Wednesday, November 6, 2019

SHEERDI BABA



மனிதருக்குள் ஒரு தெய்வம்          J K SIVAN                                                                                                                               ஷீர்டி பாபா  -    
                                                                                    இங்கேயே  எல்லா தெய்வங்களும்....

ஷீர்டி  சாய் பாபாவின்  தரிசனம் கிடைப்பதே  யோக சாதனை. எல்லோருக்கும் அது அமைவதில்லை.  அதற்கென்று நேரம் வந்தால் தான்  அந்த பாக்யம் பெறமுடியும்.
நூறு தடவை மைலாப்பூரில் சாய்பாபா  கோவிலை  கடந்து சென்ற கோபால் ராவ்  ஒருநாள் கூட  உள்ளே சென்று, காலியாக இருக்கும்போது கூட,  சாய் தரிசனம் செய்யவேண்டும் என்ற   எண்ணம் தோன்றாமல் இருந்தவர். 
''என்னவோ ஒரு நாள்  உங்களோடு சாய் சத்சரித்திரம் பற்றி பேசிக்கொண்டிருவிட்டு  நீங்கள் கொடுத்த  அந்த சிவப்பு  அட்டை  புத்தகத்தை எதேச்சையாக,   ராத்திரி சாப்பிட்டுவிட்டு படுக்கையில் படுத்தவாறே படித்தவன்  அதை முடித்து விட்டு,  தூங்கலாம் என்று கடிகாரத்தை பார்த்தேன்.  விடிகாலை  மணி 4.30.  அவ்வளவு நேரமாகவா விடாமல் படித்தேன்?. என்னை அப்படி ஒரே ராத்திரியில்  சுவீகரித்துக் கொண்டுவிட்டாரா  சாய் மஹான்.?  மறுநாள் காலையில்  ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு மைலாப்பூர் ஓடினேன். அன்று வியாழக்கிழமை காலையிலேயே  7.30 மணிக்கு சென்றாலும் நிறைய பேர் இருந்தார்கள். கண்குளிர  அவரை தரிசித்தேன்.  இப்போது சாய் ஸ்மரணை யில் இருக்கிறேன்''    என்று அவர் சொல்லும்போது எனக்கு அவர் காலில் விழுந்து வணங்கவேண்டும் என்று தோன்றியது.
 பக்தி மனதில் ஊறுவதற்கு   வயது, ஜாதி, மதம்,  நேரம்,  காலம், வேளை,  எல்லாம் கிடையாது. எப்போது தோன்றும் என்று மனதுக்கு தான் தெரியும். உள்ளே  இருந்து ஆட்டிவைக்கும் ஆத்மா அறியும்.
பாபாவை பற்றி பேசுவதோ கேட்பதோ கூட  பாபங்களை கழுவி அகற்றிவிடும். பாபாவின்  கால்களை திரிவேணி பிரயாகையில் அலம்பி அந்த பாதோதகம்  பாத  உதகம் (கால் அலம்பிய நீர் ) தீய  எண்ணங்களை  மனதிலிருந்து அப்புறப்படுத்தும் மருந்து. அவர் வார்த்தைகள் உபநிஷத்.  சாம்பல்  (உதி) உள்ளும் புறமும் பரிசுத்தமாக்கும்.  பரிபூர்ண ஞானி.ஷீர்டி  ஒரு க்ஷேத்திரமாக காரணமானவர். அவர் அதை விட்டு  நகராவிட்டாலும் உலகெங்கும் அவர் புகழ் பெருமை பரவி எண்ணற்றோர்  பல  திசைகளிலிருந்து ஷீர்டிக்கு இன்றும் மன அமைதி  பெற  வருகிறார்களே. 
பண்டரிபுரத்தில்  விட்டலனை, ருக்மா பாயை  தரிசித்து பெரும்  ஆனந்தம் இன்பம் ஷீர்டியிலும் கிடைக்கிறதே.  இது  மேலுக்கு சொன்ன வார்த்தை இல்லை.  கௌலிபுவா என்பவர்  வார்த்தை  இதை நிரூபிக்கிறது.
ஒரு விட்டல பக்தர், 95 வயதுக்காரர். பாண்டுரங்க பக்தர். வருஷாவருஷம்  பல மாதங்கள் பண்டரி புரத்திலும்  மூன்று நாலு மாத காலம்  கங்கைக்கரையிலும்  கழித்தவர் பெயர்  கௌலிபுவா.  அவரிடம் ஒரு கழுதை இருந்தது. அது தான் விசுவாசமாக அவரது மூட்டைகளை சுமந்துகொண்டு  எங்கும் அவரோடு  நடந்து செல்லும்.   கழுதையோடு ஒரு சிஷ்ய பிள்ளையும் கூடவே  நிழலாக சென்றான். கௌலிபுவா  பண்டரிபுரம் போகும்போதெல்லாம்  ஷீர்டிக்கு வந்து பாபாவை தரிசிப்பது வழக்கம்.அந்த முதியவருக்கு பாபாவை ரொம்ப பிடிக்கும்.

''பாபா, வேறு யாருமில்லை,  பண்டரிபுர  விட்டலன், பண்டரிநாதன் தான் '' என்று அடிக்கடி சொல்வார்.   கௌலிபுவா  வரும்போதெல்லாம்  வாய் நிறைய ''அல்லா மாலிக் '' என்று அடிக்கடி சொல்வார்.  ''கடவுள் தான் எஜமான்''. அப்படியென்றால் நாம் எல்லோரும் அவனுக்கு அடிமைகள் தானே.   ஏழுநாள் தொடர்ந்து பாடுவார்.   இதை   நாம சப்தாஹம் என்பார்கள்.

