Thursday, February 18, 2021

PESUM DEIVAM

 




பேசும் தெய்வம்                     J K   SIVAN 

            பல்லவன் கடிகாரம் 

டாக்டர் ஸ்ரீ  தியாகராஜ சத்யமூர்த்தி என்கிற  சிதம்பர  காரரை தெரியாவிட்டால்,  சுருக்கமாக  அவர்  சிறந்த தேசபக்தர் மகன். சிறுவயதிலேயே  யஜுர்வேதம் மந்த்ரங்கள்  ஒப்பிப்பார். குரு  சிதம்பரம் நடேச சாஸ்திரிகள். சத்யமூர்த்தி  சமஸ்க்ரிதம் விஞ்ஞானம்  எல்லாம் கற்றவர். புராணங்களில் தர்மம் என்ற தலைப்பில் ஆராய்ச்சி செயது டாக்டர் பட்டம் பெற்றவர்.  புதை பொருள் ஆராய்ச்சியில்  விக்ரஹங்கள்   பற்றிய  சிறப்பு  ஆராய்வு நிபுணர்.  அந்த நிறுவனத்தின்  பொறுப்பில் உயர்  பதவியில் ஒய்வு பெற்றவர்.   இந்தியாவின்  பல  முக்கிய   புதை பொருள் ஆராய்ச்சிகளில் பங்கேற்று பல விஷயங்களை வெளிப்படுத்தியவர்.  நிறைய  ஆராய்ச்சி புத்தகங்கள் எழுதியவர். 

இதெல்லாம் தவிர  மஹா பெரியவாளிடம் நெருக்கமானவர். அவர்  மஹா பெரியவாளுடன் நடத்திய  சம்பாஷணை கட்டுரை ஒன்றை படித்தேன். அதைப்பற்றிய  சிறு குறிப்பு ஒன்றை இந்த கட்டுரையில் உங்களோடு  பரிமாறிக் கொள்கிறேன்.

சத்யமூர்த்தி  மஹா பெரியவாளை சிறு வயதிலி ருந்தே  தரிசித்தவர்.  அவர்கள் குடும்பம்  காஞ்சி மகானின் எண்ணற்ற பக்தர்கள் குடும்பத்தில் ஒன்று . படித்து வளர்ந்து புதைபொருள் ஆராய்ச்சி நிபுணராக  பணியாற்றும்போது ஒருநாள்   மஹா பெரியவளை  சத்யமூர்த்தி சந்தித்தார்.  அவர் அருகில் சென்று வணங்கி எழுந்ததும்  பெரியவா ளுக்கு  சத்தியமூர்த்தியை  அடையாளம் தெரிந்து விட்டது.  முகத்தில் புன்னகை.   ஆசிர்வதித்த படியே  பேசினார்:

''இப்போ  நீ என்ன உத்யோகம் பண்றே?'' 

''பெரியவா, நான்  இப்போ  மத்திய சர்க்கார்  நிறுவனமாகிய  புதை பொருள் ஆராய்ச்சி நிலையத் தின் ஆராய்வாளராக வேலை செய்றேன்''

''அதிலே உன் பொறுப்பு  என்ன?''

'' பழையகால கோவில்களை பற்றியெல்லாம்  அகழ்வாராய்வு  செய்வது தான்  வேலை பெரியவா'' 

''மஹாபலிபுரம் போயிருக்கியா?'' அங்கே  என்ன  விசேஷமாக  பார்த்தே  என்று சொல்லுவியா?''

“அங்கே ஒரே கல்லிலாலான  பாண்டவர்களுடை ய   ரதங்கள்,  மகிஷாசுர மர்த்தினி குகை கோவில் இருக்கு  பெரியவா'

''அங்கே  பல்லவர்களுடைய  கடிகாரம் இருக்கே  அதை பார்த்தியோ?''

