Tuesday, February 16, 2021

THE TWO POETS



அதிசய   ரெட்டையர்கள்    -    J K   SIVAN 

லலிதா பத்மினி, சூலமங்கலம் சகோதரிகள்,  பம்பாய் ஸிஸ்டர்ஸ் ,  விஸ்வநாதன் ராமமூர்த்தி, ஆலத்தூர் சகோதரர்கள்    என்று பல  ஜோடிகளை ரசித்திருக்கிறோம்.  யாரோ இரண்டு பேர்  ஊனமுள்ளவர்கள்  ஒன்றாக  சேர்வதும்  அதிசயமில்லை.  ஆனால்  ரெண்டு பேருமே  இந்த நிலையில் புலவர்களாக இருந்து ஒருவர் பாடி முடித்த  முதல் ரெண்டு அடியை தொடர்ந்து மற்றவர்  பாடி  அற்புதமான  கவிதைகளை கொடுப்பது  சரித்திரத்தில்  நிலையாக இடம் பெற்றிருக்கிறது.  அவர்கள்  தான் ரெட்டைப் புலவர்கள்.

இந்த இரட்டைப்புலவர்கள் 14ம் நூற்றாண்டு  ஆசாமிகள்.  இளஞ்சூரியர் - முதுசூரியர் என்ற பெயர்கள் கொண்டவர்கள். ஒருவருக்கு பார்வையும் ,  மற்றொருவருக்கு கால்களும்  இல்லை.  கால் இல்லாதவரை பார்வை இழந்தவர்  தோளில்  சுமந்து நடப்பார். கால் இல்லாதவர் வழி சொல்வார்.  சிலேடையாகப் பாடுவதில் பலே புலவர்கள். வெண்பாக்களில் முதல் இரு அடிகளை  ஒருவர்  துவங்க,  ஈற்றடிகளிரண்டையும்  அடுத்தவர்  பாடி முடிப்பார்.   ஆச்சர்யமான இவர்கள்   ஏழைகள். ரெண்டு பேருக்குமே  உடுத்த துணி ஒன்று. மாற்று துணி ஒன்று தான்.   ரெண்டுமே  கந்தல் வேறு.

ரெண்டு   பேரும்  மதுரை செல்கிறார்கள். வைகையில் படிக்கட்டில்  முடவர். குருடர்  நீரில் இறங்கி  துணிகளை அலசி பிழிந்து,  ஸ்னானம் செய் து விட்டு, சொக்கநாதன்  மீனாட்சி அம்மன் தரிசனம் பண்ண உத்தேசம். குருடர் மெதுவாக முடவர் சொல்ல சொல்ல  ஆற்றில் இறங்கி துணிகளைத் துவைக்கிறார். வைகையில்  வெள்ளம். வேகமாக நீர் ஓடுகிறது.  அலசி துவைத்து படிக்கட்டில்  வைத்திருந்த  வேஷ்டி  நீரில் அடித்துச் சென்றதை குருடரால்  எப்படி பார்க்க முடியும்.  மேலே படியில் இருந்து முடவர் வேஷ்டி அடித்துச் செல்லப்பட்டதை  பாட்டாக  பாடுகிறார்.  வழக்கம் முதல் ரெண்டடி  தான்.... 

"அப்பிலே துவைத்து அடுத்தடுத்து அதைநீர்
தப்பினால் நம்மை யது - தப்பாதோ"

அர்த்தம்:   துணி அடித்து தோய்ப்பதை  ''தப்புவது'' என்று சொல்லும் வழக்கம் உண்டு.   திரும்ப திரும்ப நமது கந்தல் துணியை அடித்து துவைத்தால் பாவம்  அதற்கு  நம்மிடம்  அடி வாங்குவதிலிருந்து     விட்டால் போதும் என்று  '
தப்ப'  வேண்டும் என்று  தோன்றாதா? ஆகவே  நம்மிடமிருந்து தப்பி சென்று விட்டது.... என்கிறார் முடவர்.    

ஓஹோ  நான் தோய்த்து படியில் வைத்த  வேஷ்டி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதோ?  என்று புரிந்து கொண்ட குருடர்  அடுத்த மீதி ரெண்டு அடியை பாடுகிறார்:

''செப்பக் கேள்‘ஆனாலும் கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ’

''போகட்டுமேடா,  இந்திரன் கண் மாதிரி ஆயிரம் கிழிசல், அது இருந்தால் என்ன போனால் என்ன, நம்மை விட்டு பீடை தொலைந்தது என்று எடுத்துக் கொள்வோமே''  என்று  வேதாந்தி போல் படுகிறார் குருடர்.  

முடவருக்கு கிழிந்த வேஷ்டி போனதில்  வருத்தம். அதை விட மனசில்லையே. ஆகவே  அடுத்த பாட்டில் முதல் ரெண்டடி பாடுகிறார். 

''கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார் குளிரையுடன் தாங்காதோ?’

கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்கிறோம்.  கிழிசலானால்  தான் என்ன. ராத்திரி எங்காவது முடங்கி படுக்கும்போது   குளிருக்குப்  போர்த்திக்கொள்ளவாவது  உபயோகமாச்சே.  என்கிறார் முடவர்.

வெண்பாவின் கடைசி ரெண்டடிகளை குருடர் பாடி முடிக்கிறார்: 

நாம்  மதுரையில்  சொக்கலிங்கம் ஆலயத்தில் அல்லவா இதை தொலைத்தோம்.  ஆகவே இந்த கந்தல் வேஷ்டி போனால் என்ன. சொக்கலிங்கம்  இருக்கவே இருக்கிறான் நம்மை காக்க.  மாற்று வேஷ்டி தரமாட்டானா?  கலிங்கம் என்றால்  துணி: இங்கே  வேஷ்டி.

"இக்கலிங்கம் போனாலென்ன எகலிங்க மாமதுரை
சொக்கலிங்கம் உண்டே துணை".

யாரோ  மிதக்கும் வேஷ்டியை நீந்தி பிடித்து  அவர்களிடம் கொண்டு வந்து தருகிறார். குருடரும் முடவரும்  மீண்ட வேஷ்டியை எடுத்துக்கொண்டு  கரையேறி  சொக்கனின் தரிசனம் பெறுகிறார்கள். 

இவர்களை பற்றி இன்னும் சொல்கிறேன்.


 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...