ஒரு தடவை  பாபா தாஸ்கணுவை  ஒரு நாம சப்தாஹம் ஏற்பாடு பண்ணுங்கள்  என்கிறார்.  ''அவசியம் பண்ணுகிறேன்''  ஆனால்  ''சப்தாஹம் முடியும் நாள்  விட்டலன் தோன்றவேண்டும்'' என்கிறார் தாஸ்கணு.  சிரித்துக் கொண்டே  பாபா  தனது கரத்தை அவர் சிரத்தில் வைத்து  விடோபா வருவார் உனக்கு தென்படுவார். எப்போது என்றால் பக்தி பூரணமாக  ஸ்ரத்தையோடு இருந்தால்''  என்கிறார்  பாபா.  ஒன்று தெரிந்துகொள்.  தங்காபுரி  தாகூரோ,  பண்டரிபுரம் விட்டலனோ,  துவாரகாபுரி கிருஷ்ணனோ,  இங்கே  ஷீர்டியில் தான் இருக்கிறார்கள். எதற்கு வெளியில் எங்கிருந்தோ வரவேண்டும்?'' என்று வேறு சொன்னார்  பாபா.

ஏழுநாள்  விட்டலன் நாம சப்தாஹம்  ஷீர்டியில் இனிது முடிந்தது.    காகா சாஹேப் தீக்ஷித்  அன்று குளித்து வழக்கம்போல் த்யானத்தில் இருந்தார். அவர் கண் முன்னால்  விட்டலன்  தோன்றினான். மத்தியானம்  வழக்கம்போல் ஷீர்டி மசூதிக்கு சென்று  பாபாவை  தரிசிக்க சென்றார். 

பாபா  அவரைப் பார்த்தவுடனே,  ''விட்டால் வந்தானா  பார்த்தாயா?'  அவன் ரொம்ப  விஷமக்காரன். அவனை கெட்டியாக பிடித்துக் கொள்''  என்கிறார்.   இது காலையில்.  மத்தியானம்  இன்னொரு விட்டலன் தரிசனம்.

யாரோ ஒரு  தெருவில் கூவி விற்கும் வியாபாரி சுவாமி படங்கள் விற்பவன் ஷீர்டி க்கு வந்தான்.  அவனிடம் 25-30  பண்டரிபுர விட்டலன் படங்கள்.  காக்கா சாஹேப் தீக்ஷித் வீட்டு வாசலில்   ''விடோபா ஸ்வாமி படம்'' என்று கூவுகிறான் அந்த வியாபாரி.  தீக்ஷித் அந்த ஆளை கூப்பிட்டு  படங்களை பார்க்கிறார்.  பாண்டுரங்கன் அவர் காலையில்  தியானம் பண்ணும் போது  தரிசித்தது போலவே அச்சாக இருக்கிறான்.  காக்கா சாஹேப்   தீக்ஷித்துக்கு  ஆச்சர்யம், அதிசயம் தாங்கவில்லை.  ஆனந்தமாக  இருந்தது.  பாபா  சொன்னது இப்போது ஞாபகத்துக்கு வந்தது

 ''விட்டலன்உன்னைத் தேடி வருவான் என்றாரே, இன்று ரெண்டு தடவை வந்துவிட்டானே ''.  விட்டலன் படம் ஒன்றை வாங்கி தனது பூஜை அறையில் மாட்டினார் . 
இன்னொரு பாபா பக்தர்  பகவந்த்  ராவ் க்ஷீரஸாகர் விட்டலன்  வழிபாடு பாபாவுக்கு எவ்வளவு பிடிக்கும்,ஷீர்டி தான் சகல க்ஷேத்ரங்களும்  என்பதை நிரூபிக்கிறார். . 

 ராவின் அப்பா  ஒரு விட்டல பக்தர். வருஷா வருஷம்  ஆடி  மாசம்  பண்டரிபுரத்தில் இருப்பவர். வீட்டிலும் விட்டலன் விக்ரஹ பூஜை. செய்பவர். தானாவின் அரசு அதிகாரியாக  உழைத்து ஒய்வு பெற்றவர்.  சில புஸ்தகங்கள் படித்து ஷீர்டி கிராமம் பந்தர்பூர் எல்லையில் இருப்பது, துவாரகையின் தெற்கு கோடி பகுதி  என்று ஆவணங்கள் மூலம் எடுத்துச் சொல்லியவர்..  ஆகவே  பாபா  சொன்னது சரியாகி விட்டது. ஷீர்டி தான் பண்டரிபுரமும்  துவாரகையும் கூட.  ஆகவே  ஷிர்டியில் தான்  பண்டரிநாதனும் கிருஷ்ணனும்  உள்ளார்கள். பாபா தானே  அவர்கள்!

பாரதவர்ஷம்  என்கிற புத்தகத்தில்  அதன் ஆசிரியர்  கே. நாராயணய்யர்  என்பவர்  ''எங்கே  நான்கு வாசலையும்  திற ந்து வைத்துக்கொண்டு  எல்லோருக்கும் புருஷார்த்தம்  (தர்ம  அர்த்த,  காம மோக்ஷ ) உபதேசம்  மஹான்களால் நடக்கிறதோ அதன் பெயர்  தான்  துவாரகை .. ஆஹா  பாபாவின் சேவையை  இதற்கு மேல் எப்படி சொல்லுவதாம்?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...