Saturday, February 27, 2021

VAIRAGYA PANCHAKAM

 



வைராக்ய பஞ்சகம் -      ---     நங்கநல்லூர்       J K  SIVAN
ஸ்ரீ  வேதாந்த  தேசிகர்                                                    



   ''வேலை வேண்டாம் நண்பா''

பர்த்ருஹரி மகாராஜாவின்   வைராக்ய  சதகம்  படித்துக்கொண்டு வருகிறீர்களா?  நடுவே  ஒரு  வைராக்ய பஞ்சகம் என்று ஐந்து ஸ்லோகங்கள் உங்களுக்கு இன்று  தருகிறேன். ஆனால்   இது  பர்த்ருஹரி  எழுதியது இல்லை. அற்புதமான ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்,  ஸ்ரீ வேதாந்த தேசிகர்.

ஸம்ஸ்க்ரித ஸ்லோகம்  என்றவுடன் நமக்கு  முதலில்  ''ஆஹா, ஆதி சங்கரர்  எழுதியதா?''  என்று கேட்கும் அளவுக்கு பிரபலம் அவரது  ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள்.  வேதாந்த தேசிகர்  ஸ்லோகங்களும்  அவற்றிற்கு சமமானவை.  இப்படி ஸமஸ்க்ரிதத்தில்  எழுதியவர்கள்  விரல்விட்டு எண்ணக்கூடிய மஹான்கள். அவர்களில் ஒருவர் நிகமாந்த தேசிகர்,  ஸ்ரீ வேதாந்த தேசிகர் என்று  பெயர்பெற்ற வைஷ்ணவர்கள் பூஜிக்கும்  ஸ்ரீ  ஸ்வாமி தேசிகன்.  அவர் எழுதியது தான் இந்த   வைராக்ய பஞ்சகம் எனும் ஐந்து ஸ்லோகங்கள்.  அர்த்தம் பொதிந்தவை.

தேசிகருக்கு ஒரு நண்பன்.   பெயர்  வித்யாரண்யன்.  மைசூர் மகாராஜாவிடம் ஆஸ்தான பண்டிதனாக வேலை கிடைத்து அங்கே போய்  சேர்ந்து ஒருநாள்  நண்பன்  தேசிகனுக்கு  கடிதம் எழுதினான்.

'' நண்பா, தேசிகா, நீ  அன்
றாடம், பொழுது விடிந்து, தெருவெல்லாம் சுற்றி உஞ்சவ்ருத்தி எடுத்து பிழைக்கும் கஷ்டம் என் கண்களில் நீரை வரவழைக்கிறதே, நான் இங்கே சௌக்யமாக இருக்கிறேன். என்னை ஆஸ்தான வித்வானாக ஆதரிக்கும் விஜயநகர ராஜாவிடம்  உன்னைப் பற்றி சொல்லி,  உடனே உனக்கும் இங்கே என் போல் வேலை கிடைத்து,   வசதி பெற வழி செய்கிறேன். உடனே வருகிறாயா?''  கடிதாஸோ ஓலையோ  அது  தேசிகன் கையில் கிடைத்தது.    நாம் தேசிகனாக  இருந்தால் உடனே  ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதித்து இந்த மாதிரி  ஸ்நேகிதனைப் பெற்றதற்கு  அவனைக் ந்த மாதிரி சிநேகிதனைப் பெற்றதற்கு வானளாவ மகிழ்வோம். ''நீயல்லவோ உயிர் நண்பன்'' என்று அடுத்த ரயிலில் போய் நிற்போம். அதனால் தான் நம்மை மறந்து உலகம்  தேசிகனை நினைவில்  வைத்திருக்கிறது:

சுவாமி தேசிகன்  நண்பன் வித்யாரண்யன் கடிதாசுக்கு  எழுதிய  பதில் ஓலை தான்   இந்த   ஐந்து ஸ்லோகங் கள். அந்த நண்பன்  வித்யாரண்யனால்  நமக்கும் ஒரு பொக்கிஷம் கிடைத்தது. என்ன   பதில் எழுதினார் தேசிகன்?

