Friday, April 2, 2021

DEAR OLD FRIENDS,

 


என் முதிய  சகோதர சகோதரிகளே,      --   நங்கநல்லூர்  J K  SIVAN 

சமீபத்தில் சிலகாலமாக  என் நண்பர்கள் சிலர்  என்னை விட்டு பிரிந்துவிட்டார்கள்.  வயது கூடக் கூட  நண்பர்களின் இழப்பு  வாடிக்கையாகி விட்டது.  

அவர்களில் சிலரின்  மறைவிற்கு இதில் கண்ட  சில விஷயங்களும் காரணம் என்பதால் இதை  இன்று உங்களுக்கு தெரிவிக்க மனதில்  ஒரு  எண்ணம் தோன்றியது.  எண்ணங்களை அவ்வப்போதே செயலாக்குவது என் பழக்கம்.  நல்லதல்லவா?

ஆன்மீக கட்டுரைகள், ஸ்தோத்திரங்கள்,   பழந்தமிழ் பாடல்கள் , மகான்கள் ஆச்சார்யர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள்,  இதிகாசங்கள் , உபநிஷதங்கள்,  என்  பழைய   பால்ய வாழ்க்கை நினைவுகள்  எதெல்லாமோ எழுதுகிறேன்.  இதில்  யாருக்கு எது பிடிக்கிறதோ இல்லையோ,  யாராவது படிக்கிறார்களோ  இல்லையோ,  எழுதுவது எனக்கு பிடிக்கிறது.  

நடுநடுவே  சில  விஷயங்களை  என் போன்ற  முதியோருக்கு அவ்வப்போது சொல்வதுண்டு. அதில் இது ஒன்று என்று எடுத்துக்கொண்டு படித்து பயனுற வேண்டுகிறேன். சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். ஞாபகம் இருக்கட்டும்.

உலகத்தில் யாரோ எங்கெங்கோ சேதிகள் சேகரித்து ஆராய்ந்து கண்டுபிடித்த சில உண்மைகள் ஒப்புக் கொள்ள வேண்டியவை.  


 என் முதிய சகோதர சகோதரிகளே,  நம்மில் பாதிக்கு  மேற்பட்டோர்  மாடி ஏறும்போது  சறுக்கி, கால் தடுமாறி கீழே விழுபவர்கள் ஜாஸ்தியாம்.  விழுந்தவர்களில் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை  அதிகம்.   ஜாக்கிரதை.   முக்கியமாக  60- 65 வயது தாண்டியவர்கள்  கீழே  சொல்லிய விஷயத்தில் கவனம் வையுங்கள்.என்னை மாதிரி  80+க்கு    குறிப்பாக சொல்லவே வேண்டியதில்லை.

1.பக்கவாட்டில் இருக்கும்  மரப்பிடியை கெட்டியாக  இருக்க பிடித்துக்கொண்டு மெதுவாக  முன்னோக்கி கழுத்தை சற்றே வளைத்து  படி ஏறவேண்டும்.

2. அவசரமாக  திடீரென்று  படியை  தாண்டி  தாண்டி  ஏர  வேண்டாம்.    சுவற்றையோ, கைப்பிடியை யோ தொடாமல்,  தலையை ஆட்டி ஆட்டி யாரோடோ போனில் பேசிக்கொண்டு கையை ஆட்டிக் கொண்டு  படி ஏற  வேண்டாம்.  உடலை மேலே  ஏறுவதற்கு   தயார் நிலையில் வைத்துக்கொண்டு ஏறவும். 

3. கீழே விழுந்த காசையோ, கத்திரிக்காயையோ  சட்டென்று குனிந்து எடுக்க, பொருக்க வேண்டாம். முழங்காலை மடித்து மெதுவாக நேராக குனிந்து எடுக்க முயற்சி செய்யவும்.  

4. நின்று கொண்டே  பைஜாமா, பேண்ட், உள்ளாடை  போட்டுக்  கொள்ளவேண்டாம். உட்கார்ந்து போட் டுக் கொள்ளவும்.

5. இந்தாங்கோ காப்பி என்று கொடுக்கிறபோது, மல்லாக்க படுத்தவாக்கில் சட்டென்று மரக்கட்டை போல் எழுந்திருக்க கூடாது.  வலது, இடது பக்கமாக  முதலில்  திரும்பிக்கொண்டு   மெதுவாக கையை ஊன்றிக் கொண்டு எழுந்திருக்க வேண்டும்.

6. உடல் பயிற்சி செய்கிறேன் என்று  இடுப்பை,  முதுகை, கழுத்தை,  அப்படியும் இப்படியும் ஆட்டி மாட்டிக் கொள்ளாதீர்கள். 

7. குழந்தையோடு விளையாடுகிறேன் என்றோ   மேலே எதையோ பார்க்க   பின்பக்கமாக நடக்கவோ  வேண் டவே வேண்டாம்.  ஆபத்தான  காயங்கள் மண்டையில் , முதுகெலும்பில்  பட்டு  உலகத்தை மறக்க வேண்டி வரும்.

8.  கனமான பக்கெட் தண்ணீரோ,  பெட்டியையோ, வேறு எதையோ இடுப்பை வளைத்து தூக்க வேண்டாம்.   முழங்கால்களை வளைத்து உட்கார்ந்தவாறு மெதுவாக தூக்க முயற்சி செய்யலாம். மூச்சைப் பிடித்துக்கொண்டு தூக்குவது  மூச்சு நின்றுவிட உதவிடும். மறக்கவேண்டாம். 

9, தூங்கி எழுந்த போதோ,   கதவை யாரோ தட்டியபோதோ, வாசலில் யாரோ மணி அடிக்கிறார்கள் என்றோ படுக்கையிலிருந்து  சட்டென்று எழுந்திருக்க கூடாது.  தலை சுற்றி கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு,  பெரிய சேதம் ஏற்பட வாய்ப்பு ஜாஸ்தி.   சில நிமிஷங்கள் உட்கார்ந்து விட்டு பிறகு மெதுவாக எழுந்திருக்கவும்.

10, கையில்  செய்தித்தாளோ, காதில் மொபைல் போனுடனோ, டாய்லெட்டில் அமர்ந்து  மலஜலம் முக்கி கழிக்க கூடவே கூடாது.  அதுவாக  வருவது வந்தே தீரும். விதி மாதிரி அது.  வருவதை தடுக்க முடியாது. அடக்கவும்  வேண்டாம். வந்த   போது  நிதானமாக அவசரமில்லாமல்  கழிக்கலாம். மூச்சைப் பிடித்துக்கொண்டு வெளியேற்றுவதால் சதை வெளியே வந்து பெரும் செலவும் உபத்ரமும் கொடுக்கும்.

இது உபயோகம் என தெரிந்தால் நம்மைப் போல்  வயோதிக வாலிபர்களே, மற்றவருக்கும்  எடுத்துச் சொல்லுங்கள்.  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...