Friday, April 30, 2021

olden days wedding

 


பழைய நினைவுகள்.     நங்கநல்லூர்  J K SIVAN

மணப்பெண் தலையில் நுகத்தடி  ஏன்?
 
நமது ஹிந்து சம்பிரதாயமே புனிதமானது. பெருமைப் படக்கூடிய ஒன்று. ஏனோ இப்போது கொஞ்சம் விசித்ரமானது. அதில் எல்லோருக்கும் ஈடுபாடு முழுவதுமாக இருக்குமா என்று யாராவது கேட்டால், சந்தேகத்துக்கு இடமே இல்லாமல் ''கிடையாது சார் '' என்று சொல்லிவிடலாம். ஏன்?

சம்ப்ரதாயம் முழுதும் யாருமே தெரிந்து கொள்ள முயல வில்லை. நமது முன்னோர்களை எடுத்துக் கொண்டால் அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ற சம்பிரதாயங்களை மற்றவரிடமிருந்து  பாரம்பரியமாக, வாழையடி வாழையாக  தெரிந்து பழக்கத்தில் வைத்திருந்தார்கள். அந்த ''மற்றவர்கள்'' வேறு ''மற்றவர்களிடமிருந்து'' அறிந்த விஷயமாக அது இருந்தது. கர்ண பரம்பரை என்பது இதைத்தான். அதனால் தான் இடத்துக்கு இடம், குடும்பத்துக்கு குடும்பம் இந்த சம்பிரதாயங்கள்  கொஞ்சம் மாறுபடும்,  வேறுபடும். எங்கும் முழுதும் புத்தகமாக யாரும் எழுதி வைத்துக் கொள்ளவில்லை.
எனவே தான் விஷயம் அறிந்தவர்களாக காட்டிக்கொண்ட சில வைதீகர்கள் காட்டில் கொள்ளை சிரபுஞ்சி மழை. ஒவ்வொருத்தர் சொல்வதும் ஒரு விதமாக இருக்கும். அது தான்  சம்ப்ரதாயம் என்று அடித்து வேத வியாசர் மாதிரி தன்னை காட்டிக் கொள்வார்கள்.

சில சம்ப்ரதாயங்கள் அனைவராலும் கடைபிடிக்கப் படுகிறதா? என்று கேட்டால். ஏதோ வாத்தியார் சொல்கிறாரே, அதை செய்யவேண்டும். அதை எல்லாம் சொல்லிக்கொடுக்க தானே அவருக்கு சம்பாவனை'' என்று விட்டு விடுபவர்கள் தான் ஜாஸ்தி.

உண்மையில் சம்ப்ரதாயங்கள் என்ன சொல்கின்றன. எதற்காக, ஏன் எப்படி ? என்று ஊன்றி கவனித்து தேடி விஷயம் சேகரித்தால் அதன் ருசியே தனி. அதன் அர்த்தமே வேறு தான்.கல்யாணத்தில் மட்டுமல்ல  நமது வாழ்க்கையே  பிறந்த கணம் முதல்  கடைசியில் மேலே  பித்ருலோகம் செல்லும்வரை  ஏகப்பட்ட சம்ப்ரதாயங்கள்.  மந்திரங்கள்  இருக்கிறது.   அடேயப்பா  இதுபோல்  வேறு எந்த மதத்திலும் இருக்குமா என்பதே  சந்தேகம்.

கல்யாணம் என்று எடுத்துக் கொண்டால்,  நாந்தி. ஜாதகர்மா,நாமகர்மா, ஜானவாசம், மாப்பிள்ளை அழைப்பு, நிச்சயதார்த்தம், முஹுர்த்தம், பாணி கிரஹணம். கன்னிகா தானம், அம்மி மிதிப்பது, அருந்ததி பார்ப்பது, சப்தபதி, ஹோமம். இதெல்லாம் நடக்கிறதே. கொஞ்சமாவது அதையெல்லாம் பற்றி சிந்திக்கிறோமா. அதன் அர்த்தங்கள், காரணங்கள் புரியுமா. தெரிய வேண்டாமா?   எல்லாவற்றையும் பற்றி எழுதவேண்டும் என்றால் ஒரு பெரிய தலைகாணி புத்தகம் எழுதவேண்டியிருக்கும்.  அவை பற்றியும்  ஒவ்வொன்றாக  சொல்ல  விருப்பம்.  ஒரு சில  விஷயங்கள் மட்டுமாவது நாம் புரிந்துகொள்வோம்.

