Wednesday, February 17, 2021

ARUPATHTHU MOOVAR

 அறுபத்து மூவர் ------- J K SIVAN

பூசலார் நாயனார்

இதயக்கோயில்

''உள்ளக் கோயிலில்..'' என்ற மதுரை சோமுவின் ஆபோகி ராக பாடல் காதில் ரீங்காரம் செய்கிறது. இன்று அதை கேட்டபோது எனக்கு உள்ளத்தில் கோவில் கட்டிய ஒருவர் நினைவும் வந்தது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் பூசலார். நாம் மனக்கோட்டை கட்டுகிறோம். அவர் மனக்கோயில் கட்டியவர் .
''சிவ மானஸ பூஜா'' என்றால் மனதால் சிவனை வழிபடுவது. ஒரு ஸ்தோத்ரம் ஆதி சங்கரர் இயற்றியது இருக்கிறது. அதை முன்பே எழுதி இருக்கிறேன்.
கூடை நிறைய பூ, சந்தனம், பழம் இதெல்லாம் ஒன்றுமே வேண்டாம். மனசு பூரா சிவனை நிரப்பிக்கொண்டு அவனை நினைந்து மனம் குளிர மனதாலேயே பூசிப்பது. இதற்கு சக்தி அதிகம். வெளியே பண்ணுகிற பூஜையை விட இதில் மனது உறுதிப்படும். எண்ணம் சித றாது. விழியொன்று நாட, கை மணி யொன்று அடிக்க, வாய் செல் போனில் பேசிக் கொண்டி ருக்க, காது கிச்சனில் வரும் சத்தத்தில் கவன மாக இருக்க, இது என்ன பூஜை? எத்தனை கூடை பூ போட்டு என்ன பயன்?
இலுப்ப மரத்தடியில் அமர்ந்து கண்ணை மூடி, நிறைய ஏக்கர் ஏக்கராக நிலம் வாங்கி ரிஜிஸ்தர் பண்ணி, கல், சுண்ணாம்பு, மரம், மண் எல்லாம் வந்து இறக்கி, ஆயிரம் ஆயிரம் கொத்தனார் சித்தாள் வைத்து வேலை செய்ய, இரவும் பகலும் வேலை நடந்து, சிறந்த ஸ்தபதிகள், கற் சிற் பிகள் விரதத் தோடு ஆகம சாஸ்திரப்படி சிவனை யும் அம்பாளையும் மற்ற தெய்வங்களையும் செதுக்க, நல்ல நாள் பார்த்து, வேத கோஷங் களோடு, யானை குதிரை பரிவாரங்களோடு, ரிஷிகள், சிவ கணங்கள் வேத மோத, பிரதிஷ்டை பண்ணி, நல்ல நாள் பார்த்து கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஊரே திரண்டு ஆயிரமாயிரம் பேருக்கு அன்ன தானம் ஜோராக நடக்கிறதே.
அடேயப்பா, யார் இந்த கோவில் கட்டியது, எங்கிருக்கிறது? எவ்வளவு பணம் ஆச்சு? - ஒரேபதில் எல்லா கேள்விக்கும்
.'' ஒரு பைசா செலவில்லை, எல்லாம் 'மனக்கோயில்' .
பிற்காலத்தில் பல்லவ ராஜா கேள்விப்பட்டு ஓடி வந்து தான் கட்டிய கோவிலுக்கு பரமேஸ்வரன் வர இயலாமல் இந்த மனக் கோயிலில் குடியிருக்கிறார் என்று கேள்விப் பட்டு, கும்பாபிஷேகத்தையும் சிவ பெருமான் மூலமே அறிந்து மனக்கோயில் கட்டிய பூசலார் நாயனாரை வணங்கி திரு நின்றவூரில் ஒரு சிவன் ஆலயம் கட்டினான். அந்த ஆலயத்தில் காட்சி தரும் சிவன் பெயர் ''ஹ்ருதயா லீஸ்வரர்'' மனக்கோவில் ஈசன் ''
நான் சொன்ன ஹ்ருதயாலீஸ்வரர் கோயில் சென்னைக்கு மிக அருகில் திரு நின்ற ஊரில் (என்ன அழகான பெயர்). சென்னையில் கொலைகாரன் பேட்டை என்ற பேரும் கூட இருக்கிறதே. திருமழிசையிலிருந்து 15 கி.மீ. திருவள்ளூரிலிருந்து 17 கி.மீ. சென்னையி லிருந்து 35 கி.மீ. தான். ஒரு மணியில் சந்நிதியில் நிற்கலாம். அவ்வளவு தான் தூரம்.
ஒரு பெரிய சிவன் கோவில் கட்ட மனதில் ஆசை அந்த துறவிக்கு. அவரிடம் இதற்கு இருந்த சொத்து ஒரு கோவணம், கப்பரை மட்டுமே. ஒரு இலுப்பை மரத்தடியில் அமர்ந்து மனதால் கோவிலுக்கு நிலம் செலக்ட் பண்ணி, ஆள்களை வைத்து கட்டி, மேற்பார்வை பார்த்து, சிற்பிகளை வரவழைத்து எல்லா மூர்த்திகளையும் வடித்து, ஆகம விதிப்படி கோயிலை அமைத்து, குளம் வெட்டி, கும்பா பிஷேகத்துக்கு நாள் பார்த்து விட்டார். பரமேஸ்வரன் நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டான்.
அதே நாளில் பல்லவ ராஜா காடவர் கோன் ராஜசிம்ம வர்மன் நிஜமாகவே ஒரு சிவாலயம் எழுப்பி கும்பாபிஷேகம் நாள் குறித்தான். ஈஸ்வரன் ராஜாவின் கனவில் வந்தான்.
'' ஸாரி, பல்லவா, நான் ஏற்கனவே திருநின்ற வூரில் பூசலார் கோவிலில் அன்று இருப்பதாக நியமனம் ஆகிவிட்டதே. நான் அங்கே இருக்க வேண்டும் நீ வேறே நாள் பார்.''
பல்லவன் திகைத்தான். என் ஆட்சியில் எனக் குத் தெரியாமல் யாரோ ஒருவர் கோயில் கட்டி அதே நாளில் கும்பாபிஷேகமா? எங்கே இருக்கிறது திருநின்றவூரில் அந்த கோவில்? அன்று அங்கே கண்டிப்பாக செல்லவேண்டும் என்று மேள தளங்களுடன் பரிவாரங்களுடன், அனைத்து பூஜா திரவியங்களுடன் திருநின்ற வூர் வந்து தேடுகிறான். எங்கேயும் கோவில் காணோமே. யாருக்குமே கோவில் பற்றி ஒரு விஷயமும் தெரியவில்லை.