क्षोणी कोण शतांश पालन कला दुर्वार गर्वानल-
क्षुभ्यत्क्षुद्र नरेन्द्र चाटु रचना धन्यान् न मन्यामहे ।
देवं सेवितुमेव निश्चिनुमहे योऽसौ दयालुः पुरा
दाना मुष्टिमुचे कुचेल मुनये दत्ते स्म वित्तेशताम् ॥ १ ॥

''க்ஷோணீ கோண சதாம்ச பாலன கலா துர்வாரா கர்வா நல
ஷூப்யத் ஷூத்ர நரேந்திர சாடு ரஸாநா தன்யான் நமன்யாமஹே
தேவம் சேவிதுமேவ நிஸ்சி நு மஹே யோ அசவ் தயாளு புரா
தாநா முஷ்டி முஸே குசேல முனயை தத்தே ஸ்ம வித்தே சதாம் –1-''

மேலே கண்ட ஸ்லோகத்தின் அர்த்தம் புரிய வேண்டுமானால் ஒரே வரியில் புரிந்து கொள்ள அடையாளம். ''நிதி சால சுகமா'' என்று தியாகராஜ சுவாமிகள் தெலுங்கில் பாடியது தான். தஞ்சாவூர் ராஜா 'என் மேல் பாடு உனக்கு நிறைய பொன் தருகிறேன்' என்று யானை குதிரை பல்லக்கு எல்லாம் அனுப்பினான்.

 ''உன் நிதி எனக்கு வேண்டாமே. ராமனைப் பாடும் அவன் சந்நிதி சுக மொன்றே போதுமே'' என்று  ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் சொன்னபோல அல்லவா  தியாகராஜருக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே  வாழ்ந்த  சுவாமி தேசிகன் நினைத்திருக்கிறார்.

''எந்த ராஜாவும் உலக முழுதும் நிரந்தரமாக ஆண்டதில்லை. ஏதோ ஒரு சிறிய பகுதி நிலத்துக்கு அதிபதியாக இருந்தும் இறுமாப்பு.  எல்லோரும்  தன்னைப் புகழவேண்டும் என்று பணத்தை வீசி எறிந்து ஏழைக் கவிஞர்கள், பண்டிதர்கள், புலவர்கள், இந்த மாதிரி   அல்ப  ராஜாக்களை  சந்திரர்களாக சூரியர்களாக, இந்திரனாக ஏட்டில் பாடி வைத்து நாமும் அவற்றை படிக்கிறோம். நம்புகிறோம்.  எது பொய்  எது நிஜம்  என்று  கடவுளுக்கும்  புலவனுக்கும்  தான்  தெரியும்.
  இந்த மாதிரி பொய் பாடல்களைக் கொடுத்து பல நூற்றாண்டுகளாக நம்மை ஏமாற்றியதற்கு தூக்கில் கூட போடலாம். 

வேதாந்த தேசிகர், தியாகையர் போன்றோர் இந்த  மாதிரி காசுக்குப்  பொய்  பேசும், பாடும்  வகைப் புலவர்களோ கவிஞர்களோ அல்லவே.
பரம பாகவதர்கள். பகவானைத் தவிர எதையுமே துச்சமாக மதிப்பவர்கள். நரனைப் பாடுவதை விட நாராயணனைப் பாட முனைந்தவர்கள். அவனுக்குத்  தெரியுமே, எது நமக்கு, வேண்டும் என்று. குசேலர் என்று ஒரு ஏழைப் பிராமணர் எதையாவது  நண்பன் கிருஷ்ணனிடம்   கேட்டாரா,  எதிர்பார்த்து போனாரா,  ஏமாற்ற மடைந்தாரா?.

''அப்பா,  வித்யாரண்யா, (இது தான் சுவாமி தேசிகன் நண்பன் பெயர்) கிருஷ்ணனின் பால்ய நண்பர் கிருஷ்ணனை பார்க்க த்வாரகை போகிறார். குசேலன் தன்னிடமிருந்த அவல் பொட்டலத்தை கொடுப்பதா வேண்டாமா என்று யோசித்து முடிப்பதற்குள் கிருஷ்ணன்  அவலை  ஆவலோடு அவனிடமிருந்து பறித்து உண்டு அவன் வாயைத் திறந்து எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்க எண்ணம் வருவதற்கு முன்னாலேயே குசேலனை குபேரனாக்கினான் .

