Friday, November 29, 2019

THULASIDAS





துளசி தாசர்  J K SIVAN
                                                 
            வீரர்கள்  முன்னே ராமர் பின்னே....

''அப்படியா?  கல்லில் செய்த  மாடு  எழுந்து நின்று சாப்பிட்டதா?  இறந்த மனிதன் பிழைத்தானா?  என்னால் நம்ப முடியவில் லையே?  ஊர்  அதிகாரிகளை கூப்பிடுங்கள். இது உண்மை  என்று பொறுப்புள்ள அவர்கள் சொல்லட்டும். நம்புகிறேன்.''  என்றார்  டில்லியில் சக்கரவர்த்தி அக்பர்.

கிராம அதிகாரிகள், கோவில் அதிகாரிகள், பொதுமக்களில் சிலர்  எல்லோரும்  நடந்தது அத்தனையும் சத்தியமாக உண்மை.  துளசிதாஸரின்  ராம பக்தி ஒன்றே காரணம் என்று அடித்து (அக்பரை அல்ல, தங்கள் தலையில்) சொல்லிவிட்டார்கள்.  அக்பருக்கு துளசிதாசரை உடனே வரவழைக்கவேண்டும் நேரில் அவரை பார்த்து ஏதாவது அதிசயம் பெறவேண்டும் என்று தோன்றிவிட்டது. அகபர் ஏகசக்ராதிபதி. சர்வாதிகாரி.  அவர்  வார்த்தையை எவர் மீற முடியும்?   
                                                                                                    
 மந்திரிகளை கூப்பிட்டார்.  ''நீங்கள் அந்த வைஷ்ணவர்  துளசிதாசை இங்கே வரவழையுங்கள். நீங்கள் அனுப்புகிற ஆள்  ப்ரம்ம ஞானம் தெரிந்தவனாக இருக்கவேண்டும். சாமர்த்தியமாக பேசவேண்டும்.  அவன் பேச்சை கேட்டு துளசிதாஸ் உடனே என்னிடம் வரவேண்டும். சௌகர்யமாக ஒரு பல்லக்கு கொண்டு போகவேண்டும். சீக்கிரம் அவர் இங்கே வரவேண்டும்.அவர் வாய் மூலமாக நடந்ததை நான் கேட்கவேண்டும். ஜல்தி ''. ஆணையிட்டா்் அக்பர். 

ஒரு சிறு படைவீரர்கள் கூட்டம்  பல்லக்குடன் சென்றது. சில வித்துவான்கள், பண்டிதர்கள்  கூடவே   சென்றார்கள்.  காசியை அடைந்தார்கள்
துளசிதாசர் ஆஸ்ரமத்தில்  பண்டிதர்கள் அன்றிரவு தங்கினார்கள்.  சக்ரவர்த்தியின்  அழைப்பு தெரிவிக்கப்பட்டது. ''உங்களை பற்றி கேள்விப்பட்ட பிறகு சக்ரவர்த்தி உங்களைப் போன்ற உயர்ந்த பக்த சிகாமணியை நேரில் பார்த்து வணங்க ஆவல் கொண்டுள்ளார். நீங்கள் உடனே புறப்படுங்கள்.  எல்லா சௌகர்யங்களும்  ஏற்பாடு செய்திருக்கிறார். 

''  ராமா, உன்  நாமம் அதன் மஹிமை  நாடு முழுதும் பரவவேண்டும்.  சுயநலமில்லாத வைஷ்ணவர்கள்,  நாடு முழுதும் பிரயாணம் செய்து இதை பரப்பவேண்டும் .  ஹரியின் கட்டளை இது. அறியாமை ஒன்றே மக்களை சூழ்ந்து இருக்கிறது.  கொடியவர்கள், தீயவர்கள் , அறியாமை இவற்றிலிருந்து  மக்களைக்  காப்பாற்ற , நல்வழிப்படுத்த,   அரசனே முன் வந்தால்  அது ராமன் அருள். அதற்கு நான் உதவவேண்டாமா. இதோ உடனே புறப்படுகிறேன் உங்களோடு '' என்கிறார்  துளசிதாசர்.

