Wednesday, February 10, 2021

SRIMADH BAGAVATHAM

 


       மஹா பாரதத்தின்  தொடர்ச்சி... J  K   SIVAN 

தனிமையில்  அமர்ந்திருந்த  அந்த ரிஷியின்  கண்களில் அதிருப்தி தெரிந்தது. ஏக்கப் பெரு மூச்சு நெருப்பாக 
வெளி வந்தது.  மஹா பாரத யுத்தம்  18 நாட்கள் நடந்து முடிந்து விட்டது.  அதில் சம்பந்தப்பட்ட   மனிதர்கள், ரிஷிகள், வம்சங்கள், நாடுகள், நகரங்கள்   எத்தனை  எத்தனையோ,  அவ்வளவையும் விடாமல் சேர்த்து கோர்த்து  அளித்தது தான்  மஹா பாரதம் நூல்.  அப்படியும்  வேதவ்யாஸருக்கு  தான்  செய்ததில் முழுமை இல்லை என்ற ஏமாற்றம்  மனதை  அரித்தது.    எதை  சரியாகச்  செய்யவில்லை?    இந்த நிலையில் அவரை சந்தித்தவர்  நாரதர்.

''வேதவ்யாஸா, என்ன ஏதோ யோசனையாக   இருக்கிறாய்?

''மகரிஷி, எனது மஹாபாரதம் என் மனதிற்கு  முழு  திருப்தி  ஏன் அளிக்கவில்லை என்கிற  கவலை  என்னை வாட்டுகிறது?

''என்ன குறை அதில் என்று உணர்ந்தாயா வியாஸா ?''

''மகரிஷி,  குறை எது எங்கே என்று சொல்ல தெரியவில்லை.  ஆனால்  ஏதோ நெஞ்சில் நெருடுகிறது.  அடிக்கடி  என் நெஞ்சு என்னைச்  சுடுகிறது. தாங்கள் எனக்கு  ஆசி அருளவேண்டும்.  

''வியாஸா , எனக்கும் அதே  அபிப்ராயம் தான். ஸ்ரீ கிருஷணனை முழுமையாக  நீ   மஹா பாரதத்தில்  காட்டவில்லை . தெய்வமே  நேரடியாக சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வில்  அதன் சரித்திரத்தை  முழுமையாக  ஆரம்பம் முதல் முடிவு வரை விவரமாக  அளித்தால் தான் பரமாத்மாவை  புரிந்து கொண்டு, வணங்க பக்தர்களுக்கு  எளிதாகும். 

ஆகவே  நீ  மஹாபாரதத்தை தொடர்ந்து ஸ்ரீ பகவானை  அவன்  பூமியில் தோன்றியதிலிருந்து அவன் அவதாரம் முடியும் வரை  எழுது. பாரதம் தொடரட்டும் இவ்வாறு.'' என்கிறார்  நாரதர்.

நாரதர்   கோடி காட்டி உணர்த்திய  பிறகு  வியாசருக்கு  விட்டுப்போனது எது என்று புரிந்து  ஸ்ரீ  பகவான்  கிருஷ்ணன்  பற்றி  எழுத ஆரம்பித்து அதற்கு ஸ்ரீமத் பாகவதம் என்று பெயர் சூட்டினார்.

வியாசர்  எனும்  மகரிஷி  வேதங்களை நான்காக பகுத்து தொகுத்தளித்த  மஹான்.  அதனால் அந்த ரிஷிக்கு  வேத வியாசர் என்ற பெயர் நிலைத்து விட்டது.   வேத சாரம்  தான்  ஸ்ரீமத் பாகவதம்.  வேதசாரத்தை வாழ்க்கையில் எப்படி மனிதன்  நடைமுறையில்  அனுசரிக்கவேண்டும் என்பதை வாழ்ந்து காட்டிய ஸ்ரீ கிருஷ்ணன்  வாழ்க்கையைப்  பற்றிய  விஷயங்கள் அடங்கியது பாகவதம். அவன் இதை உபதேசித்தது தான் பாரதத்தில் வரும்  பகவத் கீதையும் கூட. 

கிருஷ்ணனின் வாழ்க்கை சம்பவங்கள் வேத நெறிகள் சொல்பவை.  பக்தியை  தெளிவு படுத்துபவை. நமது ஹிந்து சனாதன கோட்பாடுகள் அனைவரும்  அன்போடு சேர்ந்து நலமோடு வாழும் வழிகாட்டியாக  அமைந்தவை.  இந்த ஒரே காரணத்தால் எவராலும் எக்காலத்திலும் அழிக்க முடியாமல் தழைத்தோங்கி வருகிறது. உலகெங்கும் பரவியுள்ளது. உபநிஷத்துக்கள்  வேதத்தின் சுருக்கம்..

நமது வேதங்கள்  எங்கிருந்தோ எவரிடமிருந்தோ  காப்பி அடிக்கப்பட்டவை அல்ல.  தெய்வீக சத்யம் அவை. புருஷனாக  தெய்வமே  அருளியது.   பல ரிஷிகளின்  நீண்ட கால  தவத்தின் பலனாக  உபநிஷத் துக்களாக சேர்க்கப்பட்டவை. யாரோ ஒருவர் மட்டும் இதன்  ஆசிரியர் அல்ல. வேத வியாசர்  பகுத்து தொகுத்தது என்று சொன்னேன். எழுதியது என்று சொல்லவில்லையே. இந்த  பிரபஞ்சம்  உருவாவதற்கு முன்பே  இருந்தவை என்பதால்  பிரபஞ்சமே  அழிந்தாலும் வேதம் அழியாது. பகவானே 
ஸர்வாதாரமாக அருளியது.    அதை செயல்படுத்தி  நமக்கு விளக்கியதும்  அந்த தெய்வமே  கிருஷ்ணனாக     அவதரித்ததால் தான்.  