மணமகன் ஒரு தாம்பாளத்தில் திருமாங்கல்யம் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, அக்ஷதை புஷ்பங்கள் போட்டு பூஜிக்க வேண்டும்.

மணமகள் கூறைப்  புடவை கட்டிக்கொண்டு மேடைக்கு வந்தவுடன்  பிள்ளையாண்டான்  கன்னியின் வலது கரத்தை பிடித்த வண்ணம், அக்னியின் அருகில் அழைத்து வந்து   அந்த கன்னிகையிடம் கூறும் மந்திரத்தின் அர்த்தம்  

''நீ எனது வீட்டிற்கு தலைவியாகவும் அடக்கி ஆள்பவளாகவும் நற்காரியம் எவை என அறிவித்து, செயல்படுபவளாகவும் இருப்பாயாக'.  இனிமே ல் நீ தான் நம் வீட்டு  எஜமானி.   நம் குடும்ப  கெளரவத்தை காப்பாற்றுவது உன் பொறுப்பு.  ''நாமிருவரும் நமக்கிட்ட  கர்மாக் களை செய்வோம். நல்ல  ஸத் புத்திரர்களை அடைவோம். தீர்காயுள் உள்ள பிள்ளைகளை பெறுவதற்காகவும்,தெய்வ பக்தி உள்ள வளாகவும் என்னை சேர்ந்த மனித ர்களிடமும், நாற்கால் மிருகங்க ளிடமும் நீ நன்மை பயப்பவளாக இருப்பாயாக.''.

நெல்  பரப்பி போல   (இதை விரை கோட்டை ) அதன் மேல்   கல்யாணப்பெண்ணின் அப்பா  உட்கார  அவரது மடியில் பெண் அமர்ந்திருக்க

மணமகன்   ''இதமஹ யா த்வயீபதிக்னீ அலக்ஷ்மீ:தாம் நிர் நிஷாமி ''  என்ற மந்திரம் சொல்லி  தனது வலது கட்டை விரலாலும் மோதிர விரலாலும் தர்பையை பிடித்து கொண்டு , மண பெண்ணின் இரு புருவங்களிடையே துடைத்து தர்பையை மேற்கு பக்கமாக எறிந்து விட்டு கை அலம்ப வேண்டும்.  இது  எதற்காக என்றால்:
'' கன்னிப்  பருவமாய், தனது வீட்டில் செல்ல மகளாய் , வளர்ந்து வந்த அந்த பெண்ணிடம் ஏதேனும் தீய குணங்கள், தீய சக்திகள் அவளை யே அழிக்க கூடிய வகையில் இருந்தால் அவை யாவும் தூக்கி எறிய படட்டும் ''

அப்புறம்  பெண்ணின்  தலைமீது தர்ப் பையால் ஆன சிறிய பிரிமணை போல் வடமாக செய்து,அதை வைத்து, அதன் மேல் சிறிய நுகத்தடி , அதன் வலது துவாரத்தில் ஸ்வர்ணம் வைத்து( தற்போது திருமாங்கல்யம் வைக்கிறார்கள் ) ஜலத்தால் மந்திர ஸ்நானம் செய்யபடும்.

ஸ்வர்ணத்தில் பட்ட இந்த நீர் துவாரத்தின் வழியாக பெண்ணின் தலையில் பட வேண்டும்.   நுகத்தடி வைக்கும் போது சொல்லும் மந்திரம்:

'' கேநஸ: கேரத: கேயு கஸ்ய ஷஸீப்தே அ பாலாம் இந்திர த்ரி: பூர்த்வீ அகரத் ஸூர்ய வர்ச்சஸம்.''

