Tuesday, February 9, 2021

DATTATHREYA

   தத்தாத்ரேயருக்கு யார்  குரு?   - 4 

                               J  K  SIVAN

    'அவதூத கீதை '' 


தத்தாத்ரேயர் தனது பதிமூன்றாவது குரு யார் என்று சொல்கிறார்:

''எனக்கு அமைந்த 13வது குரு வேறு யாருமில்லை. சுறுசுறுப்புக்கு பேர் போன தேனீ தான். ஓடி ஓடிச்  சென்று பல பூக்களில் தேனைக் குடித்துவிட்டு, ஒரு கூடு அமைத்து அதில் தான் குடித்த தேனை அடையாக சேமித்து பிறர்க்கு வழங்குவது எப்படிப்பட்ட சிறந்த தியாகம். பிறரிடமிருந்து சிறுக சிறுக கற்று அறிந்து பிரவாகமாக அந்த கருவூலத்தை மற்றோருக்கு அளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தியது இந்த குரு தான்''.

(நண்பர்களே, எனக்கும் இந்த குருவை மிகவும் பிடித்ததால் தான் நான் என்னென்னவெல்லாம் தெரிந்து கொண்டேனோ அதை என்னிடம் அன்புகொண்ட உங்களிடம் பரிமாறிக் கொள்கிறேன். ஒரே வித்யாசம் நான் சரியாக தெரிந்து கொண்டேனா என்பது ஒரு சந்தேகாஸ்பதமான விஷயம்!!)

''ஆஹா,  பிரமாதம் சுவாமி'' என்றான் யது . ஒரு தேனியிடம் இவ்வளவு அருமையான குணம் இருப்பதை இதுவரை கவனிக்காமல் அல்ல,   கவனித்தும் புரிந்து கொள்ளாமல் போய் விட்டேனே என்று வருந்துகிறேன். உங்கள் பதினாலாவது குரு யார் சுவாமி?

''ஆஹா அதைப் பற்றி சொல்கிறேன் யது . உனக்கு நிச்சயம் அந்த குருவும் பிடிக்கும். ஒரு காட்டு யானை தான் என்  பதினான்காவதான குரு.     காட்டு யானை ஒன்று   ஒரு தரம் ஒரு வேடனால் பிடிபட்டது. அதை பிடிக்க உதவியது பழக்கப் படுத்தி வேடன் கொண்டுவந்த ஒரு பெண் யானை.

காட்டில் அவன் ஒரு ஆழமான குழி வெட்டி அதை வெளியே தெரியாதபடி மூடி வைத்து பெண் யானையை விட்டு ஆண் யானையை அந்த பக்கமாக வரவழைத்து அந்த காட்டு யானை குழியில் விழுந்து அவன் வசமானது. அதுவும் பின்னர் பழக்க வைக்கப்பட்டது. மற்ற யானைகளைக் கவர உபயோகமானது. ஆசா பாசங்களும் உலக கவர்ச்சிகளும் ஸ்திரமான மனதை அடிமைப்படுத்தி மனம் கட்டுப்பாடின்றி தவறு செய்யும் என்று உணர்த்தியது எனது 14வது குருவான அந்த குழியில் விழுந்த காட்டு யானையே. யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்வோமே. அது குழியில் சறுக்கி விழுவதற்கு முன் அதன் மனம் ஆசையில் சறுக்கி விழுந்து விட்டது பார்த்தாயா? மோகம் அதை முட்டாளாக்கி விட்டதே.''

''யாரையும் எதையும் குருவாகக் கொள்ளும் புனிதத் தன்மை ரொம்ப அதிசயிக்க வைக்கிறதே குருநாதா. உங்கள் அடுத்த, பதினைந்தாவதாக அமைந்த குரு யார்?''

''அது ஒரு ஆச்சர்யமான விஷயம் அப்பனே. என் குருமார்கள் எல்லாரும் காட்டிலும் நாட்டிலும் தான் இருப்பவர்கள். நான் அங்கே தானே உழல்பவன்.