வழியெல்லாம் ஹரிநாம பஜனையோடு செல்கிறார். டில்லி வந்து சேர்ந்தார். அக்பர் அவர் பல்லக்கு  அரண்மனையை நெருங்கியதும் தானே வாசல் வரை வந்து, வணங்கி உபசரித்து.  தன்னுடைய  சிம்மாசனத்தில் அவரை அமர்த்தினார் .  அவரது ஆட்களுக்கு கட்டளையிட்டார்   

''இவரை இனி  எந்த காரணத்தை கொண்டு  இங்கிருந்து திரும்பி போக, அரண்மனையிலிருந்து வெளியே போக  அனுமதிக்கக்கூடாது. இது என் கட்டளை. மீறினால் கடும் தண்டனை''  என்று உத்தரவு பிறந்தது.

அக்பர்  துளசிதாசருக்கு ஷோடசோபசாரம் செய்விக்க  ஏற்பாடு செய்திருந்தார்.  பிறகு துளசிதாசரிடம்  '' சுவாமி உங்கள் சக்தி பற்றி கேள்விப்பட்டேன். நீங்கள் கடவுளாக மாறி விட்டீர்கள். ஒரு கல்லில் செதுக்கிய மாட்டின் உருவத்தை நிஜ மாடாக்கி  நிற்க வைத்து மூச்சு விடவைத்து, அது புல்லையும் கீரைகளையும்  கடித்து சாப்பிடவைத்தீர்களாம்.  உங்கள் ஆசிர்வாதத்தால் இறந்து போன ஒரு பிணம் மீண்டும் உயிர் பெற்றதாம்.  இதெல்லாம் உலகில் நடக்காத, நடக்க முடியாத காரியங்கள்.  உங்கள் சக்தியை நானும் அறிந்து கொள்ளவேண்டும். எனக்கும்  கற்பிக்க வேண்டும் '

''மஹாராஜா, நீங்கள் சொன்னதெல்லாம் என் தெய்வம் ஸ்ரீ ராமன் கருணை. நான் ஒரு சாதாரண எதற்கும் உதவாத ஒரு ஏழை பக்தன். எனக்கு என்று ஒரு சக்தியும் கிடையாது.  என் இதயம் பூரா ஸ்ரீ ராமனையே வைத்து வழிபடுபவன்.  என்னிடமிருந்து எதிர்பார்ப்பது தவறு '' என்றார்  துளசிதாசர்.

''சரி ஐயா. உங்கள் சக்தியை மறைத்து வைத்துக் கொண்டு   ஏதோ ராமன் என்ற பெயரை சொல்கிறீர்கள்.  அப்படியானால் சக்தியுள்ள அந்த  ராமனை எனக்கு காட்டுங்கள்.   அந்த சக்தியுள்ள  ராமனை எனக்கு நீங்கள் காட்டும் வரை இங்கிருந்து நீங்கள் திரும்ப முடியாது.''

அக்பர் அரண்மனைக்குள் சென்று விட்டார் .மந்திரிகளிடம்  துளசிதாசர் ராமனை எனக்கு காட்டினால் தான் அவர் ஒரு சிறந்த  வைஷ்ணவ பக்தர்  என ஒப்புக் கொள்வேன். அதுவரை அவர் இங்கிருந்து நகரக்கூடாது.

துளசிதாசரிடம்  மந்திரி ப்ரதானிகள் ''ஐயா  உங்களை இங்கிருந்து எங்கும் செல்ல  ராஜா அனுமதிக்கவில்லை. சீக்கிரம்  ராமனை அழைத்து அக்பர் சக்ரவர்த்தியிடம் காட்டி விடுங்கள். நீங்கள் காசிக்கு திரும்பி போகலாம்''
துளசி தாசர் இதைக் கேட்டு அதிர்ச்சியோ கோபமோ, பயமோ கொள்ளவில்லை.  கண்களை மூடி மனதில் ஆஞ்சநேயனை வேண்டினார். எதிரில் மனதில் தோன்றினான் ஹனுமான்.

