Sunday, April 18, 2021

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம்  --  நங்கநல்லூர்   J K  SIVAN  



          மரநாய்  விஜயம்  

 பேசும் தெய்வத்திற்கு  தாய் தந்தை வைத்த பெயர்  ஸ்வாமிநாதன்.  அப்பா  சுப்ரமணிய சாஸ்திரிகள்  பள்ளிக்கூடங்களுக்கு  இன்ஸ்பெக்ஷன்  INSPECTION   செல்லும்  மேற்பார்வையாளர்.   அடிக்கடி  ஊரை விட்டு செல்ல வேண்டிய உத்யோகம்.  ஆகவே  பணி மாற்றமும்  இடப்பெயர்ச்சியும்  இருந்ததால்  பல ஊர்களுக்கு அந்த குடும்பம்  சென்று வாழ்ந்தது.      சின்னவயசிலேயே விழுப்புரம், திண்டிவனம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, விக்கிரவாண்டி என்று பல ஊர்களை சுவாமிநாதன்  பார்த்தாயிற்று. பின்னால்  சந்நியாசியாக ஜகதகுருவாக  எத்தனை ஊர்களுக்கு நடந்து சென்றிருக்கிறார்  மஹா பெரியவா.  

இந்த பதிவில் குறிப்பிடும் சம்பவம்  நூறு வருஷங்களுக்கு முன்பு நடந்த ஒன்று.  அப்போது ஸ்வாமிநாதன் வயது 3.   பொம்மைகளை வைத்துக்கொண்டு  விளையாடும் பையன்.  வீட்டு தாழ்வாரம் பெரிசு.  ஆகவே நிறைய  இடம் விளையாட இருந்தது.

ஒரு நாள் ராத்திரி நேரம்...

கிராமம்  என்பதால்,  மின் வசதிகள் இல்லாத காலத்தில்  ஏழு எட்டு மணிக்கே  ஊர் உறங்கிவிடும். எல்லோர் வீட்டிலும் ஏதோ ஒரு தீபம்  முணுக் முணுக் என்று எரிவது தான்  வெளிச்சம்.    ஒன்பது மணி என்பதே  நடு நிசி மாதிரி நிசப்தம்.  ஆங்காங்கே நரிகள், நாய்கள்  ஓலமிடும் சப்தம் பழக்கமானது.

சுப்பிரமணிய சாஸ்திரிகள் வீட்டில்   சுவாமிநாதன், அம்மாவின் அரவணைப்பில் அசந்து தூங்கிக் கொண்டி ருந்தான்.  

சமையல்  கட்டில்  திடீரென்று ஏதோ சத்தம். பாத்திரங்கள் உருளும் ஒலி.  பெரிய  பழையகால வீடு  அடுக்கடுக்காக  இருக்கும்  ஓட்டு விடு.   சுப்ரமணிய அய்யர்  மனைவி எல்லோரும் தூக்கம் தடைபட்டு விழித்தார்கள். யாரோ திருடன் வீட்டுக்குள்  நுழைந்து விட்டான் என்று பயம்.   பக்கத்து வீட்டிலும் இந்த சப்தம் கேட்டு  சிலர்  ஹரிக்கேன் விளக்குகள்,  கம்பு தடி, கடப்பாரை என்று கையில் கிடைத்த ஆயுதத்தை  எடுத்துக்கொண்டு வந்து விட்டார்கள்.

சுவாமிநாதனும்  விழித்துக்கொண்டான்.  அவனுக்கு என்னவோ ஏதோ என்று பயம்.  கால்கள் நடுங்குகின்றன. அறையில் இருந்த ஸ்டூல் மேல் ஏறிக்கொண்டுவிட்டான்.  

 தைரியசாலிகள் நான்கைந்து பேர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு,  ஹா  ஹூ  என்று கத்திக்கொண்டே   கதவைத் திறந்து கொண்டு  சமையல்  கட்டில் நுழைந்தார்கள்.   அங்கே நன்றாக கொழு கொழு வென்று
ஒரு மரநாய் தன் தலையை ஒரு பாத்திரத்துக்குள் நுழைத்து சிக்கிக்கொண்டு, அதிலிருந்து விடுபட முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தது.

மரநாய்  பார்த்திருக்கிறீர்களா.  நரி மாதிரி  முகம்,  மரம் ஏறும். சிலர்  அதை  புனுகுப் பூனை  ஜாதி என்பார்கள்.  ஆங்கிலத்தில் அதற்குப் பெயர்   PALM  CIVET . நீண்டு மெலிந்த உடல்.   எடை  கிட்டத்தட்ட   2  -  5 கிலோ  இருக்கும்.. நீண்ட  அடர்ந்த வால். கட்டான உடல் முழுவதும் சாம்பல் நிறத்திலும் கால்கள், காதுகள், முகப்பகுதி என்பன கரு நிறத்திலும் மயிரடர்ந்து சொர சொரப்பானதாகக் காணப்படும்.  உடம்பில்   மூன்று கறுப்புக் கோடுகள்.   மரங்களில் ஏறி  வாழும். 
 