''அதோ அந்த பக்கம் ஒரு இலுப்பை மரத்தடியில் ஒரு சிவ பக்த சாது உட்கார்ந்து இருப்பார். அவரை கேளுங்கள்? அவர் பெயர் பூசலார்'' என்று ஊரில் சிலர் சொல்ல அவரைத் தேடிச் சென்று காலில் விழுந்தான் ராஜா. அந்த நேரம் தான் பூர்ணாஹு தி முடிந்து கும்பாபிஷேகமும் மூலவருக்கு அபிஷேகமும் ஆகும் நேரம்.

''என் ஈசனுக்கு அபிஷேகம் நடக்கப்போகிறது. ராஜா நீ வந்திருக்கிறாய் . நல்ல சகுனம்.
பரிவட்டம் கட்டிக்கொண்டு வந்து நில். கண்குளிர தரிசனம் செய். அனைவருக்கும் அன்னதானம் நடக்கப்போகிறது. துவங்கி வை.'' என்கிறார் பூசலார்.
ராஜா ராஜசிம்மன் தலையை திருப்பி சுற்று முற்றும் பார்க்கிறான். மரங்கள், வெட்ட வெளி, சில பசுக்கள், பன்றி கூட்டங்கள் தவிர ஒரு குடிசையைக்கூட காணோமே ஒரு மனிதவர்க மும் காணோம். ஒரு ஈ காக்கா கூட இல்லை. அன்னதானமா? கோவில் எங்கே? , கும்பாபிஷேகம், பரிவட்டமா?? என்ன சொல்கிறார் இவர்?.