பாகவதத்தில்  ஒவ்வொரு அத்யாயத்திலும்  உலகில் வாழும் சகல ஜீவராசிகளும் கடைபிடிக்கவேண்டிய  தத்துவங்களை விளக்கமாக சொல்லி இருக்கிறது.  ஞானம்  எனும் சத்யம் ஒவ்வொரு உயிரிலும் உள்ளடங்கி யுள்ளதை எவ்வளவு விளக்கியும்  புரிந்து கொள்ளாமல், அறிந்து கொள்ளாமல்  அல்லல் பட்டால்  அதற்கு நாம்  தானே  பொறுப்பு.  அறியாமை எனும்   திரை விலகினால் சத்ய ஒளி தானே தெரியும். இந்த அறியாமை ஒவ்வொரு பிறவியிலும் கர்ம பலனாக  மூட்டையாக சேர்ந்து நம்மை பின் தொடர்கிறது.  வேதங்கள், பாகவதம் எல்லாம்  அதிலிருந்து விடுபடும் வழியை திரும்ப திரும்ப சொல்கிறது. வாழ்க்கை நிலையாமையை  இதை விட  வேறு யாரும்  அவ்வளவு நிறைய சொல்லவில்லை.

பல புஷ்பங்கள் கொண்ட  கதம்ப மலர் மாலை போல்  பல உருவங்கொண்ட , ஜீவர்களை ஒன்றிணைப்பது அனைத்தின், அனைவரின் உள்ளே இருக்கும்  ஒரே  பரமாத்மா. அதுவே  மனித ரூபமெடுத்து வாழ்ந்து காட்டியதை விளக்குவது தான் பாகவதம்.

நம் எண்ணங்கள் தான் நம்மை உருவாக்கி, செயல் படுத்துகிறது. அந்த எண்ணம் சீராக, நேராக  அன்பு கூடிய  நல்வழியில் செல்ல உதவுவது பாகவதம்.  கிருஷ்ணன்  அக்ரூரர், அஷ்டாவக்ரர், நாரதர் போன்றோ ருடனும்  படிப்பறியா  பாமர  கோபியரிடமும் ஒரே விதமாக அன்புடன் பழகியதில் இருந்து நாம் அறிவது  எல்லோரையும் நேசி. மனதில் வித்யாசத்துக்கு இடம்  வேண்டாமே.   பாகவதம் ஒரு சாராருக்காக  அல்ல. அனைத்து மொழியினருக்கும்,  பொதுவான  அறவழி, அறிவுரை நூல்.  காலத்தால் மாறுபடாத எக்காலத்
துக்கும் பொருத்தமான  ஐந்தாயிரம் வருஷ   பழைய தாத்தா நூல்.

உடலில் பல பாகங்கள் இருந்தாலும் பிரதானமானது பிராணன் எனும் உயிர் சக்தி. அது போல் கிருஷ்ணனை  அந்த பரமாத்மாவின்  அம்சமாக  காட்டுவது பாகவதம்.  அந்த பகவானை  பாகவதம் மூலம்  புரிந்து கொண்ட வன் பாகவதன் . 

ஸ்ரீமத்  பாகவதம் 12 பாகங்களை கொண்ட  பெரிய  நூல்.  332 அத்தியாயங்களை கொண்டது. 18000  ஸ்லோகங்கள். 

ஸ்ரீமத் பாகவதத்தை  பாரதத்தின் தொடர்ச்சியாக எழுதவேண்டுமானால்  பாண்டவ வம்சத்திலிருந்து தான் தொடரவேண்டும். பாண்டவர்களுக்கு பின், வம்சம் அர்ஜுனன் பேரன் பரிக்ஷீத் மூலம் தான்  தொடர்கிறது.
அவனும்  சாபத்தில் ஏழு நாட்களில் மரணமடையும் நிலையில் சுகப்பிரம்ம ரிஷி  ஏழு நாட்களில் அவன் முடியும் வரை  பாகவதத்தை ஒரு சப்தாஹமாக சொல்வதாக  அமைகிறது.  ஸ்ரீமத் பாகவதம்  மஹாபுராணம் எனப்படுவது.  காலக்ரமத்தோடு வரிசையாக வரும் சரித்திர புத்தகமல்ல.   கேள்விகளுக்கு  பதிலாக வழங்கப்பட்டது.  பிரபஞ்ச தோற்றத்திலிருந்து  கலியுகம் வரை  பாரதத்தில் இல்லாத  சம்பவங்கள்  தொடர்கிறது.

அருவத்தை நாம்  உணரமுடியாது என்று அறிந்து  மகோன்னதமான  ஒரு உருவத்தை ஸ்ரீமத் பாகவதத்தில்  அளித்து நாம்  அவனை  உணர்ந்து வழிபட வைத்த புண்யவான்  வேதவியாசர்.  பாகவதத்தை ஸ்ரத்தையோடு   பக்தியோடு படிப்பவன், பாராயணம் செய்பவன்  வேண்டியது எல்லாம்  வேண்டாமலேயே  அடைவான். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...