சத்தியமூர்த்திக்கு  புரியவில்லை.  பெரியவா ஏதோ கேலியாக கிண்டலடிக்கிறாரோ என்ற  சம்சயம்.  சின்னவயதி லிருந்தே தெரிந்தவன் என்பதால்  உரிமையோடு விளையாட்டுக்காக  ஏதோ கேட்கிறாரோ? என்று தோன்றியது. 

''இல்லையே  பெரியவா,  பல்லவர்கள் காலத்தில் கடிகாரம் கண்டுபிடிக்கப் படவில்லையே, எப்படி  பல்லவர்கள் கடிகாரம் அங்கே இருக்கும் என்று  புரியவில்லை எனக்கு''

“அங்கே  பல்லவன் கடிகாரம் இருக்கு.  நீ கவனிக் கலேன்னு சொல்லு.  அடுத்ததடவை மஹாபலி புரம் போனாஅதைப் பார்த்துடு''

சத்தியமூர்த்திக்கு மஹா பெரியவா விளையாட் டுக்காக சொல்லவில்லை. ஏதோ விஷயம் இருக்கு. இல்லையென்றால் மஹா பெரியவா இப்படி சொல்லமாட்டார் என்று தெரியும்.  ஆகவே  அடுத்த ஒரு விடுமுறை நாளில் மஹாபலிபுரம் சென்று எல்லாம் கவனித்தார். கடிகாரம் எங்கும் தென்படவில்லையே.

மீண்டும் மஹா பெரியவாளை சந்திக்கும்போது ஞபகமாக  பெரியவா சத்யமூர்த்தியிடம் கேட்டார்.

“மஹாபலிபுரம் போனியா,  கடிகாரம் பாத்தியா?''

இல்லே பெரியவா.  எனக்கு  அங்கே கடிகாரம் இருக்கிறதா தெரியவில்லை பெரியவா''

''ஓஹோ.  அர்ஜுனன் தபஸ் பார்த்தியா?'''



'ஆமாம்''
''அதுக்கு கீழே, ஒரு நதி ஓடறமாதிரி சிலையில் செதுக்கியிருக்கு இல்லையா.  ஒரு விஷ்ணு கோவிலும் உண்டு. அதுக்கு பக்கத்திலே ஒரு ரிஷி உட்கார்ந்து இருப்பார்.  அவருக்கும் கீழே, சில பேர் உட்கார்ந்து வேத  மந்திரம் ஜெபிச்சுண்டுஇருப்பா.
அதிலே  ஒருத்தன்  தன்  உடம்பு துணியிலிருந்து ஜலத்தை பிழிவான்.  இன்னொருத்தன் மாத்யா னிகம்  (உச்சி நேரத்தில் பண்ணும் சந்தியா வந்தனம்)  பண்ணிண்டு இருப்பான். ஒருத்தன்  நின்னுண்டு  ரெண்டு  கைவிரல்கள் இடுக்கில்  சூரியனை மேலே  பார்த்துண்டு  மாத்யானிக  சூர்ய  நமஸ்காரம் பண்ணுவான்.  இதையெல் லாம் வடித்த  சிற்பி  என்ன சேதி சொல்றான்

"மணி சரியா மத்தியானம் பன்னிரண்டு.  மத்யானிகம் பண்ற நேரம்.  இதைத் தான்  நான் பல்லவன் கடிகாரம்னு சொன்னேன் 

சத்யமூர்த்தி  அசந்து போய்விட்டார்.  எவ்வளவு நுணுக்கமாக  ஒவ்வொன்றையும்  மஹா பெரியவா கவனிப்பவர். நாம் இதிலேயே  ஆராய் ச்சி செய்பவன் என்று பேர் பட்டம் எல்லாம் வாங்கியும் அவரைப்போல  ஆராய்வது என்பது இந்த ஜென்மத்தில் இல்லை'' என்று  அதிசயித் தார்.   மஹா பெரியவா என்றால் அதனால் தான் உலகமே  வியக்கிறது. 

மஹா பெரியவா குறிப்பிடும் அந்த சிலை உருவங்களை இத்துடன் இணைத்திருக்கும்  படத்தில் காணலாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...