Tuesday, April 6, 2021

SASTRI 30 DAY RAMAYANA LECTURES


 சாஸ்திரிகளின் முப்பது நாள் ராமாயணம்-   4

நங்கநல்லூர்  J K SIVAN

  '' ராம  பரத  சம்வாதம்''  

நான்  சொல்லிக்கொண்டு வருவதெல்லாம்  ராமாயண கதை அல்ல.  அதில் வரும்  சில காட்சிகளை பற்றிய குறிப்புகள். ஸ்ரீ ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் தனது அற்புதமான ஆங்கிலத் திலும்  சமஸ்க்ரித புலமையிலும்  அனுபவித்த சில  அருமையான காட்சிகள்.  இதெல்லாம் கூறி முடித்தபின்னரே  ராமாயண  பிரசங்கத் தில் புகுவேன்.

''ஸ்ரீ  ராமன் நினைத்தபடி நடக்கவில்லை.  மாரிக்காலம்  நீண்டு கொண்டே போயிற்று.  சுக்ரீவனும் அவனது வீரர்களும்  இன்னும்  சீதையைத் தேடும் பணியில் ஈடுபடவில்லை.   இதற்கிடையே  ஹனுமான், சுக்ரீவனிடம்  ''அரசே  நீங்கள் கொடுத்த  வாக்கு  தவறுகிறது.  ஸ்ரீ ராமனிடம் நீங்கள் சீதா தேவியைத் தேடி கண்டுபிடிக்கும்  பணியில்  நமது வீரர்களை  நாலா பக்கமும் அனுப்புவதாக சொன்னீர்களே. உடனே அதில் ஈடுபட வேண்டாமா?  கால தாமதமாகிறதே''  என்று  அறிவுறுத்துகிறார்.
ஸ்ரீ ராமனின்  பொறுமை  எல்லை கடந்து விட்டது.   லக்ஷ்மணனை அனுப்புகிறான்.   சுக்ரீவனிடம்  பேசும்போது  வார்த்தைகளில் கோபம் வேண்டாம் என்று அவன் சுக்ரீவனை  எச்சரித்தபோதும்  லக்ஷ்மணன் வெகுண்டு  ''சுக்ரீவா,  என்  அம்புகளால் வீணில் உன் உயிரை இழக்காதே '' என கோபிக்கிறான்.  சுக்ரீவன்  தனது திட்டத்தை விவரித்த பிறகு தான்  லக்ஷ்மணன் கோபம் தணிகிறது.  சுக்ரீவனிடம்  ''நண்பா  என்னை மன்னித்து விடு'' என்கிறான்.  சுக்ரீவன் நேரில் வந்து ராமனை தரிசித்து தனது தேடல் திட்டத்தை விளக்கியதும்  ராமன்  மகிழ்கிறார் .
சுக்ரீவன்,  வானர வீரர்கள்,  ராம லக்ஷ்மணர் கள் கலந்து ஆலோசிக்கும் ஒரு கட்டம் விபீஷண சரணாகதியின் போது.   

