Thursday, November 7, 2019

THIRUKOLOOR PEN PILLAI



திருக்கோளூர் பெண்பிள்ளை ரஹஸ்யம்
J K SIVAN

5. பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே

ஆழ்கடலில் அரவத்தின் மேல் ஆனந்தமாக நீ நித்திரை செய்கிறாயே, உனக்கு அழகான மலை மீது ஒரு ''ஆனந்த நிலையம்'' கட்டுகிறேன் என்று திருப்பதி திருமலையில் ஆலயம் அமைத்தவன் ராஜா தொண்டைமான். '' இந்தா இதை கொஞ்சம் வைத்துக் கொள் '' என்று ஸ்ரீனிவாசப்பெருமாள் தொண்டைமானிடம் சங்கு சக்ரத்தை கொடுக்கும் அளவிற்கு நாராயணனின் அன்பை பெற்றவன் அந்த தொண்டைமான்.

தொண்டைமான் தொண்டைமண்டல ராஜா என அவன் பேரே சொல்கிறதே. அந்த ராஜ்யத்தில் கூர்மன் என்ற பிராமணன் காசிக்கு போய் தனது தாய் தந்தை முன்னோர்க்கு பித்ரு கடன் செய்ய ஆசைப்பட்டு அது நிறைவேறாமல் போனதற்கு காரணம் காசிக்கு போவதற்கு முன்பே அவன் மரணம் எய்தி அவரும் ஒரு பித்ருவாகி விட்டார்.

கூர்மனின் பிள்ளை கிருஷ்ண சர்மா, அப்பாவின் ஆசையை தான் நிறைவேற்றி வைக்க அப்பா கூர்மசர்மாவின் அஸ்தியை எடுத்துக்கொண்டு காசிக்கு போனான்.

போவதற்கு முன் தொண்டைமானிடம் ''ராஜா, என் அப்பாவின் ஆசை நிறைவேற்ற நான் காசிக்கு போகிறேன். ரொம்ப காலம் ஆகும் திரும்பி நடந்து வர, அதுவரை என் குடும்பம் உங்கள் பாதுகாப்பில் இருக்கட்டும்'' என்று சொல்லி ஒப்படைத்துவிட்டு நடந்தான். ராஜா ஆட்களை விட்டு அந்த குடும்பத்தை பாத்துக்க கட்டளையிட்டார்.

மாதங்கள் ஓடிவிட்டன. ராஜ்ய பரிபாலன அலுவலில் தொண்டைமானுக்கு கிருஷ்ண சர்மா குடும்பம் பற்றிய நினைப்பு வரவில்லை. ராஜாவின் காவலர்களும் கிருஷ்ண சர்மா குடும்பத்தை பராமரிக்க அக்கறை காட்டாமல் யாரும் உதவி செய்யாததால் காசிக்கு சென்ற கிருஷ்ண சர்மா குடும்பமே பசியால் வாடி இறந்து போனார்கள்.

கொஞ்சம் காலம் கழித்து கிருஷ்ண சர்மா காசியிலிருந்து திரும்பி வந்தான். வீடே குடும்பமே காணோமே என நேராக தொண்டைமானிடம் வந்தான். ஒருவேளை ராஜாவின் சொந்த பாதுகாப்பில் அவர் இருக்கிறார்களோ ?''

அவனைப் பார்த்த போது தான் ராஜாவுக்கு ''அடாடா, நாம் இவன் குடும்பத்தை பாதுகாக்க நான் வாக்கு கொடுத்ததால் தானே இவன் காசிக்கு போனான்'' என்ற ஞாபகமே வந்து ஆளை அனுப்பி விசாரிக்க அவர்கள் மரணமடைந்தது தெரிகிறது. எதிரே கிருஷ்ண சர்மா நிற்கிறானே என்ன பதில் சொல்வது?

''என் குடும்பத்தார் எங்கே ராஜா?''

''மஹாபாவி என் கடமையில் தவறிவிட்டேனே'' என்று உள்ளே வருந்தினாலும் ராஜா கிருஷ்ண சர்மாவிடம் "கிருஷ்ணா, உன் மனைவி பிள்ளை எல்லோரும் திருபதிக்கு ஸ்ரீனிவாச பெருமாளை தரிசிக்க சென்றிருக்கிறார்கள். சீக்கிரம் திரும்பிவிடுவார்கள் '' என்று சொல்லி விட்டான்.

