Saturday, April 10, 2021

MARIYADHAI RAMAN STORIES 2

 


மரியாதை ராமன் கதைகள். 2 


குழந்தையைக் கொன்றது யார்?  --  நங்கநல்லூர்  J K  SIVAN 


மரியாதை ராமன் என்று ஒருவன் இருந்தானா?  விக்ரமாதித்தன் கதைகளில்   அவனை  ரொம்ப கெட்டிக்காரனாக எந்த  புதிரையும் அவிழ்க்கும் சாமர்த்திய சாலியாக, நீதிமானாக, அதி புத்திசாலியாக  காட்டியிருப்பார்கள்.   உண்மையாகவே  யாரோ இப்படி இருந்ததால்  தானே ஒரு  பாத்திரம் உருவாகி இருக்கிறது.  தெனாலி ராமன் கெட்டிக்காரன்.  ஆனால்  அவனை விதூஷகனாக,  விகடகவியாக கோமாளியாக  காட்டியிருக்கிறார்கள்.  பரமார்த்த குரு கதைகளில் முட்டாள்களை ஒன்று சேர்த்து காட்டி இருக்கிறார்கள்.

இங்கிலிஷ் கதைகளில் ஷெர்லாக் ஹோம்ஸ்  படு புத்திசாலி.  துப்பறிவாளன். உட்கார்ந்த இடத்திலிருந்தே  எங்கோ நடந்த  கொலை,கொள்ளைகளை  எப்படி நடந்தது, யார் செய்தது என்று அடையாளம் காட்டும் சாமர்த்தியசாலி.  ஷெர்லாக் ஹோம்ஸ் இருந்தானா  அல்லது  அவனை உண்டாக்கிய  ஆர்தர்  கானன்  டாயில் அவ்வளவு கெட்டிக்காரனா?  

 பெர்ரி மேசன்  ஒரு கெட்டிக்கார வக்கீல். குறுக்கு விசாரணை கேள்விகளில் உண்மையை வெளிக் கொணர்ந் து  குற்றவாளியை கண்டு பிடிப்பவன்.  பெர்ரி மேசன் யார் என்றால்  அந்த பாத்திரத்தை உருவாக் கிய  ஏர்ல் ஸ்டேன்லி கார்ட்னர்  தான்.  அகாதா கிறிஸ்டி அப்படித்தான்.  நமது தமிழ் வாணன் சங்கர்லாலை உருவாக்கி  சங்கர்லால் என்றும் நமது மனதில் இருக்கிறார். தமிழ்வாணனை ஞாபகம் இல்லை. 

இன்று ஒரு மரியாதை ராமன் கதை. அநேகருக்கு தெரிந்த கதையாக இருக்கலாம்..

ஒருத்தன்  ரெண்டு பொண்டாட்டிக்காரன்.  சாந்தா  காந்தா அவர்கள் பெயர்கள்..  சாந்தா முதல் மனைவி. காந்தா ரெண்டாவது.  அவன் எவ்வளவு பெரிய  தொந்தரவை தானே  விலைக்கு வாங்கி இருக்கிறான். எரிகிற கொள்ளிக் கட்டை ஒன்று அல்ல ரெண்டை, எடுத்து தலையிலே ஏன்   செருகிக்கொண்டான்?
 
அந்த  வீட்டில்  எப்போதும் சத்தம்.  சண்டை போடாத நாளே கிடையாது.  சூரியன் உதிப்பது நேரமானாலும் ஏதோ ஒரு  சண்டை சரியாக பொழுது விடிந்தவுடனேயே  தொடங்கிவிடும். 

அந்த ரெண்டு பேர் இன்று வழக்கில்  ஆஜர்.   வழக்கு   ராஜாவின்  அரண்மனையில் விசாரணைக்கு வந்தது..  ராஜா உட்கார்ந்திருக்க  அருகே  ஒரு ஆசனத்தில் மரியாதை ராமன்.   ராஜாவால்  நியமிக்கப்பட்ட  விசார ணை  ஜட்ஜ்.

