Thursday, April 1, 2021

my birthday


 

வருஷா வருஷம் சொல்லும் ஒரு ரகசியம் நங்கநல்லூர் J.K. SIVAN

இன்று சொல்லவேண்டாம் என்று நினைத்தும் சொல்லவேண்டி வந்துவிட்டது. நண்பர்கள் அநேகர் மறக்காமல் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து ஏப்ரல் 1 இன்று , தெரிவித்தனர்.
கோபம் என்பது திடீரென்று வருவது. ஆனால் எனக்கு என்னவோ சொல்லி வைத்தாற் போல் ஒரு நாள் மட்டும் அசாத்திய கோபம் வரும். என்றைக்கு அந்த கோபம் வரும் என்று முன் கூட்டியே கூட பல வருஷங்களாக தெரியும். அது இன்று தான். ஏப்ரல் 1ம் தேதி வருஷா வருஷம். ஏன்? யார் மீது?. இதற்கு பதில் சொல்லத்தான் இந்த கட்டுரை அவசியமாகிறது.
ஐயா மாரே, என் கோபம் ஒரே ஒருவர் மீது தான். பின்னே என்ன? , ஒருவனை முட்டாளாக்கினால் கோபம் வராதா? கூடவே சிரிப்பும் வரும். என்றோ மறைந்து போன ஸ்ரீமான் சூளைமேடு சுப்ரமணிய ஐயர் என்பவர் மீது தான் அத்தனை கோபமும். உலக முட்டாள் தினத்தில், என்னையும் நிரந்தர ஏப்ரல் முட்டாளாக்கிய மஹாநுபாவன்.
இன்று ஏப்ரல் முதல் நாள் என் மனைவி உண்மையாக பிறந்தாள். பரிசுகள் வாழ்த்துகள் எல்லாம் நிறைய பெற்று களிக்கிறாள். எனக்கும் அன்று நிறைய வாழ்த்துக்கள் 'தெரிந்த இடங்களிலிருந்து'' வருகிறது. என் மனைவி இன்று பிறந்ததற்காகவோ, அவள் கணவன் என்பதாலோ இல்லை சார், நான் சத்தியமாக ''பிறக்காமல்'' பிறந்ததற்காக. உலகத்தில் அந்த நாள் நான் 82 வருஷங்களுக்கு முன் சுப்பிரமணிய ஐயர் என்ற பிரம்மாவால் படைக்கப்பட்டு, ''ஆதார ரெகார்ட்'' உண்டாக்கி அது PAN AADHAR PASPORT DRIVING LICENCE, என் படிப்பு உத்யோக அனைத்து ஆவணங்களிலும் என் பிறந்தநாளாகிவிட்டது. இன்று வரை உலகம் பூரா வெளி உலகில் எனக்கு தெரிந்தவர்கள் என்னை வாழ்த்து வதுஏப்ரல் 1ம் நாள் அன்று.

ஆனால் ஒரு ''உம்மை'' யை சொல்வதானால் '' அது 'நான் பிறக்காத எனது பிறந்த நாள்' என்று தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே .

பிறந்த நாள் அன்று இப்போது எல்லோருமே ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காம லேயே. பக்கத்தில், எதிரில் அமர்ந்து கொண்டோ, அடுத்த அறையிலி ருந்தோ கூட இப்போது வாழ்த்து கூற முடிகிறது. வாட்சாப், face book, மெஸ்செஞ்சர், ஐபேட், லேப்டாப் போன்ற வசதி உபகரணங் களினால் முடிகின்ற சமாசாரம். அநேகமாக வாழ்க்கையே மொபைல் போனில் sms , மெஸ்ஸேன்ஜர்,வாட்ஸாப், முக நூல், என்று ஆகிவிட்டதால் மனித நேயம் சுருங்கியுள்ளது. சில வருஷங்களுக்கு முன் வாழ்த்து அட்டை கள், க்ரீடிங் கார்ட் இமெயிலில் வந்து கொண்டிருந்தது.

