Monday, April 5, 2021

THIRUK KETHEESWARAM

 

திருக் கேதீஸ்வர மஹாதேவன்.--
நங்கநல்லூர் J K SIVAN ---

இன்று ஜெர்மனியிலிருந்து ஒரு அன்பர் தொலைபேசியில் அழைத்தார். கேதீஸ் தம்பி காஸெல்ஸ் எனும் நகரத்தில் முப்பது முப்பத்தைந்து வருஷங்களாக வாழ்ந்து வருகிறாராம். இலங்கைத் தமிழர். அவருடன் பேசும்போது தான் இன்று அவருக்கு 31வது ஆண்டு திருமண நாள் என்பதால் என்னிடம் வாழ்த்து பெற விரும்பியதாக அறிவித்தார். நான் செய்ய முடிந்தது ஒரு நண்பனாக வாழ்த்துவதும் என்னருமை கிருஷ்ணனிடம் எல்லோரும் வாழ பிரார்த்தனை செய்ய முடிந்ததும் தான் என்றுரைத் தேன் . அவரது மனைவியாரையும் அழைத்து மனமார வாழ்த்தினேன்.

அந்நியர் உள்ளே நுழைந்து நமது பண்பாடு, பக்தி, வாழ்க்கை முறை எல்லாவற்றையும் சேதப்படுத்தி மதம் மாற்றி, மதவெறியில் நம்மில் அனேகரைக் கொன்ற ரத்தக்கறை படிந்த பக்கங்கள் இந்திய சரித்திரத்தில் மட்டும் அல்ல, இலங்கையின் பக்கங்களிலும் உண்டு.
போர்த்துகீசியர்கள் சேதப்படுத்திய கேதீஸ்வரம் பற்றி சில வார்த்தைகள்.
என்னுடன் பேசிய நண்பரின் கேதீஸ் என்கிற பெயர் அவர் பிறந்த ஊரான கேதீஸ்வரத்தை குறிக்கிறது. இலங்கையில் கேதீஸ்வரம் கோணேஸ்வரம் நல்லூர் ஆகிய சிவ க்ஷேத்ரங்கள் நான் பல ஆண்டுகளுக்கு முன்பு தரிசித்திருக்கிறேன்.
இலங்கையின் பழமையான ஐந்து சிவன் கோவில்களில் திருக்கேதீஸ்வரம் சிவாலயம் ஒன்று. இது மன்னாருக்கு அருகே உள்ளது. ஒருகாலத்தில் இந்தியா ஆப்ரிக்கா எல்லாம் ஒன்றாக சேர்ந்திருந்த போது இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாகவும் இருந்தது. நடந்தே சுந்தரர் ஞானசம்பந்தர் அங்கே போய் பாடல்கள் பாடியிருக்கிறார்கள்.
பொதுவாக வரலாற்று ரீதியாக இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும். அந்த நான்கு ஈச்சரங்கள்.
நகுலேச்சரம்
திருக்கோணேச்சரம்
திருக்கேதீச்சரம்
தொண்டேச்சரம்

