Thursday, November 21, 2019

THULASIDAS



துளசி தாசர் J K SIVAN

ஸ்ரீ ராம தரிசனம்

ஹநுமானுக்கு வாக்களித்தபடி ஸ்ரீ ராமர் துளசிதாசருக்கு தரிசனம் தருவதற்கு ஆயத்தமானார். வானரங் களை அழைத்தார். ஒரு சைன்யம் மீண்டும் அவர் எதிரில் நின்றது. எல்லோரும் துளசிதாசர் ஆஸ்ரமத்தின் முன் நடந்தார்கள். துளசிதாசருக்கு ராமரை அடையாளம் தெரியவில்லை. வாசலில் ஏதோ சப்தம் கேட்கிறது. அது இஸ்லாமியர்கள் ஆட்சி நடந்த காலம். எந்த நேரமும் முகலாய படைகள் நடமாட்டம் தெருவில் இருக்கும். அப்போது வெளியே போகாமல் வீட்டுக்குள் இருப்பது நல்லது என்ற அபிப்ராயம்.
ராமரை யாரோ ஒரு நவாப் என்றும் வானரர்களை அவனது வீரர்கள் என்றும் துளசிதாசர் நினைத்துவிட்டார். எல்லோரும் செய்வது போல் அவர்களுக்கு கைகூப்பி வணங்கினார்.
எல்லோரும் போனபிறகு சற்று நேரத்தில் ஹனுமார் துளசிதாசரிடம் வயோதிகராக மீண்டும் வந்தார்.
''துளசிதாசரே , உங்கள் எண்ணம் பூர்த்தியாயிற்றா?''
''என்ன சொல்கிறீர்கள்?''
''ராமர் தரிசனம் ஆயிற்றா'' என்று கேட்டேன்.
''இல்லையே சுவாமி, ராமரை தரிசிக்கவில்லையே.
''இப்போது தானே உங்கள் ஆஸ்ரம வாசல் வழியாக சென்றார்''
''இல்லையே, ஸ்வாமி, யாரோ ஒரு முகமதியர் அல்லவோ வீரர்களுடன் இப்போது என்னை கடந்து சென்றார்''
நான் இன்னும் ராமனை தரிசிக்கவில்லையே.''
''காமதேனு உங்கள் வீட்டு வாசலில் வந்தும் அதை ஆடு என்று நினைத்து விரட்டி விட்டீர்களே.அடாடா, துளசிதாஸ், வைரம் எதிரில் கிடைத்தும் கண்ணாடிச் சில் என்று தூர அதை வீசி விட்டீர்களே.'''
''ஐயா, என்ன அபவாதம் இது. என் ஸ்ரீ ராமன் சர்வ வியாபி. எங்கும் இருப்பவன். கண்ணில் படாதவன். நான் எப்படி அவனை வேறு உருவத்தில் காண முடியும்? கையில் கோதண்டத்துடன், ஸ்ரீ ஜானகி லக்ஷ்மண சமேதனாக உறையும் என் ராமனை காண தான் நான் காத்திருக்கிறேன். வேறு எந்த உருவத்திலும் அல்ல''
ஹனுமான் புன்னகைத்துவிட்டு, ''சரி உங்கள் ராமன் நீங்கள் விரும்பிய உருவத்தில் தரிசனம் அளிப்பார். காத்திருங்கள்''
ஹனுமான் மறைந்தார். ராமனை நெஞ்சில் நிறுத்தி வேண்டினார்.
''ஆஞ்சநேயா என்னப்பா ? எதற்கு என்னை அழைத்தாய்?''
''பிரபு, நீங்கள் தரிசனம் அளித்ததை துளசிதாசர் அறியவில்லை. மீண்டும் நீங்கள் கோதண்டபாணியாக தரிசனம் தரவேண்டும். காத்திருக்கிறார்.''
''கலியுகத்தில் எப்படியப்பா என்னை த்ரேதா யுகா வடிவில் காணமுடியும்?''
''துளசிதாசர் வால்மீகியின் அவதாரம். பக்தர்கள் உங்களை அந்த உருவத்தில் வழிபட வேண்டும் என்று தானே துடிக்கிறார்கள். உங்களுக்கே பக்தவத்சலன் என்று தானே பெயர். அவர்கள் விருப்பம் நிறைவேற்றி அருளவேண்டும். '' என்கிறார் மாருதி.
''சரியப்பா ஆஞ்சநேயா. நான் துளசிதாசரை சென்று பார்க்கிறேன்''
ராமர் சீதை லக்ஷ்மணன் ஆகியோர் ஹனுமாரோடு செல்கிறார்கள். ஹனுமார் முன்னாடியே சென்று துளசிதாசருக்கு ராமர் வருவதை அறிவிக்கிறார். ''துளசிதாசரே, கவனமாக இரும். இன்று ராமர் உங்களை காண இங்கே வரப்போகிறார். தரிசனம் கண்குளிர செய்யுங்கள்''
''ஆஹா, நான் பாக்கியசாலி. அயோத்யா ராமன் இங்கே என்னைக் காண வருகிறான் என
கேட்கும்போதே செவியெல்லாம் மனமெல்லாம் இனிக்கிறதே''
சற்று நேரத்தில் ராமன் வந்தான். தகதகவென ஜொலிக்கும் தங்க வைர மகுடம், பீதாம்பர வஸ்திரம், கருமேகம் போன்ற அழகிய கருமேனி. கரத்தில் கோதண்டம் அஸ்திரம். ஆஜானுபாகுவாக எதிரே ராமனைக் கண்டா துளசிதாசர் தனது கண்களை நம்பவில்லை. அப்படியே நெடுஞ்சாண்கடையாக கீழே தொப்பென்று விழுந்தார். ராமர் அவரை வாரி எழுப்பி அணைத்தார்.
''துளசிதாசரே , என்ன அதிருஷ்டம் உங்களுக்கு. ஊனக்கண்களாலேயே பகவான் ஸ்ரீ ராமரை தரிசித்துவிட்டீரே. இனி உங்கள் கடமை இந்த அற்புத ராம தரிசனத்தை எல்லோருக்கும் எடுத்துச் சொல்வது தான். அவர்களால் காண முடியாவிட்டாலும் உங்களுடைய சொல்வன்மையால் நேரில் கண்ட பலனைப் பெறட்டும். ஏற்கனவே வால்மீகியாக நீங்கள் சொன்னவர் தானே. கலியுகத்தில், யாக யஞம், யோகம், வேத சாஸ்திர ஞானமோ பயன் தராது. ராம நாமத்தை ஜெபிப்பது மட்டுமே சுலபமாக நடப்பது. அது ஒன்றே பகவானை உபாஸிக்க எளிதானது'' என்கிறார் ஹனுமான்.
ஸ்ரீ ராமர் துளசிதாசர் சிரத்தில் தனது கரங்களை வைத்து ஆசீர்வதிக்கிறார்... ராமர் மறைகிறார். துளசிதாசரின் எழுத்தாணி நமக்கு துளசிதாஸரின் ராமாயணத்தை, ராம சரித மாநஸ் நூலை அளிக்கிறது.
எண்ணற்ற இல்லங்களில் துளசிதாசர் ராமாயணம் பாராயண ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது...

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...