''ரொம்ப சந்தோஷம் ராஜா, நானும் அங்கே போய் அவர்களை சந்திக்கிறேன் '' என்று சொல்லி கிருஷ்ண சர்மா திருப்பதிக்கு நடந்தான்.
அடிக்கடி ஸ்ரீனிவாசனை தரிசிக்க தொண்டமான் அரண்மனைக்கும் திருப்பதிக்கும் ஒரு தனி சுரங்க பாதை உண்டு. ராஜா தான் ஸ்ரீனிவாச பெருமாள் பக்தனாச்சே. ராஜா வெங்கடேசனை நோக்கி ஓடினான். "திருப்பதி மலை வாழும் வெங்கடேசா, ரொம்ப பெரிய அக்கிரமம் பண்ணிவிட்டேன். காப்பாற்றுகிறேன் என வாக்களித்த (ஒட்டு போட்ட என்ற அர்த்தம் வேண்டாம்) குடும்பத்தை மறந்து போனதுமில்லாமல், இறந்து போன அவர்கள் உன்னை தரிசிக்க வந்திருப்பதாக பச்சை மட்டும் அல்ல மற்ற எல்லா கலர் பொய்களும் சேர்த்து சொல்லிவிட்டேன். பாவம் அந்த கிருஷ்ண சர்மா என் வார்த்தையை நம்பி உன்னைப் பார்க்க, அவன் குடும்பததை சந்திக்க வந்துகொண்டிருக்கிறானே. நீ தான் காப்பாற்றவேண்டும். அவன் வருவதற்குள் என் உயிரையும் எடுத்துக் கொள் திருமலை அப்பனே'' என கதறினான்.
"அடே , தொண்டைமானே , ஏன் கவலைப்படுகிறாய். இந்தா போய் அந்த கிருஷ்ண சர்மா வீட்டில் என் சந்நிதி துளசி தீர்த்தத்தை அவர்களை நினைத்துக் கொண்டு தெளி. இறந்த அவர்கள் உயிர் பெற்று அங்கே இருப்பார்கள் " என்றான் ஸ்ரீனிவாசன்
திருப்பதியில் குடும்பத்தேடி வந்த கிருஷ்ண சர்மாவுக்கு நாம் எங்கோ தப்பாக சரியாமல் விசாரிக்காமல் வந்துவிட்டோம் என்று தோன்றி பாதி வழியிலேயே மீண்டும் வீடு நோக்கி வந்தான். அவன் இருந்த வீடு இதோ இருக்கிறதே. எப்படி கண்ணில் படாமல் போனது? வீட்டில் நுழைந்த அவன் மனைவி குழந்தைகளை கண்டான். மகிழ்ந்தான்.

இதை நேரில் பார்த்த தொண்டமான் ''ஸ்ரீநிவாஸா எனக்கு வார்த்தை இல்லையடா உனக்கு நன்றி சொல்ல''என்று கிருஷ்ண சர்மா காலில் விழுந்து அவர்களுக்கு நிறைய செல்வம் வழங்கினான் சந்தோஷமாக எல்லோரும் வாழ்ந்தார்கள்.

''ராமானுஜ குரு தேவா, இப்போது நீங்களே சொல்லுங்கள், நான் சொன்னேனே இந்த கிருஷ்ண சர்மாவின் இறந்து போன குடும்பம் தொண்டைமானின் வேண்டுதலால் மீண்டதே, அப்படி நான் எப்போதாவது ஒரு கணமாவது பெருமாளிடம் நான் தொண்டைமான் போல் சரணடைந் தேனா . தொண்டைமான் பக்தி எனக்கு உண்டா? அவரைப்போல எனக்கு ஸ்ரீநிவாசன் அருள் என்றாவது கிட்டியதா? எந்த விதத்தில் நான் இந்த புண்யபூமி திருக்கோளூரில் வசிக்க அருகதை உள்ளவள் சொல்லுங்கள்? என்று இன்னொரு உதாரணத்தை சொல்லிய திருக்கோளூர் பெண் முன் கைகட்டி ராமானுஜர் கண்மூடியவாறு ''ஸ்ரீநிவாஸா என்னே உன் கருணை '' எனும்போது அவர் கண்களில் கங்கையாறு.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...