விபீஷணனை  ஏற்கக்கூடாது கொல்ல வேண் டும் என்று  ராமனைத்தவிர அனைவரும் ஏக முடிவாக இருக்கிறார்கள்.  ஹனுமான் ஒரு படி மேலே போய்  ''தனது சகோதரனையே  காட்டிக்கொடுத்து  துரோகம் செய்த விபீஷ ணன் எந்த நிலையிலும்  நமக்கும் துரோகம் செய்ய தயங்கமாட்டான். அவன்  நம்பத் தகாதவன்'' என்கிறான்.  
ராமனோ  ''சுக்ரீவா,  சிலர்  உன்போல் நம்பிக்கைக்கு பாத்ரமானவர்கள் என்பதை மறக்காதே.   அண்டி  சரணடைந்தவனை கைகொடுத்து  தைர்யமளித்து காக்க வேண்டும் என்பது ஒரு அரசன் கடமை.'' என்கிறார்.பரதனை சுட்டிக்காட்டுகிறார்.  தன் காலடியில் விழுந்து காத்திருக்கும்  ராஜ்யத் தையே  வெறுத்து சகோதரனின் காலடியில் விழுந்து சரணடைந்த அவன் போல  லட்சுமண னுக்கு நிரூபிக்க  இதுவரை   சந்தர்ப்பம் எதுவும் கிடைக்கவில்லை'' என்கிறார்.
 ராமர் தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை அயோத்தியில் மட்டுமல்ல  ராஜ்யத்தை  தனது வசத்தில் கொண்ட  பரதன்  சித்ரகூடத்தில் வந்து  ராமனை அழைத்து மீண்டும் அரசனாக ஆள  அழைத்த போதும்  தந்தை சொல் ஒன்றே மந்திரம் பதினான்கு வருஷம் வனவாசத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதியாக நிற்கிறார்.   உத்தம  சகோதர உறவுக்கு, பாசத்துக்கு,   ராமர் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு  என்கிறார் ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் தனது பிரசங்கத்தில். எண்ணற்ற  சமஸ்க்ரித ஸ்லோகங்களை வால்மீகியிடமிருந்து எடுத்து கொட்டுகிறார்.
பதினான்கு வருஷம் முடிந்ததும்  ராமர்  முதலில் ஹனுமனை  நந்திக்ராமத்துக்கு அனுப்புகிறார். தான் பாரத் வாஜர் ஆஸ்ரமத் தில் தங்குகிறார்.  பரதன் ஒருவேளை  ராஜ்ய பாரம் ஏற்கும் மனநிலையில் இருக்கிறானா என்று அறிய ஹனுமனை அனுப்பினாரா?  என்கிறார்  சாஸ்திரிகள்.  ஆனால்  பரதன் தனது முடிவில் இம்மியும் மாறவில்லை.  ராமன் திரும்பிய  அடுத்த கணமே  பொறுப் பை அவரிடம் ஒப்படைக்க முள்ளின் மேல் காத்திருந்தான்.

சித்ரகூட சந்திப்பில்    ராமரிடம்   பரதன் மூன்று  முக்கிய விஷயங்களை  குறிப்பிடு கிறான்.
1. அண்ணா,  நமது இக்ஷ்வாகு வம்சத்தில் மூத்தவன் தான் அரியணை ஏற வேண்டும்.

2.எனது தாய்  கைகேயியின் வார்த்தைகள் எடுபடாது.  அது சுயநலத்தில் பிறந்தது. ஆகவே  ஏற்கத்தகாதது.
3.அயோத்தி குடிமக்கள் அனைவரும் ஒருவர் விடாமல்  ஸ்ரீ ராமனே அடுத்த  அரசன் என்று ஏகமனதாக காத்திருக்கிறார்கள். 
''பரதா, தாயைப் பழிக்காதே, அது என் காதில் ஏறாது. என்னைப் பொறுத்தவரையில்  அம்மா வேறு அப்பா வேறு இல்லை.  இருவரும் தர்ம சீலர்கள் என்பதை மறக்காதே'' என்று ராமர்  திரும்ப மறுக்கிறார்.
''அண்ணா,  இந்த  நாடு இப்போது எனது என்றால் நான் ராஜா இல்லையா. என் வாக்கு அதிகாரம் கொண்டது இல்லையா. நான் அரசனாக அதை உனக்கு அளித்து நீ ஏற்க வேண்டும் என்று சொல்கிறேன். இப்போதாவது என்னோடு அயோத்தி  திரும்பு. இதை நீ மறுக்க முடியாது'' என்கிறான்.  இதற்கு ராமன் பதிலளிக்கும் ஸ்லோ கங்கள் பொன்னா னவை.  விதி,   மனிதனின் வாழ்க்கையில் விளையாடுவதைப் பற்றி, அதை தவிர்க்க  முடியாதது பற்றி எடுத்துச் சொல்கிறார்.

ராமன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்  பரதன் மனம் மாறவில்லை.  தாய் கைகேயி யின் செயலை, சொல்லை அவனால் மறக்க வோ மன்னிக்கவோ முடியவில்லை.  தந்தை தசரதர்  கைகேயியின் மோகத்தில் நேர்மை யாக  சிந்திக்கும் திறனற்றவர் என்று  கருது கிறான்  ''அண்ணா  நீ  பொறுப்புள்ள  மகனாக தந்தையின் செயலைப்  புறக்கணித்து  அவருக் கு நற்பெயர் சம்பாதித்து தரவேண்டும், அவரை  காக்க வேண்டும் ''  என்கிறான்.

