம்சத்துக்காக, வம்ச விருத்திக்காக எங்கள் வீட்டு   குலவிளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் பா''' என்று  அப்பா  பெண்ணை  தானம் செய்கிறார்.  

ஆண்பிள்ளையைப் பெற்றால் அந்தப் பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த ஒரு வம்சம்,   தலைமுறை மட்டுமே கரையேறும். ஆனால், பெண்ணைப்  பெற்று,  கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து, மற்றொருவனின் வம்சவிருத்திக்காக அவளை தானம் செய்து கொடுப்பதால்,   மேலே சொன்ன  நன்மை,  அதாவது  21 தலைமுறை
களும் கரையேறுகிறது என்றால் அது அர்த்தம்  தெரிந்த  அப்பாவின் மனமும்  மடியும் எவ்வளவு கனமாக இருக்கும்? 

தொடரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...