ஒருத்தி மேல் இன்னொருத்தி  புகார். புருஷன்காரன் பொட்டி பாம்பாக  ஒரு மூலையிலே தலையிலே கை வைத்துக்கொண்டு முட்டிக்கால் போட்டு தரையில் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறான். சுற்றி  கிராமத்து  மக்கள் கும்பலாக  சபை நிறைந்திருக்கிறது. 

ரெண்டாம் மனைவி  காந்தா  கம்ப்ளைண்ட் கொடுத்தவள்.  வாதி.  அதை  இல்லை என்று  மறுப்பவள்  முதல்  மனைவி  சாந்தா.  பிரதிவாதி.    தன்மேல் அபாண்டமான வழக்கு இது  என்று அழுபவள் . 

என்ன குற்றம் என்ன வழக்கு இது?  யார்  குற்றம் சொல்வது ஆரம்பி உன் வாதத்தை''  என்று  ராஜா கூறினான். எல்லோரும் அமைதியாகி நிற்க  வாதியாகிய  ரெண்டாம் மனைவி காந்தா  அழுது கொண்டே  சொன்னாள் :

''என்  குழந்தை இறந்து விட்டது.   ஐயா  நான் வயதில் சிறியவள்  எப்போதுமே  சிறிஸைக்கண்டால் பெரிசுகளுக்கு பிடிக்காது.  பொறாமை. ஆத்திரம்.  யார்  கொன்றது என் குழந்தையை என்று நீங்கள் கண்டு பிடிக்கவேண்டும். பெத்த வயிறு பத்தி எரியுது  என்று அழுதாள்.

மரியாதை ராமன்   அவளைப்   பார்த்து, “அழாதேம்மா! உன்னுடைய கஷ்டம் ஈடில்லாதது.  யார் உன் குழந்தையைக்  கொன்றது என்று தெரியலை. உனக்கு  யார் மேலே சந்தேகம்?


“அதை என் வாயாலே எப்படிச் சொல்வேன்? நீங்க கேட்டதாலே சொல்றேன்! எம் புருசன் ஒரு புள்ளைப்  பூச்சி. ஒண்ணுமே  தெரியாது.  என் சந்தேகம்  இதோ எதிர்த்தாப்பலே குத்துக் கல்லாட்டம் நிற்கிறாளே அவ  மேலே தான் என் சக்காளத்தி. அவ மலடி! எனக்குக் குழந்தை பிறந்தது அவளுக்குப் பொறாமை! இந்த ஒரு காரணமே போதுமே! அவளுக்குத் தூக்குத்தண்டனை கொடுத்தா கூட என் ஆத்திரம் தீராது!”

மரியாதை ராமன் அவளை ஓரமாக நிற்க சொல்லிவிட்டு முதல் மனைவி  சாந்தாவை  அழைத்தான்.  ''உன் மேலே  குற்றம் சாத்தி இருக்கிறது. நீ என்ன சொல்றே?''

“நான் என் புருஷனுக்கு முதல் மனைவி. குழந்தை பிறக்காததாலே, நானே என் புருசனுக்குப் பெண் பார்த்து  இவளை கட்டி வச்சேன்.  கூடப் பிறக்கல்லன்னாலும் அவ என் தங்கச்சி. குழந்தை பிறக்கப்போவுதுன்னு செய்தி வந்ததும்  முதல்லே  அதிக சந்தோசம் பட்டவ நான்தான் ஐயா!“தாய் இல்லாத பெண்ணாச்சே! பிரசவத்தை நம்ம வீட்லேயே பார்த்துடலாம்னு இவளைப் பொறந்த ஊட்டுக்குக் கூட அனுப்பலே! நல்லபடியா குழந்தை பொறக்கணும்னு நான் வேண்டாத தெய்வம் இல்லே, முடிச்சுப் போடாத காணிக்கை இல்லே!” என்றாள் மூத்தவள் சாந்தா.

இளையவள் காந்தா குறுக்கிட்டாள் .

 “குழந்தை திடீர்னு எழுந்துக்கும். போய் ஆசையா பெரியம்மாகிட்ட படுத்துக்கும். அப்படிப் படுத்த குழந்தையை கழுத்தை நெரிச்சுக் கொன்னுட்டு, ஒண்ணும் தெரியாத பாப்பா போல நடிக்கறதைப் பாரு!” என்று சீறினாள்.

