Sunday, April 4, 2021

V S S SASTRI RAMAYANA LECTURES

 


சாஸ்திரிகளின்   முப்பது நாள் ராமாயணம்-   3
நங்கநல்லூர்  J K SIVAN


ராமனுக்கும்  லக்ஷ்மணனுக்கும்  தான்  குணத்தில் எவ்வளவு  வித்யாசம்.  லக்ஷ்மணன் ஒரு சாதாரணன்.   ராமனபுரிந்து  கொள்ள  எளிதானவன் அல்ல.  ராமனின் சில  செயல்கள் வெவ்வேறு  அபிப்ராயத்துக்கு உட்பட்டவை.  சற்று முரண்பட்டதாக  விமர்சிக்கப்படுபவை.

வால்மீகி  ராமனை   ராமாயணத்தில் கற்பனையால்  உருவாக்கவில்லை.  ஏற்கனவே  தெரிந்த ஒரு  ஆத்மாவாக, பரமாத்வாக,  இருந்தவருக்கு உருவம் கொடுக்கிறார். மனிதனாக  காண்கிறார். அவருக்கான  சந்தர்ப்ப சூழ்நிலைகளை  உருவாக்கி அருள்கிறார். சில  சந்தர்ப்பங்களில் ராமனின்  குணங்களில் செய்கைகள்  முரண்பாடாக  தோன்றியபோதும்  ராமாயணத்திலிருந்து  அதை  நீக்க வில்லை.
வால்மீகி உலகின் சிறந்த  கவிஞர்களில் முதல் வரிசையாளர்.

ராமனை  எப்படி பார்க்கிறோம்.   சிறந்த  மகனாக, கணவனாக, பராக்ரமம் மிக்க அரசனாக, நல்ல உயிர் நண்பனாக,  எளியோர்க்குதவும்  ஏழை பங்காளனாக  வால்மீகி ராமனை சித்திரிக்கிறார்.  
இளம் வயதிலேயே  வனவாசம் செல்ல உத்தரவிட்ட போது , தந்தை தாய்  வார்த்தைக்கு எந்த வித எதிர்ப்பும் ஏமாற்றமும், அதிர்ச்சியும்  இன்றி,  மனமுவந்து சிரமேற்கட்டளையாக  ஏற்றுக்கொண்ட தன்மை.  பித்ரு வாக்ய பரிபாலனத்தை கடைப்பிடித்து  உதாரண புருஷனாக  நடந்தவன் ராமன்.  தந்தைக்கு தாய்க்கு, உடன்பிறப்புகளுக்கு, மனைவிக்கு, மற்றோர்க்கு குடிமக்களுக்கு   தர்மத்தை  உபதேசித்தவன். மரியாதை ராமன். எல்லோரின்  மதிப்பை பெற்றவன்.

சீதையைப் புறக்கணித்தது ஒன்றே  அவனது  திட மனதின்  அடையாளம்.  உலகமே  அதிர்ந்தது. எவரும் ராமனின் முடிவை எதிர்க்கவில்லை.   சீதையின் நிலையை  விதியாக  கண்டனரே தவிர்த்து  ராமனை சத்யசீலனாகவே  ஏற்றனர்.

விபீஷணன் சரணடைந்தபோது மந்திரி பிரதானிகள், ரிஷிகள்,  நண்பர்கள், சகோதரன் லக்ஷ்மணன் எல்லோரும்  விபீஷணனுக்கு அடைக்கலம் தர  விரும்பவில்லை என்றாலும் அவர்களது  அபிப்ராயத்தை ராமன் செவி சாய்த்து கேட்கவில்லை.    சரணடைந்தவனுக்கு பாதுகாப்பு தந்தான்.  முதல்நாள்  யுத்தத்தில் தோற்று  ஆயுதம் இழந்த நிராயுதபாணியாக இருந்தபோது  தனக்கு சாதகமாக இருந்தும்   ராவணனைக் கொல்லாமல்  '' இன்று போய் நாளை வா''  என்று கருணையோடு அருள் புரிந்தவன் ராமன். அவனது சீரிய குணத்தை உலகமே போற்றி  வணங்குகிறது இன்றும்  என்கிறார் சாஸ்திரிகள்  தனது பிரசங்கத்தில்.