போர்ச்சுகீசியர்களால் 16ம் நூற்றாண்டில் அழிந்த கேதீஸ்வரம் ஆலயம் 400 வருஷங் களுக்குப் பிறகு சமீபத்தில் புனருத்தாரணம் பெற்றது.
சிவன் முழு முதற்கடவுள் . மால்டா, கிரீட், மடகாஸ்கர் ஐரோப்பாவில் சில இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான வருஷங்கள் முன்பே தெரிந்த கடவுள். வழிபடப்பட்டவர். அங்கெல்லாம் நாம் இருந்திருக்கிறோம்.
இலங்கையில் இப்போது மாத்திட்டை தான் ஒருகாலத்தில் மாந்தோட்டம்.. பாலாவி ஆற்றங்கரையில் உள்ளது. கடலில் ஆறு கலக்கும் இடத்தில் வங்காலை எனப்படும் வடகரையில் தான் திருக்கேதீஸ்வரம் அமைந்துள்ளது. பபமொடை எனும் அக்ரஹாரம், கோவில் குளம் எனும் கிராமம் இருந்தது.
நமது ராமேஸ்வரத்துக்கு இணையானது திருக்கேதீஸ்வரம். சோழர்கள் ஆண்ட காலத்தில் அதற்கு ராஜராஜேஸ்வரம் என்ற பெயர் பெற்றது. முதலாம் சுந்தர பாண்டிய னின் காலத்தில் [1251-80] திருக்கேதீஸ்வரம் கோவில் பாண்டியச் சிற்பக்கலையின்படி புனருத்தாரணம் செய்யப்பட்டது. கல்வெட்டு கள் இருக்கிறது
.
“போர்ச்சுகீசியர் கடல்வாணிபத்துக்கு யாழ்ப்பாணம் பக்கம் சென்றனர். சென்ற இடமெல்லாம் மதமாற்றம் செய்தவர்கள். பிரான்சிஸ் சேவியர் ஆணைப்படி, ரோமன் கத்தோலிக்க மதப்பிரசாரகர்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் மன்னாரில் மதமாற்றம் நடந்தது. யாழ்ப்பாணத்தின் ராஜா புதிதாக மதம்மாறிய அறுநூறுபேருக்கு மரண தண்டனை கொடுத்தார். ஆயினும், இந்தத் துன்மார்க்கம் அவரது அரண்மனை யையே அடைந்தது. அவரது மூத்தமகன் மதம் மாறினான். எனவே, அதன் விளைவாக, அவனுக்கும் மரணதண்டனை விதிக்கப் பட்டது. அவரது இரண்டாம் மகன் தந்தையின் தாளாத சினத்திலிருந்து தப்பிக்க கோவாவுக்கு ஓடினான்.

மதமாற்றம் கட்டாயம் நடக்கவேண்டும். எதிர்ப்பவர்களை பழிவாங்கவேண்டும் என மூன்றாம் போப் ஜான் இந்திய வைஸ்ராய்க்கு உத்தரவிட்டார். மன்னாரில் கிறித்தவர்க ளின்மீது அடக்குமுறை அடுத்தடுத்து நிகழ்வதாகவும், கோவாவுக்கு ஓடிவந்த அண்ணனின் அரசுரி மையை யாழ்ப்பாண ராஜா பறித்துக் கொண்ட தாகவும் உள்ள இரண்டு முறையீடு களின்படி நடவடிக்கை யெடுக்கவேண்டி, இந்திய வைஸ்ராய் டான் கான்ஸ்டன்டீன் தெ பிரகான்சா [Don Constantine de Braganza] யாழ்ப்பாணத்திற்கு எதிராக மற்றொரு கடற்படையை 1560ல் அனுப்பினார். தெ கோட்டோ [De Couto] தனது இந்திய வரலாற்றில் சொன்னது:
“வைஸ்ராயுடன் கப்பலில் பயணித்த கொச்சி பிஷப் தரையிறங்கியவுடன் ஒரு வழிபாட்டி டத்தை நிறுவி, நகரின்மீது தாக்குதலைத் துவங்குவதற்காக படையெடுத்துவந்த இராணுவத்தின் முன்னிலையில் தொழுகை நடத்தி, போரில் விழுவோருக்கு முழுமையான சலுகைகளையும், சிலுவைக்காக உயிர் துறப்போருக்கு முழு பாவ மன்னிப்பும் வழங்கினார்.
“ பல பிரபுக்கள் எதிரிகளின் பீரங்கிகளால் கொல்லப்பட்டனர். நகரம் வீழ்ந்தது, அரண்மனை எரிக்கப்பட்டது. அரசரும், அவரைச் சேர்ந்தவரும் வெற்றி கொண்டோ ருடன் உடன்படிக்கை செய்து கொள்ள வைக்கப்பட் டனர். கண்டியிலிருந்தும், கோட்டாவி லிருந்தும் ஆறாம் புவனேகாவின் மருமகனும், தர்ம பாலாவின் தந்தையுமான திரிபுல பந்தாவால் கொண்டுவரப்பட்ட பொக்கிஷத்தின் மறைவி டத்தைத் தெரிவிக்க வேன்டுமென்றும், அதற்கும் மேலாக, எண்பதா யிரம் குருசேடோ பணமும் தரவேண்டுமென் றும், மன்னார் தீவை போர்ச் சுகீசி யருக்கு விட்டுத் தர வேண்டுமென்பதும் அந்த உடன்படிக்கை. மன்னார் தீவு ஆக்கிரமிக் கப்பட்டு பலப்படுத்தப்பட்டது.

