Wednesday, February 17, 2021

CHANAKYA

 

சாணக்கியன்   --    J K  SIVAN 

சிந்தனைச் சிதறல்கள் 

ஆயிரம் வருஷங்களுக்கு முன்பே  நமது குணாதிசயங்களை துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிறான் சாணக்கியன். அவனது சொற்கள் எவ்வளவு உண்மையானவை, இன்றும்  பொருத்தமானவை என்று அறிந்து அதிசயிக்கிறோம்.
  
*ஒரு மனிதனை வசியப் படுத்த பல விஷயங்கள் உள்ளது, அது மிகப் பெரிய மனிதனையும் கட்டுப்படுத்தும், மரங்களை துளைக்கும் ஆற்றல் இருந்தாலும் தேனி பூக்களின் தேனில் மயங்கி கிடைப்பது போல்.

* சந்தனம் துண்டு துண்டு ஆனாலும் அதன் மணம் மாறாது, கரும்பை சக்கையாக பிழிந்தாலும் அதன் இனிப்பு போகாது, யானை வளர்ந்தாலும் அதன் குறும்பு மாறாது. அது போல் மேன்மக்களின் குணம் வறுமை வந்தாலும் மாறாது.

* ஒரு மனிதன் தன்னுடைய செயல்களாலே பெரிய மனிதன் ஆகிறான், அவன் அமரும் பதவியில் இல்லை. காகம் பெரிய மலையில் மேல் அமர்ந்தாலும் கருடன் ஆகாது .

* திறமையிலாத ஒருவனை பலர் புகழ்தால் அவன் பெரிய மனிதன் ஆவான், ஆனால் ஒருவன் இந்திரனே ஆனாலும் தன்னை தானே தற்புகழ்ச்சி செய்தால் அவன் புகழ் மங்கி விடும்.

*ஒரு மனிதனின் நல்ல குணங்களே ரத்தினம் ஆகும், தங்கத்தில் மின்னும் ரத்தினம் போல, அவனிடம் பல இருந்தாலும் நல்ல குணங்களே அவனை மின்னச் செய்யும்.

*ஒரு மனிதன் எத்தனை சிறந்த குணங்கள், திறமைகள் இருந்தாலும் அவனை தூக்கி விட பெரிய மனிதர்கள் தயவு தேவை. என்னதான் ஒளிவீசும் ரத்தினம் ஆனாலும் அதை பதிக்க ஒரு தங்கம் தேவைப் படுவதை போல்.

*பெண், பணம், உணவு ஆகியவற்றில் திருப்தி அடையாதவர்கள் சென்று விட்டனர், ஆனாலும் வேறு எதிலோ திருப்தி அடையாதவர்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டும், மேல் உலகிற்கு சென்று கொண்டும் தான் இருக்கிறார்கள்.

*பலனை எதிர்பார்த்து செய்யும் தானம் தர்மம் குறுகிய காலம் மட்டுமே பலன்களை தரும், ஆனால் தன்னலம் கருதாமல் இறை சிந்தனை உள்ள மனிதனுக்கு செய்யும் சிறிய உதவி இந்த உலகத்தை காக்கும், என்றும் அழியாது.

*அவமானப்பட்டு வாழ்வதை விட இறப்பது மேல், இப்படி வரும் இறப்பு ஒருநாள் தான் துன்பத்தை தரும், ஆனால் அவமானத்துடன் வாழ்வது ஒவ்வொரு நாளும் துன்பத்தை தரும்.

* உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்சொல்லால் மகிழ்ச்சி அடைகிறது. ஆதலால் இன்சொல் பேசுங்கள்.

*புத்தகத்தை படிப்பதனால் மட்டுமே வரும் அறிவு, அடுத்தவனிடத்தில் உள்ள செல்வம், ஆகியவை தேவைப்படும் போது நமக்கு பயன் தராது.

*மிகவும் துன்பப்பட்டு சம்பாதிக்கும் பணம், அடுத்தவனை ஏமாற்றி வரும் பணம், எதிரியிடம் இருந்து வரும் பணம் ஆகியவற்றை நான் ஒரு போதும் பணம் என்று கருதியதில்லை.

*முறையற்ற வகையில் பிறக்கும் குழந்தை சமூகத்தால் நிராகரிக்கப் படுவதை போல், ஒருவன் எத்தனை புத்தகங்கள் வாயிலாக கல்வி கற்றாலும், குரு அருள் இல்லாமல் கற்கும் கல்வி, அறிவு முதிர்ந்தோர் சபையில் எடுபடாது.

* நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நாம் அன்புடன் இருக்க வேண்டும். அது போல் கெட்டது செய்தவருக்கு கெடுதல் செய்வது பாவம் இல்லை. முள்ளை முள்ளால் தான் களைய வேண்டும்.

*ஆசையை விட துன்பம் தருவது எது? அவமானப் படுத்துவதை விட பெரிய பாவம் எது? உண்மையாய் இருப்பதை விட வேறு உறுதி எது? நல்ல குணங்களை விட வேறு செல்வம் எது? தூய மனத்தை விட புண்ணியம் தரும் இடம் எது? புகழை விட சிறந்த ஆபரணம் எது? அறிவை தவிர வேறு சொத்து எது? அவமரியாதையை விட சிறந்த மரணம் எது?

* கடலில் பல ரத்தினங்கள் உடன் இருந்தாலும், லக்ஷ்மி உடன் கடலில் பிறந்திருந்தாலும் சங்கு ஆண்டியின் கையில் அகப்பட்டு ஒவ்வொரு வீட்டு வாசலில் பிச்சை எடுக்க செல்கிறது, ஆதலால் நாம் எங்கு பிறந்தாலும், யார் உடன் இருந்தாலும் நமக்கு எது என்று எழுதி வைத்ததோ அது தான் கிடைக்கும்.

*சக்தி இல்லாத மனிதன் சாதுவாக மாறுகிறான், வசதி இல்லாதவன் இருப்பதை கொண்டு வாழும் பிரமச்சாரி ஆகிறான், நோய் மிகுந்தவன் கடவுளை தினமும் தொழும் பக்தனாகிறான், வயது முதிர்ந்தால் மனைவி கணவனுக்கு சேவகம் செய்கிறாள்.

* பாம்புக்கு பல்லில் விஷம், தேளுக்கு கொடுக்கில் விஷம், பூச்சிக்கு வாயில் விஷம், கெட்ட மனிதருக்கு உடல் முழுவதும் விஷம்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...