எது எப்படியோ   கண் தெரியாமல்  அது சொம்புக்குள்  தலையை விட்டு வெளியே  எடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தது.   அதைப் பிடித்துத் தூணில் கட்டு கிறார்கள். மரநாயை இருவர் பிடிக்க, பாத்திரத்தை இருவர் பற்றி இழுக்க மரநாய் விடுபடுகிறது. அதற்கு மூச்சுத் திணறுகிறது. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த மரநாயை இழுத் துப் போய் ஊருக்கு வெளியே விட்டு விடுகிறார்கள். சுவாமிநாதனுக்கு பயம் விலகியது.  சுவாமிநாதனுக்கு   அம்மா  ஒரு டம்பளர்   தீர்த்தம் கொடுத்தாள். குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டான் 

பாத்திரத்தில் வெல்லம் வைக்கப் பட்டிருந்தது. பேராசைப்பட்டு அதை ருசி பார்க்க வந்த மரநாய், தலையைப் பாத்திரத்துக்குள் நுழைத்திருக்கிறது. பின்பு விடுவித்துக்கொள்ள இயலாமல் தவித்திருக்கிறது. பாவம், அந்த ஜீவன் ஆசைப்பட்டது வெல்லத்துக்காக. அது கிடைக்கவில்லை. துன்பம் மட்டுமே மிஞ்சியது. வீட்டிலும், அக்கம் பக்கத்திலும் இருந்தவர்களுக்குத் தூக்கம் தடைப்பட்டதுதான் மிச்சம்!

இந்த சம்பவத்தால்  நடுங்கிக்கொண்டிருந்த  சுவாமிநாதனை  மடியிலிட்டுக் கொண்ட தாய், ``ஸ்வாமிநாதா... அழியக்கூடிய பொருள்கள் மீது நாம் ஆசைவைக்கவே கூடாது. பாவம், அந்த நாய்... வெல்லத்துக்கு ஆசைப்பட்டு எத்தனை கஷ்டம் அனுபவிச்சது பார்த்தியா?” என்று பெரிய தத்துவத்தைப் பிஞ்சு மனதில் புகட்டினாள். சுவாமிநாதனுக்குப் புரிந்தும் புரியாதது போல் இருந்தது. தூக்கம் கண்களைச் செருகியது.

விடியற்காலை மகாலட்சுமி அம்மாள்   எழுந்து கொண்டுவிட்டாள். வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போட்டாள். ஸ்நானம் செய்துவிட்டு வந்து, நெற்றியில் திலகமிட்டுக்கொண்டு, பூஜை அறையில் ஸ்லோகங்கள் முணுமுணுத்துக் கொண்டே சுவாமி படங்களை புஷ்பங்களால் அலங்கரித்தாள். ஊதுவத்தி ஏற்றினாள்.

கண்களைக் கசக்கிக்கொண்டே வந்த சுவாமிநாதனிடம் மணி எடுத்துக் கொடுத்தாள்.  கனகணவென்று  மணி அடித்தான்.  கற்பூரத்தை ஏற்றி சுவாமி படங்களுக்குக் காட்டினாள். குளித்து முடித்துவிட்டு வந்த சுப்பிரமணிய சாஸ்திரிகள், தீபத்தை உள்ளங்கையால் தொட்டு, சுவாமிநாதனின் கண்களில் ஒற்றி எடுத்தார்.

பிற்காலத்தில்  காளஹஸ்தியில் நடந்த சதஸ் ஒன்றின்போது, மணி அடித்து தீபாராதனை செய்வதில் புதைந்துள்ள தத்துவத்தை விளக்கியிருக்கிறார் மகா பெரியவர்:

‘தீபாராதனைக்கு முன், திரை போடுவதில் ஓர் அர்த்தம் இருக்கிறது. நாம் ஏதேதோ நினைவுகளில் மனதை அலையவிட்டுக் கொண்டிருப்போம். அப்போது சட்டென்று மணியோசைக் கேட்டதும் நம் காதுகளைத் தீட்டிக் கொள்கிறோம். இதர அநாவசிய சத்தங்கள் நம் காதில் விழுவதில்லை. அடுத்த கணம் திரை விலகுகிறது. நம் கண்கள் தேவையற்ற வேறு காட்சிகளைக் காணாதபடி தீபாராதனையின் ஒளி நம் கவனத்தைக் கவருகிறது.

கண்ணும் காதும் ஒரே இடத்தில் லயிப்பதுடன், மனத்தை யும் அதே இடத்தில் நிலைபெறச் செய்வதுதான் (concentration) பூஜையின் பலன். அதனால்தான் கோயில்களிலும் இதர இடங்களிலும் பூஜையின்போது   டாண்  டாண்  என்று  மணி யடித்து, கற்பூர ஆரத்தி காட்டுகிறார்கள்.’




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...