  शिलं किमनलं भवेदनलमौदरं बाधितुं
  पयः प्रसृति पूरकं किमु न धारकं सारसम् ।
 अयत्न मल मल्लकं पथि पटच्चरं कच्चरं
 भजन्ति विबुधा मुधा ह्यहह कुक्षितः कुक्षितः ॥ २ ॥  



சிலம் கிம நலம் பவேத நல மௌதரம் பாதிதும்
பய ப்ரஸ்ருதி பூரகம் கிமு ந தாரகம் ஸாரஸம்
அயத்ன மல மல்லகம் பதி படச்சரம் கச்சரம்
பஜந்தி விபுதா முதா ஹ்யஹஹ குக்ஷித குக்ஷித –2-  


'ஐயோ, இது என்ன கொடுமை. கேவலம்.  நன்றாக படித்து கற்றுணர்ந்த மேதைகள் கூட, அல்ப வாழ்க்கை சுகத்திற்காக செல்வம் நிறைந்தவனிடம் போய் கை கட்டி  நின்று அவனைப்  புகழ்ந்து இல்லாததை இருப்பதாக சொல்லி, சோற்றுக்கும், நீருக்கும், உடுக்க உடைக்கும் கையேந்தும் நிலை ஏன்?  தன்னுடைய பாண்டித்யம் சரஸ்வதி கடாக்ஷம் எல்லாம் கேவலம் வயிற்றுப்  பசிக்காக அடகு ஏன் வைக்கவேண்டும்? தமது உண்மையான உயர்ந்த ஸ்வரூபத்தை ஏன் மறக்க, மறைக்க வேண்டும்?. ஒருவேளை  ஒளவைக்  கிழவி பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று இந்த நிலையைத் தான் சொன்னாளோ?

உயிர் வாழ என்ன தேவை, ஒரு கை ஜலம், வயலில் சிதறி இருக்கும் அரிசி மணிகள் சில போதுமே பசியைப் போக்க.ஒரு கிழிசல் துண்டு துணி கோவணமாக கிடைத்தாலே போதுமே மானத்தை மறைக்க. இந்த எளிமையான தேவை தனக்கும் மற்றவர்க்கு உதவவும் கூட போதுமே.

ज्वलतु जलधि क्रोड क्रीडत्कृपीड भव प्रभा-
प्रतिभट पटु ज्वाला मालाकुलो जठरानलः ।
तृणमपि वयं सायं सम्फुल्ल मल्लि मतल्लिका
परिमलमुचा वाचा याचामहे न महीश्वरान् ॥ ३ ॥  

ஜ்வலது ஜலதி க்ரோட க்ரீடத் க்ருபீட பவ ப்ரபா
ப்ரதி பட படு ஜ்வாலா மாலா குலோ ஜடரா நல
த்ருணமபி வயம் சாயம் ஸம்புல்ல மல்லி மதல்லிகா
பரி மள முசா வாசா யாசா மஹே ந மஹீஸ் வரான்–3-


நடு சமுத்ரத்தில் அக்னி ஒரு பெண் ஜீவனாக உருவாகி, மழையாக, அருவி நீராக, சமுத்ரத்தில் சேரும் அதிக பக்ஷ ஜலத்தை ஆவியாக்கி மேலே அனுப்புகிறான். ஒரு கட்டுப்பாட்டுக்குள் தேவையான அளவு நீரை மட்டுமே சமுத்ரத்தில் விட்டு வைப்பதால், அது கரை தாண்டி வெளியேற வழியேது?

வித்யாரண்யா, சமுத்ரத்தில் மட்டும் அல்ல, நமது வயிற்றிலும் ஒரு அக்னி இருக்கிறதே, ஜாடராக்னி. பசி வந்தபோது உன்னை திகு திகு வென்று சுட்டெரிக்குமே அது. நாம் உண்பதை செரிமானம் (ஜீரணம்) பண்ண அது உதவுகிறதே. அது வளர்ந்து மேலும் மேலும் என்னை பசியால் வாட்டினாலும் நான் என் பசி தீர உணவு தேடி, பொருள் தேடி, ஒருவனிடம் எதையும் யாசகம் கேட்டு கை கூப்பி நிற்கமாட்டேன். என் வாக்கு கேவலம் ஒரு நரனைப் புகழ்ந்து பாட அல்ல. அது சாதாரணமல்ல, மாலையில் மலரும் நறுமண மல்லிகை வாசம் கொண்டது. அந்த மல்லிகையின் நறுமண வாசம் எம்பெருமான் ஒருவனுக்கு மட்டுமே பிரத்தியேகமாக உபயோகமாகும். எனவே என் நாக்கில் வாக்கில் உருவாகும் ஸ்லோகங்கள் நாராயணன் ஒருவனுக்கே சொந்தம். நாராயணனைப் பாடாத நாவென்ன நாவே!