''ஊரறிய  உன்னை  அடுத்த  அரசன் என்று, யுவராஜ்ய பட்டாபிஷேகத்துக்கு  ஏற்பாடுகள் பண்ணிய தந்தையின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காமல்  அவர் மனைவிக்கு அவர் கொடுத்த  வாக்குக்கு  அடி  பணிந்து  நீ  தியாகம் செயகிறாய். அது ஏற்புடையதல்ல''    என்று கூட சொல்லிப் பார்க்கிறான் பரதன்.
'' அண்ணா  இன்னொரு  விஷயமும் நீ மறவா தே.  நான் இளைஞன். அனுபவமில்லாதவன். நாட்டை ஆள  தகுதியற்றவன். நாட்டின் நலன் கருதி, நாட்டு மக்கள்  விருப்பத்துக்கிணங்க   நீ   ராஜ்ய பாரம் ஏற்றுக்கொள். இதோ வசிஷ்டர் என் கூட வந்திருக்கிறார். உடனே  உனக்கு   இங்கேயே   பட்டாபிஷேகம் நடத்தி வைப்பார். என்கிறான் பரதன்.  அவனோடு வந்த அனைவ ரும் அதுவே சரி என்று  ஏகமனதாக சொல்கி றார்கள்.
''தந்தையின் வாக்கை  நிறைவேற்றுவது ஒன்றே பிரதானம். மற்ற எதுவும் அதற்கு நிகராகாது.  அவரது வார்த்தையை தாய் மூலம் வந்தாலும்  நீயும் உத்தம புத்திரனாக  அதை  ஏற்று அரசனாகவேண்டும்  என்று மறுக்கிறார் ராமர். 
''வனவாசம்  கொடுமையானது அண்ணா ''  அயோத்தி திரும்புங்கள் என்கிறான் பரதன்.  
''பரதா , நீ அயோத்தியில் அரசனாக பொறுப் பேற்று வாழ்வதற்கு எந்த விதத்திலும் இந்த  கானக வாழ்க்கை குறைவில்லையப்பா. எந்த பயமுமில்லை.   நீ நாட்டரசன், நான் காட்ட ரசன். சீதையோடு சந்தோஷமாக இங்கே வாழ்வேன் கவலை வேண்டாம்''  என்கிறார் ராமர்.
வசிஷ்டரும்  பரதன் சொல்லை ஆமோதித்து  '' ஸ்ரீ ராமா,  இக்ஷவாகு வம்சத்தின் பாரம்பர்யம் முதல் மகன் தான் அடுத்த ராஜா''. மேலும் தந்தை வாக்கைப் போன்றது குலகுரு,  ஆசார்யன் வாக்கும். நான் சொல்கிறேன் நீ ராஜாவாக பட்டாபிஷேகம் செய்துகொள் '' என்கிறார்.
பரதனை ''உன் தந்தை ஆணையின் படி, விருப்பப்படி  அரசனாக பதவி ஏற்றுக் கொள் '' என்ற வசிஷ்டரை அனைவர் எதிரிலும் சபையில் பரதன் கடிந்து கொண்டு ஏற்கனவே  நிராகரித்தான் .
கடைசி அஸ்திரத்தை பரதன் பிரயோகிக் கிறான்.   காய்ந்த  தர்பைப் புல்லை நிரப்பி  பரப்பி    தீமூட்டி ராமன் எதிரிலேயே  தனது உயிரை ''ப்ராயோபவேசம்'' செய்யப் போவதாக  சொல்கிறான்.  
ராமர்  அது தவறு என்று தர்ம நியாயங்களை  உபதேசிக்கிறார்.  
கடைசி  முயற்சியும்  தோல்வியுற ''ராமா, நான் உன்னுடன் காட்டில் வசிக்கிறேன்'' என்று ஆரம்பிக்கிறான்.
''இல்லை பரதா,  நான் தந்தை சொல் வார்த்தை யை மதித்தது போல் நீ  தாய் சொல்லை தட்டா மல் அவர்கள் அனைவரையும் நாட்டையும் மக்களையும் ரக்ஷிக்கவேண்டியது உன் தலையாய கடமை என்கிறார்.  அப்போது   தேவர்கள் விண்ணோர்  அனைவரும் ராம னின் முடிவு சிறந்தது, இதனால் தசரதன் நரகம் செல்லாமல்  மோக்ஷம் அடைகிறான் என்கி றார்கள்.
விறுவிறுப்பாக செல்கிறது அல்லவா இந்த தொடர்.  இன்னும்  அறிவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...