Saturday, April 3, 2021

badhragiriyar

 பத்ரகிரியார் புலம்பல்  -   நங்கநல்லூர்   J K  SIVAN 



ராஜா பர்த்ருஹரி  துறவியானான். காலார  நடந்தான் தெற்கே வந்தான் திருவிடை மருதூரில்  பட்டினத் தாரை தரிசிக்கிறான்.  அவர் சீடனானன்.   பர்த்ருஹரி   இனி பத்ரகிரி. 

பத்ரகிரி நீண்ட தெற்குப் பயணத்தில்  தமிழ் கற்றார் . பேசினார், பாடல்கள் இயற்றவும் முடிந்ததும்  அவரது  மனக்கு முறல்கள்    'பத்ரகிரியார் புலம்பல்'' என்ற  ரெண்டடி  தத்துவப் பாடல்களாக  நமக்கு  கிடைத்துள்ளது  நமது பாக்யம். ஒரு சிலவற்றை ஏற்கனவே  நாம் ரசித்தோம்.   பத்ரகிரியார்  தனது  குருவான  பட்டினத்தார் பின்னோடு செல்கிறார்.  கிராமம் கிராமமாக அலைகிறார்கள்.    

ஒரு நாள் ஒரு நாய் அவர்கள் செல்லும்போது பின் தொடர பத்ரகிரி அதற்கு சிறு உணவளிக்க பசியோடு இருந்த அந்த நாய் அன்று  முதல் பத்ரகிரியுடன் ஒட்டிக்கொண்டது. எங்கு சென்றாலும் கூடவே இருந்தது.

'உனக்கு எதற்கு இந்த பந்தம், எல்லாம்  துறந்தவன் அல்லவா நீ,?    வேண்டாம் என்று தானே எல்லாவற்றையும் உதறித்  தள்ளியவன்?'' என்கிறார் குரு. 

''குருநாதா,  ஏதோ,  என் பிக்ஷையில் பசியாக இருந்த அந்த ஜீவனுக்கு ஒருநாள் சிறிது தந்தேன் அதுமுதல் பாவம்  அது  என் பின்னே தொடர்கிறது'

'' விட்டதெல்லாம் மீண்டுமா... சரி உன்னிஷ்டம்''

எங்கோ ஒரு இடத்தில் ஒரு கிழிந்த பை கிடந்தது. பத்ரகிரி அதை எடுக்க,
''இது எதற்கு உனக்கு?''
''யாருக்கும் வேண்டாதது தானே இது ? என் துணியையாவது இதில் சுருட்டி வைத்துக்கொள்ளலாமே என்று தான்......''
''சரியப்பா சொத்துக்களை சேர்த்துக்கொள்''
''இல்லை சுவாமி,  அதை போட்டுவிட்டேன்.''.

சில தினங்களில் திருவிடை மருதூர் வந்து சேர்ந்தார்கள் குருவும் சிஷ்யனும். மகாலிங்க சுவாமி ஆலயம். இரவு தங்க வடக்கு வாசலில் பட்டினத்தார் சுருண்டு களைத்து படுத்தார் , கிழக்கு றொரு வாசலில் பத்ரகிரியார் நாயுடன், ஓட்டுடன்.

அந்த இரவு நேரத்தில் பசியாக ஒரு பிச்சைக்காரன் அங்கே வந்தான்.
பட்டினத்தாரிடம் ''ஐயா பசிக்கிறது. எனக்கு ஏதாவது உங்களிடம் இருந்தால் கொடுங்களேன்''
''அப்பனே என்னிடம் எதுவும் இல்லையப்பா. அடுத்த கிழக்கு வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான் அவனிடம் ஏதாவது இருந்தால் போய் பெற்றுக்கொள்''  என்கிறார் பட்டினத்தார்.

பிச்சைக்காரன் அந்த இரவில் கிழக்கு வாசலில் யாருமே இல்லை. அங்கு இருந்த பத்ரகிரியிடம் வந்தான். பட்டினத்தாரிடம் கேட்டதுபோலவே கேட்டான்.