 दुरीश्वर द्वार बहिर्वितर्दिका-
 दुरासिकायै रचितोऽयमञ्जलिः ।
 यदञ्जनाभं निरपायमस्ति मे
धनञ्जय स्यन्दन भूषणं धनम् ॥ ४ ॥
 
துரீஸ்வர த்வார பஹிர் விதார்த்திகா
துராஸி காயை ரசீதோயம் அஞ்சலி
யதஞ்சநாபம் நிரபாய மஸ்தி மே
தனஞ்சய ஸ் யந்தன பூஷணம் தனம் –4-


வித்யாரண்யா, நீ உன் ராஜாவின் தனம், செல்வம், என்று ஏதோ  எனக்கு ஆசை காட்டினாயே, நான் என்னிடம் இருக்கும் தனத்தை, செல்வத்தை பற்றி ஒரு வார்த்தையில் உனக்கு  சொல்லட்டுமா? கேள். என் செல்வம் கருநீல நிறம், அழியாதது, குறையாதது, அதை நீ பார்த்திருப்பாயே, குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனன் தேரில், அழகு பிம்பமாக அதை ஓட்டும்போது. இந்த குறைவற்ற செல்வம் என்னிடம் இருக்கையில் வேறு எது இதற்கு ஈடாகமுடியும்,    எது எனக்கு தேவை, நீயே சொல்?

வித்யாரண்யா, கை கூப்பி வணங்கி 'ஸாரி' சொல்கிறேன், நான் எங்கோ எவன் வீட்டு திண்ணையிலோ கை கூப்பி வணங்கி அவன் ஏதாவது கொடுக்கமாட்டானா என்று ஏங்குபவன் இல்லையே அப்பா.

शरीर पतनावधि प्रभु निषेवणापादनात्
अबिन्धन धनञ्जय प्रशमदं धनं दन्धनम् ।
धनञ्जय विवर्धनं धनमुदूढ गोवर्धनं
सुसाधनमबाधनं सुमनसां समाराधनम् ॥ ५ ॥

சரீர பத நாவதி ப்ரபு நிஷேவணா பாதநாத்
அபிந்தன தனஞ்சய ப்ரசமதம் தனம் தந்தனம்
தனஞ்சய விவர்த்தனம் தன முதூட கோவர்த்தனம்
ஸூசாதநம் அபாதநம் ஸூமநஸாம் சமாராதனம் –5-

வறுமையால் மதி யிழந்து பசி தீர்க்க, அவ்வை சொன்னாளே ''இடும்பை கூர் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது'' என்றவாறு, ஜாடராக்னிக்கு இரை போட்டு அதை ஜீரண வேலை செய்ய விடுவதற்காக செல்வம் தேட வேண்டுமா? ஒரு கை ஜலம் போதும் என்று சொன்னேனே, பசி தீர்க்க, களைப்பை போக்க. இதை விட்டு, எவனிடமோ பணம் இருக்கிறது என்பதற்காக தன்மானம் விட்டு வணங்கி சிரம் தாழ்த்தி கரம் குவித்து அப்படியாவது இந்த உடலைக் காக்க வேண்டுமா என்ன? எதற்கு,  என்ன அவசியம்?

நான் சொன்னேனே என்னிடம் இருக்கும் 'அந்த'   செல்வம் என்ன செய்தது மறந்து விட்டாயா? மன வியாகூலத்தில் நடுங்கிக் கொண்டிருந்த அர்ஜுனனை தேர் தட்டில் மேலே அமர்த்தியது, மழையிலிருந்து மக்களை , மாக்களைக் காக்க மலையையே தூக்கியது (கோவர்தனகிரி ), நல்லோர் மனம் நிறைந்து இருக்கிறது. இதைத் தவிர சரியான பலன் தரும் சாதனம் வேறு எது?

சுவாமி தேசிகனின் வைராக்கியம் இந்த ஐந்து சிறிய ஸ்லோகங்களிலேயே தெளிவாக புரிகிறதா?
இது   மாதிரி நடுநடுவே  என் கண்ணில் பட்டதையெல்லாம்  கொடுப்பேன்,  என் மேல் கோபம் கொள்ளவேண்டாம்?


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...