அதற்கும் முன்பு போஸ்டில் '' சார், போஸ்ட்'' என்று கூவிக்கொண்டு வாசலில் விழுந்தது.
அதற்கும் முன்னால். டெலிபோனில் ''அல்லோ அல்லோ'' என்று கத்தி நான்கு ஐந்து முறை கட் ஆகி, ராங் நம்பர்களோடு கொர கொர வென்ற சத்தத்தோடு அலைமோதும் இரைச்சலோடு ''என்னடா சிவப் பயலே, சவுக்கியமா. உனக்கு பொறந்த நாளாச்சே இன்னிக்கு. க்ஷேமமாக இரு'' என்று பெரியவர்கள் குரல் கேட்கும். ''சாப்பிட்டியா'' என்று நடு ராத்திரி நன்றாக தூங்கும்போது கூட உள்ளூரிலிருந்து கூட டெலிபோன் அலையோசையோடு வெளியூர் கால் மாதிரி வரும். ஆனால் அது என் நக்ஷத்ர பிறந்தநாள் அன்று.
அந்த கால கட்டத்திற்கும் முன்பு பின்னோக்கி போனால், முக்காலணா தபால் அட்டையில் தான்.
''' இப்பவும் அனேக ஆசீர்வாதம், உன்னுடைய பிறந்த நாளுக்கான வாழ்த்துக்களை அனுப்பு கிறேன். திட காத்ரமாக நோய் நொடியின்றி சிரஞ்ஜிவியா இருக்க பகவானைப் பிரார்த் திக்கிறேன் '' என்று போஸ்ட்கார்டில் ஒண்ண ரைப்பக்கம் சிறிய எழுத்துக்களில் 100 வரியா வது ஒரு வாரம் முன்பு எழுதினது சென்னைக் கு நான்கு நாள் கழித்து வந்து சேரும்.

அதற்கும் முன்பு -- நாம் இப்போது இன்னும் 50- -60 வருடங்களை கடந்து பின்னால் சென்று விட்டோம். --- அவரவர் வீட்டில் பாயசம் மட்டும் இலையில் கொஞ்சம் விழும். வழக்கமான வர்களைவிட அண்டை அசலில் இருந்து சில நெருக்கமான உறவினர் வருவர்.
பெரியவர்கள் நமஸ்காரம் பெற்று ஆசிதருவர். சிறியவர்கள் நமக்கு நமஸ்காரம் பண்ணி கையில் சில்லறை பெறுவார்கள்.
ஒரு விஷயம். பிறந்த நாளை ஆங்கிலேய மாதத்தில் தேதியில் கொண்டாடும் வழக்க மில்லை. தமிழ் மாசம் தேதி தான் ஏற்றுக் கொள்ளப்படும். உள்ளூர் கோவிலில் ஒரு அர்ச்சனை செய்யப்படும். வசதி இருந்தால் ஒரு வேஷ்டி துண்டு வாங்குவோம் அல்லது யாராவது பெரியவர்கள் கொடுப்பதோடு சரி. விஷயத்துக்கு வருகிறேன்
இன்று ஆங்கிலேய , என் ஆவண கணக்குப் படி, ஏப்ரல் முதல் தேதி பிறந்த நாள். 82 முடிந்தாகி விட்டது 83க்குள் நுழைகிறேன். உலகத்தை பொறுத்தவரை இன்று தான் நான் பிறந்ததாக ஐதீகம். ஆனால் ஒரு ரகசியம். நான் சத்தியமாக இன்று பிறக்கவில்லை. நான் பிறக்காமலேயே பிறந்ததற்கு எனக்கு இன்று கூட வாழ்த்துகள் வந்துள்ளன.
ஒரு தரம் என்னுடைய பிறந்தநாள் பற்றி எனது தந்தையிடம் பேசியது கவனத்திற்கு வருகிறது.
'' ஒன்றுமில்லை. உன்னைப் பள்ளிக்கூடம் சேர்க்கும்போது ஸ்கூல் வாத்தியார் சுப்ரமணிய அய்யர் ''உம்ம பையனுக்கு என்ன பிறந்த தேதி ? என்று கேட்டார்.
மூக்குக் கண்ணாடிக்கு மேல் வழியாக என் அப்பாவைக் கேட்டு விட்டு சுப்ரமணிய ஐயர் கட்டை ஸ்டீல் நிப் பேனாவை பதிவு ரிஜிஸ்தரிடம் கொண்டு போயிருக்கிறார்.
''அப்பாவுக்கு சட்டென்று எனது பிறந்த தேதி ஞாபகத்துக்கு வரவில்லை. காரணம் பெரிய குடும்பம். நிறைய குழந்தைகள், நான் அதில் ஒன்று. பலதில் சிலது அல்பாயுசில் மரணம். எஞ்சியதில் மிஞ்சியதற்கு எதற்கு என்ன எப்போது பிறந்த தேதி என்று எப்படி சொல்ல முடியும்?
கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களிலும் இது தான் நடைமுறையில் அக்கால வழக்கம்.. வைத்த பெயர் ஒன்று, அழைக்கும் பெயர் வேறு. பள்ளியில் இன்னொன்று.பிறந்த நாளும் அப்படியே.
''சரி அப்பறம் என்னாச்சு?''
'கிருஷ்ணய்யர் சீக்ரம் சொல்லுங்கோ நிறைய வேலை இருக்கு. ரிஜிஸ்டரில் என்ட்ரி பண்ண னும் என்று அவசரப்படுத்தினார். தந்தை .யோசித்துக்கொண்டிருக்கையில் எனது ஜென்ம நக்ஷத்ரம் தான் சட்டென்று நினைவுக்கு வந்தது. ''புரட்டாசிலே மஹம், ஆனால் என்ன வருஷம் என்று தான் யோசிக் கிறேன்....'' என் அப்பா.
அது வேண்டாம். இங்க்லீஷ் தேதி மாசம் வருஷம் தான் வேணும். அதைச் சொல்லுங் கோ முதல்லே.''
''.............................''
நேரமாகவே .......அப்பாவின் யோசனையை அறுத்தவாறு சுப்பிரமணியர் பார்வை என் மீது விழுந்தது.

