Tuesday, February 9, 2021

DATTATREYA

 


தத்தாத்ரேயருக்கு யார்  குரு?   - 3 
                               J  K  SIVAN

    '
அவதூத கீதை '' 

 

7.   ராஜா யதுவுக்கு ஆர்வம் எல்லை கொள்ளவில்லை. ''சுவாமி உங்களுடைய ஏழாவது குரு யாரோ?''


''
வேறு யாராக இருக்க முடியும்? சூரியன் தான். அவனைப்பார். உதயம் முதல் அஸ்தமனம் வரை எதையும் எவரிடமும் எதிர்பாராமல் விடாமல் ஒரே சீராக பிறர்க்கென உழைப்பவன். சகல நீர் நிலையிலும் உள்ள நல்ல, சுத்த, அசுத்த, சாக்கடை, கங்கை, எந்த நீரையும் வித்தியாசமின்றி ஆவியாக்கி, மேகமாக்கி, குளிர்ந்த சுவையான நீராக முன்னிலும் அதிக பயனுள்ளதாக பாரபட்சமின்றி அனைத்துலகுக்கும் கிடைக்க வழி வகுப்பவன் சூரியன் தானே.    

 

அவன் தான் எல்லோரிடத்திலும் உள்ள, எதிலும் நல்லது கெட்டதை எடுத்துக்  கொண்டு நல்லதையே அவர்களுக்கு பாரபட்சமின்றி அளிக்க எனக்கு கற்றுக்கொடுத்த ஏழாவது குரு. புரிகிறதா?''

8. ''
சுவாமி எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. நீங்கள் சொல்வதெல்லாம் ரொம்ப நேர்த்தி. . மேலும் உங்கள் குரு யார் யார் என்று அறிய ஆவலாக இருக்கிறதே.''

''
எனக்கு அடுத்து குருவாக வந்தது ஒரு புறாக்கூட்டம். ஒரு புறா, வேடன் வலையில் சிக்கிக்கொண்டதை கவனித்த மற்ற புறாக்கள் தாமும் அந்த வலையில் சிக்கி அதை மீட்கப்  பார்த்தன. முடியாது என்று தெரிந்த போதும் அந்த ஒன்றிற்காக அனைத்துமே உயிரிழந்தன.

ஒருவருக்காக மற்றவர் தானாக தன்னுயிரையும் தியாகம் செய்யவேண்டும் என்று நான் தெரிந்து கொள்ள வைத்த அவையே எனது 8வது குரு.

9.
மேலும் கேள். எனது 9வது குரு ஒரு மலைப்பாம்பு.
''
ஐயோ  என்ன சுவாமி இது? ஒரு மலைப்பாம்பு  எப்படி குருவாக  முடியும்சொல்லுங்கள்''
 
'
ஒரு  மலைப்பாம்பு எப்படி  ஒரு குருவாகும்  என்று சந்தேகத்தோடு கேட்கிறாயே. சொல்கிறேன் கேள்.
மலைப்பாம்பு ஒரு இரையைப் பிடித்து உண்டபின் பல நாட்கள் இரை தேடாமல் ஒரு இடத்தில் முடங்கிக் கிடப்பதைப் பார்த்திருக்கிறாயா ?    நானும் ஒருநாள் அப்படி ஒரு காட்டில் போகும்போது ஒரு மலைப்பாம்பை பார்த்தேன். கவனித்தேன். சட்டென்று எனக்கு அப்போது தான் ஞானோதயம் ஆயிற்று. தனது செய்கையால் இந்த மலைப்பாம்பு என்ன சொல்லித் தருகிறது என்று யோசிக்க வைத்தது.   உண்மை புலப்பட்டது.

''
தேவைக்கு மேல் தேடாதே'. விலகி இரு''  என்று. எவ்வளவு உன்னதமான உபதேசம் இது. ஆகவே தானப்பா, மலைப்பாம்பு என்னுடைய ஒன்பதாவது குரு .