மரியாதை  ராமன்    இளையவளிடம்  “குழந்தைக்குக் குளிப்பாட்டுவது யார்? மருந்து கொடுப்பது யார்? தூங்க வைப்பது யார்? அழகா உடுத்தி, கண்ணுக்கு மை தீட்டி, காற்றாட வெளியில் தூக்கிக்கிட்டு வேடிக்கைக் காட்றது யார்?” என்று கேட்டான்.

“என்னமோ தான் பெத்த புள்ளை மாதிரி என் குழந்தைக்கு எல்லாம் செய்றது  அவள் தான்.  எதுக்கு? புருசன் தன்னைத் தள்ளி வச்சிடுவாரோ என்ற பயம். பாக்கறவங்க தன்னைப் பாராட்டுவாங்கன்ற சுயநலம்தான்! தாய்ப்பால் குடிக்க மட்டும்தான் குழந்தையை என்னண்டை கொடுப்பா! ஏன்னா அது அவளால முடியாது!” என்று ஏளனமாக சாந்தாவைப் பார்த்துச் சொன்னாள் இளையவள்.

மரியாதை புருஷனை எதிரே நிற்க வைத்து    ''நீ என்னய்யா  சொல்றே? குழந்தையை யார் கொன்றது? தெரியவில்லை என்றால் யார் கொன்றிருப்பார்கள் என்ற  உன்  ஊகத்தைச் சொல்லு''

''நான் ஊரிலே  இல்லேங்க. பெத்தவள் செய்தாளா? மத்தவள் செய்தாளா? யார் செய்திருந்தாலும் கண்டுபிடிச்சு   கடுமையான தண்டனை கொடுங்க? எனக்கு ரெண்டாவது கல்யாணம் செய்து வச்சதே முதல்தாரம்தான். மனப்பூர்வமாகத்தான் ஒத்துக்கிட்டா! நமக்குக் குழந்தை வேணும்! என்னாலே முடியாதபோது எனக்கு வர ‘உடன்பிறவா சகோதரி’ மூலமாவது அந்தப் பாக்கியம் கிட்டட்டும்னு சொன்னவளே பெரியவள்தான்!   அடிக்கடி சின்னவ எங்கிட்ட பெரியவளைப் பத்தி தூபம் போடுவா! அவளை விரட்டுங்க. என் குழந்தையை எப்பவும் அவளே கவனிச்சுக்கறா. அப்புறம் குழந்தைக்கு எம்மேலே எப்படிங்க பாசம் வரும்! குழந்தையும் அவகிட்ட நல்லா ஒட்டிக்கிச்சு. அப்படிச் சொல்லும்போது நான் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’னு புத்தி சொல்வேன்.

“இன்னொரு  உண்மையை இந்தச் சபையில் சொல்றேன். சின்னவளுக்குக் குழந்தை பிறந்த ஆறுமாசம் கழிச்சு பெரியவள் என்னை வைத்தியர் கிட்ட அழைச்சிட்டுப் போனா! வாந்தி மயக்கம்னு சொன்னா! வைத்தியர் அவளைப் பரிசோதித்து  பெரியவளும் தாயாகப் போறா ன்னு சொன்னார்.  ஆனா  அவளோ, வைத்தியய்யா ,  எனக்கு குழந்தை வேணாம்.  கருவைக் கலைக்கிற மருந்து கொடுங்க''  இருக்கிற குழந்தை யை ஆசையா வளக்கணும் எனக்கு. அதுக்கு போட்டியா இன்னொண்ணு  வேணாம்'' னுகருவை கலைக்க சொல்லிட்டா.  இது சின்னவளுக்கு தெரியாது.''  எனக்கு  அவ குழந்தையை கொன்றாள்  என்று நம்ப முடியவில்லை என்றான். 

மரியாதை ராமன் யோசித்தான். அவனுக்கு ஒரு பொறி தட்டியது.  அதை நிரூபிக்கவேண்டும். குழந்தையைக் கொன்றது யார் என்று தெரிந்துவிடும்.
  
