Thursday, February 11, 2021

SIVAKAVI

 

சிவ கவி 1 -- J K SIVAN

முருகன் தமிழ்க் கடவுள். அவன் அருளால் பாடியவர்கள் பலர். ஒளவையார் , அருணகிரி நாதர் குமர குருபரர்,ஆதி சங்கரர்,தேவராய சுவாமிகள்,வள்ளிமலை சச்சிதாநந்த சுவாமிகள், கிருபாநந்தவாரியார் -- அது ஒரு பெரிய லிஸ்ட். அதில் ஒருவர் பொய்யா மொழிப் புலவர். சக்தி உபாசகர். சக்தியும் சிவனும் ஒன்று தானே. ஆகவே சிவ கவி என்றும் அழைக்கப்பட்டார்.
நமது தொண்டைமண்டலத்தில் ஒரு ஊர் இருந்தது. பெயர் வயிரபுரம் . அங்கே காளி கோவில் பிரசித்தம். அந்த ஊர் ராஜா காளிங்கராயன். அவன் குடும்பத்தையும் சேர்த்து ஊரில் எல்லா மாணவர்களுக்கும் ஒரு குரு. அவருக்கு ஒரு சோளக்கொல்லை சொந்தம். மாணவர்கள் பாடம் படிக்காத நேரத்தில் சோளக் கொல்லையை காவல் காக்க வேண்டும். ஆடுமாடு கோழி வந்து பயிரை சேதப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாள் ஒரு மாணவன் முறை. அவன் காவல் காக்கும்போது தூங்கி விட்டான். அதற்குள் ராஜா காளிங்கராயனின் குதிரை வயலுக்குள் வந்து பயிர்களை மேய்ந்து விட்டது. மாணவன் விழித்து குதிரையை விரட்ட அது அவனை துரத்தியது. மாணவன் காளி கோயிலுக்கு ஓடினான். ''அம்மா தாயே,. இந்த காலிங்கராயன் குதிரை குருவின் தோட்டத்து பயிர்களை மேய்ந்து விட்டதே நான் என்ன செய்வேன். விரட்டினாலும் என்னை துரத்துகிறதே''.
''என் பக்தா, கவலைப்படாதே, நீ விரட்டு, அதிகாரமிடு, அதெல்லாம் பலிக்கும் . உன் வாக்கு இனி பொய்க் காது. போ ''
அம்பாளை வணங்கி அவன் ஒரு பாடல் பாடுகிறான்:

''வாய்த்த வயிரபுர மாகாளி யம்மையே
ஆய்த்த அருகாம் அணிவயலில் – காய்த்த
கதிரைமா ளத்தின்ற காளிங்க ராயன்
குதிரைமா ளக்கொண்டு போ.”

என்ன ஆச்சர்யம். துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த கனைத்த வண்ணம் கீழே விழுந்து கால்களை உதைத்துக் கொண்டு உடனே இறந்துவிட்டது.
தன்னுடைய பாடலுக்கு இப்படி ஒரு சக்தியா? வியப்பும் பயமுமாய் ஐயோ! என் செய்வேன், காளிங்கராயனுக்கு இது தெரிந்தால் நம்மைச் சும்மாவிடமாட்டானே? எனத் தம்மைத் தாமே மாணவன் நொந்து கொண்டு நடந்ததை குரு நாதரிடம் போய்ச் சொன்னான் . குருநாதரும் பதறி அடித்துக் கொண்டு வேதனையோடு இறந்த குதிரையின் அருகே தம் சீடரோடு வந்து சேர்ந்தார். மாணவனை ஓரு பார்வை பார்த் தார். குருவின் உள்ளத்தை உணர்ந்தவனாக அவன் இப்போது அதே பாடலை பாடி கடைசி அடியை மாற்றிக் “குதிரை மீளக் கொண்டு வா!” என்று முடித்தான்.
இன்னொரு ஆச்சரியம்?? அதிசயம்?? இறந்த குதிரை உயிர்பெற்று எழுந்து துள்ளிக் கொண்டு ஓடியது வேகமாய்.
குரு இரு கையெடுத்து தனது சீடனை வணங்கி னார். “அப்பா, உன் வாக்குப் பலிக்கிறதே! நீ சொன்னதை காளி நிறைவேற்றுகிறாளே. இன்று முதல் நீ பொய்யாமொழிப் புலவன் என்னும் பெயர் பெறுவாய்!” என்று வாழ்த்தினார்.
பொய்யாமொழிப் புலவர் சங்கம் வளர்த்த பாண்டிய நாட்டிற்குச் சென்று சில பாடல்கள் பாடி, சிலை உருவில் இருந்த சங்கப் புலவர்கள், கரக்கம்பம், சிரக் கம்பம் செய்யும்படிச் செய்து, பொற்றாமரைக் குளத்தில் ஆழத்தில் மூழ்கிக் கிடந்த சங்கப் பலகையை மேலே வந்து மிதக்க வைத்தார். இயல்பாகவே சிவபக்திச் செல்வரான இந்தப் பொய்யாமொழி, இன்னும் ஆலவாயனி டம் தீராத பக்தி பூண்டு, சிவனைத் தவிர, வேறொரு தெய்வமே இல்லை என்றும், வேறு எந்தக் கடவுளையும் பாடவும் மாட்டேன் என்ற கொள்கையை கடைப்பிடித்தார். முருகன், தமிழ்க்கடவுள் , இப்படி ஒரு நல்ல தமிழ்க் கவிஞனை, புலவனை விடுவானா?