''என்னிடம் எதுவுமே  இல்லையே அப்பா ''

''அந்த வாசலில் இருக்கும்   சாமியார் தான் உங்களிடம் நீங்கள் குடும்பஸ்தனாக இருப்பதால் ஏதாவது உணவு வைத்திருப்பீர்கள் என்று சொன்னார் ''

''என் குருநாதர் என்னை குடும்பஸ்தன் என்றா சொன்னார். அதில் ஏதோ அர்த்தம் இருக்கவேண்டும்.
நான் முற்றும் துறந்தல்லவோ சன்யாசியானவன்.. அவர் சொல்வது ஞாயம் தான் எனக்கு எதற்கு இந்த திருவோடு? இறைவன் கொடுத்த கை இருக்க ஓடெதற்கு ?    வீசி எறிந்தார் ஓட்டை? அது நாயின் மண்டையில் பட்டு அது தக்ஷணமே அவரை நன்றியோடு பார்த்துவிட்டு மடிந்தது''

இப்படிப்பட்ட  பத்ரகிரியாரின்  சில தடத்துவப்பாடல்களில்  இன்றும் 

தெள்ளத் தெளிய தெளிந்த சிவானந்தத் தேன்
பொழியப் பொழிய மனம் பூண்டிருப்பது எக்காலம்?

ஆஹா  பூக்களில்  வண்டுகள்  அருந்தி மகிழும்  பூந்தேனை விட சுவையானது  ஓம் நமசிவாயம் எனும் நாம சங்கீர்த்தனம்.  சிவானந்தம்.  அந்த தேனை என் மனம்  என்று ருசிக்கும்.  அது எப்போது நிகழும்?

தக்கும்வகைக்கு ஓர்பொருளும் சாராம லேநினைவில்
பக்குவம்வந்துன் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்?

''ஐந்து பிள்ளை பெற்றாள் . ஒன்று தான் தக்கியது'' என்றெல்லாம் கேட்கிறோமே, தாக்குவது என்பது  உலகில் தங்குவது.  அதுவும் நிரந்தரம் இல்லை.  சாஸ்வதமாக  தக்குவது  என்றால்  பரமேஸ்வரா  உன் நினைவு ஒன்று தான் அதுவே என் மூச்சு என்ற பக்குவம் என்றைக்கு எனக்கு  வந்து சேரும்?

கள்ளக் கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு
உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்?

இந்த மனம் இருக்கிறதே  அது மஹா பெரிய  சமுத்திரம் போல  எத்தனை எண்ண  அலைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஓயாமல் அதை பிடித்துக் கொண்டு அலைக்கழிக்கிறது.  என்று அதிலிருந்து விடுபடுவது?.  அவை  தீயவை அறுத்தெறிய வேண்டும் என்று உணர்ந்து உன் நினைவு ஒன்றே என் மனம் பூராக நிறைந்திருப்பது எப்போது?

அட்டகாசம் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே
பட்டபாடு அத்தனையும் பகுத்தறிவது எக்காலம்?

எதற்கு ஆண்டவா இந்த உடலைக் கொடுத்தாய்? நான் கேட்டேனா?   இது என்னமாய் என்னை  அதன் போக்கில் ஆற்று  வெள்ளம் இழுத்துக் கொண்டு போவது போல் என்னை அலைக்கழித்து  ஆட்டிவைக்கிறது, அவஸ்தை பட வைக்கிறது.   இதிலிருந்து விடுபட்டு உன்னை அறிவது எப்போது?

ஆங்கார முள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமற் றூங்கி சுகம் பெறுவ தெக்காலம்?

ஆங்காரம் என்றால் மமதை, கர்வம், ஆணவம் என்று ஒரு பொருள்.  இதை மனதிலிருந்து அகற்றினால் ஆத்மாவை  உணர்வது எளிது என்று அர்த்தமாகிறது.    ஆங்காரம்  மமதை மட்டும் அல்ல.  நான் எனது என்கிற   உணர்வு. எல்லாம் அவனே  என்கிற நிலை அடைய முயல்வது எக்காலத்தில்  என்று பத்ரகிரி கேட்கிறார்.
தூங்காமல் தூங்கி  என்பது  தூக்கத்தில்  மறந்த உடலை  தூங்காமலேயே  மறக்க முயல்வது.  தேஹாத்ம புத்தி எனும்  உடல் தான் ஆத்மா என்ற எண்ணம் அகன்றால் ஆனந்த நிலை பெறலாம். அதைதான்  சுகம் பெறுவது என்கிறார் துறவி. ரெண்டடிகளில் அற்புத தத்வம்.

தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...