''டேய் இங்க வா'' என்று என்னைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் கதவின் நிலைப்படியில் நிற்க வைத்தார் சுப்ரமணிய அய்யர். கதவின் வாசல்படி நிலையில் பென்சில் கோடுகள் சில தெரிந்தன. என் தலை உச்சி அருகே ஒரு கோடு தென்பட்டது.
''பரவாயில்லே உயரம் சரியாகத்தான் இருக்கு. டேய் பயலே, உன் வலது கையால தலைக்குமேலே கொண்டு போய் இடது காதைத் தொடு''. கஷ்டப்பட்டு தொட்டேன்.
'' சரி பரவாயில்லை. ஆறு வயசுன்னு போடறேன். இன்று என்ன தேதியோ அது லேர்ந்து 6 வருஷம் முன்னாலே' அப்பதான் அட்மிஷன் கிடைக்கும். இல்லேன்னா HM சுந்தரேசன் தொலைச்சுடுவான் என்னை''.
'சரி'' என்றார் அப்பா
''புரியறதா க்ருஷ்ணய்யர்வாள் உங்களுக்கு ? இன்றைய தேதிக்கு உங்க பையனுக்கு 6 வயது என்று எழுதிக்கிறேன்? '' என்று என்னை எக்ஸ்ரே கண்களோடு கண்ணாடி வழியாக பார்த்தார் சுப்ரமணிய அய்யர் (பாதிநாள் தலைமை ஆசிரியர் வரமாட்டார் எனவே வாத்தியார் சுப்ரமணிய ஐயர் தான் பள்ளிக்கூடத்தின் சர்வாதிகாரி) .
'இதோ பாருஙகோ. இல்லேன்னா. இப்படி செய்யட்டுமா? 6 வருஷத்துக்கு முன்னாலே ஏப்ரல் முதல் தேதி என்று போட்டுக்கட்டுமா?'' என்று கேட்டார் சு. அ ,
'' அப்படிப் போட்டால்....? -
'' நீங்கள் ஜூலை 1 அன்று வந்திருக்கேள் . ஏப்ரல் 1 தான் D.O .B என்று போட்டால் மூன்று மாதத்துக்கு முன்னாலேயே உங்க பையன் பிறந்ததாக காட்டும். 6 வயது தாண்டிட்டுது என்று ரெகார்டு பேசும் . சந்தேகமில்லாமே பள்ளியில் சேர்த்துக் கொள்வோம். தேதியும் சுலபமா கவனத்திலே நிக்கும். உங்களுக்கும் உங்கள் பிள்ளை சிவன் பிறந்த தேதி சட்டென்று ஞாபகம் இருக்கும். இப்படி யோசிக்கவோ தடுமாறவோ வேண்டாமே''.
''ததாஸ்து'' -- கிளம்பி விட்டோம்.
இப்படியாகத்தானே இந்த பூவுலகில் நான் சத்தியமாக பிறக்காத ஏப்ரல் முதல் நாள் 1939 அன்று அரசாங்க கணக்கு தொடங்கும் நாளில் ''பிறந்து'' நிறைய பேரிடம் வாழ்த்துகளை வாங்கிக்கொண்டு நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன். என்னைவிட ஒரு சிறந்த ஏப்ரல் முதல் நாள் ''அறிவாளியை'' பார்த்ததுண்டா? உலகறிந்த சுப்ரமணிய அய்யர் ரெஜிஸ்டரில் தோற்றுவித்த பிறந்த நாள் ஏப்ரல் 1. என் ஆவணங்களை என்னால் மாற்றமுடியாதே . ஆகவே நான் 82 வருஷங்கள் ப்ரயோஜனமின்றி சம்பந்தமே இல்லாமல் பிறக்காமல் ஏப்ரல் ஒண்ணாம் தேதி பிறந்தவனாக மீதி இருக்கும் என் சொச்ச காலத்தையும் தள்ள போகிறேன். தெரிந்தவர்களிடம் வாழ்த்துகளும் பெறுவேன்...

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...