''துளசிதாசா  எதற்கு என்னை அழைத்தாய்.?''

''எனக்கு எதை எப்படி செய்வது என்றே  புரியவில்லை. என் சித்தத்தை தெளிவித்து என்னை  வழிநடத்த உங்களை கூப்பிட்டேன்''

'ம்ம்ம்..   விஷயத்தை சொல்லுங்கள்?'

''என்னால்  ராமனுக்கு எத்தனை இடையூறுகள் பாருங்கள் என்று  துளசி தாசர் அக்பர் கட்டளையை பற்றி கூறினார். ராமனை எப்படி அவருக்கு நான் காட்டுவது?''

''அவ்வளவு தானே . என்னிடம் பிரச்னையை தள்ளி விட்டு பேசாமல் இருங்கள்.'' என்கிறார் ஹனுமான். தனது  வானர சைன்யத்தை கூப்பிட்டார். 

மழை தூற்றல் நின்றதும்  ஈசல்கள் புறப்படும் அதுபோல்  வானம் முழுவதையும் அடைத்துக் கொண்டு  வானர சேனை வந்து இறங்கிக் கொண்டே இருந்தது.  மழை பெய்து முடிந்ததும் புல்  காளான் எல்லாம்  திடீரென்று முளைக் குமே  அதுபோல் எங்குநோக்கினும் டில்லி முழுதும் வானர வீரர்கள்.  ஆயிரம்  பதினா யிரம்  வானரங்கள்.  எல்லோரும்  ஹனுமனை வணங்கினார்கள். 

அந்த வானரர்களின் வீரன் அனுமனிடம் ''எங்களுக்கு கட்ட ளை இடுங்கள், காத்திருக்கிறோம் என்றான்.

''நீங்கள் சுதந்திரமாக என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று தோன்றுகிறதோ அதை யெல்லாம் திருப்தியாக செய்து மகிழுங்கள். டில்லி ராஜா நீங்கள் எப்படிப் பட்டவர்கள் என்று புரிந்து கொள்ளட்டும்''  என்றார்  ஹனுமான்.  

அப்பறம் நடந்ததை நான் எப்படி எழுதுவேன்? 
அடேயப்பா,  எங்கு நோக்கினும்  கட்டிடங்கள், மாளிகைகள் அரண்மனைகள் எங்கும் வானரங்கள் எல்லாவற்றையும் இழுத்து, இடித்து, கிழித்து, பிளந்து உடைத்து,  மரங்களையெல்லாம் வேரோடு பிடுங்கி கவிழ்த்து, எங்கும்  வீசின. எதிர்ப்பட்டோரின் மூக்கு முகம், தலை காது கை கால் என்று காயப்படுத்தின. பெண்கள்  ஆடைகளை  உருவின. நகைகளை பிடுங்கி வீசின.  எல்லோரையும் தூக்கி வீசின.  வீட்டுக்குள் புகுந்து  பாத்திரங்களை கவிழ்த்து, உடைகளை பற்றவைத்து, பொருள்களை  தெருவில் கொட்டி சேதப்படுத்தின.  ஒருவர் வீடு பாக்கி இல்லை. அரண்மனையிலும் சேர்த்து தான். நிறைய  தாடி மீசைகளை பிடித்து இழுத்து துன்பப்படுத்தின. சொல்ல முடியாத துன்பங்களை கண  நேரத்தில் நிகழ்த்தின.  டில்லி மாநகரம் முழுதும்  களேபரம். அதிர்ச்சி. நடுக்கம்.  கடைகள் சூறையாடப் பட்டன. பால் தயிர் என்று வீட்டுப் பொருள்கள் எல்லாம் தெருவில் கொட்டி கிடந்தன.  எல்லோரும் ஆரண்மனையில் ராஜாவை தேடி வந்து முறையிட்டார்கள்.  ராஜா  அக்பர் யாரிடம் போய் முறையிடுவார்  அவரது  500 மனைவிகளும் அடி உதை பட்டு சித்ரவதைக் குட்பட்டனர்.தண்ணீர் குடங்களை அவர்கள் மேல் சாய்த்து நனைத்தார்கள் வானரர்கள்.
 அக்பர் தறிகெட்டு வெளியே வந்தார்.