“சிங்கள அரசர்களுக்கு உதவியாக போர்ச்சு கீசியருக்கு எதிராகச் செயல்பட்டதற்காக யாழ்ப்பாண அரசரைத் தண்டிக்கவேண்டி, 1591லும், 1604லும், கோவாவிலிருந்து புதிய படையெடுப்புகள் மேற்கொள்ளப்பப்பட்டன. ஆனால், ஒவ்வொரு தடவையும் பயமுறுத்தல் அபாயத்தைத் தடுக்க வலிமையற்றவர் தானாகச் சரணடைந்தனர். ஆயினும், ஏற்கனவே யாழ்ப்பாணப் பகுதியைப் போர்ச்சுகலின்கீழ் கொண்டுவரும் திட்டமிருந்தாலும், ஒத்திப்போடப்பட்டுவந்தது.

“1617ல் கான்ஸ்டன்டைன் தெ சா நொரனாவின் [Constantine de Saa Norana] தலைமையில் ஒரு படை யாழ்ப்பாணத்தை முன்புசொல்லப்பட்ட ஒருமுகப் பட்ட காட்டுமிராண்டித்தனத்துடன் தாக்கிக் கைப்பற்றியது. அரசர் கைதுசெய்யப்பட்டு கோவாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு கொல்லப்பட்டார். மலபார் இளவரசர்களில் கடைசியான அவரது மருமான் அவரது அரசுரிமையை விட்டுக்கொடுத்துவிட்டி ஃபிரான்சிஸ்கன் கான்வென்ட்டில் சேர்ந்தார். அவரது சொத்துரிமை போர்ச்சுகலின் ஆட்சிப் பகுதியாக முறைப்படி இணைக்கப் பட்டது.”

எமர்சன் டெனன்ட்டால் தனிப்பட்ட முறையில் குறிப்பிடப்படாதிருந்தாலும், இந்த வரலாற்றுச் சூறாவளிச் சுழல் நிகழ்ச்சிகளான போர்ச்சு கீசியரியன் காலத்தில் திருக்கேதீஸ் வரம் ஒரு முக்கியமான பங்கை வகித்தது.

தென்னகத்தின் செல்வச்செழிப்புள்ள இந்துக் கோவில்களைச் சூறையாடிக் கொள்ளையடிப் பதைக் குறிக்கோளாகக் கொண்ட போர்ச்சுகீ சியருக்கு இந்துமாக்கடலின் அக்கரையிலுள்ள கன்னியாகுமரி, திருச்செந்தூரைவிட, திருக்கே தீஸ்வரம் எளிதான இரையாகவே அமைந்ததால், அவர்கள் அதில் வெற்றி பெற்றனர். சேதுப்பாலம் மற்றும் இராமேஸ் வரம் கோவிலின் அறங்காவலரான இராமநா தபுரம் சேதுபதியின் வலிமையான பாதுகா ப்பே அங்கு அவர்களின் தோல்விக்குக் காரணமாக இருக்கலாம்.