நான் எனது 15வது குருவை ஒரு மானின் உருவில் கண்டேன். மான் எப்போதுமே மிக நுண்ணிய சப்தத்தையும் க்ரஹிக்கும் தன்மையை கொண்டது. அதால் தான் அது ஆபத்து நெருங்கும்போது உயிர் தப்புகிறது. . சப்தத்தை கவனித்து அதில் ஆபத்தை விளைவிக்கக் கூடியது எது என்று உணர்வால் அறிந்து, அந்த திசையிலிருந்தே தப்பி ஓடி விடும்.

ஒரு வேடன் என்ன செய்தான் தெரியுமா? தனது புல்லாங்குழலில் இனிமையாக வாசித்துக்கொண்டே தனது மான் வேட்டையை தொடர்ந்தான். அந்த இசையைக் கேட்ட மான் இனிமையில் அது தான் உண்மையான ஆபத்து என்பதை அறியத்  தவறியது. ஓடாமல் அவன் பார்வையில் சிக்கியது. அதை அம்பால் எய்து கொன்றான் வேடன்.

இதிலிருந்து எனக்கு புரிந்தது என்னவென்றால். நாம் எதை செவியில் கேட்டாலும் அதை உணர்ச்சி பூர்வமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதனால் மயங்குவதோ, அடிமையாவதோ, தன்னிச்சை கொள்வதோ கூடாது என்பதாகும். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதில் மெய்ப்பொருள் மட்டுமே காண வேண்டும் அல்லவா?''.

' அடாடா , நான் தன்யனானேன் பிரபோ! இன்று எனதின் வாழ்வில் ஒரு பொன்னாள்'' இப்படி ஒரு சிறந்த ஞானத்தை இதுவரை நான் அறிந்ததில்லை குரு மஹராஜ். உங்கள் பதினாறாவது குரு யார் என்று தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டை வெடித்து விடும் போல் இருக்கிறது. சீக்கிரமே சொல்லுங்கள்'' என்கிறான் யது மஹாராஜா.

தத்தாத்ரேயர் தனது 16வது குரு யார் என்று சொல்வதைக தெரிந்துகொள்வோம்.
 
பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவனான மஹாராஜா யயாதியின் பிள்ளை யது, ஆனந்தமயமாக இருந்தான். அடடா இது போல் ஒரு சிறந்த குருவை சந்தித்ததே இல்லையே என்று சாஷ்டாங்கமாக தத்தாத்ரேயர் பாதங்களில் விழுந்து வணங்கினான். அடுத்து அவர் தனது 16வது குரு யார் என்று சொல்வதற்கு காத்து கிடந்தான்.

''மகனே யது , எனக்கு கிடைத்த இருபத்து நாலு குருமார்களை பற்றி சொல்கிறேன் என்றேன்.இதுவரை பதினைந்து  குருமார்களை பற்றி சொன்னேன். '' வா, நடந்து கொண்டே பேசுவோம்'' என்று ரிஷி தத்தாத்ரேயர் வனத்தில் நடக்க தொடங்கினார்.   யது   கையைக்  கட்டியவாறு ஆட்டுக்குட்டியாக அவரை தொடர்ந்தான்.

''யது, இது வரை எனது பதினைந்து குருக்கள் யார் யார் என்று சொன்னதை விட இனி சொல்வதை கவனமாக கேள்.

எளிதாக கிடைக்கிறதே என்று ஆசைப்பட்டு தூண்டிலில் மாட்டியிருந்த புழுவை தின்ற ஒரு மீன் எனக்கு நீதி புகட்டிய பதினாறாவது குருவாகும். உலகமே ஒரு தூண்டில் புழு என்பதை கவனத்தில் வைத்து எந்த உலக ஆசா பாச இச்சையிலும் சிக்காமல் இருக்க என் குரு மீனிடம் கற்றுக்கொண்டேன்.

இருவரும் நடந்து செல்கிறார்கள். நாம் அவர்களது சம்பாஷணையை தொடர்ந்து கேட்டு தத்தாத்ரேயரின் பதினேழாவது குரு யார் என்று அறிந்து கொள்வோமா?