இருந்தும்  அவ்வப்போது  ராமன்  மனிதனாக  துன்பம், துயரம்,  வருத்தம், கோபம், மகிழ்ச்சி, ஏமாற்றம் எல்லா உணர்ச்சிகளையும்  வெளிக்காட்ட தயங்கவில்லை. நம்மைப்போல் அவனும் சந்தேகப்பட்டான். சாதாரண மானிடனாக தன்னைக் காட்டிக்கொண்ட சில சந்தர்ப்பங்கள்:

தனக்கு  அடுத்த யுவராஜா பட்டாபிஷேகம் என்று தந்தை அறிவித்ததை கேட்டு சீதையோடு தானும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்ட  ராமன்,  அது  நடக்கப்போவதில்லை என்றறிந்தபோது  துளியும்  ஏமாற்றத்தை,  அதிர்ச்சியைக்  காட்டவில்லை.  மனதில் வருத்தம் இருந்தபோதும் வெளிக்காட்டவில்லை. அதோடு  தனது தாய் கௌசல்யாவிடம் சென்று  தான் வனவாசம்  போகவேண்டியதைத் தெரிவிக்கிறான்.

சீதையிடம்  விஷயத்தை சொல்லும்போது  ராமன்   துயரத்தை அடக்கமுடியாமல் , உடைந்து போவதை வால்மீகி ராமாயணம் காட்டுகிறது.

தான்  வனவாசம் செய்யும் காலத்தில் தனது தாய்,  கௌசல்யா, லக்ஷ்மணன் தாய் சுமித்ராவுக்கு  கைகேயியிடமிருந்து  தீங்கு  நேரலாம்.  பரதன் மூலம் ஏதேனும் ஆபத்து நேரலாம், லக்ஷ்மணா   நீ இங்கே  இருந்து அவர்களை பாதுகாப்பாய் என்று சொல்கிற இடத்தில் ராமன் நம்மைப் போல் மனித ஸ்வபாவம் கொண்டவன் என்று காட்டுகிறார் வால்மீகி என்கிறார் சாஸ்திரிகள்.    வால்மீகி  ராமனை  நம்மைப்போல் ஒரு  சதையும் ரத்தமும் உள்ள மனிதனாக காட்டும்போது அவன் உயர்வை எளிதில் அறிய முடிகிறது என்கிறார் சாஸ்திரிகள்.

ராவணன் வாரிசு இல்லாமல் அனாதையாக  யுத்த களத்தில்   இறந்து கிடக்கிறான் .  விபீஷணன் ஒருவன்  தான்  எஞ்சியிருப்பவன்.  அவனை  ராவணனுக்கான அந்திம  கிரியைகளை  செய்ய ராமன் அறிவுறுத்தியபோது  அவன் மறுக்கிறான்.  '' நீ செய்யா விடில்  எதிரியாகி இருந்தாலும்  அவனுக்கு ஈமக்கடன்களை நான் செய்கிறேன் ' என்று ராமன் முன் வந்ததும்  விபீஷணன்  மனம் மாறி வணங்குகிறான். தனது கடமையை நிறைவேற்றுகிறான். இந்த குணம்  தான் ராமனை நாம் தெய்வமாக  வழிபட வைத்திருக்கிறது.  ராமனை  நாம்  நன்றாக  புரிந்துகொள்ளும் வகையில்  அவனை  ராமாயணத்தில்  வால்மீகி காட்டுகிறார்.


ராமனை  காட்டில் தேரில் இறக்கிவிட்ட பிறகு  சுமந்திரன்  நான்  அயோத்தி திரும்ப மாட்டேன் இங்கே உன்னோடு கானகத்தில் இருக்கிறேன் என்கிறான்.   ''சுமந்திரா, நீ  அயோத்தி திரும்பவேண்டியது அவசியம். உனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்று.   அன்னை கைகேயி நீ  என்னை கானகத்தில் இறக்கி விட்டாயா  என்று தெரிந்துகொள்ள காத்திருப்பாள்  அவளுக்கு சேதி சொல்லவாவது நீ அவசியம் திரும்ப வேண்டும் . நீ திரும்பவில்லையென்றால்  தந்தை தசரதனைத் துளைத்து எடுத்து விடுவாள் ''  என்கிறான் ராமன்.  கைகேயியின் மனதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறான்.


தொடரும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...