மன்னார்த்தீவு மக்களின் சமயமாற்றம் துவங்குவ தற்குமுன்னரே திருக்கேதீஸ்வரம் கோவிலின் சூறையாடல் நிகழ்ந்துமுடிந்தது. அதைப் பெயர்த்தெடுக்கப்பட்ட கற்களே மன்னார் கோட்டையைக் கட்டப் பின்னர் உறுதுணை யாகவிருந்தன. இதைப் பழிவாங்க யாழ்ப்பாண மன்னர் எடுத்துக்கொண்ட வலுக்குறைந்த முயற்சிகளே படுகொலையாக பூதக் கண்ணாடி கொண்டு காட்டப்பட்டன.

இலங்கேஸ்வரன் ராவணன் திரிகோணமலை கோணேஸ்வரரின் பக்தன். அவனும் அவன் மாமனார் மயனும் திருக்கேதீஸ் வரத்தின் தொன்மையான கோவிலைக் கட்டினார் கள். இலங்கையிலிருந்து அயோத்திக்குத் திரும்பிச் செல்லும் வழியில் இராமேஸ்வரத்தில் சிவனுக் குக் கோவில்கட்டி வழிபட்ட இராமர், திருக்கேதீஸ் வரத்திலும் சிவபெருமானை வழிபட்டார்.

இலங்கை இந்துக்களின் வேண்டுதலின்படி காசியிலிருந்து புகழ்பெற்ற சிவலிங்கம் ஒன்று திருக்கேதீஸ் வரத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டது .

நினைவுக்கெட்டாத பழங்காலத்தில் நம்மை வந்தடைந்த புராதனமான சிவலிங்கம், இலங்கை மீது ஐரோப்பியப் படையெ டுப்பு களால் சிலகாலம் தலைமறைவாகியபின்னர், மேற்குப் பிரகாரத் தில் சிறப்பாகக் கட்டப்பட்ட மண்டபத்தில் இந்தியாவிலிருந்தும் இலங்கை யிலிருந்தும் வந்திருந்த மாபெரும் இந்து சமயப் பிரதிநிதிக் கூட்டத்தின் முன்பு அக்டோபர் 31, 1960, திங்கட் கிழமை காலை பத்துமணிக்கு தகுந்த சடங்குகளுடன் அரியணையேற்றப்பட்டது. விநாய கர், சுப்பிரமணியர், நந்தீஸ்வரர் இவர்கள் உட்பிரகாரத்திலுள்ள தத்தம் சன்னதிகளில் நிறுவப்பட்டனர்.

திருக்கேதீஸ்வரம் கோவில் புனர்நிர்மாணப் பணிக்கு இந்திய அரசு முப்பத்திரண்டு கோடியே அறுபது இலட்சம் இலங்கை ரூபாய்கள் [பதினாறுகோடியே முப்பது இலட்சம் இந்திய ரூபாய்கள்/இருபத்தோறு இலட்சத்து எழுபத்திமூவாயிரம் அமெரிக்க டாலர்கள்] உதவித்தொகை அளித்துள்ளது என்று தெரிந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி.

சிவபக்தர்கள் எங்கிருந்தாலும் எந்த ஆலயத்துக்கும் புணருத்தாரணத்திற்கும் வழிபாடு தொடர்ந்து நடக்கவும் உதவ அந்த சிவபெருமானே அருள்புரியட்டும்.

ஒன்று நிச்சயம். இந்தியா வாழ் தமிழர்களை விட இலங்கைத் தமிழர்கள் தங்களது சிவ பக்திக்காக பெற்ற துன்பம் பலமடங்கு. நிர்க்கதியாக துன்பங்களை அனுபவித்த வர்கள். நிச்சயம் அவர்கள் எவ்வளவு துன்பம் அனுபவித்தாலும் மீண்டும் நெருப்பிலிருந்து வெளிவரும் ஃபீனிக்ஸ் பறவைகள் தான்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...