நாம் இதுவரை படித்திராத ஒரு அற்புத படைப்பு இந்த தத்தாத்ரேயரின் 24 குரு சமாச்சாரம். இந்த மாதிரி உத்தியை படைத்த அந்த மஹா கலைஞனுக்கு வேத வியாசனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம். பதினாறு குருமார்களை பற்றி இதுவரை தத்தாத்ரேயர் கூறினார் அல்லவா. இனி மீதி ஏழு குருமார்கள் அவருக்கு என்ன படிப்பினை, உபதேசம் அளித்தார்கள் என்று அறியப்போகிறோம்.

தத்தாத்ரேயர் ஒரு ஆற்றங்கரையில் அமர்ந்தார். யது அவர் காலடியில் அமர்ந்து அவரது கால்களை பிடித்து வீட்டுக் கொண்டிருந்தான்.

தத்தாத்ரேயர் தொடர்ந்து கூறுகிறார்.

''இதிலிருந்து என்ன தெரிகிறது எனக்கு என்றால், சுவாமி, ''குரு என்பது மானிட உருவில் தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை என்று, சரிதானே?''

''ஏன் எந்த மானிட ரூபத்திலும் கூட குரு இருக்கலாமே! ஒரு விலை மாது கூட எனக்கு 17வது குரு தான்.

'' குரு மஹாராஜ் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

ஒரு பட்டணத்தில் நான் அறிந்தது இது. ஒரு விலை   மாது தனது பண வருவாய்க்காக ஆசையாக, நேசமாக இருப்பதாக ஒரு வாடிக்கையாளனிடம் நடிக்கிறாள். அவளை நாடி வருவோரும் அதை உண்மையென்று நம்புகிறார்கள் என்பது மட்டுமல்ல. எவ்வளவு அவளிடம் அனுபவிக்க முடியுமோ அதை விரைவில் தேடி அனுபவித்து அல்ப திருப்தி அடைந்த பிறகு அவளை விட்டு விலகுகிறார்கள். இருவருமே போலிகள். இருவருக்கும் உண்மையான திருப்தி எதுவோ அது கிடைக்காதவர்கள். இருவரும் சந்தோஷம் இல்லாமலேயே அதை இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். உலகில் ஒழுக்கம், தன்மானம், நேர்மை, இந்திரிய கட்டுப்பாடு எவ்வளவு அவசியம், மாயை எப்படி திருப்தியை அளிப்பதாக  மனிதர்களுக்கு போக்கு காட்டுகிறது என்று அந்த விபச்சாரி, அதாவது அவள் என் குரு,  மூலம் கற்றுக்கொண்டேன்.

வாஸ்தவம் குருமஹராஜ். என் அகக்கண்ணை திறந்துவிட்டீர்கள். உங்களது 18 வது குரு யாரோ?''

''பெரிதாக யாருமோ எதுவுமோ இல்லையப்பா. ஒரு சின்ன பறவை.

ஒருநாள் அதிகாலையில் அந்த சின்ன பறவை அதன் வாயில் ஒரு தவளையை கவ்விக்  கொண்டு பறந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்போது எங்கிருந்தோ வந்த சில பெரிய பறவைகள் இதை கவனித்து விட்டு அந்த சின்ன பறவையை துரத்தின. தன்னால் அந்த பெரிய பறவைகளைச் சமாளிக்க முடியாது, வேகமாக பறந்து தப்ப முடியாது என்று தெரிந்த அடுத்த கணம் அந்த சின்னப் பறவை என்ன செய்தது தெரியுமா?

அதன் வாயில் இருந்த தவளையை கீழே போட்டு விட்டு உயிர் தப்ப பறந்து சென்று விட்டது. பெரிய பறவைகள் அந்த தவளையை நோக்கி பாய்ந்தன. சின்ன பறவை உயிர் தப்பியது. ஆஹா , உயிர் வாழ சில தியாகங்கள் அவசியம் என்று உணர்த்தியது அந்த சின்ன பறவை. அதாவது சின்னப்பறவையான அந்த எனது 18 வது குரு. போதுமா?

'' சின்ன பறவை ஒரு குரு!  ஆஹா  அற்புதம் குருநாதா.  மேலே  சொல்லுங்கள்..  ATTACHED IS  RAJA RAVI VARMA'S  PAINTING OF SRI DATTATREYA.

தொடரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...