மரியாதை ராமன்  சின்னவளிடம்   அம்மா  நீங்க  குழந்தையைப் பெத்தவங்க  ஆகவே தண்டனை நீங்க தான் கொடுக்கணும்.  இந்த  கொலைகாரி,  மூத்தவளைக் கட்டிப் போட்டு  சாட்டையால்  நீங்களே அடிக்கலாம்.  கயிறால் கட்டினால் அறுந்து விடும். எதனால் கட்டினால் உடலை இறுக்கும்?” நீங்களே சொல்லுங்க  என்றான் .

 பொங்க ‘மரத்தைச் சுத்திப் படரும் பாடவரங்காய் கொடியை வெச்சுக் கட்டினால் கொடி அறுபடாது. உடலை இறுக்கி விடும்’ என்றாள். ‘என் வீட்டுத் தோட்டத்திலேயே அந்தக் கொடி படருது’ 

சொன்னபடியே இளையவள் வீட்டிலிருந்த நீளமான பாடவரங்காய் கொடி அறுத்துக் கொண்டுவரப் பட்டது. சபையில் நிசப்தம்.

மரியாதை ராமன் ராஜாவிடம்   ரகசியமாக ஏதோ சொன்னான். “அப்படியா!” என்பதுபோல் அரசர் ஆச்சரியத்தால் வாய் பிளந்தார்.

மரியாதைராமன் அந்தப் பாடவரங்காய்க் கொடியை  ராஜாவின்  காவலாளியிடம் கொடுத்து. அவள அந்த அம்மாவை கொடியால் இறுக்கிக்  கட்டுங்கள்  என்றான். சேவகனிடம் கொடுத்து அந்த அம்மாவைக் கொடியால் கட்டுங்கள்!” என்று உத்தரவிட்டான். ‘எந்த அம்மா’ என்பதை மக்கள் யோசனை செய்வதற்குள், காவலாளி இளையவளைக் கட்டத் துவங்கினான்.

இளைவள் பதறி “வேண்டாம்! என்னைக் கட்டாதீர்கள். நானே உண்மையைச் சொல்லி விடுகிறேன். என்  குழந்தைக்கு  என் மேலே  பாசம் இல்லை.  பெரியம்மா கிட்டேயே எப்போதும் இருக்கும். விளையாடும். அதைக் கண்டால் எனக்கு பிடிக்கலே.  ஒரு பிளான் போட்டேன்.  எங்க தெரு  கசாப்புக் கடைக்காரனின் உதவியை நாடினேன். அவன்  குழந்தையை  கத்தியால் வெட்டமாட்டேன்.  கொடியால் கழுத்தை நெரித்து பெரியம்மா பக்கத்தில் போட்டுடறேன் என்று சொன்னான். என்   புருஷன் ஊரிலே  இல்லாத நேரம் பார்த்து த் தகவல் சொன்னேன்.  ஒரு ராத்தரி  அவன்  காரியத்தை முடித்தான்.   எனக்குக் குழந்தை போனாலும் பரவாயில்லை. பெரியவ மேலே எங்க வீட்டுக்காரர் வெச்சிருக்கிற பாசத்தை நாசப்  படுத்தணும்கிறதான் என் ஒரே நோக்கம். அதனாலே இந்த கொலையை செய்ய வச்சேன்.   எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க!” என்று மண்டியிட்டு அழுதாள்.

மரியாதை ராமன், “குற்றவாளி வாயாலே குற்றத்தை ஒப்புக் கொள்ள” வைத்ததை,  ராஜாவும்  ஊராரும்  போற்றினார்கள்.  இளையவளுக்கும்  கசாப்பு கடைக்காரனுக்கும்  சிறைத் தண்டனை கிடைத்தது.

இளையவள் மூத்தவள் கால்களில் விழுந்து அழுதாள். “அக்கா! நம் குலத்தைத் தழைக்க வந்த செல்வத்தை  அழித்து விட்டேனே! நான் ஒரு மகா பாவி! அந்தப் பழியை உன் மேலே  போட்டு உன்னை   ஒழிச்சிட  நினைச்சேன்.  நான் துரோகி.   எனக்கு வாழ்வு கொடுத்து  உங்க குழந்தையைக்கூட தியாகம் செய்தவங்க நீங்க.  எனக்கு இந்த தண்டனை போதாது. என்று அழுதுகொண்டே  சிறைக்குச்  சென்றாள்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...