''
குருமஹாராஜ், கண்ணிருந்தும் குருடு என்கிறார்களே அது என் விஷயத்தில் நூற்றுக்கு ஆயிரம் மடங்கு சரியானது. கண்ணெதிரே தோன்றும் இத்தனை குருமார்களை நாம் வணங்கி இந்த அருள் உபதேசம் பெறவில்லையே என்று வருந்துகிறேன். மேலே சொல்லுங்கள் சுவாமி'' என்றான் யது .

10.   
மேற்கேயும் கிழக்கேயும் தெற்கேயும் இந்த பூமியை சுற்றி கடல் இருக்கிறதே அதுவும் அருமையான ஒரு பாடம் எனக்குச்  சொல்லிக்கொடுத்தது. எங்கெங்கோ இருந்தெல்லாம் நீர் அதில் கலந்தாலும் ஒரு நாளும் அவை கரை மீறியதில்லை. அனைத்தையும் சமமாகவே பாவித்து தன்னுள் அடக்கம் செய்து கொண்டது. அதனிடம் தான் நல்லது,  கெட்டதுபிடித்ததுபிடிக்காதது எல்லாவற்றையும் சமமாக பாவிக்க கற்றுக் கொண்டேன். எனவே தான் சமுத்திரத்தை எனது பத்தாவது குருவாக ஏற்றுக் கொண்டேன்.

 

யது  தடாலென்று  தத்தாத்ரேயர் காலடியில் விழுந்தான்  '' ஆஹா  என்ன  ஒரு  அற்புத  சிந்தனை, எண்ணம் குரு மஹராஜ் '' 

அடுத்து ஸ்வாமிகள் தனது பதினோராவது குரு யாரென்று அறிவிக்க காத்திருந்தான். இதோ தத்தாத்ரேயர் சொல்கிறாரே.

''
அப்பா யது மஹாராஜா, நீ ஞானம் விரும்பி. ஆவலோடு தெரிந்து கொண்டு பயனுற வேண்டுபவன். ஆகவே உனக்கு நான் சந்தோஷமாக தொடர்ந்து சொல்கிறேன் கேள். என்னுடைய இந்த ஜன்மாவில் நான் என்னுடைய பதினொன்றாவது குருவாக கொண்டது யார் தெரியுமா??

''
சொல்லுங்கள் குரு மஹராஜ்''

''
பதினொன்றாவது குருவாக எனக்கு அமைந்தது ஒரு சிறு விட்டில் பூச்சி. எதனால் என்கிறாயா? விளக்கமாக சொல்கிறேன் கேள்'' .

ஒருநாள் ஒரு இரவு ஒரு திண்ணையில் அமர்ந்திருந்தேன். திண்ணைக்கு அருகே அந்த வீட்டின் உள்ளே ஒரு எண்ணெய் தீபம். சில விட்டில்கள் சப்தமிட்டவாறு அங்கே  அந்த  தீபத்தைச்  சுற்றிக் கொண்டிருந்தன. ஒன்று நேராக தைர்யமாக விளக்கின் தீயில் விழுந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டதை அப்போது தான் பார்த்தேன்.

''
ஆஹா, விளக்கின் தீபத்தைப்  பழமென நம்பி அந்த விட்டில் தனது உயிரை பறி கொடுத்துவிட்டதே. சுயநலமின்றி உள்ளே ஞானத்தீயில் என்னையே ஆஹூதியாக கொடுத்து அதில் ஸ்புடம் பண்ணி என்னை நானே உயர்த்திக்கொள்ள இது வழி காட்டுகிறதே.      ''வாழ்க நீ விட்டிலே!'' என்று அதைப்  போற்றி அதன் வாழ்க்கையால் -  மறைவால்,  காட்டிய அறிவுரையைக்  கற்றேன்பெற்றேன். முயற்சித்தேன். வெற்றி பெற்றேன். எனவே விட்டில் என் பதினொன்றாவது குரு.