ஒரு நாள் பொய்யாமொழிப் புலவரின் முன் முருகன் தோன்றினான். “ புலவரே, உம் தமிழால் எம்மைப் பாடுவீராக! “
பொய்யாமொழியோ “கோழியைப் பாடிய இந்த என் வாயால் அதன் குஞ்சைப் பாடுவேனோ? அப்பனைப் பாடிய வாயால் ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ?” என்று பாட மறுத்துவிட்டார். முருகன் மறைந்தான்.
ஒருநாள் வைகைக் கரையில் தஞ்சாக்கூர் என்னும் ஒரு ஊரில் தஞ்சை வாணன் என்ற புரவலர் வசிப்பதை அறிந்து அவரிடம் உதவி பெற பொய்யாமொழி சென்ற வழியில் பாலை நிலக் காடுகளைக் கடந்தே செல்ல வேண்டும். நடுவே வேடன் ஒருவன் வழி மறித்தான். இடக்கையில் வில், வலக்கை யில் அம்பு, தோளில் அம்புறாத் தூணி கொண்ட இளம் வேடன் பார்ப்பதற்கு வசீகரன். முக காந்தி பிரமிக்க வைத்தது. அவன் சிவந்த நிறத்தவன். சூரியன் மாதிரி ஜொலித்தான்.
''யாரையா நீ, நில்'' என்று புலவரை வேடன் நிறுத்தி கண்களை உருட்டி விழித்தது பயமாக இருந்தது.
''என்னிடம் எந்த பொருளும் நகையும் இல்லை ஐயா'' என்கிறார் புலவர்.
''ஏழையா? சரி நீ யார் என்ன செயகிறாய்? '
'நான் ஒரு புலவன்.'
'“ஹாஹ்ஹா! ஹாஹ்ஹா! தமிழ்ப் புலவனா நீ? சரி போ, உன்னிடம் பொருள் இல்லையானால் பரவாயில்லை. எனக்கு தமிழ் பிடிக்கும். என் மேல் ஒரு பாட்டு பாடு உன்னை விடுகிறேன்
''தமிழ் பிடித்தவனா நீ. எனக்கு சந்தோஷம். உன் பெயர் என்ன என்று சொல்லப்பா உன் மேல் பாட்டியற்றி பாடுகிறேன்'
“என் பெயர் முட்டை!”
''முட்டையா?? சரி பாடுகிறேன்: .

“பொன் போலும் கள்ளிப் பொறி பறக்கும் கானலிலே
என் பேதை செல்லற்கியைந்தனளே- மின் போலும்
மானவேல் முட்டைக்கு மாறாய் தெவ்வர் போம்
கானவேல் முட்டைக்குங்காடு!”

''இந்த கடும் வெயில் சூழ்ந்த நேரத்தில் , அடர்ந்த கருவேல முள் நிறைந்த காட்டில் முட்டை என்னும் பெயருள்ள இந்த வேடன் மின்னல் போல் மின்னும் கூர்மையான வேல், அம்புகள் கைகளில் கொண்டு நிற்கும் பகுதி யில் காட்டுக்குள்ளே என்னைப் போல் செல்ப வர்கள் முட்டையின் எதிரிகள் . சூரிய வெப்பத் தில் இந்தக் காட்டுக் கள்ளிச் செடிகள் எல்லாம் தீப்பிடித்து எரியும். இப்படி ஒரு காட்டுக்குள் பேதையும், இளம் பெண்ணு மாகிய என் மகள் தன் தலைவனோடு செல்ல இசைந்தாளே!”
வேடன் கேட்டு சிரித்தான். ஹே புலவா, என்ன பாட்டு இது. ஒரே பொய் . பேரை மட்டும் பொய்யா மொழி என வைத்துக் கொண்டிருக் கிறாய். தண்ணீர் இல்லாமல் வெப்பம் தாங்காமல் கள்ளிச் செடிகள் காய்ந்துபோய்த் தீப்பிடிக்கும் நிலையில் இருக்கும்போது அங்கே கரு வேல முட்கள் மட்டும் எப்படித் தாக்குப் பிடிக்கும்? என்ன புலவன் நீ? பொருளை மாற்றி பாடினான் வேடன்.
புலவர் திகைத்துப் போனார். வேடன் லக்ஷியம் பண்ணவில்லை. சரி இதற்கு பதில் சொல் ,
“முட்டை

பெரிதா, குஞ்சு பெரிதா?”
“குஞ்சு தான் பெரியது!” என்றார்
பொய்யாமொழி. அப்படியானால் முட்டையைப் பாடிய வாயால் அதை விடப் பெரிய குஞ்சையும் பாடு!” என்று சொல்லி வேடன் மறைந்தான்.

கணத்தில் புலவர் புரிந்துகொண்டார் வந்தவன் வேடன் இல்லை.... யார் இவ்வளவு சமத்காரமாக பேசியது, பாடியது.... யோசித்தார்.

கனவில் வந்து என் மேல் பாடு என்று சொன்ன போது தான் பாட மறுத்ததும், கோழியைப் பாடிய வாயால் குஞ்சைப் பாடமாட்டேன் எனச் சொன்னதும் நினைவில் வந்தது.

ஆஹா தனால் தான் முருகனே வேடனாய் வந்து முட்டையைப் பற்றித் தம்மைப் பாட வைத்துத் தம் அறியாமையைப் போக்கிக் கண் திறந்தான் என உணர்ந்ததும் புலவரின் ஆணவம் அகன்றது. அன்றிலிருந்து வித்தியாசம் பார்க்காமல் தெய் வங் களைப் போற்றி பாடிய பொய்யாமொழிப் புலவர் 16ம் நூற்றாண்டு புலவர்.

அடுத்து நான் பார்த்த சிவ கவி படத்தை பற்றி எழுதுகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...