அர்த்தம்:   சசி தேவியின் கணவனான இந்திரனே,  நீ   அத்ரி முனிவரின் பெண்ணான  அபாலா   என்பவளது சரும நோயை  உனது தேரின்  சக்ரத்தின் தேர்தட்டு,  நுகத்தடி,   இவற்றிலுள்ள  துவாரத்தின் வழியாக  விட்ட  ஜலம்  அவள் மேல் பட்டு அந்த பெண்  சரும நோய் நீங்கி   சூரியனை போல் ஒளி வீசுபவளாய் ஆக்கினாய்.   அது போல  இதோ இந்த பெண்ணின்  சிரசில் வைக்கப்பட்டுள்ள நுகத்தடி துவாரத்தின் வழியாக சேர்க்கப்படும் புனித நீரால் இவளது தோஷங்களையும் போக்கி யருள வேண்டும்.  யார்  இந்த  பெண்  அபாலை ? இதற்கு சுருக்கமாக  ரிக் வேதத்தில் கூறப்பட்டிருக்கும்  ஒரு கதை சொல்கிறேன். 

தொழுநோய், சொரி, சிரங்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட  ஒரு பெண்  தான்  அபாலை .  அத்ரிமுனிவரின்  புத்ரி.   இவளை எவரும்  கல்யாணம்  செய்துகொள்ள  தயாராக இல்லை.  அவள் மணம்புரிந்து கணவனுடன் ஸோமனை வழிபட ஆவலாய் இருந்தாள். இந்நிலையில் ஒரு தினம் அவள் ஒரு நதியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாள். அவ்வெள்ள நீரில் ஸோம தேவனுக்கு மிகவும் ப்ரியமான ஸோமரஸத்தைக் கொண்ட ஸோமலதை எனும் கொடி அவள் கையில் தற்செயலாகக் கிட்டியது. அவள் அதன் ரஸத்தை பல்லால் கடித்துப் பிழிந்து ஸோமனை த்யானித்து அவனுக்குச் ஸமர்ப்பித்தாள். இதனால் த்ருப்தியடைந்த இந்த்ரன், அவளை தன் தேர் சக்கரம், தேர்த்தட்டு, நுகத்தடி இவற்றின் வாயிலாக மந்திரிக்கப்பட்ட தீர்த்தத்தைச் செலுத்தி அவளை நல்ல அழகுள்ள ரூபவதியாக்கினான்.

நுகத்தடியில் ஸ்வர்ணத்தை (தற்போது திருமாங்கல்யம்) வைக்கும் மந்த்ரம்:

''சந்தே ஹிரண்யம் :- ஏ பெண்ணே! மந்திர ஜலத்தின் ஸ்பரிசத்திற்காக உன் தலையில் வைக்கப்படும் இந்த ஸ்வர்ண மயமான தங்கமானது உனக்கு எல்லாவித நலன்களையும் அளிக்கட்டும். அபாலையை பரிசுத்தப்படுத்திய அதே மந்திரத்தால் நுகத்தடி வழியாக செலுத்தப்பட்டு, தங்கத்தில் தோய்ந்து உன் அங்கங்களை வந்தடையும் இந்த ப்ராஹ்மணர்களால் கொண்டுவரப்பட்ட பரிசுத்தமான புண்ணிய ஜலம் உன்னை ஸகலவிதமான தோஷங்களிலிருந்தும் விடுவித்து பரிசுத்மாக்கி என்னுடன் இரண்டறக் கலந்து எல்லா மங்கலங்களையும் அநுபவிப்போமாக.''



அப்புறம்  ஒரு   5 மந்திரங்கள் உச்சரிக்க பட்டு ஜலம் ப்ரோக்ஷிக்க படுகிறது.   இந்த  நுகத்தடி வைக்கும் வைபவம் யஜுர வேத காரகள்  மட்டுமே  பின்பற்றுகிறார்கள்.  

இன்னும்  நிறைய  விஷயங்கள் பற்றி பேசுவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...