''
சுவாமி, ரொம்ப சுலப எளிய வஸ்துக்களே, அற்ப ஜீவன்களே கூட, உங்கள் குரு என்று அமைந்திருப்பதாக காட்டி நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது   உங்கள் காருண்யம், மகிமை, பெருமை எல்லாம் என் நெஞ்சில் நிறைந்து விடுகிறது. உங்களது அனுபவம் புரிகிறது. பிடிக்கிறது. மேலே சொல்லுங்கள்:''

அவர்கள் பேசிக்கொண்டிருந்த சமயம் ''ம்ம்ம்''    என்று சப்தம் செய்து கொண்டு ஒரு  பூ வண்டு அருகே இருந்த மல்லிகைச் செடிகளிடமிருந்து பறந்து வந்து யதுவின் அருகே காதருகில்ப ரீங்காரம் இட்டுச் சென்றது.

அதை கவனித்த தத்தாத்ரேயர். ''இதோ  இந்த பூ வண்டு  என் குருவை எனக்கு ஞாபகப் படுத்துகிறது.  ஆம்,  அந்த தேன் வண்டு  தான் எனது 12 வது குருவாக என்னை சீர் படச் செய்தது .

''
எந்த  வகையில் குரு மஹராஜ்?''

''
ஒரு நாள் அழகிய ஒரு தேன் வண்டை நந்தவனத்தில் கண்டேன். கவனித்தேன். ஒரு பூவில் உட்காரும் முன் ''ம்ம்ம் '' என்று அழகாக ரீங்காரம் செய்துகொண்டு அந்தப் பூவைச் சுற்றி சுற்றி வந்து நாட்டியமாடி அந்த பூவை தனது இசையிலும் நடனத்திலும் மகிழ்வித்தது. உண்மையில் அந்த சிறிய தேன் வண்டு தன் மெல்லிய சிறிய வாயில் ஒரு துளி தேனைத்  தான் பூவிடமிருந்து உண்டது. ஆனால் பல பூக்களில் சென்று மகரந்த சேர்க்கை உண்டாக வழி வகுத்ததால் அந்த பூச்செடிகள்  எண்ணிக்கையில் பெருகின.

இதை கவனித்த நான் அப்படியே அந்த வண்டை நோக்கியவாறு கீழே சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தேன்.

''
ஹே, சிறு தேன் வண்டே, இனி  நீயே எனக்கு குரு. ''பெற்றது சிறிதாக இருந்தாலும் அதை பெற்றதற்கு நன்றியோடு, அளித்தவர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டியதோடு உதவியவர் பல்கிப் பெருகி பெரு வாழ்வு வாழ பாடுபடுவேன்''    என்ற உறுதி பூண வைத்தது அந்த சிறிய வண்டு.

கிருஷ்ணன் என்ன சொன்னான் நினைவிருக்கிறதா.

''
ஒரு சிறு இலை, ஒரு உத்ரணி ஜலம் , ஏதேனும் சிறிது ஒரு காயோ, கனியோ, நைவேத்தியமாக எனக்கு நீ உள்ளன்போடு அளித்தால் அதே எனக்கு தேவாம்ருதம்''  ஆம் இதை உள்ளன்போடு நீ அளித்தாலே கிருஷ்ணன் வேண்டியதை வாரி அள்ளி வழங்குகிறான்.

பசி தாகம் எல்லாமே மறந்து போய்விட்டது யதுவுக்கு . தத்தாத்ரேயரின் பன்னிரண்டு குரு உபதேசம் அவனை அப்படி உலுக்கி விட்டது. ஆர்வம் மேலிட்டு சிரமேற் கரம் தாங்கி    ''மகரிஷி மேலே சொல்லுங்கள். உங்களது 13வது குருவைத் தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறதே? என்றான்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...