'' ராஜா என்ன அக்கிரமம் இது. ஊரெங்கும்  வானரங்கள் அட்டகாசம் பண்ணி பெருத்த நஷ்டம்  பொருட்சேதம், உயிர்ச்தேதம், காயங்கள். ஒருவர் பாக்கி இல்லை.   எங்கும் குரங்குகளாகவே காணப்படுகிறதே   என்ன நடந்தது?  எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்''  என்று கத்தினார்கள்.

சில நல்ல மந்திரிகள் பெரியோர்கள் அக்பரை நெருங்கி ''நம் எல்லோருக்கும்  இது போன்ற துன்பம் வரக்  காரணம் நீங்கள் துளசிதாசர் என்ற ராம பக்தரை கஷ்டப்படுத்தியது தான். உடனே அவரை அணுகி மன்னிப்பு கேட்டு விடுதலை செய்யுங்கள்.  டில்லி தலைகீழாக போய்விடும் போல் இருக்கிறது.  நிலைமை இன்னும் மோசமாவதை தவிர்க்கவேண்டும்.'' என்றார்கள். அக்பர் துளசிதாசரிடம் ஓடினார்.   தான்செய்தது தவறு என உணர்ந்து  இரு கரம் கூப்பி . விஷ்ணு பக்தரே ''இந்த வானரங்களை கொஞ்சம்  தடுத்து  நிறுத்தி  சேதத்தை  குறைக்க வேண்டும்.  என் அறியாமையினால் நான் உங்களை கொடுமைப்  படுத்தினேன்'' என்று கெஞ்சினார்  

துளசிதாசருக்கு  நடந்தது எதுவும் தெரியாது. அவர்  ஹனுமனை வேண்டி எப்படியாவது முடியுமானால் ராமரை அக்பருக்கு காட்டவேண்டும் என்று தான் கேட்டார்.
''அடாடா,   அக்பர் சக்ரவர்த்தி, வானரங்கள் வந்துவிட்டார்களா..  ஓ அப்படியானால் ஸ்ரீ ராமன் வருகிறார் என்று அர்த்தம்.  ஒரு சிறு படை மட்டும் தான் வந்திருக்கிறது. இனி தான் வானர வீரர்கள், தலைவர்கள் எல்லாம் வருவார்கள்.  பொழுது விடிவதற்குள் வரலாம். இப்போது வந்தது ஒரு சிறு கூட்டம். லக்ஷோபலக்ஷம்  வானர தளபதிகள், சேனாபதிகள் வந்தபிறகு ராமன் வருவார். காத்திருங்கள்.


'' ஐயோ இன்னும்  லக்ஷக்கணக்கில்  வானர வீரர்களா. வேண்டவே  வேண்டாம்.இதுவரை ராமர் பராக்கிரமத்தை, சக்தியை நான் உணர்ந்ததே போதும் குருநாதா. தயவு செயது என் தவறை மன்னித்து இந்த வானரங்களை முதலில் விலகச் செய்யுங்கள். பத்தாயிரம் குரங்குகளை எங்களால் சமாளிக்க முடியாதபோது லக்ஷமா..... ஐயோ நினைக்கவே  பயமாக இருக்கிறதே. அப்புறம் ராமர் லக்ஷ்மணர்களா..... '' என்னை மன்னித்து விடுங்கள். உடனே உங்களை மரியாதையோடு காசிக்கு அனுப்பி  வைக்கிறேன் என்று பல்லக்கை தயார்  செய்தார் அக்பர். பல்லக்கு கிளம்பியது.  வானரங்கள் மாயமாக மறைந்தன. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...