Tuesday, February 9, 2021

CURD RICE

 


                     
  தச்சி மம்மு  மஹாத்மியம்   -   J K   SIVAN 


ஹிந்துக்கள் முக்கியமாக  தென்னிந்தியாவில்   பெரும்பாலும்  அநேகர்  விரும்பி  உண்பது தயிர் சாதம்.  தயிர் சாதத்திற்கு ஒரு தனி பாரம்பரியம் உண்டு. வடக்கேயும்  தயிர் சாத  விரும்பிகள் உண்டு . தஹி பாத்  என்பார்கள். காளிதாசன் ஒரு ஸ்லோகத்தில்  தயிர் சாதத்தையும் அதற்கு தொட்டுக்கொள்ள  கொடுத்த  உப்பு போட்ட காய்ந்த நார்த்தங்காய் ஊர்க்காயையும் பற்றி எப்படி வர்ணித்தான் தெரியுமா?  நிலா. பால் போல் வெண்மையானது. அதன்  வெள்ளி ஒளி கண்ணைப்பறிக்கும் நேரத்தில் நமது கவனத்தை கவர்வது அதில் கருப்பாக  கண்ணில் தென்படும் ஒரு பகுதி.  ஆஹா  அது தான்  புளிக்காத  தயிர் சாதத்தில்  ஒரு ஓரத்தில் கண்ணைப் பறிக்கும் கருப்பு  காய்ந்த நார்த்தங்காய்.  ஒரு  விரல்கடை நார்த்தங்காய்  ஒரு படி , ஏன் ஒரு  தட்டு நிறைந்த  தயிர் சாதத்தை காலி செய்ய பெரிதாக உதவும்.  


தயிர் சாதத்தில்  மாதுளை மணிகள், சின்ன  திராக்ஷை, பொடி  கல்கண்டு போடும்  வழக்கம் யார் கொண்டுவந்ததோ தெரியவில்லை.  பாரம்பரிய தயிர் சாத துரோகம் அது.  இஞ்சி பொடியாக நறுக்கி, கடுகு தாளித்து கொட்டி, கருவேப்பிலை கொத்தமல்லி கிள்ளிப் போட்டால் தான்,  மிதமான உப்பு சேர்த்தால்  புளிக்காத தயிர் சாதத்தின் மஹிமை புரியும். 

என்னுடைய  புனித க்ஷேத்ர பயணங்களின் என்னோடு வரும் அத்தனை பேருக்கும்   புளியோதரை சிப்ஸ்,  தயிர் சாதம் மதிய உணவாக எடுத்துக் கொண்டு போவோம்.  பாலில் சாதம் பிசைந்து, மதியம் சாப்பிடும் முன் தயிர் கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்து, அதற்கு ஆதர்ச உறவாக   கருப்பாக  வறுபட்ட  மோர் மிளகாய்  ஒரு டப்பாவில்  கிரிஸ்ப்  CRISP ஆக  ஆளுக்கு ரெண்டு  தருவோம்.  திரும்பி பார்ப்பதற்குள்  தயிர் சாத பாத்திரம் காலி ஆகிவிடும்.  

தயிர்  சாதத்தின் உற்ற  துணைவன் வேறு யாருமில்லை.  சின்ன குண்டு  உருண்டை வடு மாங்காய்.  வடு மாங்காய் தயார் பண்ணுவதில் கவனமாக இருக்கவேண்டும். இது வருஷாந்திர ஊறுகாய்.  ஊறுகாய் போடுவது எப்படி என்று நான் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தால்   என்  கிருஷ்ணன் கட்டுரைகளை மறந்து விடுவீர்கள் என்பதால் அந்த பக்கம் போகவில்லை.

சென்னை மவுண்ட் ரோடு (இப்போது அண்ணா சாலை)  ஹோட்டல் சியாமா பிரசாத் என்று ஒன்று உண்டு. அதில் தினமும் மதியம்  12 மணியிலிருந்து  2மணி வரை  சேமியா பகாளா பாத்துக்கு  படையெடுத்து வரும்  தயிர்சாத ரசிகர்களை போல் கூட்டம் எங்கும் காணமுடியாது.   நாங்கள்  ரெண்டரை மணிக்கு போனாலும் குரு ராவ்   எங்களுக்கு தனியாக  சில்லென்று எடுத்து வைத்திருப்பார்.

எங்கள் வீட்டில் எல்லாம்  தயிர் சாதத்துக்கு  சுண்டைக்காய் , மணத்தக்காளி வற்றல்கள் தொட்டுக்கொண்டு சாப்பிடும் வழக்கமும் உண்டு.

பழைய சாதமும் பாலாடைத் தயிரும்   வள்ளுவன்-வாசுகி போன்ற இணை பிரியா  கணவன் மனைவிகள். சின்ன வெங்காயத்தை உரித்து  தயிர் சாதம் பக்கம் வைத்தால்  அது இன்னொரு அற்புத உத்தி.  பசிக்கு  தயிர் சாதம் போல்  சிறந்த மருந்தை எங்கும் காணமுடியாது.   இந்த கால குழந்தைகள்  தயிர் சாதம் சாப்பிடுவது குறைந்து போனதற்கு காரணம்  இளம் பெற்றோர்  அவ்வாறு வளர்க்கப்பட்டதால் தான். 

எங்கள் இளவயதில் வீட்டில் பிரிட்ஜ் FRIDGE  யார் வீட்டிலும் கிடையாது.  பெரிய  பாத்திரத்தில்  மத்தியானம் வடித்த சாதத்தில் மீதியை எல்லாம்  நிறைய  தயிர் பால் ஊற்றி தயிர் சாதமாக்கி   வட்டமாக எங்களை எல்லாம் உட்காரவைத்து ஆளுக்கு கையில் ஒரு நார்த்தங்காயை கொடுத்து விட்டு  உள்ளங்கையில் ஒரு பிடி சாதம் கிடைக்கும்.  ஆறு ஏழு ரவுண்ட் வருவதற்குள் அத்தனை சாதமும்  காலி செய்துவிடுவோம்.

கல்யாணம் முடிந்து  சத்திரத்தை காலி செய்யுமுன்  கட்டுசாத கூடை என்று  எல்லோருக்கும்  உணவு பொட்டலங்கள் விநியோகிப்பார்கள்.  சம்பந்தி வீட்டார்  தங்களது உணவு பொட்டலங்களில்  தயிர் சாதம் இல்லை என்று  பெரிய  உலக மஹா யுத்தம்  பெண்வீட்டாரோடு போட்ட சம்பவங்கள் நான் கேள்விப்  பட்டிருக்கிறேன். 

வெள்ளையர்கள்  கூட  நமது நாட்டில்  தென்னகத்தில் தயிர் சாதம்  கேட்டு சாப்பிட்டதாக  சரித்திரம் உண்டு. YOGHURT  என்று தயிரை குறிப்பிடுவார்கள்.

இதோ வெயில் காலம் வந்துவிட்டது.   தயிர்சாத அருமை வெயில் காலத்தில் தான் தெரியும். ஏழையோ பாழையோ  தச்சீ மம்மு  சாப்பிடாத குழந்தையே  எங்கள் காலத்தில் இல்லை. 

  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...