''சுவாமி கோவில் எங்கே இருக்கிறது?

''என் மனத்தில் , என் ஹ்ருதயத்தில்'' என்கிறார் பூசலார். மார்பை கையால் தொட்டு காட்டுகி றார். முகம் ஆனந்த பரவசமாக இருக்கிறது. கோவிலை கட்டி இறைவனை நிலை நிறுத்தி எண்ணத்தை பூர்த்தி செய்துவிட்டாரே.

அந்த இடத்திலேயே பல்லவ ராஜா ஒரு கோவி லைக் கட்டினான் அது தான் இன்றும் நாம் காணும் திருநின்றவூர் ஹ்ருதயாலீஸ் வரர். ஹ்ருதய ஆலய ஈஸ்வரர். கருவறை ஹ்ருதய வடிவத்தில் இருக்கிறது. கட்டாயம் சென்று பார்க்கவேண்டிய ஆலயம்.

அதே நாளில் கும்பாபிஷேகம் நடக்க இருந்த ராஜசிம்ம பல்லவன் கட்டிய கைலாசநாதர் கோவில் இன்றும் காஞ்சிபுரத்தில் சுற்றுலா காட்சி கோவிலாக தான் இருக்கிறது. சிலர் அங்கே சென்று தரிசித்தால் ஹிருதய நோய் வராது. வந்தால் தீர்ந்து விடும் என்கிறார்கள். சொல்லிவிட்டு போகட்டுமே. நிறைய பேர் கோவிலுக்கு வர என்ன சொன்னால் தான் என்ன? நமக்கு எல்லாவற்றிலும் ஆதாயம் பார்க்கும், தேடும் வழக்கம் இருக்கும்வரை இப்படி தான் சொல்ல வேண்டும்.

உள்ளமே கோயில் எனும் மொழிக்கேற்ப பூசலார் சிவ பக்திபுரிந்தார். இது நமக்கு பாடம். கோயிலுக்கு செல்லமுடியவில்லையே என்று வருந்த வேண்டாம். மனதிலேயே மகேஸ்வரன் ஆலயம் உள்ளது. இப்படித் தான் பூசலார் தரிசித்து வணங்கியவர்.

பூசலார் ஏழாம் நூற்றாண்டில் வறுமையான ப்ராமண குடும்பத்தில் பிறந்தவர். திருநின்ற வூரில் தினமும் லிங்கம் ஒன்றைத் தரிசித்து வந்தார். அந்த லிங்கம் மேலே கூரை இல்லா மல் மழையிலும், வெயிலிலும் நனை வதைக் கண்டு மனம் வருந்தி னார். ஊரில் சிவ பெரு மானுக்கு ஆலயம் கட்ட யாருமே முன் வராத நிலையில் எப்படியேனும் ஈசனுக்கு கோயில் கட்ட வேண்டுமென்று மனதில் உறுதி பூண்டார்
செங்கல்லாலும் கருங்கல்லாலும் கட்டினால் தான் கோயிலா? காசில்லாமல் மனதில் ஒரு கோயில் கட்டினால் என்ன? தியானத்திலேயே கோவில் வளர்ந்தது. கட்டி முடித்து கும்பாபி ஷேகம் நடந்தது.



ஹ்ருதயாலீஸ்வரர் கோயிலின் கருவறையில் லிங்கத்து அருகே பூசலாரும் காட்சி தருகிறார். இதய தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் இங்கே வந்து ஹ்ருதயாலீஸ் வரரையும், மரகதாம்பாளையும், பூசலாரையும் வேண்டிக் கொண்டால் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.

மரகதாம்பாள் நின்ற திருக்கோலத் தில், நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கி றாள். ஆலய விமானம் கஜப்ருஷ்ட வகை ( தூங்கானை மாட வடிவம்)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...